Published:Updated:

``ரகசியக் கூட்டம் நடத்துவதா?’’ - `புதிய கல்விக்கொள்கை’ தொடர்பாக அமைப்புகள் ஆவேசம்

சி.ய.ஆனந்தகுமார்
என்.ஜி.மணிகண்டன்

'புதிய கல்விக்கொள்கை மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கிறது' என புதிய கல்விக்கொள்கைக்கான கருத்துக் கேட்பு கூட்டத்தில், அமைப்புகள் கோஷமிட்டு தர்ணா செய்ததால் திருச்சியில் பரபரப்பு நிலவியது.

புதிய கல்விக் கொள்கைக்கான கூட்டத்தில் தர்ணா
புதிய கல்விக் கொள்கைக்கான கூட்டத்தில் தர்ணா

திருச்சியில், புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்த கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பெற்றோர், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களை அழைத்துவந்து கூட்டத்தை நடத்தினர். மாறாக, இந்தக் கூட்டத்திற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படாததாலும், ரகசியக் கூட்டமாக நடத்துவதாகக் குற்றம் சாட்டிய மக்கள் அதிகாரம், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகள், ”பொதுமக்களை கூட்டத்திற்கு அனுமதிக்காமல் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துவது எந்த விதத்தில் சரி” என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

புதிய கல்விக் கொள்கைக்கான கூட்டத்தில் தர்ணா
புதிய கல்விக் கொள்கைக்கான கூட்டத்தில் தர்ணா

அதனையடுத்து, கூட்ட அரங்கில் நுழைந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள், இது கருத்துக் கேட்பு கூட்டம் இல்லை, ஆலோசனைக் கூட்டம் என சமாளித்தனர். அதை ஏற்காமல், தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அடுத்து, பெற்றோரிடம் கையெடுத்துக் கும்பிட்டனர். அப்போது ஆசிரியர் முத்து நிலவன் என்பவர், மும்மொழிக் கொள்கை குறித்தும், புதிய கல்விக்கொள்கை குறித்தும் விளக்கி ஆவேசமாகப் பேசினார்.

அவர், “நாடு முழுவதும் பல மாணவர் அமைப்புகள் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகப் போராடிவரும் நிலையில், பி.ஜே.பி-யின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி-யை வைத்து இந்தக் கொள்கைக்கு மாணவர்கள் ஆதரவாக இருப்பதாகச் சித்திரிக்க நினைக்கிறார்கள்.

அரசுப் பள்ளிகளை எல்லாம் இழுத்து மூடிவிடுவது இந்த கல்விக் கொள்கையின் சாராம்சம். மேலும், இந்த கல்விக் கொள்கையில் இட ஒதுக்கீடு, சமூகநீதி உள்ளிட்ட எது குறித்தும் குறிப்பிடவில்லை. மாநில உரிமைகளை அப்படியே மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் நோக்குடன் செயல்படுகிறது.

ஆசிரியர் முத்து நிலவன்
ஆசிரியர் முத்து நிலவன்

தேசிய கல்விக் கொள்கை என்பதே தவறு. உலகில், வெற்றிபெற்ற அனைத்து நாடுகளிலும் அந்தந்த மாநில மொழிகளில்தான் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் இருந்த கோத்தாரி கமிட்டி முதல் காமராஜர் கொண்டுவந்த கல்வித் திட்டம் வரை அனைத்தும் தாய்மொழியிலும் தமிழ் வழிக் கல்வியிலும்தான் பள்ளிக்கூடங்கள் இருந்தன. அந்த வகையில்தான் இரண்டு மொழிக் கொள்கை உள்ள தமிழ்நாடுதான் உயர்கல்வியில் முன்னிலையில் உள்ளது. மும்மொழிக் கொள்கை செயல்பாட்டில் உள்ள உத்தரப்பிரதேசத்தில், கல்வி எப்படி உள்ளது என உலகத்துக்கே வெளிச்சம். மும்மொழிக் கொள்கையால் குழந்தைகளுக்கு மனச்சுமை ஏற்படும்.

உலகம் முழுவதும் தாய்மொழியில்தான் கல்வி நடக்கிறது. உலகின் பள்ளிக் கல்வியில் மிகச் சிறந்த நாடான பின்லாந்தில் கூட, ஏழு வயதில்தான் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள். ஆனால், இந்த வரைவுத் திட்டத்தில் எல்.கே.ஜி-யில் இருந்தே மாணவர்கள் கல்வி கற்பதையும் அடுத்தடுத்து தேர்வு நடத்தி, அவர்களின் கல்வியைப் பறிக்கும் கொள்கை இது. குறிப்பாக, இந்தக் கொள்கையில் ஆறாம் வகுப்பிலிருந்து இந்தி மற்றும் மும்மொழிக் கொள்கையும், ஒன்பதாம் வகுப்பில் நான்காவது மொழிக்கொள்கையைத் திணிக்கிறார்கள்.

புதிய கல்விக் கொள்கைக்கான கூட்டத்தில் தர்ணா
புதிய கல்விக் கொள்கைக்கான கூட்டத்தில் தர்ணா

தொடக்கக் கல்வி, நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி நிலைகள் உள்ளன. ஆனால், புதிய கல்விக் கொள்கையில் 3, 5, 8 வகுப்புகளில் அகில இந்திய தேர்வு நடக்கும் என்கிறது. இது, கல்விக் கொள்கை அல்ல, மாணவர்களின் மரணசாசனம். படிப்பை முடித்து மேல்நிலை கல்விக்குச் செல்லும் மாணவர்கள், கல்லூரியில் சேர்வதற்கு என்டிஏ எனப்படும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி நடத்தும் தேர்வில் வெற்றிபெற்றால்தான் பட்டப்படிப்புக்குப் போக முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் 75 சதவிகித மாணவர்கள் தமிழகத்திலிருந்து உயர்கல்விக்குச் செல்கிறார்கள். அவற்றைப் பறிப்பதற்குத்தான் மத்திய அரசு காய்நகர்த்துகிறது. ராஜாஜி கொண்டுவந்த குலக் கல்வி திட்டத்துக்கும் இதற்கும் வேறு வித்தியாசமில்லை. நம்மைவிட, நம் பிள்ளைகளை அதிகம் படிக்க வைக்க நினைப்போம். ஆனால், இந்தக் கல்விமுறை இரண்டு தலைமுறையாக மேலே வந்துள்ள நாமெல்லாம் மீண்டும் 100 ஆண்டுகளுக்குப் பின்னால் செல்வோம் என்பதே உறுதி. அதைத்தான் புதிய கல்விக்கொள்கை செய்கிறது.

புதிய கல்விக் கொள்கைக்கான கூட்டத்தில் தர்ணா
புதிய கல்விக் கொள்கைக்கான கூட்டத்தில் தர்ணா

இந்தியா முழுவதும் இந்தியைத் திணிப்பதற்கு மறைமுகமாக புதிய கல்விக்கொள்கை மூலம் செயல்படும் மத்திய அரசு, இந்தியர்களின் பாரம்பரியம், பண்பாடு என்று சொல்லி சமஸ்கிருதத்தைக் குறிப்பிடுகிறார்கள். மேலும், குழந்தைகளுக்கு பஞ்சதந்திரக் கதைகள் கற்பிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது. புதிய கல்விக்கொள்கை, மொத்தத்தில் நம் கல்வி உரிமையைப் பறிக்கிறது” என்று கூறினார். புதிய கல்விக் கொள்கைக்காக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடந்த களேபரத்தால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.