கொரோனா ஊரடங்கால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலமாகவே வகுப்பும், தேர்வுகளும் நடைபெற்றுவந்தன. தற்போது, ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு, கொரோனா கட்டுப்பாட்டு விதிகளின்படி வகுப்புகளும் தொடங்கப்பட்டிருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகளும் இனி நேரடியாகவே நடத்தப்படும் என தமிழக உயர்கல்வித்துறை அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், கல்லூரி மாணவர்கள் தரப்பில் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனின்தான் நடத்த வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மதுரையின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் 710 பேர்மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும், அரசுத் தரப்பு செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்துவது எனும் முடிவில் உறுதியாக இருக்கிறது.
இந்த நிலையில், அரசின் அறிவிப்பு குறித்து பொதுமக்களிடம் ஆன்லைன் மூலம் விகடன் சர்வே நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

``கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நேரடியாகவே நடத்தப்படும் என தமிழக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது..."
* சரியே
*ஆன்லைனிலே நடத்தலாம்
*கருத்து இல்லை
ஆகிய மூன்று பதில்களின்படி நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவில்,

தேர்வை நேரடியாக நடத்தும் அரசின் அறிவிப்பு 'சரியே' என 24% சதவிகிதத்தினரும், தேர்வுகளை ஆன்லைனிலே நடத்தலாம் என 74% சதவிகிதத்தினரும், கருத்து இல்லை என 1% சதவிகிதத்தினரும் விருப்பம் தெரிவித்திருக்கின்றனர்.
கருத்துக்கணிப்பின் முடிவில், கல்லூரி செமஸ்டர் தேர்வை `ஆன்லைனிலே நடத்தலாம்' என்ற கருத்துக்கு பெரும்பான்மையானவர்கள் விருப்பம் தெரித்திருக்கின்றனர்.