Published:Updated:

`நீட் தேர்வைவிட ஆபத்தா?!’ - கலை, அறிவியல் கல்லூரிகளில் தேசிய கல்விக் கொள்கை... ஒரு பார்வை!

கல்லூரி மாணவர்கள்
News
கல்லூரி மாணவர்கள்

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடும் எதிர்ப்பைத் தமிழகத்தில் சந்தித்துவருகிறது. இந்த நிலையில், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையிலும், தேர்வு முறைகளிலும் மாற்றங்கள் கொண்டுவர முயற்சிகள் நடக்கின்றன.

Published:Updated:

`நீட் தேர்வைவிட ஆபத்தா?!’ - கலை, அறிவியல் கல்லூரிகளில் தேசிய கல்விக் கொள்கை... ஒரு பார்வை!

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடும் எதிர்ப்பைத் தமிழகத்தில் சந்தித்துவருகிறது. இந்த நிலையில், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையிலும், தேர்வு முறைகளிலும் மாற்றங்கள் கொண்டுவர முயற்சிகள் நடக்கின்றன.

கல்லூரி மாணவர்கள்
News
கல்லூரி மாணவர்கள்

கல்வி முறையில் தேசிய அளவில் பல மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. அந்த வகையில், மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. அதை தமிழ்நாடு கடுமையாக எதிர்த்துவருகிறது. இந்த நிலையில், மருத்துவக் கல்விக்கு அடுத்தபடியாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் தேர்வு முறைகளில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன.

கல்லூரி மாணவர்கள்
கல்லூரி மாணவர்கள்

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ., பிஎஸ்சி., பி.காம் உள்ளிட்ட இளங்கலைப் படிப்புகளுக்கு ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும், முதலாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுக்கான பாடங்களில் தேர்ச்சிபெறாத மாணவர்கள், அடுத்த கல்வியாண்டில் இரண்டாம் ஆண்டுக்குச் செல்லலாம். அதேபோல, இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சி பெறவில்லையென்றால், மூன்றாம் ஆண்டுக்குச் சென்றுவிடலாம். தோல்வியடைந்த பாடங்களை அங்கு போய் மீண்டும் எழுதி தேர்ச்சி பெறலாம். தற்போது இருக்கக்கூடிய இந்த நடைமுறைகளை மாற்றுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு நுழைவுத் தகுதி அவசியம் என்று தேசிய கல்விக்கொள்கை சொல்கிறது. தேசிய கல்விக் கொள்கையின்படி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் திறன் சோதனை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். 12-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வியே பட்டப்படிப்பில் சேருவதற்கான அடிப்படைத் தகுதியாக தற்போது இருக்கிறது. இந்த நிலையில், நுழைவுத் தகுதிகளைப் பெற்ற மாணவர்களுக்கு, சேர்க்கை விதிமுறைகளின்படி முதலாம் ஆண்டில் சேருவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தேசிய கல்விக் கொள்கை சொல்கிறது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்குக் கொண்டுவரப்படும் இந்த விதிமுறைகளுக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. முந்தைய அ.தி.மு.க அரசு, தேசிய கல்விக் கொள்கை முன்வைக்கிற இந்த மாற்றங்களை ஆதரிக்கவில்லை. ‘இது, கிராமப்புற மாணவர்களைக் கடுமையாக பாதிக்கும்’ என்று அன்றைய உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

கே.பி.அன்பழகன்
கே.பி.அன்பழகன்

தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் தி.மு.க-வும், எதிர்க்கட்சியாக இருந்தபோதே தேசிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்த்தது. அந்த எதிர்ப்பு நிலையிலேயே தற்போதும் தொடர்கிறது. தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த மட்டோம் என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது.

தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தேசிய கல்விக் கொள்கை குறித்து மாநில அரசின் நிலைப்பாட்டைக் கோரும் மத்திய அரசின் மின்னஞ்சல் 18.02.2022 அன்று தமிழக அரசுக்குக் கிடைத்தது. இது குறித்து கல்வியாளர்கள், பொதுமக்களின் கருத்துகளைப் பெற்று விரிவான ஆய்வை மேற்கொள்வதற்கு மாநில அரசுகளுக்கு குறைவான நேரமே வழங்கப்பட்டுள்ளது. எனவே, வரைவு செயலாக்கத் திட்டம் குறித்து ஆய்வுசெய்து விரைவில் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும்” என்று பொன்முடி குறிப்பிட்டுள்ளார்.

பொன்முடி
பொன்முடி

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் பல வழிமுறைகள் தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன. இதன் நோக்கம் நல்லதாக இருந்தாலும், நடைமுறையில் இந்த மாற்றங்கள் மாணவர்களின் கல்வியையும், அவர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக, கிராமப்புற மாணவர்களின் நலன்களை இது பாதிக்கும் என்று கல்வியாளர்களில் ஒரு தரப்பினர் கவலையுடன் கூறுகிறார்கள்.

இது குறித்து கல்வியாளர் ந.மணியிடம் பேசினோம்.

“கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பெரும்பாலான மாணவர்களின் கல்வித்தரம் பின்தங்கிய நிலையில் இருக்கிறது என்பது யதார்த்தநிலை. குறிப்பாக, சுயநிதி அடிப்படையில் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் வந்த பிறகு, மாணவர்களின் கல்வித்தரம் மேலும் குறைந்திருக்கிறது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்தால், அந்தக் கல்லூரியின் நன்மதிப்பு குறையும்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

அதனால், அதன் மாணவர் சேர்க்கை குறையும். அதன் காரணமாக, கல்லூரியின் வருமானம் குறையும். எனவே, தேர்ச்சி பெறும் அளவுக்கு மாணவர்கள் தேர்வு எழுதவில்லையென்றாலும், எப்படியாவது தேர்ச்சி பெறவைப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்படும் மாற்றங்களை சுயநிதி கல்லூரிகளைச் சேர்ந்தவர்கள் விரும்ப மாட்டார்கள். சுய நிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் கல்வித்தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதுடன், தேர்வு முறை மற்றும் விடைத்தாள் திருத்தும் முறைகளில் இருக்கும் பிரச்னைகள் சரிசெய்யப்பட வேண்டும்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைப் பொறுத்த அளவில், பெரும்பாலும் கிராமப்புற மாணவர்களும், பொருளாதாரரீதியிலும் சமூகரீதியிலும் பின்தங்கிய மாணவர்களும்தான் படிக்கிறார்கள். முதலாம் ஆண்டு செமஸ்டர்களில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாமல் அரியர் பேப்பர்கள் இருந்தால், எப்படியாவது இரண்டாம் ஆண்டில் எழுதி தேர்ச்சிபெறுகிறார்கள். அதேபோல இரண்டாம் ஆண்டு அரியர் பேப்பர்களை மூன்றாம் ஆண்டில் எழுதி தேர்ச்சி பெறுகிறார்கள்.

எப்படியாவது சிரமப்பட்டு பட்டம் பெற்றுவிடுகிறார்கள் அல்லது மூன்று ஆண்டுகள் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு அரியர் பேப்பர்களை பிறகு எழுதி தேர்ச்சி பெற்று, பட்டம் பெறுகிறார்கள். அதன் பிறகு, ரயில்வே, வங்கி, டி.என்.பி.எஸ்.சி., யூ.பி.எஸ்.சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு கடுமையாகப் படிக்கிறார்கள். அந்த முயற்சியில் பலர் வெற்றிபெறுகிறார்கள். மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கு அவர்கள் போய்விடுகிறார்கள்.

இந்த வாய்ப்புகளைப் பறிக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை இருக்கிறது என்பதை கவலைக்குரிய அம்சமாகப் பார்க்கவேண்டியிருக்கிறது. இளங்கலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால்தான், இரண்டாம் ஆண்டுக்குச் செல்ல முடியும். இல்லையென்றால், முதலாம் ஆண்டைத் தாண்ட முடியாது. அதேபோல, இளங்கலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டுடன் படிப்பை முடித்துக்கொண்டு வெளியேறவும் தேசிய கல்விக்கொள்கை வழிவகை செய்கிறது. மூன்றாண்டு படிப்பை நிறைவு செய்யாமல், முதலாம் ஆண்டை நிறைவுசெய்துவிட்டு, அல்லது இரண்டாம் ஆண்டை நிறைவுசெய்துவிட்டு வெளியேற விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.

ஸ்டாலின், ரவி
ஸ்டாலின், ரவி

ஆனால், இந்தச் சான்றிதழால் அந்த மாணவர்களின் வேலைவாய்ப்புக்கு எந்தப் பயனும் இல்லை. முதலாம் ஆண்டை முடித்துவிட்டு வெளியேறும் மாணவர்கள், விரும்பினால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுகூட மீண்டும் கல்லூரிக்கு வந்து படிக்கலாம் என்று தேசிய கல்விக் கொள்கை சொல்கிறது. ஆனால், யதார்த்தத்தில் அப்படியெல்லாம் யாரும் மீண்டும் கல்லூரிக்கு வந்து படிக்க வாய்ப்பு இல்லை. அந்த வகையில், நீட் தேர்வைவிட இது ஆபத்தான ஒன்று” என்கிறார் கல்வியாளர் ந.மணி.

மாணவர்களின் நலன் மற்றும் அவர்களின் எதிர்கால நலன்களைக் கருத்தில்கொண்டு தேசிய கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது என்று மத்திய அரசு கூறுகிறது. அந்த அடிப்படையில், சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தினார். அதற்கு எதிரான நிலைப்பாட்டில் தமிழக அரசு இருப்பதால், தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவது கேள்விக்குறியாக இருக்கிறது.