Published:Updated:

`புதிய கல்விக் கொள்கை தமிழ் மொழியாக்கம்!’ - சாதக, பாதகங்களைப் பகிரும் எழுத்தாளர் விழியன்

புதிய கல்விக் கொள்கை
புதிய கல்விக் கொள்கை

``சமூகத்தில் விளிம்புநிலையில் இருக்கும் ஒரு குழந்தைக்கு / மலைக் கிராமத்தில் வசிக்கும் ஒரு குழந்தைக்கு எந்தவிதமான நன்மையும் ஏற்படவில்லை என்றால் அந்தக் கொள்கை உபயோகம் இல்லாத ஒன்றுதான்.”

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து தேசிய கல்விக் கொள்கையின் இறுதி வடிவம் வெளியிடப்பட்டது. கல்வியாளர்கள் உட்பட பலரும் இந்தக் கல்விக் கொள்கைகள் தொடர்பாகப் பரவலாக விவாதங்களை நடத்தி வருகின்றனர். ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே தேசிய கல்விக் கொள்கையின் இறுதி வடிவம் வெளியிடப்பட்டது. மாநில மொழிகளில் இது வெளியாகும் பட்சத்தில் பரந்த அளவிலான விவாதத்துக்கு உதவியாக இருக்கும் எனச் சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்தன. மத்திய அரசு மாநில மொழிகளில் மொழிபெயர்ப்பை வெளியிடுவோம் எனக் கூறியிருந்தாலும், அது தாமதமாகும் என்பதால் எழுத்தாளர் விழியன் ஒருங்கிணைப்பில் சுமார் 50 பேர் இணைந்து தேசிய கல்விக் கொள்கை - 2020 இறுதி வடிவத்தை தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டுள்ளனர்.

எழுத்தாளர் விழியன்
எழுத்தாளர் விழியன்

மொழிபெயர்ப்பு தொடர்பாக எழுத்தாளர் விழியனிடம் பேசினோம். ``தேசிய கல்விக் கொள்கையின் வரைவை கடந்த வருடம் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டோம். கிட்டத்தட்ட 15 நாள்களில் அந்தப் பணியைச் செய்து முடித்தோம். இதையடுத்து, பரவலாக வரைவு கவனம் பெற்றதோடு விவாதங்களும் அதிகளவில் எழுந்தன. தமிழில் மட்டும்தான் தேசிய கல்விக் கொள்கை வரைவின் மொழியாக்கம் வெளியானது. அதன் பிறகு தற்போது வெளியாகியுள்ள தேசிய கல்விக் கொள்கை 2020, 22 மொழிகளில் வெளியாகும் என மத்திய அரசு தெரிவித்தது.

ஆனால், மாநில மொழிகளில் வர தாமதமாகும் எனத் தோன்றியது. வெளியான கல்விக் கொள்கைகளிலும் அதிகமான பிரச்னைகள் இருந்தன. விவாதங்களும் கல்விக் கொள்கைகள் மீது தொடர்ந்து நடைபெற்று வந்தன. அதற்குப் பயன்படும் வகையில் உடனடியாக மொழியாக்கம் செய்ய முடிவு செய்தோம். மொத்தம் 66 பக்கங்கள் என்பதால் சுமார் 50 பேர் இணைந்து 60 மணி நேரத்தில் மொழியாக்கத்தை முடித்தோம்.

வெவ்வேறு துறைகளில் உள்ள நண்பர்கள் இணைந்துதான் இந்தப் பணியைச் செய்தோம். ஒற்றுப் பிழைகள், வார்த்தைப் பிழைகள், வாக்கியப் பிழைகள் என அனைத்தையும் கருத்தில் கொண்டு பணியாற்றினோம். கடந்த வரைவு மொழியாக்கத்தில் சில பிழைகள் இருந்ததால் இந்த முறை எந்தவிதமாகன பிழைகளும் வரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். அதன்படி, வெற்றிகரமாக மொழியாக்கம் செய்ய முடிந்தது. ஆனால், இந்ந கொள்கை கோப்பில் சாமானிய மக்களுக்கு புரியக்கூடாது என்பதற்காகவே மிகவும் கடினமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதைப் போல உணர்ந்தேன். எல்லா மக்களிடமும் கொள்கைகள் சென்று சேர வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகள் மத்திய அரசிடம் இருப்பதாக தெரியவில்லை. மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கும் இந்த கல்விக் கொள்கைகள் சென்று சேர வேண்டும். இதுதொடர்பாகவும் அரசு சிந்திக்க வேண்டும். எனவே, நாங்கள் அவர்களுக்கு பயன்படும் வகையில் ஆடியோ மற்றும் சைகை மொழியிலும் தேசிய கல்விக் கொள்கையை வெளியிட உள்ளோம்” என்றார்.

``அனுமதிக்கவே கூடாது”, ``இவை கற்காலத்துக் குற்றச்சாட்டுகள்” - புதிய கல்விக் கொள்கை ஏற்பும் மறுப்பும்

தேசிய கல்விக் கொள்கைகள் குறித்து விழியன் பேசும்போது. ``3 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது என்பது வரவேற்கத் தக்க விஷயம். காலை உணவு வழங்குவது என்பதும் நல்ல விஷயம். குறிப்பிட்டுச் சொல்லும்படியாகச் சில நல்ல விஷயங்கள் இருந்தாலும் அவற்றிலும் குறிப்பிடும் வகையில் பிரச்னைகள் உள்ளன. இந்தக் கல்விக் கொள்கையில் உள்ள பெரும்பாலான விஷயங்கள் 1965-ல் கோத்தாரி கல்விக்குழு கொடுத்த அறிக்கையில் உள்ளவைதான்.

புதிதாக கொள்கைகள் என்று எதுவும் தற்போது வெளியான கொள்கைகளில் இல்லை. மும்மொழி கல்வி, புத்தகம் சார்ந்த விஷயங்கள், ஆசிரியர் பயிற்சிகள், தேர்வு தொடர்பான விஷயங்கள், ஜிடிபி எனத் தற்போது ஹைலட்டாகச் சொல்லப்படுகிற அனைத்து விஷயங்களும் ஏற்கெனவே சொல்லப்பட்டவைதான். கொரோனா தொடர்பான பாதிப்புகளால் ஏற்கெனவே பல பள்ளி மாணவர்களும் படிப்பை நிறுத்திவிட்டு வேறு வேலைகளுக்குச் செல்லத் தொடங்கிவிட்டனர். அப்படியான சூழலில் இந்தக் கொள்கைகள் இன்னும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

தேசிய கல்விக் கொள்கை - 2020
தேசிய கல்விக் கொள்கை - 2020

குழந்தைகள் ஒருமுறை கல்வியில் இருந்து விலகி சம்பாதிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்றால் மீண்டும் மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்து வருவது மிகவும் கடினம். பொதுவாகவே, படிப்பை பாதியில் நிறுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், புதிய கல்விக் கொள்கைகள் வரும்பட்சத்தில் படிப்பை கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். சமூகத்தில் விளிம்புநிலையில் இருக்கும் ஒரு குழந்தைக்கு / மலைக் கிராமத்தில் வசிக்கும் ஒரு குழந்தைக்கு எந்தவிதமான நன்மையும் ஏற்படவில்லை என்றால் அந்த கொள்கை உபயோகம் இல்லாத ஒன்றுதான். அப்படியான கண்ணோட்டத்தில் இந்தக் கொள்கைகளைப் பார்க்கும்போது இந்தக் கல்விக் கொள்கைகள் முழுவதுமே சிக்கல் நிறைந்ததாகவே உள்ளன. கல்வி என்பதை வகுப்பறைக்குள் இருக்கும் விஷயமாக மட்டும் பார்க்கக்கூடாது. சமூக அளவிலான பார்வைகளையும் உள்ளடக்கிய ஒன்றாகத்தான் கல்விக் கொள்கைகள் இருக்க வேண்டும்.

கல்விக் கொள்கையில் மாற்றம் தேவை. ஆனால், அவை எல்லோரையும் அரவணைப்பதாக இருக்க வேண்டும். இந்தச் சமயத்தில் கல்வி தொடர்பான உரையாடல்கள் எழ வேண்டும். கல்வியின் ஒவ்வொரு அங்கத்தைப் பற்றியும் விமர்சனப் பார்வைகள் தேவை. வகுப்பறை, கரும்பலகை, ஆன்லைன், கல்வி வரலாறு, ஆசிரியர்களின் சிக்கல்கள், தேர்வுகளில் இருக்கும் சிக்கல், சர்வதேச அளவில் நடக்கும் கல்வி மாற்றங்கள் என பரந்துபட்ட பார்வையும் விவாதமும் சமூகத்தில் நடைபெற வேண்டும். அப்போதுதான் அது ஆரோக்கியமான சமுதாயமாக இருக்க முடியும். அதை நோக்கியே நாம் நகர வேண்டும்” என்று தெரிவித்தார்.

தேசிய கல்விக் கொள்கை 2020 மொழியாக்கம் -

download
புதிய கல்விக் கொள்கை: சாதக பாதகங்கள் என்ன? - ஓர் அலசல்!
அடுத்த கட்டுரைக்கு