Published:Updated:

`திட்டமிட்ட புறக்கணிப்பு!' - சேலம் பெரியார் பல்கலையைச் சுற்றும் `மகளிர் தின சுற்றறிக்கை' சர்ச்சை

சேலம் பெரியார் பல்கலைக்கழகம்
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ( எம். விஜயகுமார் )

``கொரோனா வைரஸ் பரவுவதால் பல்கலைக்கழக மானியக் குழு அறிக்கையில் கும்பலாக நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று தெரிவித்து இருப்பதால் முதுகலை மாணவிகள் அழைக்கப்படவில்லை.''

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நாளை மறுநாள் 9-ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த மகளிர் தினக் கொண்டாட்டத்ததுக்கு பல்கலைக்கழகத்தில் பயிலும் முதுகலை மாணவிகளுக்கு அழைப்பு மறுக்கப்பட்டு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து பல்கலைக்கழக முதுகலை மாணவிகள் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள். இந்தச் சுற்றறிக்கையால் பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுற்றறிக்கை
சுற்றறிக்கை
எம். விஜயகுமார்

இதுபற்றி பெரியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் முதுகலை மாணவிகள், ``சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், ஊடக அறிவியல், சமூகவியல், உளவியல் துறைகளும், எம்.எஸ்ஸியில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் எம்.காம்., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., ஊட்டச் சத்து அறிவியல், உணவு அறிவியல், நூலக அறிவியல் என மொத்தம் 24 முதுகலைத் துறையில் 750-க்கும் மேற்பட்ட மகளிர் படித்து வருகிறோம்.

பல்கலைக் கழக மானியக் குழு, மார்ச் 8 உலக மகளிர் தினத்தை 7 அல்லது 8-ம் தேதிகளில் பல்கலைக்கழகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டும். கொண்டாடப்படும் உலக மகளிர் தின நிகழ்ச்சியில் மகளிருக்கான பேச்சுப் போட்டி, கருத்தரங்கம், கருத்துப்பட்டறை, கலை இலக்கிய நிகழ்ச்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாரத்தான் ஓட்டப் பந்தயம் எனப் பல நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். பிறகு, பல்கலைக்கழகத்தில் உலக மகளிர் தின நிகழ்ச்சி நடத்தியதற்கான ஆவணங்களை மார்ச் 9-ம் தேதி மாலை 5 மணிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.

ஆனால், பெரியார் பல்கலைக்கழகத்தில் 9-ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுவதாகவும், அதில் பெண் ஆசிரியைகள், பெண் அலுவலர்கள், ஆராய்ச்சி மாணவிகள் மட்டுமே கலந்து கொள்ளச் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்கள். முதுகலை மாணவிகளான எங்களுக்கு எந்த ஒரு அழைப்பும் இல்லை.

மாணவிகள்
மாணவிகள்

பெரியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் முதுகலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரமும், முதுகலை மாணவி தற்கொலை செய்துகொண்ட கொடுமையும் நடந்திருக்கிறது. இந்நிலையில், உலக மகளிர் தினக் கொண்டாட்டத்தில் எங்களை மேடையேற்றினால் பல்கலைக்கழகத்தில் மகளிருக்கு நடக்கும் அநீதிகளை சுட்டிக் காட்டுவோம் என்ற பயத்தில் எங்களை அழைக்காமல் திட்டமிட்டு புறக்கணித்து இருக்கிறார்கள். இதைத் தமிழக அரசும் பல்கலைக்கழக மானியக் குழுவும் கவனிக்க வேண்டும். இந்தச் சுற்றறிக்கை அனுப்பிய பல்கலைக்கழக பதிவாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்கள்.

இதுபற்றி பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் தங்கவேலிடம் கேட்டோம்.``உலக மகளிர் தினம் பல்கலைக்கழகத்தில் 7-ம் தேதி கொண்டாடுவதற்காகத் துணைவேந்தரிடம் கோரினோம். அன்று அவர் வெளியில் செல்ல இருப்பதால் 9-ம் தேதி உலக மகளிர் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறோம். முதுகலை மாணவிகளுக்கு அழைப்பு இல்லையா? நான் சரியாக அழைப்பிதழைப் பார்க்கவில்லை'' என்றவர், சுதாரித்து,``கொரோனா வைரஸ் பரவுவதால் பல்கலைக்கழக மானியக் குழு அறிக்கையில் கும்பலாக நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று தெரிவித்து இருப்பதால் முதுகலை மாணவிகள் அழைக்கப்படவில்லை'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு