Published:Updated:

இன்ஜினீயரிங்: ஆகஸ்ட் 16 வரை விண்ணப்பிக்கலாம்! - கலந்தாய்வு, சான்றிதழ் சரிபார்ப்பு விவரங்கள்

பொறியியல் கலந்தாய்வு
பொறியியல் கலந்தாய்வு ( மாதிரி புகைப்படம் )

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு செப்டம்பர் 17-ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாகத் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 52 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அதில் பி.இ மற்றும் பி.டெக் போன்ற இளநிலை பொறியியல் படிப்புக்காக சுமார் 2.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் நிரப்பப்படுகின்றன. கொரோனா ஊரடங்கால் இந்த ஆண்டுக்கான ப்ளஸ் டூ தேர்வு முடிகள் தாமதமாக இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அன்பழகன்
அமைச்சர் அன்பழகன்

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``பொறியியல் கலந்தாய்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு அனைத்துப் பணிகளும் முடிந்துள்ளன. இன்று (நேற்று) மாலை 6 மணி முதல் மாணவர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்காகத் தமிழகம் முழுவதும் 52 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 16-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பொறியியல் கலந்தாய்வு செப்டம்பர் 17-ம் தேதி முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை நடைபெறும்.

சான்றிதழ் சரிபார்ப்பை மாணவர்கள் வீட்டிலிருந்தே தெரிந்துகொள்ளும் வகையில் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரிகள் கொரோனா தனிமைப்படுத்தப்படும் மையங்களாக மாற்றப்பட்டுள்ளதால் தற்போதைக்கு கல்லூரி திறப்பதற்கான வாய்ப்பு இல்லை. கலை மற்றும் அறிவியல் படிப்புகள் தொடர்பான அறிவிப்புகள் அடுத்த 2 நாள்களில் வெளியிடப்படும்'' எனத் தெரிவித்துள்ளார்.

பொறியியல் கலந்தாய்வு
பொறியியல் கலந்தாய்வு
மாதிரி புகைப்படம்

அமைச்சரின் அறிவிப்பு படி ஜூலை 15-ம் தேதி முதல் ஆகஸ்ட் 16-ம் தேதி வரை ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்படுகிறன. ஜூலை 31-ம் தேதி முதல் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை அசல் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம். ஆகஸ்ட் 21-ம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும். தொடர்ந்து ஆகஸ்டு 24-ம் தேதி முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். செப்டம்பர் 7-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதேபோல், செப்டம்பர் 10 முதல் 14-ம் தேதி வரை சிறப்புக் கலந்தாய்வு நடைபெறும். செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை பொதுக் கலந்தாய்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு பற்றி மேலும் விவரங்களை அறிந்துகொள்ள https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

அடுத்த கட்டுரைக்கு