Published:Updated:

"நாலே நாளில் 1,500 மாணவர்கள் தனியாரில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாறியுள்ளனர்!"- அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

"அரசுப் பள்ளிகளில் உள்ள கட்டமைப்பு, மாணவர்கள் சேர்க்கை, ஆசிரியர்கள் எண்ணிக்கை குறித்துத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து வருகிறோம்" - அமைச்சர் அன்பில் மகேஷ்

"தற்போது நான்கே நாள்களில், தனியார்ப் பள்ளிகளில் படித்த 1,500 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அரசுப் பள்ளி என்றால் வறுமை நிலை என்பது மாறி பெருமை நிலைக்கு உயர்ந்து நிற்கிறது!"
அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது பள்ளியில் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிற ஸ்மார்ட் வகுப்பு பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு புதிய கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்களை வழங்கினார். மாணவ, மாணவிகள் பயன்படுத்தக்கூடிய கழிவறைகளை நேரில் ஆய்வு செய்தார்.

கழிவறைகளை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ்
கழிவறைகளை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ்

பின்பு பத்திரிகையாளர்களிடம் பேசினார். "அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு, மாணவர்கள் சேர்க்கை, ஆசிரியர்கள் எண்ணிக்கை குறித்துத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து வருகிறோம். அத்தோடு, அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த நான்கு நாள்களில் தனியார் பள்ளிகளில் படித்த 1,500 மாணவர்கள் இன்று அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அரசுப் பள்ளி என்றால் வறுமை நிலை என்று இல்லாமல் பெருமை நிலை என்கிற அளவில் உயர்ந்து நிற்கிறது என்றால் சந்தோஷம்தானே. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்துவருகிறோம். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க புது யுக்தியைக் கையாள இருக்கிறோம்'' என்றார்.

தனியார் பள்ளிகள் 100 சதவிகித கட்டணம் வசூலித்தால் பெற்றோர்கள் தயக்கம் இல்லாமல் புகார் அளிக்க வேண்டும். அப்படி அவர்கள் புகார் அளித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வு தொடர்பாக ஏற்கெனவே அறிவித்தபடி நிதிநிலை கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும். நீதிபதி ஏ.கே ராஜன் குழு பரிந்துரைக்குப் பிறகு மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும்.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஏழு ஆண்டுகள்தான் செல்லும் என்கிற நிலை உள்ளது. அச்சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளோம். அதன்படி விரைவில் அந்த அறிவிப்பு வெளிவரும். தளபதியார் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றி வருகிறார். அதன்படி கொடுத்த அத்தனை வாக்குறுதிகளும் சரியான நேரத்தில் நிறைவேற்றப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை!" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு