பீகார் மாநில முதல்வரான நிதிஷ் குமார், பாட்னாவிலுள்ள மகத் மகிளா கல்லூரியில் 504 படுக்கைகள்கொண்ட மகளிர் விடுதியைத் திறந்துவைக்கும் நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டார். விடுதியைத் திறந்துவைத்த பின்னர் அங்கு குழுமியிருந்த மாணவிகள் இடையே பேசிய நிதிஷ் குமார், தன்னுடைய கல்லூரி நாள்களை நினைவுகூர்ந்தார். அப்போது அவர், ``நாங்க இன்ஜினீயரிங் காலேஜ்ல படிக்கும்போது எங்க கிளாஸ்ல ஒரு பொண்ணு இல்லை. எந்தவொரு பொண்ணு எங்க கிளாஸுகு வந்தாலும், அந்தப் பொண்ணைப் பாக்குறதுக்காகவே நெறைய மாணவர்கள் வருவாங்க" எனத் தன்னுடைய கல்லூரி நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், ``அந்த நாள்கள்ல பெண்களெல்லாம், இன்ஜினீயரிங், மருத்துவம் போன்ற படிப்புகளை ரொம்ப அரிதாத்தான் தேர்வு செஞ்சாங்க. ஆனா இப்போ, இன்ஜினீயரிங் காலேஜ், மெடிக்கல் காலேஜ்ல எத்தனை பெண்கள் படிக்கிறாங்கனு பாருங்க. பீகாரில் எங்களுடைய அரசு வந்ததுமே, எங்களுடைய சகோதரிகள் மற்றும் மகள்கள், இன்ஜினீயர்களாக, டாக்டர்களாக வர வேண்டும் என்பதற்காகவே உயர்கல்வியில் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்தோம். மேலும், பெண்கள் உயர் பதவியில் அதிகாரிகளாக வருவதற்கும், எங்கள் அரசு தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்கிறது" எனக் கூறினார்.
