Published:Updated:

``கிராமப்புற இளைஞர்களின் திறமையை வெளிக்கொண்டு வர வேண்டும்!" - `ஜோஹோ' ஶ்ரீதர் வேம்பு

ஸ்ரீதர் வேம்பு
News
ஸ்ரீதர் வேம்பு

``தாய் மொழி கல்வி என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். நான் தமிழில்தான் படித்தேன். இந்தியாவில் நாம் தான் நமது தாய்மொழி வேண்டாம் என்று ஒதுக்குகிறோம்”

``கிராமப்புற இளைஞர்களின் திறமையை வெளிக்கொண்டு வர வேண்டும்!" - `ஜோஹோ' ஶ்ரீதர் வேம்பு

``தாய் மொழி கல்வி என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். நான் தமிழில்தான் படித்தேன். இந்தியாவில் நாம் தான் நமது தாய்மொழி வேண்டாம் என்று ஒதுக்குகிறோம்”

Published:Updated:
ஸ்ரீதர் வேம்பு
News
ஸ்ரீதர் வேம்பு

டை சென்னை (TiE Chennai) அமைப்பு சார்பில் இணைய வழி கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. இதில் 3-வது நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘நில்லு, அப்புறம் சொல்லு’ என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்பு பேசினார்.
‘சொல் ஒன்று செயல் ஒன்று என்று இல்லாமல்; சொல்லும் செயலும் ஒன்று’ என்று வாழ்ந்து காட்டி வரும் ஸ்ரீதர் வேம்பு தமிழ்நாட்டில் கிராமங்களில் படிக்கும் மாணவர்களின் திறமையைப் பற்றியும் சிறிய நகரத்தில் இருந்து உலகம் போற்றும் பெரிய நிறுவனத்தை உருவாக்கியது பற்றியும் பகிர்ந்து கொண்டார். 1996-ல் சென்னை புறநகரில் ஒரு சிறிய இடத்தில் இவர் தொடங்கிய ஜோஹோ நம் தமிழ்நாட்டில் துவங்கப்பட்ட நிறுவனம் என்று நாம் பெருமை பேசும் அளவில் வளர்ந்து இன்று உலகப்புகழ் பெற்றுள்ளது.

டிஜிட்டல் தொழில்நுட்பம்
டிஜிட்டல் தொழில்நுட்பம்

ஸ்ரீதர் வேம்பு பேசியதாவது, ''இந்தியாவைப் பொறுத்தவரை தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சி என்பது அமெரிக்காவில் மழை பெய்தால் இங்கு குடை பிடிக்கும் சூழலில்தான் உள்ளது. இதற்குக் காரணம் நமக்கு ஆங்கிலம் தெரியும் என்பதால்தான். ஆங்கிலம் நமக்கு தெரிவதால் நாம் அமெரிக்க அலுவலகங்களின் ‘பேக் எண்ட் ஆபீசாக’ இங்கு செயல்படுகிறோம். இதை நாம் மாற்றவேண்டும். ஆனால், ஆங்கிலம் தெரியாத காரணத்தால் சீனா, தென்கொரியா, தைவான் போன்ற நாடுகள் தங்கள் திறமையைக் காட்ட புதிய தயாரிப்பில் இறங்குகின்றன. ஒரு செமிகண்டக்டர் சிப் அல்லது எலக்ட்ரிக் கார் என்று ஏதாவது ஒன்றை தயாரித்தால்தான் அதை மார்க்கெட்டில் விற்கமுடியும் என்ற நிலையில் உள்ளனர். அந்த நிலைக்கு நாம் மாற வேண்டும். பல புதிய பொருட்களை நாம் இங்கு தயாரிக்கவேண்டும்.

தாய்மொழியை இழக்கக்கூடாது..!

தாய்மொழிக் கல்வி என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். நான் தமிழில்தான் படித்தேன். இந்தியாவில் நாம் தான் நமது தாய்மொழி வேண்டாம் என்று ஒதுக்குகிறோம். தாய்மொழியை வளர்ப்பதற்கு ஒரே வழி தொழில்முனைவோர்களும் வேலைவாய்ப்புகளை வழங்குபவர்களும் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்போதுதான் தமிழ் வளரும். நம்மைப் போன்ற பலர் கிராமங்களுக்கு வந்து தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கினால்தான் தமிழையும் காப்பாற்ற முடியும் நாட்டையும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லமுடியும். நாம் இதுபோன்று செய்தால் தமிழ் தானாக வளரும். கிராமப்புறங்களில் பெரும்பாலான மாணவர்கள் தமிழிலேயே படிக்கிறார்கள். அப்படி ஆங்கில வழிக் கல்வியில் படித்தால் அதில் பலருக்கு ஆங்கிலம் வருவதில்லை. இதனால் ஆங்கிலம் தெரியாவிட்டால் அவர்களால் சாப்ட்வேர் எழுதமுடியாது என்று கூறிவிட முடியாது.

தாய்மொழி
தாய்மொழி

அதற்கு நான் முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்பதற்காக இந்தத் தலைப்பான ‘நில்லு, அப்புறம் சொல்லு’ என்பதற்கு ஏற்ப நான் தற்போது எனது கிராமத்திற்கு வந்து பணிகளை துவக்கி உள்ளேன். முதலில் நம்மிடம் இருக்கும் நமது தாழ்வு மனப்பான்மையைப் போக்கவேண்டும். நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையை நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும். நமது மொழி, கலாச்சாரம் ஆகியவற்றின் மீது நாம் நம்பிக்கை வைத்தால்தான் நாம் அடுத்த நிலைக்குச் செல்லமுடியும். ஆங்கிலம் தெரியாதவர்கள்கூட சாஃப்ட்வேர் எழுத முடியும் என்பதை நிரூபித்துக்காட்டவே நான் எனது கிராமத்திற்கு வந்துள்ளேன்.

விண்டோஸ், கூகுள் சர்ச் போன்ற சாப்ட்வேர்களை உருவாக்குவதற்கு தேவையான விஷயங்கள் இரண்டுதான். ஒன்று திறமை, மற்றொன்று நேரம். இவையிரண்டும் இருந்தால் நாம் அதை சாதித்துவிடலாம். இந்தியாவைப் பொறுத்தவரை தமிழகம் அல்லது பீகாராக இருக்கட்டும். அங்குள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு அவர்களுக்குள்ளே இருக்கும் திறமை தெரியாது. அவற்றை நாம் முதலில் வெளிக்கொண்டு வரவேண்டும். அப்போது அவர்களின் திறமை வெளிப்படும்.
திறமைசாலிகளை உருவாக்குவதற்கு பணம் மட்டும் அவசியம் இல்லை; அதற்கான சிறந்த கட்டமைப்பு, திறமைகளை உருவாக்குவதற்கான சிறந்த சூழல் ஆகியவற்றைக் கொடுத்தால் திறமைசாலிகள் தன்னால் உருவாவார்கள். அவர்களின் திறமைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை நாம் வழங்கவேண்டும். அப்படி வழங்கினால் இங்கு படித்துவிட்டு வெளிநாடு செல்லவேண்டிய கட்டாயம் இல்லை.
நாம் படிப்பை மாணவர்களிடம் திணிக்காமல் அவர்கள் விரும்பும்படி சொல்லித் தரவேண்டும்.

கல்வி
கல்வி

கடுமையான பாடத்திட்டங்களை நாம் மாணவர்களிடம் திணிக்கும்போது பல மாணவர்கள் படிப்பே வேண்டாம் என்று படிப்பைப் பாதியிலே நிறுத்தும் சூழல் உருவாகும். எனக்கு பரீட்சை மீது எல்லாம் நம்பிக்கை இல்லை. என்னைப் பொறுத்துவரை அடிப்படையில் எழுதப் படிக்கவும் கணக்கு போடவும் தெரிந்தாலே போதுமானது. உயர்தரமான கல்வி என்று கூறி பரீட்சையைத் திணிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ‘நீட்’ போன்ற தேர்வுளிலும் எனக்கு உடன்பாடு இல்லை. இது சரியான கல்விமுறை இல்லை. இதன் காரணமாகப் பல குழந்தைகள் மன ரீதியாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டின் தாய்மொழியையும் அங்குள்ள திறமையான இளைஞர்களையும் நம்பித்தான் உள்ளது. திறமை என்பது எல்லோரிடமும் இருக்கிறது. அதை நாம் கண்டறிந்து வெளிக் கொண்டுவர வேண்டும். அதற்கான நடவடிக்கையில் தொழில்முனைவோர்கள் இறங்கவேண்டும். கடுமையான படிப்பும் பரீட்சையும் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டு வந்துவிடாது" என்றார்.