ராஜஸ்தான் அரசுப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு முறை பால் வழங்கப்பட உள்ளது.

பட்ஜெட் தாக்கலின்போது ராஜஸ்தானின் முதலமைச்சர் அசோக் கெலாட், `Mukhyamantri Bal Gopal Yojana' என்ற திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு முறை பால் வழங்கப்படும் என அறிவித்தார். மேலும் அரசுப் பள்ளிகள், மதரஸாக்கள் மற்றும் மதிய உணவு வழங்கும் பயிற்சி மையங்களிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த முயற்சி குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவை அதிகரிப்பதோடு, பள்ளிக்கு வரும் குழந்தைகளின் பதிவு மற்றும் வருகை எண்ணிக்கையையும் அதிகரிக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கல்வித் துறையில் கூடுதல் தலைமைச் செயலாளராக இருக்கும் பவன் குமார் கோயல் இத்திட்டம் குறித்து கூறுகையில், ``69.21 லட்சம் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர். இவர்களுக்கு பால் பவுடர் மூலம் தயாரிக்கப்பட்ட பாலானது வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வழங்கப்படும். ஒருவேளை இந்த நாள்களில் விடுமுறை இருக்கும் பட்சத்தில், அடுத்த பள்ளி வேலை நாளில் வழங்கப்படும்.

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 150 மில்லி லிட்டர் பாலும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 200 மில்லி லிட்டர் பாலும் வழங்கப்படும். மாணவர்களுக்கு பால் வழங்கப் பயன்படுத்தப்படும் பால் பவுடர் ராஜஸ்தான் கூட்டுறவு பால் பண்ணையில் இருந்து பெறப்படும்" எனத் தெரிவித்தார்.