Published:Updated:

நடப்புக் கல்வி ஆண்டில் பத்து சதவிகித இடஒதுக்கீடு : தமிழக அரசின் நிலைப்பாடு என்ன ?

பா.கவின்

ஏற்கெனவே குஜராத் மாநிலத்தில் 10 சதவிகித இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்துவிட்டது. 10 சதவிகித இட ஒதுக்கீடு அரசாங்க வேலை வாய்ப்பில் கொடுக்கப்பட உள்ளதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியக் குழு
பல்கலைக்கழக மானியக் குழு

பொருளாதார அடிப்படையில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டுக்கான ஒப்புதலை ஜனாதிபதி கடந்த ஜனவரியில் வழங்கியிருந்தார். ஆனால், அடுத்த ஆண்டுமுதல்தான் உயர்கல்வித்துறையில் 10 சதவிகித இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு முதலே இடஒதுக்கீடு அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 % இட ஒதுக்கீட்டில் அரசின் நிலைப்பாடு என்ன? - பேரவையில் ஓ.பி.எஸ் விளக்கம்

நடைமுறைப்படுத்தப்படவுள்ள 10 சதவிகித இட ஒதுக்கீட்டால் உச்சநீதிமன்றம் நிர்ணயித்த 50 சதவிகிதத்தைத் தாண்டி இடஒதுக்கீடு தற்போது 60 சதவிகிதமாகியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பு மாணவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை இந்தக் கல்வி ஆண்டிலேயே செயல்படுத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு(UGC) இந்தியப் பல்கலைக்கழகங்களை வலியுறுத்தி உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களிலும் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு அமலுக்கு வரும்.

பல்கலைக்கழக மானியக்குழுவின் கூடுதல் செயலாளரான தேவ் சுரப், பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து பல்கலைக்கழகங்கள் இந்த இட ஒதுக்கீட்டை இந்தக் கல்வி ஆண்டே 2019 -20 செயல்படுத்த வேண்டும் என்றும் அதன் விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிடவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகமும் இந்த இட ஒதுக்கீட்டுத் திட்டத்தை அமல்படுத்தி செயல்படுத்தும்படி மாநில அரசாங்கங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் உயர்அதிகாரி ஒருவர் கூறுகையில், ``இந்த வருடக் கல்வி ஆண்டு ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில் இந்தத் திட்டத்தை தற்போது செயல்படுத்துவது சாத்தியப்படாது என்றும் மேலும் இது குறித்து சட்ட வல்லுநர்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டியுள்ளது என்றும் இத்திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று இல்லை” என்று கூறினார்.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே 69 சதவிகித இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டு வருவதால் இந்தப் புதிய இட ஒதுக்கீடு குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது. ஜூலையில் நாடாளுமன்ற விவாதத்தில் கூட மார்க்சிஸ்ட் கட்சியைத் தவிர பிற கட்சிகள் இட ஒதுக்கீட்டிற்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டின் துணை முதல்வர் பன்னீர் செல்வம் இதைப்பற்றிக் கூறுகையில் `ஏற்கெனவே உள்ள 69 சதவிகித இட ஒதுக்கீடு பாதிக்கப்படாமலும் சட்டவல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்தபின் முடிவு எடுக்கப்படும்’ என்று தெரிவித்திருந்தார்.

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

உச்சநீதிமன்ற ஆணைப்படி பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஜூலை 31-இல் நிறைவு பெற்றதால் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப் பிறகு மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்றால் உச்சநீதிமன்றத்தின் அனுமதி தேவை என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா கூறியிருந்தார்.

சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி கூறுகையில், ``பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு நாங்கள் உட்பட்டிருந்தாலும், இட ஒதுக்கீடு, நிதி குறித்த முடிவுகளுக்கு மாநில அரசின் ஒப்புதல் தேவையாக உள்ளது’’ என்கிறார்.

உயர்கல்வியில் 10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து மாநில அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட இருக்கிறது. இதில் 10 சதவிகித இடஒதுக்கீட்டு முறையை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அமல்படுத்தலாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.103 ஆவது சட்ட திருத்தத்தின்படி 10 சதவிகித இடஒதுக்கீடு என்பது முன்னேறிய வகுப்பில் வறுமைக்கோட்டில் உள்ளவர்களுக்கு ஆனதாகும்.

இதற்கான வரைமுறைகள்

-ஆண்டு வருமானம் எட்டு லட்சத்திற்குக் கீழ் உள்ளவர்கள்

-5 ஏக்கருக்குள் விளைநிலம் வைத்திருப்பவர்கள்

-நகரங்களில் ஆயிரம் சதுர அடிக்குள் வீடு உள்ளவர்கள்

இவர்கள் மட்டுமே இந்த இட ஒதுக்கீட்டுக்குத் தகுதியானவர்கள். இந்த இட ஒதுக்கீட்டு முறையைச் செயல்படுத்துவதால், மத்திய அரசுக்கு 5,600 கோடி கூடுதல் செலவாகும்.ஏற்கெனவே மற்ற பிரிவினருக்கு உள்ள இடங்களைக் குறைக்காமல் இந்த இடஒதுக்கீட்டுக்காக உயர்கல்வி நிறுவனங்களில் இடங்களைக் கூட்ட வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி பொருளாதார அடிப்படையில் பின் தங்கிய பிரிவினருக்கு 10 சதவிகிதம் இட இதுக்கீடு, இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 7 சதவிகித இடஒதுக்கீடு, பட்டியல் சாதியினருக்கு 15 சதவிகிதம், பட்டியல் பழங்குடிகளுக்கு 7.5 சதவிகிதம், மெரிட் 40.5 சதவிகிதம் என்று பிரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே குஜராத் மாநிலத்தில் 10 சதவிகித இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்துவிட்டது. 10 சதவிகித இட ஒதுக்கீடு அரசாங்க வேலை வாய்ப்பில் கொடுக்கப்பட உள்ளதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் தெரிவித்துள்ளார் .

இதில் தமிழ்நாடு இனி என்ன நிலைப்பாடு எடுக்கும்?. பொறுத்திருந்து பார்ப்போம்.