Published:Updated:

``18 சீட்டில் ஒரு சதவிகிதம் இடஒதுக்கீடு என்றால்..!” - கலெக்டரிடம் கலங்கிய பழங்குடியின மாணவன்

வருடந்தோறும் வேளாண்மை தொழிற்பாடப் பிரிவில் படித்து 15 ஆயிரம் மாணவர்கள் வெளியே வருகின்றனர். இவர்களுக்கு, இரண்டு இலக்க எண்களில் படிக்க சீட் ஒதுக்குவது எப்படிப் போதுமானதாக இருக்கும்.

பழங்குடியின மாணவன் சந்திரன்
பழங்குடியின மாணவன் சந்திரன் ( ரமேஷ் கந்தசாமி )

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா, சுண்டப்போடு மலைக் கிராமத்தைச் சேர்ந்த 18 வயதான சந்திரன் என்னும் மாணவர், கையில் கல்விச் சான்றிதழ்களை ஏந்தியபடி, கண்களில் பரிதவிப்போடு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்திருந்தார். ‘என்ன விஷயத்திற்காக மனு அளிக்க வந்திருக்கிறீர்கள்?’ என விசாரித்தோம்.

சந்திரனின் மதிப்பெண் பட்டியல்
சந்திரனின் மதிப்பெண் பட்டியல்
ரமேஷ் கந்தசாமி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வைரவிழா மேல்நிலைப் பள்ளியில், கடந்த கல்வியாண்டில் வேளாண்மை செயல்பாடுகள் - தொழிற்பாடப் பிரிவில் படித்த சந்திரன், 444 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். பி.எஸ்சி அக்ரி அல்லது கால்நடை மருத்துவப் படிப்பில் சேருவதற்காக விண்ணப்பித்திருக்கிறார். பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த மாணவன் சந்திரன், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் எப்படியாவது சீட் கிடைத்துவிடும் என மிகுந்த நம்பிக்கையில் இருந்திருக்கிறார். ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்துப் போயிருக்கிறது.

12-ம் வகுப்பில் ‘வேளாண்மை செயல்பாடுகள் - தொழிற்பாடப் பிரிவில் (VOCATIONAL STREAM)’ படித்த அனைத்து மாணவர்களுக்கும் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மொத்தமுள்ள 360 இடங்களில் 18 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படுகின்றன. அதேபோல, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மொத்தம் 44 இடங்களே ஒதுக்கப்படுகின்றன. இப்படியிருக்க, வொகேஷனல் குரூப்பில் படித்த மாணவர்களுக்கு,கால்நடை மருத்துவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 18 சீட்டில், பழங்குடியினருக்கான ஒரு சதவிகித இட ஒதுக்கீட்டை எப்படிப் பெற முடியும்? குறைந்தபட்சம் 10 சதவிகித இட ஒதுக்கீடு கொடுத்தால்தான், ஒரு பழங்குடியின மாணவருக்காவது சீட் கிடைக்கும். வேளாண்மை பல்கலைக் கழகத்தில் இவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 44 சீட்டுகளிலும், பழங்குடியினருக்கு ஒரு சதவிகித இட ஒதுக்கீடு எப்படிக் கிடைக்கும். இந்த இட ஒதுக்கீடு சிக்கலால்தான், பழங்குடியின மாணவன் சந்திரனின் கல்வி கேள்விக்குறியாகியிருப்பது நமக்குத் தெரியவந்தது.

நாங்கள் ஆர்வமாகப் படிக்க ஆரம்பிக்கையில், குறைவாக உள்ள வாய்ப்புகளும் எங்களுக்கு உள்ள ஒரு சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெற முடியாமல்போவதும் மனதை வலிக்கச்செய்கிறது.
மாணவர் சந்திரன்

இதுகுறித்து மாணவன் சந்திரன் கூறுகையில், “12-ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவை எடுத்து படித்த மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பவியல் எனப் பல்வேறு படிப்புகளில் சேர வாய்ப்பிருக்கிறது. ஆனால், வேளாண்மை தொழிற்பாடப் பிரிவை (VOCATIONAL GROUP) எடுத்துப் படித்த எங்களால் மற்ற படிப்புகளில் சேர முடியாது. அப்படியிருக்க, பல்வேறு படிப்புகளைப் படிக்க வாய்ப்பிருக்கும் மாணவர்களுக்கு கால்நடை மருத்துவம் மற்றும் வேளாண்மை படிப்பிற்கு 95 சதவிகித இடங்களை ஒதுக்குவதும், எங்களுக்கு வெறும் 5 சதவிகித இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படுவதும் மிகப்பெரிய அநீதியாகும்.

வருடந்தோறும் வேளாண்மை தொழிற்பாடப் பிரிவில் படித்து 15 ஆயிரம் மாணவர்கள் வெளியே வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு இலக்க எண்களில் படிக்க சீட் ஒதுக்குவது எப்படிப் போதுமானதாக இருக்கும். பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த என்னைப் போன்றோர் படிப்பதே பெரிய விஷயம். ஆனால், நாங்கள் ஆர்வமாகப் படிக்க ஆரம்பிக்கையில், குறைவாக உள்ள வாய்ப்புகளும் எங்களுக்கு உள்ள ஒரு சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெற முடியாமல்போவதும் மனதை வலிக்கச்செய்கிறது. கால்நடை மருத்துவப் படிப்பிற்கான ரேங்கிங்கில் பழங்குடியினர் பிரிவில் நான் மாநில அளவில் முதலிடம் பெற்றிருக்கிறேன். ஆனால், எனக்கு படிக்க சீட் கிடைக்கவில்லை. இந்த விஷயத்தை அரசு பரிசீலனைசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'’ என்றார்.

Vikatan