Published:Updated:

`உடனடியாக சஸ்பெண்டு!’ - புத்தக வரிகளை வாசிக்கத் திணறிய ஆங்கில ஆசிரியர் #ViralVideo

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிகாரிகளின் சோதனையின்போது புத்தகத்தில் இருந்த சில வரிகளைப் படிக்கவே திணறிய ஆங்கில ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

உ.பி.ஆங்கில ஆசிரியர்
உ.பி.ஆங்கில ஆசிரியர்

உத்தரப்பிரதேசத்தின் உன்னாவோவை அடுத்த சிக்கந்தர்பூர் சரௌசி கிராமத்தில் (Sikandarpur Sarausi) செயல்பட்டு வரும் அரசுப்பள்ளியில்தான் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. அந்தப் பள்ளிக்கு திடீர் சோதனைக்குச் சென்ற மாவட்ட நீதிபதி ஆசிரியரின் செயலைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்.

`நீ அவளிடம் பேசக் கூடாது; அப்படித்தான் பேசுவேன்!" - டீச்சருக்காக அடித்துக்கொண்ட ஆசிரியர் - இளைஞர்

இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏறக்குறைய ஒரு நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில் சிக்கந்தர்பூர் அரசுப்பள்ளிக்குச் சோதனைக்காக சென்ற மாவட்ட நீதிபதி தேவேந்திரகுமார் பாண்டே, அங்கிருந்த ஆங்கில ஆசிரியரை அழைக்கிறார். பின்னர், ஆங்கிலப் புத்தகத்தைக் கொடுத்து அதிலிருந்த சில வரிகளைக் காட்டி வாசிக்கச் சொல்கிறார். ஆனால், அதை வாசிக்க அந்த ஆசிரியர் திணறுகிறார்.

இதனால், கோபமடைந்த அந்த அதிகாரி, `நான் உங்களை மொழிபெயர்க்கச் சொல்லவில்லை. இதிலிருக்கும் வாசகத்தைத்தான் வாசித்துக் காட்டச் சொல்கிறேன்’ என்று அந்த ஆசிரியரிடம் கடுகடுக்கிறார். இருப்பினும் அவர் வாசிக்கத் திணறவே, அங்கிருந்த மற்ற அதிகாரிகளைப் பார்த்து, ``இவர் ஓர் ஆசிரியர். ஆனால், புத்தகத்தில் இருக்கும் சில வரிகளை வாசிக்கவே இவர் திணறுகிறார். இவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்’’ என்று பேசுவதுபோல் அந்த வீடியோவில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஏஎன்ஐ செய்தி நிறுவனம் பகிர்ந்துள்ள அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சமீபத்தில், உ.பி-யின் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 80 மாணவர்களுக்கு ஒரு லிட்டர் பாலில் தண்ணீர் கலந்துகொடுத்த சம்பவம் சர்ச்சையானது. மதிய உணவுத் திட்டத்தின் ஒருபகுதியாக மாணவர்களுக்கு அம்மாநிலத்தில் பால் வழங்கப்படுகிறது. ஆனால், ஒரு லிட்டர் பாலில் ஒரு வாளி தண்ணீர் கலந்து கொடுக்கப்படுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது அம்மாநிலத்தில் மிகப்பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், இதுதொடர்பாக துறைரீதியான விசாரணைக்கு அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.