Published:Updated:

5 & 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு அவசியமா? சர்வே முடிவு! #VikatanSurveyResult

விகடன் இணையதளம் வழியே நடத்தப்பட்ட சர்வேயின் முடிவு!

Government School
Government School

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்று தமிழக அரசு அறிவித்ததும், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. பெரும்பாலான கல்வியாளர்கள், இந்த முடிவு குழந்தைகளுக்கு எதிரானது என்று ஒருமித்த குரலில் கூறினர். ஆனாலும், தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "அரசின் இந்த முடிவுக்கு பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது" என்று பேட்டி அளித்துவந்தார். உண்மையில், பொதுமக்கள் இந்தத் தேர்வுகள் நடத்தப்படும் அறிவிப்பை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது புதிராகவே இருந்தது. அதனால், விகடன் இணையதளத்தில் ஒரு சர்வே நடத்தினோம்.

Government School
Government School

அந்தச் சர்வேயில், இரு தரப்பினரும் தங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யும் விதமான கேள்விகளை அமைத்திருந்தோம். இதில் ஏராளமான வாசகர்கள் ஆர்வத்துடன் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு குறித்த சர்வேயில் வாசகர்கள் அளித்த பதில்களை இனி பார்ப்போம்.

5,8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு அவசியமா? என்ற கேள்விக்கு 'அவசியம்' என்று 7.8 சதவிகிதத்தினரும், 'அவசியம் இல்லை' என்று 92.2 சதவிகிதத்தினரும் தெரிவித்திருக்கின்றனர்.

Vikatan Survey regarding public exams
Vikatan Survey regarding public exams

மிகச் சொற்பமானவர்களே தேர்வு அவசியம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். பெரும்பாலானோர், தேர்வு குழந்தைகளைப் பெரும் மன அழுத்தத்துக்கு உள்ளாக்கும் என்று தெரிவித்துள்ளார்கள்.

'இந்தத் தேர்வினால் மாணவர்களின் கல்வி மேம்படுமா?' என்ற கேள்விக்கு, 'நிச்சயமாக மேம்படும்' என்று 9.6 சதவிகிதத்தினரும், 'இப்போதைய நிலையே நீடிக்கும்' என்று 86 சதவிகிதத்தினரும், 'இப்போதே நன்றாகப் படிக்கிறார்கள்' உள்ளிட்ட மற்ற கருத்துகளை 4.4 சதவிகிதத்தினரும் தெரிவித்திருக்கின்றனர்.

Vikatan Survey regarding public exams
Vikatan Survey regarding public exams

'இப்போதைய நிலையே நீடிக்கும்' என்பதே அதிகமானவர்களின் எண்ணமாக இருக்கிறது. 'ஒரு மாணவர், கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை அதிகப்படுவதே அவரின் கற்றல் திறன் மேம்படுவதற்கான வழி' என்று அரசுப் பள்ளி ஆசிரியர் சு.மூர்த்தி கூறுவதை இங்கே நினைவுகூர வேண்டியது அவசியம்.

"இந்தத் தேர்வுமூலம் தேசிய கல்விக்கொள்கை வரைவை, தமிழக அரசு அமல்படுத்த முனைகிறதா?" என்ற கேள்விக்கு, 'ஆமாம்' என்று 88.4 சதவிகிதத்தினரும், 'இல்லை' என்று 11.6 சதவிகிதத்தினரும் தெரிவித்திருக்கின்றனர்.

Vikatan Survey regarding public exams
Vikatan Survey regarding public exams

தேசிய கல்விக்கொள்கை வரைவை நடைமுறைப்படுத்தும் ஒரு பகுதியாகவே இந்தத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.

இந்தப் பொதுத்தேர்வுகள் மாணவர்களுக்கு மன அழுத்தத்தைத் தருமா?

Vikatan Survey regarding public exams
Vikatan Survey regarding public exams

'ஆமாம்' என்று 94 சதவிகிதத்தினரும், 'இல்லை' என்று 6 சதவிகிதத்தினரும் தெரிவித்திருக்கிறனர். இது, ஒவ்வொரு பெற்றோரும் நேரடியாகச் சந்திக்கும் பிரச்னை என்பதால், மன அழுத்தம் அதிகரிக்கும் என்பதற்கு அதிக வாக்குகள் விழுந்திருக்கின்றன.

'இந்தப் பொதுத்தேர்வுகளால் பள்ளியில் இடைநிற்றல் (Drop out) அதிகரிக்குமா?' என்ற கேள்விக்கு, 'நிச்சயமாக அதிகரிக்கும்' என்று 89.9 சதவிகிதத்தினரும், 'வாய்ப்பில்லை' என்று 10.1 சதவிகிதத்தினரும் தெரிவித்திருக்கின்றனர்.

Vikatan Survey regarding public exams
Vikatan Survey regarding public exams

மிக முக்கியமான விஷயமாக, மாணவர்களின் இடைநிற்றல் பேசப்படுகிறது. பொதுத்தேர்வால் இடைநிற்றல் நிச்சயம் அதிகரிக்கும் என்பதே பெரும்பான்மையோரின் எண்ணமாக இருக்கிறது. கல்வி உரிமைச் சட்டம், 14 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால், இடைநிற்றல் அதிகரிக்கும் பட்சத்தில் அது கேள்விக்குறியாகிவிடும். "இந்திய அளவில் 100 பேர் 1-ம் வகுப்பில் சேர்ந்தால், 6-ம் வகுப்பு செல்லும்போது 56 பேராகவும், 10-ம் வகுப்புக்கு 40 பேராகவும் 12-ம் வகுப்பு வரும்போது 32 பேராகவும் குறைந்துவிடுகிறார்கள்" என்று அபாயத்தைச் சுட்டிக்காட்டுகிறார், கல்வியாளர் ஆயிஷா நடராசன்.

'இந்தத் தேர்வுகள்மூலம் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரிப்பார்களா?' என்ற கேள்வியில், 'உண்மை இருக்கிறது' என்று 89 சதவிகிதத்தினரும், 'உண்மை இல்லை' என்று 10.9 சதவிகிதத்தினரும், மற்ற கருத்துகளை 0.1 சதவிகிதத்தினரும் தெரிவித்திருக்கின்றனர்.

Vikatan Survey regarding public exams
Vikatan Survey regarding public exams

இடைநிற்றல் அதிகரிப்பதே குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரிப்பதற்கான காரணம். அதனால்தான், இரண்டு கேள்விகளுக்கான பதில் சற்றேறக்குறைய ஒன்றாகவே இருக்கிறது. "அரசுப் பள்ளியில்தான் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்பேன் என்ற உணர்வு கொண்டவர்களும், கல்வி குறித்து பெரிய விழிப்புணர்வு இல்லாதவர்களும்தான் இங்கு சேர்க்கிறார்கள். யதார்த்த நிலை இப்படி இருக்கையில், இந்தத் தேர்வுகள்மூலம் மாணவர்களின் கல்வி இடையில் நிறுத்தப்பட்டு, குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றப்படும் அபாயமே இருக்கிறது" என்று அச்சத்தை வெளிப்படுத்துகிறார், அரசுப் பள்ளி ஆசிரியர் சுடரொளி.

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு: ஆரம்பக் கல்விக்கு வளர்ச்சியா... வீழ்ச்சியா?

கல்வி என்பது, மாணவர்களை மேலும் வளர்த்தெடுக்க வேண்டும். ஆனால், ஏதேனும் ஒரு காரணத்தால் குற்றவுணர்ச்சியால் சூழப்பட்டு, பொதுவெளியிலிருந்து தம்மை விலக்கிக்கொள்ள ஒருவர் நினைத்துவிடக்கூடாது என்பதே பலரின் எண்ணமாக இருக்கிறது.