Published:Updated:

சென்னைக்கு வந்த மோடி, தேசிய கல்விக் கொள்கையை ஹைலைட் செய்தது ஏன்?!

பிரதமர் மோடி

``இந்திய மொழிகளை ஊக்குவிக்க, தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது" என்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

சென்னைக்கு வந்த மோடி, தேசிய கல்விக் கொள்கையை ஹைலைட் செய்தது ஏன்?!

``இந்திய மொழிகளை ஊக்குவிக்க, தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது" என்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Published:Updated:
பிரதமர் மோடி

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி சென்னையில் மே 26 -ம் தேதி நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடியும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் தேசிய கல்விக் கொள்கை குறித்துப் பேசினர். பிரதமர் மோடி, "தமிழ் வளர்ச்சிக்கு தேசிய கல்விக் கொள்கை மிகவும் உதவும். இந்திய மொழிகளை ஊக்குவிப்பதற்காக தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவம், தொழில்நுட்பப் படிப்புகளை தாய்மொழியில் படிப்பதற்கான வாய்ப்பு, தேசிய கல்விக் கொள்கையால் கிடைக்கும். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது" என்று பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதே போன்ற கருத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் வெளிப்படுத்தினார். புதிய கல்விக் கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கும் என்றும், வலிமையான இந்தியாவை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கையை தி.மு.க எதிர்த்துவருகிறது. குறிப்பாக, இந்தக் கொள்கையில் இடம்பெற்றிருக்கும் மும்மொழிக் கொள்கை போன்ற அம்சங்களை தி.மு.க கடுமையாக எதிர்க்கிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது மட்டுமல்லாமல், ஆட்சிக்கு வந்த பிறகும் புதிய தேசிய கல்விக் கொள்கையை தி.மு.க எதிர்த்துவருகிறது.

எல்.முருகன்
எல்.முருகன்

கடந்த ஆண்டு, மே மாதம் இணையவழி கல்வி, புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக அனைத்து மாநிலங்களின் கல்விச் செயலாளர்களுடன் மத்திய அரசு ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அதை, தமிழக அரசு புறக்கணித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாநிலங்களின் கல்வித்துறைச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், மாநில அரசின் கருத்துகள் மற்றும் பரிசீலனைகளைத் தெரிவிக்க, மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்களை அனுமதிக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்துக்கு, மத்திய கல்வித்துறை அமைச்சகத்திடமிருந்து பதில் இல்லை. எனவே, கூட்டத்தைப் புறக்கணிப்பதாகத் தமிழக அரசு அறிவித்தது.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

இது தொடர்பாகப் பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ``குலக்கல்வி திட்டத்தை மறைமுகமாகவோ, நேரடியாகவோ திணிக்கப் பார்க்கிறார்களோ என்ற சந்தேகம் தேசிய கல்விக் கொள்கையைப் பார்க்கும்போது தோன்றுகிறது. தமிழகத்தின் இரு மொழிக் கொள்கைக்கு வேட்டுவைக்கும்விதமாக மும்மொழிக் கொள்கை இருக்கிறது. இட ஒதுக்கீடு பற்றியும் இந்தக் கல்விக்கொள்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எதிர்க்கட்சியாக இருந்தபோதும், தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும்போதும், இதை தி.மு.க தொடர்ந்து கூறிவருகிறது.

மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று தமிழக அரசின் சார்பாக இந்தக் கருத்துகளைச் சுட்டிக்காட்டுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தார். ஆனால், அமைச்சர்கள் பங்கேற்க அனுமதி கோரி நாங்கள் எழுதிய கடிதத்துக்கு மத்திய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை. எனவேதான், அந்தக் கூட்டத்தை நாங்கள் புறக்கணித்தோம். தி.மு.க எந்த விஷயத்தைக் கையில் எடுத்தாலும் கொள்கை மாறாமல், கருத்து மாறாமல் இறுதிவரை போராடும்´´என்றார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்த நிலையில், தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிமைக்க டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் நிபுணர்குழு ஒன்றை தமிழக அரசு அமைத்திருக்கிறது. பேராசிரியர்கள் ஜவஹர்நேசன், இராமானுஜம், சுல்தான் இஸ்மாயில், இராம சீனிவாசன், முனைவர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், உலக சதுரங்க சேம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், முனைவர் ச.மாடசாமி, தலைமை ஆசிரியர் இரா.பாலு, ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அந்தக் குழு, ஓராண்டு காலத்தில் தனது பரிந்துரைகளை தமிழக அரசுக்கு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படியான சூழலில், தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து பேசிவருகிறார். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து துணைவேந்தர்கள் கூட்டத்தில் ஆளுநர் பேசியது பெரும் சர்ச்சையானது. சமீபத்தில் கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆர்.என்.ரவி பேசியபோதும், தேசிய கல்விக் கொள்கை பற்றி அவர் குறிப்பிட்டார். ‘தேசிய கல்விக் கொள்கை என்பது பள்ளிக் கல்வியிலிருந்து பட்டப்படிப்பு வரை பிராந்திய மொழிகளை ஊக்குவிக்கிறது. ஒரு மொழியை மத்திய அரசு திணிக்கிறது என்கிற தோற்றம் உருவாக்கப்படுகிறது. அது உண்மை அல்ல’ என்று ஆர்.என்.ரவி பேசினார்.

ஸ்டாலின் - ஆர்.என்.ரவி
ஸ்டாலின் - ஆர்.என்.ரவி

அத்தகைய கருத்தை பிரதமரும் தற்போது பேசியிருப்பதன் மூலம் தேசிய கல்விக் கொள்கை பற்றி சர்ச்சை மீண்டும் எழுகிறது. தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தாலும், தமிழக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது. இது குறித்து பா.ஜ.க வட்டாரத்தில் பேசியபோது, “தேசிய கல்விக் கொள்கையால் வரவேற்கத்தக்க பல மாற்றங்கள் இந்தியாவில் ஏற்படும். எனவே, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு மிகவும் உறுதியாக இருக்கிறது. அந்த செய்தியைத்தான் தமிழகத்தில் பிரதமர் தெரிவித்துவிட்டுச் சென்றிருக்கிறார்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism