Published:Updated:

`பட்டமளிப்பு உடையில் ஏன் இன்னும் ஆங்கில கலாசாரம்?' - வெங்கைய நாயுடு வலியுறுத்தும் கதர்

வெங்கைய நாயுடு
வெங்கைய நாயுடு

``பட்டமளிப்பு உடையை இந்தியக் கலாசாரப்படி கதர், பட்டு என மாற்ற வேண்டும்” என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று 28-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய நாயுடு, மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்கி பேசிய அவர், “சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட அலங்கார கோபுரங்களாகப் பல்கலைக்கழகங்கள் இருக்கக் கூடாது. அவை அறிவு களஞ்சியங்களாகவும் புவியியல் அமைப்பைத் தாண்டியதாகவும் இருக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் மக்களின் சமூக வாழ்வுடன் இணைந்திருப்பதுடன், அறிவை உருவாக்கி இணைத்து அடுத்த தலைமுறைக்கு பகிர்வது அவசியம்.

பட்டமளிப்பு விழா
பட்டமளிப்பு விழா

மாணவர்கள் பாதி நேரத்தில் வகுப்பறையிலும் மீதி நேரத்தில் சமூகத்திலும் இருக்க வேண்டும். கிராமப்புற மக்களின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ளுங்கள். விவசாயத்தை தெரிந்துகொள்ளுங்கள். கல்விக்கொள்கைகள் உள்ளூர் மக்களின் தேவைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட வேண்டும். கல்வி மற்றும் ஆராய்ச்சிகளின் மூலம் பல்கலைக்கழகங்கள் கல்வி புரட்சியை முன்னிறுத்த வேண்டும். பட்டம் பெறுவதென்பது ஒரு படிக்கட்டுதான். உலக நாடுகளுக்குச் சென்று பணிபுரியுங்கள், பொருள் ஈட்டுங்கள். ஆனால், மீண்டும் தாய் நாட்டுக்குத் திரும்பி வந்து சேவை செய்யுங்கள்.

புதுச்சேரி பல்கலைக்கழகம்
புதுச்சேரி பல்கலைக்கழகம்

ஆசிரியர்கள் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும் நண்பராகவும் இருப்பது அவசியம். குறிப்பாக, உணர்வுகளைக் கையாளுவதுதான் மிக முக்கியம். அதுவே நல்ல மனிதராக இருப்பதற்கு அவசியம். கல்வியில் யுனெஸ்கோ 4 வழிகளை அறிவுறுத்தியிருக்கிறது. கற்றலை அறிதல், கற்றலைச் செயல்படுத்துதல், கற்றலைக் கொண்டு வாழ்தல் ஆகியவற்றுடன் கற்றலை கொண்டு சமுகத்திலுள்ள அனைத்து மக்களுடன் இணைந்து வாழ்வது. அதற்குப் பேராசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம்
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம்

இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட கூடுதல் மொழிகளைக் கற்பதில் தவறில்லை. ஆனால், தாய்மொழி கல்வி என்பது அவசியம். எவ்வளவு மொழிகளைக் கற்றாலும் தாய்மொழிக்குத்தான் முதலிடம். நிர்பயா விஷயத்தில் சட்டம் இயற்றுவது மட்டும் போதாது. அதற்கு அரசியல் வலிமையும், நடைமுறைப்படுத்துவதும் அவசியம். அதேபோல பல்கலைக்கழக பட்டமளிப்பு உடையை இந்திய கலாசாரத்துக்கு ஏற்ற வகையில் கதர், காதி, பட்டு என மாற்றுங்கள். இன்னும் ஏன் ஆங்கில முறையேயே கடைப்பிடிக்கிறீர்கள்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு