Published:Updated:

நாளை உயர்மட்ட ஆலோசனை; தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள் ( Representational Image )

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பல்வேறு மாநில அரசுகள் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்துள்ளன.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றது. கொரோனா பேரிடர் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதித்தது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 36,000-க்கும் அதிகமாக இருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 3,000-க்கும் குறைவாகவே பதிவாகிறது. தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு குறைவதையடுத்து பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், சில மாநிலங்களில் பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகளைத் திறக்கக் கோரி தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

தெலங்கானாவில் ஏற்கெனவே பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, புதுச்சேரி, ஹரியானா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் விரைவில் பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்கப்படவிருக்கிறது. இதைத் தொடர்ந்து, தமிழகத்திலும் பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 16-ம் தேதி பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷாவுடன் , பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட கல்வி அலுவலர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துறையின் பல முக்கிய அதிகாரிகளும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்தும், மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பது, இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது குறித்தும் பல பள்ளிகள் திறந்தால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு சுகாதாரத்துறையுடன் கலந்தாலோசனை செய்யப்படும் என்று தெரியவருகிறது. கொரோனா மூன்றாவது அலை உருவாக வாய்ப்புள்ளது என்றும், தமிழகத்தில் கொரோனா தொற்று முழுமையாகக் குறையாத நிலையில் பள்ளிகளைத் திறப்பது சரியாக இருக்குமா என்ற விவாதமும் எழுந்துள்ளது.

மாணவர்கள்
மாணவர்கள்

தமிழகத்தில் கொரோனா முதல் அலையின் தாக்கத்தின் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன . கொரோனா தொற்று குறைந்ததும், பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. அனுமதி வழங்கியபோதும், விருப்பத்தின் அடிப்படையில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன. கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக மீண்டும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தேர்வுகள் நடத்தப்படாமல் 1 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் அனைவருமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஓராண்டுக்கு மேலாக, தனியார் பள்ளி மாணவர்களைப் பொறுத்தவரை ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடைபெறுகின்றன. அதேவேளையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசின் கல்வித் தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் பெரும்பாலான அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கல்வி சென்று சேர்வதில்லை என்ற புகார்களும் தொடர்ச்சியாக எழுந்துவருகின்றன.

இந்தச் சூழலில் பள்ளிகளைத் திறப்பது குறித்து, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம். ``மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு கூறிய எண்ணிக்கையில்தான் பேருந்துகளில் மக்கள் சொல்கிறார்களா... அந்த பேருந்தில் இப்போது குழந்தைகள் பயணிப்பது இல்லையா? கடைகளுக்குக் கூட்டம் கூட்டமாக மக்கள் செல்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் குழந்தைகள் கிடையாதா? அரசு அலுவலகங்கள் 100 சதவிகிதப் பணியாளர்களுடன் செயல்படுகின்றனவே... இப்படி எல்லா தளர்வுகளையும் வழங்கிய பிறகும் பள்ளிகளைத் திறக்க மட்டும் ஏன் அரசு இவ்வளவு யோசிக்கிறது? ஒரு மாணவர் பள்ளிக்குச் செல்வது வெறும் எழுத்தறிவைப் பெறுவதற்கு மட்டும் கிடையாது. ஒரு மாணவனை சமூக வாழ்க்கைக்குத் தயார்படுத்தும் இடம்தான் பள்ளிக்கூடம். இப்போது உள்ள சூழலில் ஒவ்வொரு பள்ளியையும் அருகிலுள்ள சுகாதார நிலையங்களோடு அல்லது மருத்துவமனையோடு இணைத்து அவற்றின் கண்காணிப்பில் பள்ளிகளை நடத்த முயற்சி எடுக்க வேண்டும். தனியார் பள்ளி மாணவர்களோ, அரசுப் பள்ளி மாணவர்களோ... யாராக இருந்தாலும் பள்ளிக்கூடத்தில்தான் அவர்களுக்குச் சரியான கற்றல் செயல்பாடு கிடைக்கும்'' என்றார்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு
பிரின்ஸ் கஜேந்திரபாபு

தொடர்ந்து பேசியவர், ``பள்ளிக்கூடங்கள் செயல்படாததால் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் நின்றுபோகின்றன. அடுத்ததாக, மாணவர்களின் இடைநிற்றல் விகிதமும் அதிகரிக்கிறது. பள்ளிக்கூடங்கள் செயல்படும்போது, அந்தக் குடும்பம் எந்தச் சூழலில் இருந்தாலும் பெற்றோர்கள் எப்படியாவது தங்கள் குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பிவிடுவார்கள். இப்போது வீட்டில் இருப்பதால், ``வீட்டில் சும்மாதானே இருக்கிறார்கள்...’’ எனக் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் நிலை ஏற்பட்டிருக்கிறது. குடும்பச் சூழல் காரணமாக அவர்களும் வேலைக்குச் செல்கிறார்கள். இன்னொருபுறம் குழந்தைத் திருமணங்கள் அதிகரிக்கின்றன. இது குறித்தெல்லாம் அரசு ஆய்வு நடத்த வேண்டும். இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு வந்தால்தான் அவர்கள் சத்தான உணவு எடுத்துக்கொள்கிறார்களா என்பது தொடங்கி அனைத்தையுமே கண்டறிய முடியும். மாணவர்கள் வருவதற்குத் தனியாகப் பேருந்து இயக்கலாம். அவர்களுக்கு விடுதிகளில் சுகாதாரமான உணவு கிடைக்க அரசு ஏற்பாடு செய்யலாம். சுகாதாரத்துறையோடு கலந்தாலோசனை செய்து, ஒரு திட்டத்தைத் தயார் செய்து விரைவில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்" என்றார்.

இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசியபோது, ``பள்ளிகள் திறப்பது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. நாளை நடைபெறவிருக்கும் கூட்டத்துக்குப் பிறகுதான் முடிவு தெரியவரும். நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. துறைசார் ஆலோசனை முடிந்ததும், சுகாதாரத்துறையுடன் ஆலோசனை நடைபெறும். பின்னர் முதல்வருடன் ஆலோசனை நடத்தப்படும். அதன் பிறகே பள்ளிகள் திறப்பது பற்றி ஒரு முடிவு எடுக்கப்படும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு