Published:Updated:

முதல்வர் Vs ஆளுநர்... வேந்தர், துணைவேந்தர் பதவிகள்... அதிகார மோதல் எதற்காக?!

பினராயி விஜயன், மம்தா பானர்ஜி, உத்தவ்
News
பினராயி விஜயன், மம்தா பானர்ஜி, உத்தவ்

மாநிலங்களில் பல்கலைக்கழக வேந்தர் பதவியில் ஆளுநர்கள் இருந்துவரும் நிலையில், இதை மையப்படுத்தி எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வெடிக்கும் மோதல், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்துகிறது.

எதிர்க்கட்சிகள் ஆளும் சில மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் முதல்வர்களுக்கும் இடையே சமீபகாலமாக மோதல் ஏற்பட்டிருப்பதற்கு பல்கலைக்கழகங்கள் தொடர்பான விவகாரங்கள் முக்கியக் காரணமாக இருக்கின்றன. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், ஆளுநர் ஜகதீப் தங்கருக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவிவருகிறது. மகாராஷ்டிராவிலும் கேரளாவிலும், அரசுக்கும் ஆளுநர்களுக்கும் இடையிலான மோதல் தற்போது தீவிரடைந்திருக்கிறது. மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர்கள் வேந்தர்களாக இருப்பதால், துணைவேந்தர்கள் நியமனம் போன்றவை இவர்களின் மோதலுக்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

மத்திய அரசின் பிரதிநிதிகளாக மாநில ஆளுநர்கள் நியமிக்கப்படும் நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில் மாநில அரசுக்கும், ஆளுநர்களுக்கும் நல்ல புரிதல் இருக்கும் பட்சத்தில், இரு தரப்புக்கும் இடையே சுமுகமான உறவு நிலவும். அப்படியான சுமுகநிலையை ஒருசில மாநிலங்களில் பார்க்க முடியும். ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்கள் பலவற்றில் இரு தரப்புக்கும் இடையே முட்டலும் மோதலும் இருப்பதையே பார்க்க முடிகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா ஆட்சி நடைபெற்றுவரும் மகாராஷ்டிரா மாநிலத்தில், மாநில அரசுக்கும் ஆளுநர் பகத்சிங் கோஷியாரிக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. மோதலின் உச்சமாக, பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான ஆளுநரின் அதிகாரத்தையே மாநில அரசு பறித்துள்ளது. இதற்கான சட்ட மசோதா, பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பற்றிய விவாதங்கள் நடைபெற்றுவரும் நேரத்தில், கேரளாவில் மாநில அரசுக்கும் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது.

பினராயி விஜயன், ஆரிப் முகமது கான்
பினராயி விஜயன், ஆரிப் முகமது கான்

பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்றுவரும் கேரளாவில், ஆரிப் முகமது கான் ஆளுநராக இருக்கிறார். மத்திய அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ)-வைக் கொண்டுவந்தபோது, அதற்கு எதிராக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெரும் போராட்டங்களும் நடைபெற்றன. சி.ஏ.ஏ-வை எதிர்த்து பினராயி விஜயன் தீவிரமாகக் குரல் கொடுத்தார்.

சி.ஏ.ஏ-வுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று 11 மாநில முதல்வர்களுக்கும் அவர் கடிதம் எழுதினார். மேலும், சி.ஏ.ஏ-வைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தி கேரள சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதனால், கோபமடைந்த ஆளுநர் ஆரிப் முகமது கான், ``இவற்றையெல்லாம் நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன்” என்று கொந்தளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பல்கலைக்கழக விவகாரத்தில் பினராயி விஜயனுக்கும் ஆரிப் முகமது கானுக்கும் மோதல் வெடித்துள்ளது. ``பல்கலைக்கழக வேந்தர் பதவியில் நீடிக்க நான் விரும்பவில்லை. அந்தப் பதவியை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுங்கள்“ என்று முதல்வர் பினராயி விஜயனுக்கு ஆரிப் முகமது கான் கடந்த டிசம்பர் 8-ம் தேதி கடிதம் ஒன்றை எழுதினார். இதற்கு முன் நடந்திராத இப்படியொரு சம்பவம், கேரள அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆரிப் முகமது கான்
ஆரிப் முகமது கான்

கண்ணூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பேராசிரியர் கோபிநாதன் ரவீந்திரன் ஓய்வுபெறும் நிலையில், புதிதாக ஒருவரை அந்த இடத்தில் நியமிப்பதற்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. ஆனால், அதன் பிறகு, கோபிநாத் ரவீந்திரனே அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அந்தப் பதவியில் நீடிப்பதற்கு மறுநியமனம் செய்யப்பட்டார். அதில், ஆளுநர் கடும் அதிருப்தியடைந்தார். இதையடுத்து, முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், `வேந்தர் பதவியை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று அவர் அதிருப்தியை வெளியிட்டிருக்கிறார். இது கேரளாவில் பெரிய சர்ச்சையாகத் தொடர்கிறது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், ஆளுநர் ஜகதீப் தன்கருக்கும் இடையே பல விவகாரங்களில் மோதல் நடைபெற்றுவருகிறது. வேந்தர் என்ற முறையில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டத்தை டிசம்பர் 18-ம் தேதி தன்கர் கூட்டியிருந்தார். ஆனால், அந்தக் கூட்டத்துக்கு துணைவேந்தர்கள் யாரும் வரவில்லை. பிறகு, மீண்டும் டிசம்பர் 23-ம் தேதி துணைவேந்தர்கள் கூட்டத்தை அவர் கூட்டியும், யாரும் அதற்கு வரவில்லை. அதனால், அவர் கடும் கோபத்தில் இருந்தார்.

இந்த நிலையில், பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் இருக்க வேண்டும் என்கிற ஆங்கிலேயர் காலத்து நடைமுறையை இப்போதும் பின்பற்ற வேண்டுமா என்ற கருத்தை மேற்கு வங்க உயர் கல்வித்துறை அமைச்சர் பிரத்யா பாசு சமீபத்தில் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மேலும், செய்தியாளர்களிடம் பேசியபோது, பல்கலைக்கழகங்களுக்கு இடைக்கால வேந்தரை முதல்வர் நியமிக்க வேண்டும் என்ற கருத்தை அமைச்சர் முன்வைத்தார். ``கல்வி அமைச்சர் என்னிடம் பேசியிருக்க வேண்டும். மாறாக, அவர் வேந்தரை நியமிக்குமாறு முதல்வரிடம் கூறியிருக்கிறார்” என்று ஆளுநர் கோபமடைந்தார்.

மம்தா பானர்ஜி, ஜகதீப் தன்கர்
மம்தா பானர்ஜி, ஜகதீப் தன்கர்

மேலும், ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் 24 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தனது அதிருப்தியை ஜகதீப் தன்கர் வெளியிட்டுள்ளார். ``இது சட்ட மீறல். இந்த நியமனங்களுக்குச் சட்டரீதியான எந்த அங்கீகாரமும் இல்லை” என்றும் அவர் விமர்சித்துள்ளார். துணைவேந்தர்கள் நியமனத்துக்கான உத்தரவு திரும்பப் பெறப்படவில்லை என்றால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர் எச்சரித்துள்ளார்.

குறுகிய அரசியல் லாப நோக்கங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இரு தரப்பினரும் செயல்பட்டால், இத்தகைய மோதல்களுக்கு இடம் இருக்காது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!