Published:Updated:

`பள்ளி திறப்பு, பாடங்கள் குறைப்பு, ப்ளூ பிரிண்ட் எங்கே?' - பள்ளிக் கல்வித்துறைக்கு சில கேள்விகள்

அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்திருப்பதாக, பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

`அரசுப் பள்ளிகளில் இந்தக் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது’ என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது தமிழகப் பள்ளிக்கல்வித் துறை.

கொரோனா ஊரடங்கால், வருமானமிழந்து முடங்கிப்போன பெரும்பான்மையான குடும்பங்கள், தங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கே பண வசதியின்றி அல்லாடிவருகின்றன. இந்தநிலையில், தனியார் பள்ளிகளில் படித்துவந்த தங்கள் குழந்தைகளுக்குக் கல்விக் கட்டணம் செலுத்த வழியின்றி, பெரும்பான்மையோர் சிரமப்பட்டுவருகின்றனர்.

மாணவர்கள்
மாணவர்கள்

ஆனாலும்கூட ஆன்லைன் கல்வி, 40 சதவிகிதக் கல்விக் கட்டணம் என அடுத்தடுத்த பாய்ச்சலோடு அதிரடிகாட்டிவருகின்றன தனியார் பள்ளிகள். நெருக்கடியான இந்தச் சூழலில்தான், `அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கையை ஆரம்பிக்கலாம்' என்ற அறிவிப்பை வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை.

`தனியார் பள்ளிகளில் தொடர்ந்து படிக்கவைக்க பொருளாதார வசதியில்லை; அரசுப் பள்ளிகளிலும் சேர்க்க வழியில்லை’ என்ற இக்கட்டான சூழலில் திணறிக்கொண்டிருந்த பெற்றோர்களுக்கு அரசின் இந்த அறிவிப்பு பெருமகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. கடந்த 17-ம் தேதி முதல், அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அந்தவகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்திருப்பதாகப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

கடந்த காலங்களில், அரசுப் பள்ளிகளைத் தவிர்த்து தனியார் பள்ளிகள்மீது பெற்றோர் கவனம் செலுத்தி வந்ததையடுத்து, அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை சராசரிக்கும் கீழாகக் குறைந்தது. இதன் தொடர்ச்சியாக, போதுமான மாணவர் இல்லாததால் பள்ளிகள் மூடப்படும் அவலமும் தொடர்ந்துவந்தது. இந்த நிலையில்தான், கொரோனா ஊரடங்கு, ஒட்டுமொத்த கல்விச் சூழலையும் புரட்டிப்போட்டிருக்கிறது.

ஆனால், `பொதுப்பள்ளிக்கான மாநில மேடை' அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு, `மக்கள் தங்கள் வறுமையால் மட்டுமே அரசுப் பள்ளிகளை நோக்கிப் படையெடுக்கிறார்கள்' என்ற கூற்றை மறுத்துப் பேசுகிறார். தற்போதைய சூழல் குறித்துப் பேசுபவர்,

பிரின்ஸ் கஜேந்திரபாபு
பிரின்ஸ் கஜேந்திரபாபு

``கொரோனா ஊரடங்கால், பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. `வருமானமின்றி தவித்துவரும் மக்கள்தான் வேறு வழியின்றி தங்கள் குழந்தைகளை இது போன்று அரசுப் பள்ளிகளில் சேர்க்க முன்வருகிறார்கள்’ என்பது போன்ற பார்வை இருந்துவருகிறது. இது மட்டுமே காரணமல்ல... `அரசுப் பள்ளியில் படித்தவர்கள்தான் பின்னாளில் சிறந்த சேவையாளர்களாக சமூகத்தில் விளங்குகிறார்கள்’ என்ற உண்மையையும் இந்த கொரோனா காலகட்டத்தில் மக்கள் நேரடியாக, அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாகவே தங்கள் பிள்ளைகளையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க மக்கள் ஆர்வம் காட்டிவருகிறார்கள்.

உதாரணமாக, இன்றைக்கு கொரோனா ஒழிப்புப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களில் பெரும்பான்மையானோர் அரசுப் பள்ளிகளில் படித்துத் தேர்ந்த அரசு மருத்துவர்கள்தான். இருமொழிக் கொள்கையின் வழியே தமிழ் மொழிக் கல்வியில் படித்த இந்த மருத்துவர்களின் அளப்பரிய பணியினால்தான் கொரோனாவை பெருமளவு கட்டுப்படுத்த முடிந்திருக்கிறது என்ற சிந்தனையோட்டம் மக்கள் மனதில் எழுந்திருக்கிறது; இதன் தொடர்ச்சியாகவே அரசுப் பள்ளிகள்மீதான அவர்களின் ஆர்வமும் அதிகரித்திருக்கிறது.

இதுதவிர, கொரோனா பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ள அடித்தட்டு கிராம மக்களுக்குப் பல இடங்களில், தன்னெழுச்சியாக அரசு ஆசிரியர்கள் நிறைய உதவிகளைச் செய்துவருகிறார்கள். இவையெல்லாமும்கூட அரசுப் பள்ளிகள்மீதான ஆர்வத்தை பொதுமக்களிடையே தூண்டியிருக்கின்றன'' என்று பின்னணித் தகவல்களை எடுத்துவைத்தவர், தொடர்ந்து இந்த தருணத்தில் தமிழக அரசுப் பள்ளிக் கல்வித் துறை செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாகப் பேசினார்.

``அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் தயாராகிவிட்டனர் என்பதை முதலில் தமிழக அரசு உணர வேண்டும். அடுத்து, நிலப்பரப்பு மற்றும் மக்கள் தொகைக்குத் தகுந்தாற்போல அருகில் அமைந்துள்ள அரசுப் பள்ளிகள் பற்றிய விவர அறிவிப்பை வெளியிட வேண்டும். இதனால், `இது நம்ம பள்ளி' என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உருவாகும்.

அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்

அரசுப் பள்ளிதோறும் காவலர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆசிரியர்களுக்குக் கற்றல், கற்பித்தல் பணி தவிர வேறு எந்தப் பணியும் கொடுக்கப்படக் கூடாது. `வகுப்புக்கு ஓர் ஆசிரியர்’, `பாடத்துக்கு ஓர் ஆசிரியர்’ என்ற அடிப்படையில் அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். `குறைவான மாணவர்களே சேர்ந்திருக்கின்றனர்' என்ற காரணத்தைச் சொல்லி, ஆசிரியர் பணியிடங்களை அரசு குறைத்துக்கொண்டால், பெற்றோர்கள் எப்படித் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் கொண்டுவந்து சேர்ப்பார்கள்? அரசுப் பள்ளிகள்மீது பெற்றோருக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டுமெனில், முதலில் ஆசிரியர் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட வேண்டும்.

`இதற்கெல்லாம் நிதி ஆதாரம் இருக்கிறதா?’ என்ற கேள்வி எழும். பொதுமக்கள் நாம் பயன்படுத்தும் பொருள்கள் மற்றும் சேவைகளுக்காக அரசுக்கு வரி செலுத்திக்கொண்டே இருக்கிறோம். கடந்த 2005-ம் ஆண்டிலிருந்து இப்போதைய ஜி.எஸ்.டி வரை நாம் செலுத்திவரும் ஒவ்வொரு வரியிலும், கல்விச் சேவைக்கென்றே குறிப்பிட்ட ஒரு தொகையை செலுத்தித்தான் வருகிறோம். எனவே, `கல்வி வரி கட்டியிருக்கிறேன். அரசு எனக்கு பள்ளிப் படிப்பைத் தந்தே ஆக வேண்டும்’ என்று நம் குழந்தைகளுக்காக நாம் உரிமையோடு கேட்கலாம்'' என்கிறார் அழுத்தமாக.

கொரோனா காலகட்டத்தில் தமிழக பள்ளிக் கல்வித் துறை செய்ய வேண்டிய மாற்றங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்துப் பேசும் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் தி.மு.க எம்.எல்.ஏ-வுமான தங்கம் தென்னரசு,

``கெட்டதிலும் ஒரு நல்லது என்பதுபோல், கொரோனா தொற்றுக் காலத்தில் பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முன்வருவது வரவேற்கத்தக்க அம்சம். இதன் பின்னணியில் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இன்னும் ஏராளமான குழந்தைகளை அரசுப் பள்ளியை நோக்கி வரவழைக்கும் விஷயங்களை தமிழக அரசு செய்து முடிக்க வேண்டும். கடந்த காலங்களில், `மாணவர்கள் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லை' என்று காரணம் சொல்லி மூடப்பட்ட பள்ளிகளையும்கூட இப்போது திறப்பதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும்.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

அரசுப் பள்ளிகளிலேயே சுயநிதிப் பிரிவில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கான கல்விக் கட்டணங்களை அந்தந்தப் பகுதியிலுள்ள அமைப்புகள் மற்றும் முன்னாள் மாணவர்களே தங்கள் சொந்தச் செலவில் செய்துவருவதாக செய்திகள் வருகின்றன. மேலும், அரசுப் பொறுப்புகளிலுள்ள உயரதிகாரிகள் சிலர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைப்பதான செய்திகளும் வருகின்றன. இப்படிச் சமூகம் சார்ந்து எடுக்கும் முன்னெடுப்புகளை அரசு சார்பிலும் ஊக்கப்படுத்தும்போது, அரசுப் பள்ளிகள்மீதான நம்பிக்கை பொதுமக்களிடையே இன்னும் அதிகரிக்கும்.

அடுத்ததாக, பள்ளிக் கட்டமைப்பை மேம்படுத்துதல், ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் அரசு செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளோடு ஒப்பிடும்போது, அரசுப் பள்ளிகளின் மிகப்பெரிய அறிவுசார் சொத்தே ஆசிரியர்கள்தான். ஏனெனில், இந்த கொரோனா காலகட்டத்தில், நிறைய தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களே பணிவாய்ப்பு இல்லாமல் வெளியேறியிருக்கும் சூழல் அமைந்திருக்கிறது.

`தனியார் ஆங்கிலப் பள்ளி டு அரசுப் பள்ளி!’ - அட்மிஷனில் கலக்கும் ஈரோடு மாநகராட்சிப் பள்ளி

ஆனால், எந்தவொரு நெருக்கடியான காலகட்டத்திலும்கூட, அரசுப் பள்ளிகளின் மூலம் கல்வியைக் கற்றுக்கொடுக்க முடியும் என்பதே அரசுப் பள்ளிகளின் ஆகப்பெரிய பலம். அரசுத் தரப்பிலான தனிப்பட்ட இந்த வலிமையை, மக்களிடையே எடுத்துச் சொல்லி புரியவைக்க வேண்டும்'' என்றவரிடம், 'இந்தப் பேரிடர் காலத்தில், பள்ளிகள் திறப்பை எப்படி உறுதி செய்வது...' என்ற கேள்வியை முன்வைத்தோம்.

``நோய்த் தொற்றின் வேகம், குழந்தைகளின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கருத்தில்கொண்டுதான் பள்ளிகள் திறப்பை அரசு முடிவு செய்ய வேண்டும். நோய்த் தொற்று தீவிரமாக இருக்கிறது என்ற சூழ்நிலை நிலவிவந்தால், பள்ளிகளைத் திறப்பது தொடர்பான எந்த முடிவையும் எடுக்க முடியாது. ஆனால், `நோய்த்தொற்று குறைந்து வருகிறது’ என்ற சூழல் ஏற்பட்டால், பாதுகாப்பு அம்சங்களைப் பின்பற்றி எந்தெந்தப் பள்ளிகளை, எப்போது திறப்பது என்பது குறித்து முடிவெடுத்து செயல்படுத்தலாம். அதற்கான ஆலோசனைகள் மற்றும் முன் திட்டமிடல்களை பள்ளிக் கல்வித் துறை இப்போதே முன்னேற்பாடாகச் செய்து முடித்து, அதற்கான ப்ளு பிரின்ட்டை தயாராக வைத்திருக்க வேண்டும்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

உதாரணமாக, பள்ளிகளைத் திறக்க முடிவு செய்துவிட்டால், வகுப்பில் மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும், மாணவர்களை பள்ளிக்கு அழைத்துவருவதற்கான போக்குவரத்து வசதிகளை எப்படியெல்லாம் செய்து கொடுக்கலாம் என்பது உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை முன்கூட்டியே தெளிவாக தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.

இந்தக் கல்வியாண்டில், காலாண்டுத் தேர்வு என்பதே அவசியமற்றதாகிவிட்டது. எனவே, அடுத்து அரையாண்டுத் தேர்வுக்கான பாடத்திட்டங்களாக மாணவர்களுக்கு எந்தெந்தப் பாடங்களை வைக்கலாம் என்பதிலாவது இப்போதே நாம் முடிவெடுத்தாக வேண்டும். ஆனால், பள்ளிக் கல்வித் துறை சார்பில் இது போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. இது பற்றிய கேள்வி எழும்போதெல்லாம், 'இது விஷயமாக முடிவு செய்ய ஒரு குழு அமைத்திருக்கிறோம்' என்று ஒற்றைவரி பதிலை மட்டுமே சொல்கிறார்கள்.

அப்படிக் குழு அமைக்கப்பட்டிருந்தால், `பள்ளிகள் திறப்பு குறித்து இந்தக் குழு என்ன முடிவெடுத்திருக்கிறது, இந்த ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டங்களில் எதையெல்லாம் நீக்கப்போகிறார்கள், எந்தப் பாடப் பிரிவுகளையெல்லாம் கட்டாயமாக வைக்கப்போகிறார்கள்’ என்பது குறித்தெல்லாம் தெளிவாகத் திட்டமிட்டிருக்க வேண்டும்.

கடந்த மே மாதத்திலேயே இதற்கான குழு அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்தக் குழு இது விஷயமாக என்னென்ன பரிந்துரைகளைச் செய்திருக்கிறது என்பது குறித்து இதுவரை அரசுத்தரப்பிலிருந்து வெளிப்படையாக அறிவிக்கப்படாமல், மறைபொருளாகவே வைக்கப்பட்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கல்வி என்பதே, மாணவர்களுக்கான அறிவை ஊட்டுவதற்காகத்தான். அப்படியிருக்கும்போது, மாணவர்களுக்கு எந்தெந்தவிதத்தில் அறிவை ஊட்டப்போகிறோம் என்பது குறித்த திட்டமிடல் முதலில் பள்ளிக் கல்வித் துறைக்கு வேண்டும் அல்லவா? ஆனால், அப்படியான செயல்முறைத் திட்டங்கள் எதுவுமே பள்ளிக் கல்வித் துறையிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை, 10, 12-ம் வகுப்பு போன்ற பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கான வகுப்புகளை முதலில் ஆரம்பிக்கலாம். ஏனெனில், தொற்று பாதிப்புள்ள இந்தக் காலகட்டத்தில், ஆரம்பக் கல்வி பயிலும் சிறு குழந்தைகளுக்கான வகுப்புகளைத் திறப்பது பாதிப்புகளை உண்டாக்கிவிடும். எனவே, மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து கீழ்நோக்கிய வரிசையாக வகுப்புகளை ஆரம்பித்து, கடைசி கட்டமாகவே தொடக்கக்கல்வி குழந்தைகளுக்கான வகுப்புகளைத் திறக்க வேண்டும்'' என்கிறார் ஆலோசனையாக.

பா.ஜ.க-வில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

பள்ளிகளைத் திறப்பது, பாடத்திட்டங்களை வகுப்பது மற்றும் மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்துவது எனப் பல்வேறு அம்சங்களிலும் தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்கப்படும் ஆலோசனை கருத்துகளுக்கு விளக்கமான பதில் கேட்டு முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், அ.தி.மு.க செய்தித் தொடர்பாளருமான வைகைச் செல்வனிடம் பேசினோம்...

``ஒரு கிலோமீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி, 3 கி.மீ-க்கு ஒரு நடுநிலைப் பள்ளி, 5 கி.மீ-க்கு ஓர் உயர்நிலைப் பள்ளி, 8 கி.மீ-க்கு ஒரு மேல்நிலைப்பள்ளி என்ற அளவில், இலக்கை அடைந்த மாநிலமாக தமிழக அரசின் பள்ளிக் கல்விக் கட்டமைப்பு எப்போதுமே வலுவாக இருக்கிறது.

வைகைச் செல்வன்
வைகைச் செல்வன்

ஆசிரியர் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டு, தமிழ்நாடு முழுக்க போதுமான ஆசிரியர்கள் பணிபுரிந்துவருகிறார்கள். மாணவர்களுக்கு இலவசப் பாடப்புத்தகம் வழங்கி, தரமான கல்வியும் அளிக்கப்பட்டுவருகிறது. இது தவிர, அங்கன்வாடிப் பள்ளிகளில் குழந்தைகளுக்கான தேவைகளை நிறைவேற்ற உதவியாளர்கள், தொடக்கப்பள்ளிகளில் சத்துணவுப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாணவர்களின் தேவையைக் கருத்தில்கொண்டு இன்னும் அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களை நியமிப்பது குறித்து வேண்டுமானால் பரிசீலிக்கலாம். பள்ளிகள் மூடப்பட்டுள்ள இந்தச் சூழலிலும்கூட, சமைத்த சத்துணவுக்குப் பதிலாக உலர் உணவுகளை மாணவர்களுக்கு வழங்கிவருகிறோம்

சிவகங்கை: `213 டு 1,320; அதிகரித்த மாணவர் சேர்க்கை!’ - அரசுப் பள்ளி அட்மிஷனுக்கு போட்டி

கொரோனா தொற்றின் பாதிப்பு முழுமையாக குறைந்துவரும்போதுதான் பள்ளிகள் திறப்பு குறித்தே அரசு யோசிக்க முடியும். ஏனெனில், குழந்தைகளின் பாதுகாப்பும் எதிர்காலமும் ரொம்பவும் முக்கியமானவை. எனவே, கொரோனா தொற்று முழுமையாகக் குறைய வேண்டும் அல்லது நோய்த் தொற்றைத் தடுக்கும்விதமான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். அதன் பிறகுதான் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்ற ஆலோசனைக்கே செல்ல முடியும். எனவே, பள்ளிகளைத் திறப்பது குறித்த அறுதியிட்ட முடிவு எதையும் அரசு இதுவரை எடுக்கவில்லை.

கல்வி (மாதிரி படம்)
கல்வி (மாதிரி படம்)

தற்போதைய சூழலில், மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் அனைத்தும் வழங்கப்பட்டு, கல்வித் தொலைக்காட்சி வழியாக தங்கு தடையின்றி பாடமும் நடத்தப்பட்டுவருகிறது. இந்தக் கல்வியாண்டில், காலாண்டுத் தேர்வு என்பது நடத்த முடியாத சூழல்தான். எதிர்வரும் அரையாண்டுத் தேர்வுக்கு எந்தெந்தப் பாடங்களை வைத்துக்கொள்வது, எவற்றையெல்லாம் நீக்குவது என்பது குறித்து ஏற்கெனவே அமைக்கப்பட்ட குழுதான் முடிவு செய்யும்'' என்கிறார் விளக்கமாக.

அடுத்த கட்டுரைக்கு