Published:Updated:

பிளஸ் டூ தேர்வுகள் நடக்குமா... என்ன செய்யப் போகிறது தமிழ்நாடு அரசு?

ஸ்டாலின்
ஸ்டாலின்

“பிளஸ் டூ தேர்வெழுதப்போகிற இதே மாணவன்தான் நீட் தேர்வையும் எழுதப்போகிறான். நீட் தேர்வு எழுத வெளியில் வந்தால் தொற்று பரவாதா?''

கடந்த இரண்டு ஆண்டுகளாக, இதுவரை சந்தித்திராத மாபெரும் பேரிடர் உலகத்தைச் சூழ்ந்திருக்கிறது. உயிரைக் காத்துக்கொள்வதே போராட்டம் என்ற நிலையில் மற்றதெல்லாம் இரண்டாம்பட்சமாகி விட்டது. இந்த இரண்டாண்டுகளில் குழந்தைகளின் கற்றல் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியில் பாடம் நடத்தி, தேர்வு நடத்தி, முடிவுகளையும் அறிவித்துவிட்டன. அரசுப் பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகள் கற்றலிலிருந்து முற்றிலும் விலகியிருக்கிறார்கள்.

பெருந்தொற்றின் தீவிரம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இந்தச் சூழலில் அரசுகளின் கவனம் முழுமையாக அதை நோக்கித்தான் இருக்கவேண்டும். அதேநேரம் குழந்தைகளின் கல்வி விஷயத்தில் தீர்க்கமாக சில முடிவுகளை எடுக்கவேண்டும்.

கடந்த அதிமுக அரசு, கல்வி விஷயத்தில் முடிவெடுக்கமுடியாமல் திணறியது. சுகாதாரத்துறை, கல்வித்துறைக்குள் எந்த ஒருங்கிணைப்பும் இல்லாமல் முதல்வர், அமைச்சர், அதிகாரிகள் ஆளுக்கொன்றாக அறிவித்துக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் மத்திய அரசு என்ன முடிவெடுக்கிறதோ அதையொட்டியே எல்லா முடிவுகளையும் எடுத்துக்கொண்டிருந்தார்கள். சில நேரங்களில் மத்திய அரசே நேரடியாக அதிகாரிகள் மூலம் சில முடிவுகளை அறிவிக்கச் செய்தது. தேர்வு நடக்குமா, நடக்காதா, பள்ளிக்கூடம் திறக்குமா திறக்காதா என பிள்ளைகள் மட்டுமின்றி, பெற்றோரும் பள்ளி நிர்வாகங்களுமே திணறிப்போயின.

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி
நா.ராஜமுருகன்

பள்ளித் தேர்வுகளைப் பொறுத்தவரை, 10-ம் வகுப்புத் தேர்வும் பிளஸ் டூ தேர்வும் மிகவும் முக்கியமானவை. அடுத்து எந்தப் பிரிவைத் தேர்வு செய்வது என்பதை 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளே தீர்மானிக்கும். கல்லூரியில் சேர 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் முக்கியம். தமிழகத்தில் கடந்தாண்டு பத்தாம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. வருகைப்பதிவு, காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண் இறுதி செய்யப்பட்டு பிரிவுகள் ஒதுக்கப்பட்டன. பிளஸ் ஒன் வகுப்பில் ஒரு தேர்வு மட்டும் ரத்து செய்யப்பட்டு 'ஆல் பாஸ்' அறிவிக்கப்பட்டது. பிளஸ் டூவைப் பொறுத்தவரை ஊரடங்கு அறிவிப்புக்கு முன்பாகவே தேர்வுகள் நடந்து முடிந்துவிட்டன. முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதாத நிலையில் அவர்களுக்கும் சிறப்பு தேர்வு நடத்தப்பட்டது.

இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்தில் தொற்றின் தீவிரம் சற்று குறைந்த நிலையில், 10, பிளஸ் டூ மாணவர்களுக்கு மட்டும் சிலகாலம் வகுப்புகள் நடந்தன. பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டன. பிளஸ் டூ மாணவர்கள் செய்முறைத் தேர்வுகளில் பங்கேற்றார்கள். மீண்டும் தொற்று வேகம் பிடித்தபிறகு பள்ளிகள் மூடப்பட்டன. 'அடுத்து என்ன' என்கிற கேள்வி மாணவர்களைச் சூழ்ந்து நின்ற நிலையில் மத்திய அரசு, ஏப்ரல் 14-ஆம் தேதி நடைபெற இருந்த சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்தது. மேலும் மே 4-ஆம் தேதி முதல் நடைபெற இருந்த பிளஸ் டூ தேர்வுகளையும் ஒத்திவைத்தது. மத்திய அரசையே பின்பற்றி வந்த அப்போதைய தமிழக அரசும் பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்தது. பிளஸ் டூ தேர்வு விஷயத்தில் மத்திய அரசு மேற்கொண்டு எந்த முடிவும் எடுக்காததால் தமிழக அரசு மௌனம் காத்தது.

மாணவர்கள் தேர்வு
மாணவர்கள் தேர்வு
Representational Image

இந்தாண்டு முதல் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை முழுமையாக நடைமுறைக்கு வருகிறது. அதன்படி, 9-ம் வகுப்பிலிருந்தே செமஸ்டர் முறையில் தேர்வு நடைபெறும். மேலும் மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடங்களை எடுத்துப் படிக்கலாம் என்பதால் பத்தாம் வகுப்புத் தேர்வு முக்கியத்துவம் இழந்துவிடும். பிளஸ் டூ-வுக்குப் பிறகு கல்லூரியில் எந்தப்படிப்பில் சேரவேண்டும் என்றாலும் தனியாக தேசிய தேர்வு முகமை நடத்தும் அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வை எழுதி தேர்ச்சி பெறவேண்டும். மருத்துவப் படிப்புக்கு நீட் இருப்பதைப் போல, கலை அறிவியல், பொறியியல், மேலாண்மை போன்ற பிற படிப்புகளுக்கும் தேசிய தேர்வு முகமை, தேர்வு நடத்தவுள்ளது. அதனால் பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்களுக்கு முக்கியத்துவமோ மதிப்போ இருக்கப்போவதில்லை. அதனால்தான் மத்திய அரசு பிளஸ் டூ தேர்வை ரத்து செய்துள்ளது என்கிறார்கள் கல்வியாளர்கள்.

ப்ளஸ் டூ தேர்வு நடத்துவதில் பள்ளிக்கல்வித்துறை தீவிரம்... என்ன காரணம்?

தி.மு.க தலைவர் ஸ்டாலின், தேர்தல் அறிக்கையிலேயே 'மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்' என்று அறிவித்திருந்தார். 'மாநில அளவில் கல்விக்கொள்கை உருவாக்கப்படும்' என்றும் அதற்காக மாநில கல்வி ஆணையம் உருவாக்கப்படும் என்றும் சொன்னார். புதிய அரசு அமைந்தபிறகு, முதல்வரும் அமைச்சர்களும்கூட புதிய கல்விக்கொள்கையில் உள்ள பிரச்னைகள் பற்றிப் பேசினார்கள். நீட் தேர்வுக்கு விலக்கு கோரப்படும் என்றும் தெரிவித்தார்கள். புதிய கல்விக்கொள்கையை செயல்படுத்துவது குறித்த மத்திய அரசின் கூட்டத்தையே தமிழக அரசு புறக்கணித்தது. இதெல்லாம் மிகப்பெரும் நம்பிக்கையளித்து வந்த நிலையில், கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ''பிளஸ் டூ தேர்வை நிச்சயம் நடத்துவோம்'' என்று அறிவித்தார். வழக்கமாக மத்திய அரசைப் பின்பற்றியே இயங்கி வந்த தமிழகத்தில் இப்படியொரு குரல் ஒலித்தது மேலும் நம்பிக்கை தந்தது.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

இப்போது மத்திய அரசு, சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வை ரத்து செய்திருக்கிறது. இந்த அறிவிப்பு வெளிவந்ததும், தேர்வு நடத்துவதில் உறுதியாக இருந்த தமிழக அரசும் பதற்றமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முதல்வரிடம் ஆலோசனை நடத்திய கல்வி அமைச்சர், மாணவர்களின் எதிர்காலத்தைவிட அவர்களின் உடல்நலனும் பாதுகாப்பும் முக்கியம் என்று முதல்வர் கருதுவதாகவும், பிளஸ் டூ தேர்வை நடத்தலாமா வேண்டாமா என்பது பற்றி கல்வியாளர்கள், பெற்றோர்களிடம் கருத்துக்கேட்கப்படும் என்றும் அதன் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு எந்த வழிமுறையைக் கையாண்டதோ அதே வழிமுறையைத்தான் தற்போதைய அரசும் பின்பற்றுகிறது என்ற குற்றச்சாட்டு ஒரு பக்கம் இருக்க... இந்தச் சூழலைப் பயன்படுத்தி புதிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தத் துடிக்கும் மத்திய அரசின் சூழ்ச்சிக்கு தமிழக அரசும் இரையாகிவிட்டதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறார்கள் கல்வியாளர்கள்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, "மத்திய அரசு பிளஸ் 2 தேர்வை ரத்து செய்தது, மாணவர்களின் நலன் கருதி அல்ல. சந்தை கொடுத்த அழுத்தம்தான் காரணம். அனைத்துக் கல்லூரி படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு நடத்தும் தன் திட்டத்தை இந்தச் சூழலைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்த முயல்கிறது மத்திய அரசு..." என்கிறார்.

மாணவர்களின் தேர்வு
மாணவர்களின் தேர்வு
Representational Image

மேலும் அவர், "நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி என்பது பல லட்சம் கோடி புரளும் மிகப்பெரிய சந்தை. 'பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டுவிட்டது... அடுத்து தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத்தேர்வுதான் வழி' என்ற கருத்தாக்கத்தை மக்களைக்கொண்டே உருவாக்குவதற்கான யுத்தி இது.

மாணவர்களின் நலனில் அக்கறை இருந்தால் மத்திய அரசு முதலில் நீட் தேர்வைத்தான் ரத்து செய்திருக்க வேண்டும். பிளஸ் டூ தேர்வெழுதப்போகிற இதே மாணவன்தான் நீட் தேர்வையும் எழுதப்போகிறான். நீட் தேர்வு எழுத வெளியில் வந்தால் தொற்று பரவாதா?

'40 சதவிகிதம் ஆன்லைன், 60 சதவிகித நேரடி வகுப்பு' என்ற திட்டத்தை கருத்துக்கேட்புக்காக பல்கலைக்கழக மானியக்குழு சுற்றுக்கு விட்டிருக்கிறது. இந்த 'இணைந்த கற்றல் முறை'தான் இறுதி என்றால் இணைய வசதியில்லாத பல லட்சம் இந்தியக் குழந்தைகளின் நிலை என்ன? அவர்களையெல்லாம் கல்வியைவிட்டுத் துரத்தி பிளம்பராக, எலெக்ட்ரீஷியனாக மாற்றப்போகிறார்களா? தமிழகத்தைப் பொறுத்தவரை ஆன்லைன் வழிக்கல்வி என்பது 10 சதவிகிதம்கூட மாணவர்களுக்குப் பயனளிக்கவில்லை.

பிரின்ஸ் கஜேந்திரபாபு
பிரின்ஸ் கஜேந்திரபாபு

ஆனால், நீட் தேர்வைக்கூட ஆன்லைனில் நடத்தப்போவதாக சொல்கிறார்கள்... அதற்கு தருகிற முக்கியத்துவம் ஏன் பிளஸ் டூ தேர்வுக்கு இல்லை என்பதுதான் கேள்வி. பள்ளிக்கூடப் படிப்பையே அர்த்தமற்றதாக மாற்றுகிறது புதியக் கல்விக்கொள்கை. தமிழக அரசு புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறோம் என்று சொல்வது வெற்று முழக்கமாக இருக்கக்கூடாது. நியாயமான செயல்திட்டமாக இருக்கவேண்டும். தமிழக அரசு வலுவாக உருவாக்கி வைத்திருக்கும் பள்ளிகள், கல்லூரிகள், உயர்கல்விக்கூடங்களை மேம்படுத்துவதற்கும் மாணவர்களைச் சேர்ப்பதற்கும் மாநிலம் சார்ந்து முடிவெடுக்க வேண்டும். மத்திய அரசை பின்பற்றுவது நியாயமல்ல. மத்திய அரசு தேர்வை ரத்து செய்துவிட்டது என்பதற்காக பதறவேண்டிய அவசியமில்லை.

இந்தப் பெருந்தொற்று காலத்தில் கல்வித்துறை தனித்து செயல்படுவது நல்லதல்ல. சுகாதாரத்துறையின் கருத்தைப் பெறவேண்டும். ஒரு தேர்ந்த மருத்துவர் குழுவை நியமித்து தேர்வை நடத்தாலாமா வேண்டாம் என்று அவர்கள் தரும் அறிக்கையின்படி முடிவெடுக்கலாம். தொற்றின் தீவிரம் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்னும் சில வாரங்கள் கழித்துக்கூட தேர்வு பற்றி முடிவெடுக்கலாம்.

மருத்துவர்களின் ஆலோசனை பெறுவதற்கு நாளாகும் என்றால், 'தயாராக இருங்கள், முடிவெடுத்து அறிவிக்கிறோம்' என்று வெளிப்படையாக அறிவிப்பு கொடுக்கலாம். 'இரண்டே நாள்களில் மக்களின் கருத்துக்கேட்டு முடிவெடுப்போம்' என்பது கடந்த ஆட்சியில் நிகழ்ந்த கண்துடைப்பாக போய்விடக்கூடாது என்பதுதான் எங்கள் கவலை. மெஜாரிட்டி, மைனாரிட்டி அடிப்படையில் எந்த முடிவும் எடுக்கக்கூடாது.

`எங்களுக்கு பாராட்டு தேவையில்லை; ப்ளஸ் டூ தேர்வு நிச்சயம் நடக்கும்!’ - அமைச்சர் அன்பில் மகேஷ்
தேர்வு
தேர்வு

தமிழக அரசு எந்த முடிவாக இருந்தாலும் சுயமாக எடுக்கவேண்டும். எந்த அடிப்படையில் அந்த முடிவு எடுக்கப்பட்டது என்று வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும். கல்லூரி சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு என்ற புதிய கல்விக்கொள்கையின் நிலைப்பாட்டில் தமிழக மாணவர்களைக் கொண்டு வந்து நிறுத்திவிடக்கூடாது என்பதே எங்கள் கோரிக்கை" என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

இத்தாலிய எழுத்தாளர் அந்தோனியோ கிராம்ஸி, தன் சிறைக்குறிப்புகளில் சொல்கிறார்... "மக்களின் ஒப்புதல் இல்லாமல் ஆளும் வர்க்கம் எதுவும் செய்வதில்லை. அவர்களிடம் ஒப்புதல் வாங்குவதற்காக ஏதேதோ செய்வார்கள். மக்கள் மௌனமாக இருந்தால் அதையே ஒப்புதலாக எடுத்துக்கொள்வார்கள்..."

கொரோனா பெருந்தொற்று சுழற்றியடிக்கும் சூழலில் மக்களின் மௌனத்தைப் பயன்படுத்திக்கொண்டு தன் செயல்திட்டங்களை ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. தமிழக அரசு அதற்கு துணைபோகக்கூடாது என்பதுதான் இப்போதைய கோரிக்கை!
அடுத்த கட்டுரைக்கு