Published:Updated:

ரோகித், பாயல்... இப்போது ஃபாத்திமா - மாணவர்கள் தற்கொலைகள் தொடர்வது ஏன்?

ஃபாத்திமா.

இங்கு தற்கொலைகள் ஒரு விபத்தாக, மனநலம் சார்ந்த பிரச்னையாக மட்டுமே பார்க்கப்படுவதால் அதன் மீதான கவனமும் குறைவாகவே இருக்கிறது.

ரோகித், பாயல்... இப்போது ஃபாத்திமா - மாணவர்கள் தற்கொலைகள் தொடர்வது ஏன்?

இங்கு தற்கொலைகள் ஒரு விபத்தாக, மனநலம் சார்ந்த பிரச்னையாக மட்டுமே பார்க்கப்படுவதால் அதன் மீதான கவனமும் குறைவாகவே இருக்கிறது.

Published:Updated:
ஃபாத்திமா.

இந்திய உயர்கல்வி நிலையங்களில் நிலவி வருகிற தீண்டாமை மற்றும் பாகுபாட்டை வெளி உலகம் நன்கு அறியும். ஆனால், இந்தச் சமூகத்தின் மனசாட்சியை உலுக்குவதற்கு ஒரு ரோகித் வெமுலாவின் உயிர் தேவைப்பட்டது. ரோகித் வெமுலா தற்கொலையில் மத்திய அமைச்சர் வரை குற்றச்சாட்டுகள் எழுந்தபோது எதிர்க்கட்சிகளும் அதை ஆளுங்கட்சிக்கு எதிரான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தினர். ரோகித் வெமுலாவின் மரணத்துக்குப் பிறகே இந்திய உயர்கல்வி நிலையங்களில் நிலவுகிற பாகுபாடுகள் மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

ரோகித் வெமுலா
ரோகித் வெமுலா

ரோகித் வெமுலாவின் நண்பர் முன்னா சனாக்கி உடன் பேசுகிறபோது அவர் என்னிடம் தெரிவித்ததை இங்கு பதிவு செய்வது உதவியாக இருக்கும். ``இதுநாள் வரையிலும் ரோகித் வெமுலாவின் மரணத்துக்கு நீதி கேட்டு நாங்கள் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். ஊடகங்கள் மறந்துவிட்டன, எதிர்க்கட்சிகள் மறந்துவிட்டன. குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் இன்று சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், எங்களின் நீதிக்கான போராட்டம் என்பது ஓயவில்லை” என அவர் கூறிய வரிகள் இங்கு நிலவுகிற மெத்தனப்போக்கை பட்டவர்த்தனமாக எடுத்துரைக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரோகித்துக்குப் பிறகு முத்துகிருஷ்ணன், பாயல் கடந்து தற்போது ஃபாத்திமா வரை நிறுவனமயப்படுத்தப்பட்ட வன்முறைக்கு பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இவை நின்றுவிடுமா, நிலைமை சீராகிவிடுமா என்கிற கேள்விகளுக்குப் பதில் தேட ஆரம்பித்தால், இல்லை என்பதே நம்முன் பதிலாக வந்து நிற்கும். எதிர்மறையான கருத்துகளை இந்நேரத்தில் பதிய வேண்டும் என்பது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. ‘சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணத்தை நிறுத்திவிடலாம்’ என்பது போன்றதான தீர்வுகளைத்தான் நாம் இங்கு தேடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், சிக்கல் என்பது அடிப்படைக் கட்டமைப்பிலே இருக்கிறது.

ஃபாத்திமா - ரோகித் - பாயல்
ஃபாத்திமா - ரோகித் - பாயல்

உயர்கல்வி நிலையங்களில் நேர்கிற இதுபோன்ற குற்றங்களில், குற்றமிழைத்தவர்கள் பெரும்பாலான சமயங்களில் தண்டிக்கப்படுவதில்லை. அதற்குப் பல காரணிகள் உண்டு, அதை நாம் இங்கு விரிவாக விவாதிக்க வேண்டிய தேவையில்லை. உயர்கல்வி நிலையங்களில் நடைபெறுகிற இதுபோன்ற குற்றங்களில் தண்டனையில்லாமல் செல்வது (getting away with impunity) என்பதே இதன் முதல் சிக்கல்.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டாவது, பல அதிகார மையம் கொண்ட ஒரு கட்டமைப்புக்குள், சமநிலையை உறுதி செய்வதற்கான அம்சங்களுக்கும் (natural checks and balances) இடம்பெற்றிருக்க வேண்டும். உதாரணமாக ஒரு ஜனநாயக அமைப்பில் நிர்வாகத் துறை, ஆட்சித்துறை, மக்கள் தரப்பு ஆகியவற்றுக்கு இடையில் சமநிலையை உருவாக்கும் நோக்கில் செயல்படுவதுதான் நீதித்துறை. இத்தகைய அதிகார சமநிலை (Power balancing) செய்யக்கூடியத் தன்மை இந்திய உயர்கல்வி நிலையங்களில் இல்லை என்பது ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய உண்மை. ஒரு தரப்பினர் (பேராசிரியர்கள், நிர்வாக அதிகாரிகள்) சர்வ அதிகாரம் பொருந்தியவர்களாகவும் மற்றுமொரு தரப்பினர் (மாணவர்கள்) அதிகாரத்தில் உள்ளவர்களின் கருணையிலே இருக்க வேண்டிய நிலையும்தான் இங்கு நிலவுகிறது. இது இரண்டாவது சிக்கல்.

இந்திய பல்கலைக்கழகங்கள்
இந்திய பல்கலைக்கழகங்கள்

இந்த இரண்டு பிரதான பிரச்னைகளைப் பற்றி ஆராயாமல் ஃபாத்திமாவுக்கு நீதியை நாம் பெற்றுத்தந்துவிட முடியாது. உயர்கல்வி நிலையங்களில் பதிவு செய்யப்படாமல் போகின்ற குற்றங்களே அதிகம். ஆரம்பத்திலே இத்தகைய குற்றங்கள் பதிவு செய்யப்படாமல் போவதற்குச் சொல்லப்படுகின்ற காரணங்கள் `கல்வி பாதிக்கப்பட்டுவிடும், பேராசிரியரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும், பழிவாங்கப்படுவோம்’ என்பதே. இந்தக் காரணங்களுக்காக நிகழ்த்தப்பட்டக் குற்றங்களைப் பதிவு செய்யாமல் கடந்து சென்ற நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். அட்டென்டன்ஸ் தொடங்கி மதிப்பெண், நற்சான்று என சகல விஷயங்களிலும் மாணவர் ஒரு பேராசிரியரின் கருணையில்தான் இருக்க வேண்டிய நிலை உள்ளது. உயர்கல்வி நிலையத்தில் எதிர்க்கேள்வி கேட்டதற்காக ஃபெயில் செய்து பழி வாங்குவதை நம்மில் பலரும் அனுபவித்திருக்கிறோம்.

அடுத்து உயர்கல்வி நிலையத்தில் நிகழ்கிற குற்றத்தைப் பதிவு செய்ய ஒரு மாணவர் எத்தனிக்கிறபோது அவர் எதிர்கொள்ள வேண்டிய அச்சுறுத்தல்களும் அதிகம். சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெறுகிற முறைகேடுகளைப் பற்றி அதன் மாணவர்கள் பெயர் குறிப்பிடாமல் எழுதிய ஒரு கடிதம் ஒன்று நமக்கு வந்தது. இரண்டு பக்கம் கொண்ட அந்தக் கடிதத்தில் மாணவர்கள் எழுதிய ஒரு வரி இங்கு நிலவுகிற பிரச்னைகளுக்கான தீர்வைத் தரும். “எங்கள் கல்லூரியில் மாணவர் கூட்டமைப்பு இல்லாத காரணத்தால் நாங்கள் இதை முறையிட முடியாமல் தங்களை அணுகியுள்ளோம். பழி வாங்கப்படுவோம் என்ற அச்சத்தால் பெயர் குறிப்பிடாமல் எழுதியுள்ளோம்” என்றிருந்தது.

கடிதத்தின் ஒரு பகுதி
கடிதத்தின் ஒரு பகுதி

தாங்கள் இருக்கின்ற சூழலில் ஒரு மாணவர் பாதுகாப்பை உணர்ந்தால்தான் அவரால் அங்கு நடைபெறுகிற குற்றங்களையும் பதிவு செய்யமுடியும். இன்றைய உயர்கல்வி நிலையங்கள் பாதுகாப்பற்ற ஒரு சூழ்நிலையைத்தான் (insecure environment) மாணவர்களுக்கு வழங்குகின்றன. ஃபாத்திமாவின் செல்போனில் இருந்ததாக வெளியிடப்பட்ட பதிவிலும், "நான் வீட்டை இந்த அளவுக்கு மிஸ் செய்வேன் என நினைக்கவில்லை. இந்த இடத்தை அந்த அளவுக்கு வெறுக்கிறேன்" என்றிருந்தது. முதலாம் ஆண்டு மாணவி கல்லுரியில் சேர்ந்து ஒரு செமஸ்டர்கூட கடந்திராத சூழலில் ஏற்பட்டிருக்கக்கூடிய உணர்வு இது.

இதனாலே படித்து முடித்து பட்டம் பெற்றுவிட்டால் போதும், தானே துன்புறுத்தப்பட்டாலும் எவ்விதமான பிரச்னையும் வேண்டாம் என்கிற மனநிலையில்தான் பெரும்பாலான மாணவர்கள் இருக்கின்றனர். அவர்களின் குரல்களைப் பதிவு செய்யவோ, அவர்களுக்கான குரலாகச் செயல்படவோ இங்கு இருக்கிற உயர்கல்வி நிலையங்களில் வழிமுறையே இல்லை. ஃபாத்திமாவுக்கான குரல் முறையாக வைக்கப்பட்டிருந்தாலோ, அவருக்கான நீதி அவர் இருக்கின்ற இடத்திலே பெற்றுத்தரப்படும் என்கிற நம்பிக்கை இருந்திருந்தாலோ இன்று ஃபாத்திமாவை இழந்திருக்க மாட்டோம்.

ஃபாத்திமாவின் தற்கொலைக்கான காரணங்கள், குற்றச்சாட்டுகள் என்னவாகவும் இருக்கட்டும், அதுகுறித்த விசாரணை தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நாம் அதைப் பற்றி பேச முற்படவில்லை. இது ஒரு ஃபாத்திமா சம்பந்தப்பட்ட பிரச்னை மட்டுமல்ல. மாணவர்கள் தாங்கள் சந்திக்கின்ற சிக்கல்களைத் தயக்கமின்றி முன்வைக்க வேண்டும். குற்றத்தை முன்வைத்ததற்காக அவர்கள் பழிவாங்கப்படாமல் உரிய நீதி பெற்றுத்தரப்படுகிற சூழ்நிலைகள் உருவாக வேண்டும். அது நிறைவேறாத வரையில் நாம் ஃபாத்திமாக்களையும் வெமுலாக்களையும் இழந்துகொன்டுதான் இருப்போம். அடிப்படை மாற்றங்களை நோக்கி நகர்வதே ஃபாத்திமாவுக்கான உண்மையான நீதியாக இருக்க முடியும்.

ஃபாத்திமா
ஃபாத்திமா

இங்கு தற்கொலைகள் ஒரு விபத்தாக, மனநலம் சார்ந்த பிரச்னையாக மட்டுமே பார்க்கப்படுவதால் அதன் மீதான கவனமும் குறைவாகவே இருக்கிறது. தற்கொலைக்குத் தூண்டப்படுவதன் பின்னணியை ஆராய்ந்து, அதற்குக் காரணமாக இருக்கிற அனைத்து விதமான பாகுபாடுகளும் குற்றமாகப் பார்க்கப்படாத வரையில் இது தொடர்கதையாகத்தான் இருக்கும். ஆனால், அதற்குள் நாம் எத்தனை வெமுலாக்களையும் ஃபாத்திமாக்களையும் பலி கொடுக்கப்போகிறோம்?

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism