Published:Updated:

``சேவைதான் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது!'' - மோடி பாராட்டிய அரசுப்பள்ளி ஆசிரியை ஹேமலதா

விழுப்புரம் மாவட்டம், செ.குன்னத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றிவரும் ஹேமலதா, வகுப்பறையைத் தாண்டி சமூகத்தை நேசிக்கும் எளிமையான பெண்மணி.

`மனதின் குரல்’ உரையில் பாராட்டிய மோடி!

ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையிலும் காலை 11 மணிக்கு பல்வேறு துறைகளில் தனித்துவத்துடனும், சேவை மனப்பான்மையுடனும் இயங்கி வருபவர்கள் குறித்து பிரதமர் மோடி ` மனதின் குரல் (மான் கி பாத்)' என்ற தலைப்பில் அகில இந்திய வானொலியில் உரையாற்றி வருகிறார். கடந்த 2020 டிசம்பர் மாதம் 27-ம் தேதி உரையாற்றிய பிரதமர் மோடி, ``ஹேமலதா என்ற இவர் விழுப்புரத்தில் ஒரு பள்ளியில் உலகின் மிகத் தொன்மையான மொழியாம் தமிழை பயிற்றுவித்து வருகிறார். கோவிட் 19 பெருந்தொற்று நிலவும் வேளையிலும் தனது பயிற்றுவித்தல் பணிக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்திருக்கிறார். இவருக்கு அதில் நிச்சயமாக சவால்கள் இருந்தன. ஆனால் இவர் ஒரு நூதனமான வழிமுறையை கையாண்டார்.

Modi
Modi

53 பாடங்களையும் இயங்குபட காணொளிகளாக (அனிமேஷன்) மாற்றி, அதனை பென்-டிரைவ் மூலம் தனது மாணவர்களிடம் கொண்டு சேர்த்தார். இதனால் இவரது மாணவர்கள் பயன்பெற்றார்கள். பாடத்தின் அத்தியாயங்களை கண்ணால் பார்த்து எளிதாக அவர்களால் புரிந்துகொள்ள முடிந்தது. இதனுடன் தனது மாணவர்களுடன் தொலைபேசி வாயிலாகவும் அவர் உரையாற்றினார். இந்தச் செயல் படிப்பின் மீது மாணவர்களுக்கு ஆர்வத்தையும் தூண்டியது.

நாடெங்கும் கொரோனா காலத்தில் ஆசிரியர்கள் மேற்கொண்ட நூதனமான முயற்சிகள், படைப்புத்திறனோடு கூடிய பாடங்களை அளித்தன. விலைமதிப்பு இல்லாத இந்தப் படிப்புகள் அனைத்தையும் கல்வி அமைச்சகத்தின் `தீக்‌ஷா’ தளத்தில் கண்டிப்பாக பதிவேற்றம் செய்யுங்கள் என்று அனைத்து ஆசிரியர்களிடமும் நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று அரசுப்பள்ளி தமிழாசிரியை ஹேமலதாவை குறிப்பிட்டுப் பாராட்டி தனது உரையை நிகழ்த்தினார்.

நல்லாசிரியை ஹேமலதா!

விழுப்புரம் மாவட்டம், செ.குன்னத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றிவரும் ஹேமலதா, வகுப்பறையைத் தாண்டி சமூகத்தை நேசிக்கும் எளிமையான பெண்மணி. கஜா புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களின் போதும், கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவிய நேரத்திலும் ஆதரவற்றவர்களுக்கு ஆறுதலாக நின்றவர். பேருந்துகள் முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்த ஊரடங்கு நேரத்தில், தனது இருசக்கர வாகனத்தில் பல கிலோமீட்டர் சுற்றி விளிம்பு நிலை மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களையும், மருத்துவ உதவிகளையும் செய்த இவர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதை பெற்றவர். தினமும் 52 கிலோமீட்டர் தனது இருசக்கர வாகனத்தில் பயணித்து பள்ளிக்குச் சென்றுவரும் இவர், ஒருநாள் வழியில் நாடோடி இனத்தைச் சேர்ந்த சிறுவர்கள் விளையாடியதை பார்த்திருக்கிறார். மறுநாளே அவர்கள் வசிப்பிடத்திற்கு சென்று அவர்களின் பெற்றோர்களிடம் பேசி, பள்ளிச் சீருடைகள், காலணிகள், நோட்டுப் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து அந்தச் சிறுவர்களை பள்ளியில் சேர்த்தார். அதில் ஒரு மாணவன் தற்போது +2 படித்துக் கொண்டிருக்கிறார்.

மாணவர்களுடன் ஹேமலதா
மாணவர்களுடன் ஹேமலதா

ஆசிரியை ஹேமலதாவை அவரது இல்லத்தில் சந்தித்தோம். ``1992-ம் ஆண்டு விழுப்புரத்தில் மகாத்மா காந்தி அரசு நிதியுதவி பெறும் பாடசாலையில் சேர்ந்தேன். 1996-ல் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையில் வேலை கிடைத்தது. 2012-ல் தமிழ் பட்டதாரி ஆசிரியையாக பதவியுயர்வு பெற்றேன். விழுப்புரத்தில் பல்வேறு பள்ளிகளில் பணியாற்றிவிட்டு தற்போது கடந்த 9 ஆண்டுகளாக செ.குன்னத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிகிறேன்.

ஆசிரியர் பணியில் நான் சேர்ந்தபோது மனதிற்குள் நான் எடுத்த உறுதிமொழி இரண்டுதான். ஆசிரியர் பணி என்பது வெறும் பணி மட்டுமல்ல. ஒரு சமூகத்தை கட்டமைக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதிலிருந்து நாம் விலகிவிடக் கூடாது. மற்றொன்று, எனது மாணவர்களுக்கும் எனக்குமான உறவு வகுப்பறையைத் தாண்டியும் இருக்க வேண்டும் என்பதுதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழ் பாடத்தில் மாணவர்கள் 100% தேர்ச்சி!

மாணவர்களுக்குப் பாடத்தில் எழும் சந்தேகம் மட்டுமல்ல, அவர்களின் வாழ்வில் எதிர்கொள்ளும் கேள்விகளையும், சந்தேகங்களையும் தெளிவாக்குவதும் ஆசிரியர்களின் பணி என்பது என் கருத்து. தற்போதுவரை அதனை கடைப்பிடித்தும் வருகிறேன். கடந்த 25 ஆண்டுகளாக விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ஆலோசகராக சென்று வருகிறேன். அங்கு பாதிக்கப்பட்டு வரும் எண்ணற்ற பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பிரச்னைகள் குறித்து அவர்களை மனம்திறந்து பேச வைத்திருக்கிறேன்.

மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் பயிற்சி
மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் பயிற்சி

பள்ளி மாணவர்களிடம் எனக்கு உணர்வுபூர்வமாக கிடைத்துவரும் அனுபவங்கள்தான் அதற்கு உதவுகிறது. கடந்த 9 ஆண்டுகளாக தமிழ் பாடத்தில் 100% தேர்ச்சியை கொடுத்துவருகிறேன். கொரோனா ஊரடங்கு நேரத்தில் இந்தக் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரைக்கும் தேவையான கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் அனைத்தையும் நானே வீட்டில் தயாரித்தேன். ஆனால் பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கான வாய்ப்புகளே இல்லாமல் போய்விட்டதால், அதனை அப்படியே நிறுத்திவிட்டு 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு எதையாவது செய்யலாம் என்று நினைத்தேன்.

பிரதமரின் வார்த்தைகள் உழைப்புக்கான பரிசு!

எப்படியும் இன்னும் 5 வருடங்களுக்கு பாடத்திட்டங்கள் மாறப்போவதில்லை. அப்படி இருக்கக் கொஞ்சம் செலவு செய்து அனிமேஷன் முறையில் பாடங்களை மாற்றி வீடியோவாகத் தயாரித்துக் கொடுக்கலாமே என்ற யோசனை தோன்றியது. அதற்கான தேடலில் ஷாகுல் ஹமீது என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் என் முன்னாள் மாணவராக இருந்ததால் எனக்கு வசதியாகப் போனது.

ஆன்லைன் வகுப்பில் நடனம் மூலம் பாடம் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியை... `வைரல்' சம்பவம்!

நான் உள்பட 5 பேர் இரவு பகலாக பாடப் புத்தகங்களை கையில் வைத்துக்கொண்டு அதற்கான படங்களை தேடித் தேடி அனிமேஷன் முறையில் மாற்றினோம். அதனை அப்படியே பென்-டிரைவ்களில் பதிவேற்றம் செய்தேன். தமிழக அரசின் இலவச மடிக்கணினி அனைவரிடமும் இருந்தது எனது முயற்சிக்கு மேலும் வசதியாகிப்போனது. மாவட்ட கல்வித்துறை இயக்குநர் மூலம் அந்த பென்-டிரைவ்களை மாணவர்களிடம் கொடுத்தோம். புதிய வடிவில், எளிமையான வகையில் பாடம் இருந்ததால் மாணவர்களுக்கும் மகிழ்ச்சி.

ஊடகங்களில் இந்தச் செய்தி வெளியானதும், இந்த செயல்முறை உண்மைதானா, பயனுள்ளதா என உதவி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். மாணவர்களையும் அவர்களது இல்லத்தில் சந்தித்து பாடப்புத்தகங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதன்பிறகுதான் பிரதமர் வானொலியில் எனது முயற்சி குறித்துப் பாராட்டிப் பேசியிருந்தார். அவரின் வார்த்தைகள் எனது உழைப்புக்கான பரிசு. சேவைதானே வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது?!” மெல்லிய புன்னகையுடன் சொல்கிறார் ஹேமலதா.

சல்யூட் டீச்சர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு