Published:Updated:

3 பிள்ளைகள்... ஒரே செல்போன்; ஆன்லைன் வகுப்புகளால் அதிகரிக்கும் தற்கொலைகள் - தீர்வு என்ன?

ஆன்லைன் வகுப்புகளால் அதிகரிக்கும் தற்கொலைகள்
ஆன்லைன் வகுப்புகளால் அதிகரிக்கும் தற்கொலைகள் ( Representational Image )

ஆன்லைன் வகுப்புகளால் அதிகரிக்கும் தற்கொலைகள்... தீர்வு என்ன? - அலசுகிறது இந்தக் கட்டுரை

கொரோனாநோய்த் தொற்று நம் இயல்பு வாழ்க்கையைப் பலவாறாக புரட்டிப்போட்டுவிட்டது. இந்த நோய்த் தொற்று காரணமாக உலகம் முழுவதுமுள்ள மக்கள் அனைவரும் பலவகை சிக்கல்களை எதிர்கொண்டுவருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே பொருளாதாரச் சரிவு, வேலை இழப்பு, வருமானமின்மை என இந்த நோய்த் தொற்றின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் பலவற்றையும் விவாதித்துக்கொண்டேதான் இருக்கிறோம். ஆனால், இந்த நோய்த் தாக்கம் காரணமாக ஆன்லைன் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தம் குறித்து அதிகம் பேசப்படாமலே இருக்கிறது.

கடந்த சில மாதங்களாகவே ஆன்லைன் வகுப்புகள் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் இந்தியா முழுவதும் பயிலும் மாணவர்களில் பலர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். கடந்த வாரத்தில் மட்டும் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் இதைப் பற்றி அவசியம் விவாதிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம் என்பவருக்கு மூன்று மகள்கள். மூத்த மகள் நித்யஸ்ரீ திருச்சியிலுள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்ஸி. நர்ஸிங் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தார். மற்ற இரண்டு மகள்களும் பள்ளியில் பயின்றுவருகின்றனர். வறுமை காரணமாக மூவருக்கும் ஆன்லைன் வகுப்பு பயில தனித்தனியே செல்போன் வாங்கித் தர முடியாததால், ஒரே ஒரு ஸ்மார்ட்போன் மட்டும் வாங்கிக் கொடுத்திருக்கிறார் ஆறுமுகம். செல்போனை பகிர்ந்துகொள்வதில் சகோதரிகளுடன் ஏற்பட்ட தகராறால் மனம் உடைந்த மாணவி நித்யஶ்ரீ, வீட்டிலிருந்த எலி மருந்தைச் சாப்பிட்டுத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மருத்துமனையில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் நித்யஸ்ரீ.

தற்கொலை
தற்கொலை
Representational Image
இந்தியாவில் அதிக தற்கொலை...   இரண்டாம் இடத்தில் தமிழகம்! - NCRB அறிக்கை சொல்வதென்ன?

அதேபோல தேனி மாவட்டம் ஆண்டிபட்டியிலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் விக்கிரபாண்டி. இவர் ஆன்லைன் வகுப்புகளின்போது மாணவர்களோடு விளையாடியதாகச் சொல்லப்படுகிறது. மேலும், ஆன்லைன் வகுப்புகள் ஒழுங்காகப் புரியவில்லை என்று தன் தந்தையிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறார். இதைத் தொடர்ந்து அவரின் தந்தை விக்கிரபாண்டியைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். ஆன்லைன் வகுப்பால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் தந்தையின் கண்டிப்பு என எல்லாம் சேர்ந்து விக்கிரபாண்டியைத் தற்கொலை முடிவுக்குக் கொண்டுசென்றிருக்கிறது. வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் விக்கிரபாண்டி.

இந்த ஆன்லைன் வகுப்பிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். அந்த அறிக்கையின் முடிவில் அரசுக்குச் சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்.

ஆன்லைன் வகுப்புகளை நாங்கள் எதிர்க்கவில்லை. பாகுபாடின்றி அனைவரும் பயன்படுத்தும் வகையில், தரப்படுத்தி, சமவாய்ப்பை ஏற்படுத்திவிட்டு ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும்.
மு.க.ஸ்டாலின்

கடந்த வாரத்தில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதையடுத்து தி.மு.க எம்.பி கனிமொழியும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், ``ஆன்லைன் வகுப்புகளைக் கையாள முடியாமல், தொழில்நுட்ப வசதி இல்லாமல், தமிழக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் செய்தி அதிகரித்துவருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த நித்யஶ்ரீ, தேனியைச் சேர்ந்த விக்கிரபாண்டி ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் வகுப்புகள் குறித்து உரியமுறையில் திட்டமிட்டு, வழிகாட்டுதல்களோடு அது செயல்படுத்தப்பட்டு, மாணவர்களின் அழுத்தத்தை நீக்க உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார் கனிமொழி.

ஆன்லைன் வகுப்புகள் குறித்துப் பேசும்போது `தொழில்நுட்ப வசதிகள் இல்லாமை' என்பதும் முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தலிலுள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சார்பாக, கடந்த மாதம் முதல்வருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அந்தக் கடிதத்தில், ``எங்களிடம், தொடர்ந்து ஐந்து மணி நேரம் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க வசதியான செல்போன்கள் இல்லை. இருக்கும் செல்போன்களில் தொடர்ந்து ஐந்து மணி நேரம் சார்ஜ் நிற்பதில்லை. சார்ஜ் போட்டபடி ஆன்லைன் வகுப்பை கவனித்தால், செல்போன்கள் வெடிக்கும் அபாயம் இருக்கிறது. ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ளத் தேவையான இன்டர்நெட் டேட்டாவுக்கான பணச் செலவும் அதிகமாக இருக்கிறது. கிராமப்புற மாணவர்களுக்குச் சரிவர இன்டர்நெட் சிக்னலும் கிடைப்பதில்லை'' என்று மாணவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

``தினமும் ஐந்து மணி நேரம் ஆன்லைன் வகுப்புகளை கவனிப்பது எங்களை உளவியல்ரீதியாகக் கடுமையாக பாதிக்கிறது. மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இரவில் தூக்கம் வருவதில்லை. தூங்கினாலும், ஆன்லைன் வகுப்பில் இருப்பது போன்ற மனப்பிரமையுடனேயே தூங்க வேண்டியிருக்கிறது. வகுப்பறையில் நேரடியாகப் பாடங்களை கவனிப்பது போன்றதல்ல ஆன்லைனில் பாடங்களை கவனிப்பது. வீட்டுக்குள் இருந்தபடி, ஆன்லைன் வகுப்புகளை கவனிப்பதால், குடும்பச் சூழல் காரணமாகப் பாடங்களைச் சரிவரக் கற்க முடிவதில்லை. இந்தக் காரணங்களால், அண்மையில் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டார். எனவே, நாங்கள் மனரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் அடையும் சிரமங்களைப் புரிந்துகொண்டு, இதில் தலையிட்டு எங்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.’’
கடிதத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள்

கல்லூரி மாணவர்களுக்கே இந்த ஆன்லைன் வகுப்புகள் மன உளைச்சலை உண்டாக்குகிறது எனும்போது, பள்ளி மாணவர்கள் நிலை குறித்துச் சொல்லவா வேண்டும்... பெரும்பாலான கல்லூரி மாணவர்களிடம் சொந்தமாக செல்போன் இருக்கும். அவர்களுக்கே தொழில்நுட்பரீதியாகப் பல பிரச்னைகள் உள்ள நிலையில், தங்களுக்கென செல்போன்கள் இல்லாத பள்ளி மாணவர்களின் நிலை மிகவும் மோசம். இரண்டு, மூன்று பிள்ளைகளைக் கொண்ட மேல்தட்டு, நடுத்தரவர்க்கக் குடும்பத்துக்கே ஆன்லைன் வகுப்புகளில் செல்போன்களையும் லேப்டாப்களையும் பகிர்ந்து கொடுப்பதில் பல கஷ்டங்கள் உள்ளன. உதாரணமாக, சென்னையைச் சேர்ந்த மேல்தட்டு நடுத்தரக் குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அடுத்த பத்தியில் பார்ப்போம்.

கணவன், மனைவி மற்றும் மூன்று குழந்தைகளோடு சென்னையில் வசித்துவரும் ஒரு மேல்தட்டு நடுத்தரவர்க்கக் குடும்பம் அது. அந்தக் குடும்பத்தின் முதல் குழந்தை 12-ம் வகுப்பிலும், இரண்டாவது குழந்தை 6-ம் வகுப்பிலும், மூன்றாவது குழந்தை 3-ம் வகுப்பிலும் பயின்றுவருகின்றனர். அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் ஆன்லைன் வகுப்பு படிக்க வேண்டுமென்பதற்காக ஒரு லேப்டாப்பும் ஒரு செல்போனும் ஒதுக்கப்பட்டுள்ளது. மூத்த பிள்ளை 12-ம் வகுப்பு படிப்பதால் லேப்டாப் எப்போதும் அவரிடமே இருக்கும். மற்ற இரண்டு பிள்ளைகளில் ஒருவருக்குக் காலை நேரத்திலும் மற்றொருவருக்கு மதிய நேரத்திலும் வகுப்பு நடைபெறும் என்பதால் செல்போனைவைத்து ஆன்லைன் வகுப்பில் இருவரும் பங்கேற்றுக்கொண்டிருந்தனர். ஒருநாள் 6-ம் வகுப்பு பயிலும் பிள்ளைக்குத் தேர்வு என்று சொல்லி காலை, மதியம் என இரண்டும் நேரமும் வகுப்பு நடைபெற்றது. இதன் காரணமாக, 3-ம் வகுப்பு பயிலும் குழந்தையால் அன்றைய வகுப்பில் பங்குகொள்ள முடியவில்லை.

ஆன்லைன்
வகுப்பு
ஆன்லைன் வகுப்பு

அதற்கடுத்த நாள் வாட்ஸ்அப் குரூப்பில் வந்த ஜூம் லிங்க்கை க்ளிக் செய்து ஆன்லைன் வகுப்பில் சேர அனுமதி கோரியிருக்கிறார் 3-ம் வகுப்பு பயிலும் குழந்தை. ஆசிரியர் அனுமதியளித்தால் மட்டுமே ஆன்லைன் வகுப்பில் இணைய முடியும். ஆனால், அந்தக் குழந்தைக்கு அன்றைய வகுப்பில் இணைய அனுமதி மறுக்கப்பட்டது. அதற்குக் காரணமாக வாட்ஸ்அப் வழியாக அந்தக் குழந்தையின் பெற்றோர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. அந்தக் குறுஞ்செய்தியில்,

உங்கள் குழந்தை நேற்றைய ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளவில்லை. அதன் காரணமாக இன்றைய வகுப்பிலும் கலந்துகொள்ள இயலாது. நாளைய வகுப்பில் கலந்துகொள்ளச் செல்லுங்கள். நன்றி!
குறுஞ்செய்தி

இந்தக் குறுஞ்செய்தி குறித்து குழந்தையிடம் பெற்றோர்கள் சொன்னதும், அந்தக் குழந்தை தேம்பித் தேம்பி அழுதிருக்கிறாள். `நான் என்ன தப்பு செய்தேன், என் நண்பர்கள் கேட்டால் என்ன சொல்வேன்' என்று அழுத அந்தக் குழந்தையைச் சமாதானப்படுத்தவே ஒரு நாளைக்கு மேலாகியிருக்கிறது.

இதில் அந்தக் குழந்தையின் தவறு எதுவுமே இல்லை. ஆனால், அந்தக் குழந்தைக்கு தண்டனையாக ஒரு நாள் வகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. சென்னை, கோவை போன்ற பெருநகரங்களிலுள்ள தனியார்ப் பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகளில், இது போன்று பல வகைகளில் குழந்தைகளுக்கு தண்டனை வழங்கப்படுவதாகப் பரவலாகச் சொல்லப்படுகிறது. இது போன்ற விஷயங்கள் பள்ளியில் பயிலும் சிறுவயதுக் குழந்தைகளின் மனதில் நிச்சயம் பெரும் காயத்தை ஏற்படுத்தும்.

சரி... இப்போது தொழில்நுட்பப் பிரச்னைக்கு வருவோம். சென்னையில் வாழும் மேல்தட்டு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த வீடுகளிலேயே மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள போதிய தொழில்நுட்ப வசதிகள் இல்லாதபோது, மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும், நடுத்தர மற்றும் வசதியில்லாத குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்வதில் எவ்வளவு சிரமங்கள் இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.

ஆன்லைன் வகுப்பு
ஆன்லைன் வகுப்பு
`வீட்டிலிருந்து ஆன்லைன் வழியாகப் பாடம் கற்பதே மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அப்படியிருக்கையில் இந்த `தொழில்நுட்ப வசதிகள் இல்லாமை' என்பது மாணவர்களுக்கு மேலும் பல மனநலப் பிரச்னைகளை உண்டாக்கும்’ என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.

ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட சில நாள்கள் தொட்டே இது போன்ற தற்கொலைச் சம்பவங்கள் நடக்கத் தொடங்கிவிட்டன. இதற்குக் காரணமாக மனநல ஆலோசகர்கள் சில விஷயங்களை முன்வைக்கிறார்கள்.

``பொதுவாகவே, வகுப்பறைகளில் கல்வி கற்றல்தான் சிறந்த விஷயம். வீட்டிலிருந்து வகுப்புகளை கவனிப்பது என்பது நம் நாட்டுக்குப் புதிய நடைமுறை. போதிய தொழில்நுட்ப வசதி இல்லாதது, வீடுகளில் அமைதியாக கற்றுக்கொள்ளத் தனியறை இல்லாதது என இந்த நடைமுறைக்குள் மாணவர்கள் வருவதிலேயே பல சிக்கல்கள் உள்ளன. வீட்டிலிருந்து லேப்டேப் வழியாகவோ, செல்போன் வழியாகவோ வகுப்புகளை கவனிப்பது மிக மிகக் கடினமான ஒரு விஷயம். இதைப் புரிந்துகொள்ளாமல் பெற்றோர்களும் பிள்ளைகளை `ஒழுங்காக கவனி' என்று அடிக்கடி கண்டிப்பது அவர்களுக்கு நிச்சயம் மன உளைச்சலை உண்டாக்கும். மேலும், பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடக்கும்போது ஒரு ஆசிரியர் தன் பாடத்தை முடித்துவிட்டுச் சென்ற பிறகு, அடுத்த ஆசிரியர் வரும் வரை கிடைக்கும் இடைப்பட்ட நேரத்தில் மாணவர்கள் தங்களது நண்பர்களுடன் அரட்டை அடித்து ரிலாக்ஸ் செய்துகொள்ள முடியும். ஆனால், ஆன்லைன் வகுப்பில் தொடர்ந்து நான்கைந்து மணி நேரம் யாரிடமும் பேசாமல் வகுப்புகளைக் கவனிப்பதே மிகப் பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தும்" என்கிறார்கள் மனநல நிபுணர்கள்.

மேலும், ``பள்ளி, கல்லூரிகளில் நேரில் சென்று பயிலும்போது ஒரு மாணவரை மற்ற மாணவர்களுக்கு முன்பாகத் திட்டுவது அவர்களுக்கு மன வருத்தத்தை உண்டாக்கும். ஆனால், அதை அடுத்த நொடியே மறந்து போவதற்கு நண்பர்கள் துணை இருக்கும். அது இந்த ஆன்லைன் வகுப்புகளில் சாத்தியமில்லை. மேலும், மாணவர்கள் வகுப்புகளை கவனிக்காமல் விளையாட்டாகச் செய்யும் விஷயங்களுக்குத்தான் அதிகம் திட்டு வாங்குவார்கள். பள்ளி, கல்லூரிகளில் அதுபோல நடக்கும் பெரும்பாலான விஷயங்கள் பெற்றோர்களுக்குத் தெரியாது. ஆனால், தற்போது வகுப்புகள் வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டன என்பதால் ஆசியர்கள் ஒருபுறம் திட்டுவதும், அதற்குப் பெற்றோர்களும் சேர்ந்து திட்டுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்தச் சமயத்தில் ஆறுதல் கூற நண்பர்களும் இல்லாததால்தான் தற்கொலை வரை மாணவர்கள் சென்றுவிடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் தொழில்நுட்ப வசதி இல்லாத மாணவர்களிடம் அந்த வசதிகளைச் சரிவரப் பெற்றிருக்கும் மாணவர்கள், `உன்னிடம் லேப்டாப் இல்லையா... உங்கள் வீட்டில் ஃவைபை இல்லையா?' என்று தொடர்ந்து கேள்விகள் எழுப்பும்போது அது அவர்களுக்கு மன உளைச்சலை உண்டாக்க வாய்ப்புள்ளது'' என்றும் மனநல மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

ஆன்லைன் கல்வி
ஆன்லைன் கல்வி
Representational Image
முதியவர்களுக்கு கொரோனா மட்டும் ஆபத்தல்ல... NCRB டேட்டா சொல்வது என்ன?

இதற்குத் தீர்வாக ஒரு விஷயத்தைச் சொல்கிறார்கள் கல்வியாளர்கள், ``இந்த கொரோனாநோய்த் தொற்று இவ்வுலகைவிட்டுச் செல்ல இன்னும் சில ஆண்டுகள்கூட ஆகலாம். மருந்து கண்டுபிடித்து, அது நடைமுறைக்கு வருவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும். இந்தச் சூழ்நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்களை வரச் சொல்வது சாத்தியமில்லை. எனவே, இந்த ஆன்லைன் வகுப்புதான் இன்னும் சில மாதங்களுக்கு மாணவர்கள் கல்வி கற்பதற்கான ஒரே வழி. தற்போது வரை பல பள்ளி, கல்லூரிகளிலும் ஜூம், கூகுள் மீட் உள்ளிட்ட ஆப்கள் மூலம் லைவ்வாக ஆசிரியர்கள் வந்து பாடம் கற்பித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தற்போது இருக்கும் இந்த நடைமுறையைக் கைவிட்டுவிட்டு, அன்றைய நாளுக்கான பாடங்களைப் பகுதி பகுதியாக வீடியோ எடுத்து மெயிலிலோ அல்லது வாட்ஸ்அப்பிலோ அனுப்பிவிட்டால், அதை மாணவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் நேரத்தில் ரிலாக்ஸாகப் பயின்றுகொள்வார்கள். இந்த முறை பின்பற்றப்பட்டால் இரண்டு, மூன்று குழந்தைகளுள்ள வீட்டில் நேரம் பிரித்துக் கொடுத்து, வீடியோக்களைப் பார்த்து, கல்வி கற்றுக்கொள்ள வசதியாக இருக்கும். அதேநேரத்தில் தொடர்ச்சியாக நான்கைந்து மணி நேரம் இடைவெளியில்லாமல் லைவ்வில் வகுப்புகளைக் கவனிப்பதால் ஏற்படும் மன அழுத்தமும் குறையும். வாரத்தில் ஒருநாள் மட்டும் லைவ்வில் வந்து மாணவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை ஆசிரியர்கள் தீர்த்துவைக்கலாம். இந்த நடைமுறையைச் சில பள்ளி, கல்லூரிகள் பின்பற்றத் தொடங்கிவிட்டனர்'' என்று இந்தப் பிரச்னைக்கு மாற்று யோசனை சொல்கிறார்கள் கல்வியாளர்கள்.

அடுத்த கட்டுரைக்கு