Published:Updated:

`விடையளிப்பது கட்டாயம்; கைரேகைப் பதிவு!' - டிஎன்பிஎஸ்சி தேர்வு மாற்றங்கள் என்னென்ன? #TNPSC

டிஎன்பிஎஸ்சி
டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய குரூப் 4 தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது சமீபத்தில் அம்பலமானது. தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். கைது நடவடிக்கையும் தொடர்ந்துவருகிறது. முறைகேடுகளைத் தடுக்கும் விதமாக, கடந்த வாரம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி. அந்த அறிக்கையில், ``வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வண்ணம் பல்வேறு முடிவுகளைத் தேர்வாணையம் எடுத்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி இணையதளம்
டிஎன்பிஎஸ்சி இணையதளம்

தேர்வு நடைமுறைகள் நிறைவடைந்தவுடன், தேர்வு பெற்றவர்களின் அனைத்து விவரங்களையும் இணையத்தில் வெளியிடுதல். விடைத்தாள் நகலை கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளுதல். கலந்தாய்வின்போது நிரப்பப்பட்ட இடங்கள் மற்றும் காலி இடங்களின் விவரங்களை வெளியிடுதல். தேர்வு மையங்களைத் தேர்வர்களுக்கு அதிக சிரமம் ஏற்படாத வகையில் தேர்வாணையமே ஒதுக்கீடு செய்யும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது ஆதார் கட்டாயமாக்கப்படும். தேர்வெழுதச் செல்லும்போது விரல் ரேகையை, ஆதார் தகவலோடு சரிபார்த்தல். முறைகேடுகளைத் தடுக்கும் வண்ணம் உயர்தொழில் நுட்பத் தீர்வு, வரவிருக்கும் தேர்விலிருந்து நடைமுறைப்படுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

`ஆதார் கட்டாயம்... விரல் ரேகை உண்மைத்தன்மை!’ - டி.என்.பி.எஸ்.சி கொண்டுவந்துள்ள 6 மாற்றங்கள் என்ன?

இதன் தொடர்ச்சியாக, தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி.

முதனிலை மற்றும் முதன்மைத் தேர்வுமுறை அறிமுகம்

இதன்படி குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு பொதுஅறிவுத்தாள் மட்டுமே கொண்ட ஒரே ஒரு தேர்வு மட்டுமே இதுவரை நடந்து வருகிறது. இனிவரும் காலங்களில் முதனிலை, முதன்மைத் தேர்வுகளாக நடத்தப்படும்.

Representation image
Representation image

தேர்வு நேரங்களில் மாற்றம்

தேர்வர்கள், இனி 9.00 மணிக்கே தேர்வுக் கூடங்களுக்கு வருகை புரிதல் வேண்டும். 10 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள், தேர்வுக் கூடங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். காலை மாலை இருவேளைகளிலும் தேர்வு இருந்தால், மாலை நடக்கவேண்டிய தேர்வு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும்

வினாக்களுக்கு விடையளிப்பது கட்டாயம்

இனிவரும் கொள்குறிவகைத் தேர்வுகளில் (Choose the best answer) அனைத்து கேள்விகளுக்கும் தேர்வர்கள் விடையளிக்க வேண்டும். வினாக்களுக்கு விடை அளிக்க இயலவில்லை அல்லது தெரியவில்லை என்றால், கூடுதலாக கொடுக்கப்படும் E என்ற வட்டத்தைக் கருமையாக்குவதுடன், மொத்தம் எத்தனை கேள்விகளுக்கு விடைகளை நிரப்பியுள்ளனர் என்ற விவரத்தை நிரப்ப வேண்டும். கூடுதல் விவரங்களுக்காக, தேர்வு நேரத்துக்குப் பிறகு 15 நிமிடங்கள் வழங்கப்படும். A,B,C,D,E என அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால், விடைத்தாள் செல்லாததாகக் கருதப்படும்.

Representation image
Representation image

கைரேகைப் பதிவு

விடைத்தாளின் விடையளிக்கும் பகுதியில், தேர்வரின் கையொப்பத்துக்குப் பதிலாக தேர்வரின் இடதுகை பெருவிரல் ரேகை பதிவுசெய்யப்படும்.

`டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் நானா?' -சிபிசிஐடி போலீஸைக் கொதிக்கவைத்த முகப்பேர் ஜெயக்குமார்

விடைத்தாள் பாதுகாப்பு

தேர்வு மையங்களிலிருந்து விடைத்தாள்களைப் பாதுகாப்பான முறையில் தேர்வாணைய அலுவலகங்களுக்கு அதிநவீன தொழில்நுட்ப ஜிபிஎஸ் மற்றும் கண்காணிப்பு கேமரா வசதியுடன் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இந்த நடவடிக்கைகள் முழுவதும் தேர்வாணைய அலுவலகத்திலி ருந்து கண்காணிக்கப்படும்.

Representation image
Representation image

கருத்துகளைத் தெரிவிக்கும் வசதி

தேர்வர்களுக்கும் தேர்வாணையத்துக்கும் இடையிலான பிணைப்பை உறுதிசெய்யவும், தகவல் பரிமாற்றத்தை எளிமைப்படுத்தவும் தேர்வாணைய இணையதளத்தில் ஒரு சிறப்புத் தகவல் தளம் விரைவில் உருவாக்கப்படும். தேர்வர்கள் தங்களுக்குத் தெரியவரும் தகவல்களைத் தேர்வாணையத்துடன் பகிர்ந்துகொள்ளவும் இத்தளம் பயனுள்ளதாக இருக்கும். தகவல் அளிக்கும் தேர்வர்களின் ரகசியத்தன்மை காக்கப்படும் என டி.என்பிஎஸ்சி தெரிவித்திருக்கிறது.

பின் செல்ல