நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 8 - இப்போதே வாங்க வேண்டிய சர்ட்டிபிகேட்கள்!

கல்வியாளர் ரமேஷ் பிரபா
கல்லூரி அட்மிஷன் பரபரப்பாகத் தொடங்குகிற இந்த நேரத்தில் நீங்கள் எந்தப் படிப்பில் சேர்வதாக இருந்தாலும் முக்கியமான சில சர்ட்டிபிகேட்கள் தேவை. பல சமயங்களில் அவசர அவசரமாக கடைசி நேரத்தில் அவற்றைத் தேட ஆரம்பிப்போம். ஒரு சில இருக்கும், சில இருக்காது. அதற்குப் பிறகுதான் விண்ணப்பிக்கத் தொடங்குவோம். அப்படிச் செய்யும்போது உரிய நேரத்தில் அவை கிடைக்குமா என்று தெரியாது. இது தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும். தவிர, எல்லா சர்ட்டிபிகேட்களும் எல்லோருக்குமே தேவைப்படாது. அந்தக் குழப்பம் நிறைய பேருக்கு இருக்கும். அட்மிஷன் சார்ந்த பல்வேறு சர்ட்டிபிகேட்கள், அவை எதற்குத் தேவை, எப்படிப் பெறுவது என்பதையெல்லாம் விரிவாகப் பார்ப்போம்.

முதல் தலைமுறைப் பட்டதாரி சான்றிதழ் (First Graduate Certificate): சமீப ஆண்டுகளாக இந்தச் சான்றிதழ் முக்கியமானதாக மாறியுள்ளது. இது என்ன என்பதை முதலில் புரிந்துகொண்டு, யார் இதைத் பெறுவதற்குத் தகுதியுள்ளவர் என்பதையும் பார்ப்போம். ஒரு குடும்பத்தில் தற்போது கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் ஒருவர், அவர்தான் அந்தக் குடும்பத்திலேயே முதன்முதலாகப் பட்டம் பெறப்போகிறவர் என்றால் அவருடைய கல்விக் கட்டணத்தை அரசாங்கமே ஏற்கும். எனினும் இது Professional Courses என்று சொல்லப்படும் தொழிற்கல்வி பட்டப் படிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். அவை என்னென்ன என்று பார்த்தால் மருத்துவம், கால்நடை மருத்துவம், பொறியியல், சட்டம், விவசாயம் போன்றவையாகும். இந்தச் சலுகையும் தமிழ்நாடு அரசு நடத்தும் கவுன்சிலிங் மூலமாகச் சேர்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். தாங்களாக மேனேஜ்மென்ட் கோட்டாவில் தனியார் கல்லூரிகளில் சேர்பவர்களுக்கு இது பொருந்தாது. எனினும், கவுன்சிலிங் மூலமாக தனியார் கல்லூரிகளில் சேர்ந்தாலும் இந்தச் சலுகை பொருந்தும். Tution Fee என்று சொல்லப்படும் கல்விக்கட்டணம் மட்டுமே அரசாங்கத்தால் செலுத்தப்படும். மற்ற அனைத்துக் கட்டணங்களையும் நீங்கள்தான் செலுத்த வேண்டும்.

சரி, முதல் தலைமுறைப் பட்டதாரி என்பவர் யார்? ஒரு குடும்பத்தில் அவர்களது தலைமுறைகளில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் என இதுவரை யாருமே பட்டதாரியாக இருக்கக் கூடாது என்பதுதான் இதன் அடிப்படை. அதேநேரம், ஒரு மாணவரின் அண்ணன் அல்லது அக்கா ஏற்கெனவே கல்லூரியில் முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் ஆண்டுகளில் படித்துக்கொண்டிருந்து இதுவரை பட்டம் பெறவில்லை என்றாலும் இந்த மாணவருக்கு முதல் தலைமுறைப் பட்டதாரி சலுகை கிடைக்கும். ஆனால் ஒரு மாணவரின் அக்கா அல்லது அண்ணன் கடந்த சில ஆண்டுகளில் ஏற்கெனவே ஏதாவது ஒரு தொழிற்கல்வி படிப்பில் சேர்ந்து முதல் தலைமுறைப் பட்டதாரி சலுகையைப் பெற்றிருந்தால் இந்த மாணவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. இவற்றை கவனத்தில் கொண்டு தகுதியுள்ள அனைத்து மாணவர்களும் முதல் தலைமுறைப் பட்டதாரி சான்றிதழ் பெறலாம். தொழிற்கல்வியில் சேரும்போது அந்த விண்ணப்பத்திலேயே இவர்கள் முதல் தலைமுறைப் பட்டதாரி என்பதைக் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும். பிறகு சான்றிதழ் சரிபார்த்தல் நேரிடையாக நடைபெறும்போது இந்த சர்ட்டிபிகேட்டைக் கையில் வைத்திருக்க வேண்டும்.

பிறப்பிடச் சான்றிதழ் (Nativity Certificate): பெரும்பாலான பட்டப் படிப்புகளின் விண்ணப்பத்தில் இப்படி ஒன்று கேட்கப்படும். முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது, இது எல்லோருக்கும் தேவைப்படுவது அல்ல என்பதுதான். யாருக்குத் தேவைப்படும் என்பதைத் தெரிந்துகொண்டு, அவர்கள் மட்டும் இந்த சர்ட்டிபிகேட் வாங்கினால் போதுமானது. சில மாணவர்கள் தமிழ்நாட்டில் பிறந்து, பிறகு தாய் தந்தை வேலை நிமித்தமாக மற்ற மாநிலங்களுக்குச் சென்றதால், சில ஆண்டுகள் அந்த மாநிலத்திலேயே அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் பள்ளிப்படிப்பைப் படிக்கும் சூழல் ஏற்பட்டிருக்கும். இப்போது தமிழ்நாட்டில் உள்ள ஒரு கல்லூரிக்கு விண்ணப்பிக்கும்போது இந்தப் பிறப்பிடச் சான்றிதழ் தேவைப்படும். அதன் அடிப்படை என்ன என்று பார்த்தால், ஒரு மாணவர் 8, 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் ஏதாவது ஒன்றையோ, ஒன்றுக்கும் மேற்பட்ட வகுப்புகளையோ தமிழ்நாட்டைத் தாண்டி மற்ற மாநிலங்களில் படித்திருந்தால் அவர்களுக்குக் கண்டிப்பாகப் பிறப்பிடச் சான்றிதழ் தேவை. மற்றவர்களுக்கு இது பொருந்தாது.

சாதிச் சான்றிதழ் (Community Certificate): இதுவும் அனைவருக்கும் தேவைப்படுவது கிடையாது. தமிழ்நாடு அரசின் 69% சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் பயன்பெறுகிற BC, BCM, MBC, DNC, SC, SCA, ST போன்ற பிரிவின் கீழ் வருபவர்கள் கண்டிப்பாக சாதிச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். ஒரு காலத்தில் தனியாக காகிதத்தில் ரப்பர் ஸ்டாம்ப் போட்டு தாசில்தார் கொடுப்பார். பிறகு திக்கான ஒரு அட்டையாக Permanent Card என்கிற பெயரில் வழங்கப்பட்டு வந்தது. சமீப ஆண்டுகளில் இது டிஜிட்டல்மயமாக்கப்பட்டு இன்று கொடுக்கப்படுகிற சர்ட்டிபிகேட் முழுக்க டிஜிட்டல் சர்ட்டிபிகேட் என்பதால் வசதியாக எப்போது வேண்டுமானாலும் நீங்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதுவரை வாங்கவில்லை என்றால் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிற்படுத்தப் பட்ட பிரிவினரில் BC, MBC என்றெல்லாம் தனித்தனியாக இருந்தாலும் அகில இந்திய அளவில் அட்மிஷனுக்கு விண்ணப்பிக்கும்போது நீங்கள் தனியாக OBC என்கிற ஒரு சர்ட்டிபிகேட்டை வாங்க வேண்டும்.

வருமானச் சான்றிதழ் (Income Certificate): இதுவும் எல்லோருக்கும் தேவைப்படுகிற ஒரு விஷயம் கிடையாது. கல்லூரியில் சேர்ந்த பிறகு தங்கள் கம்யூனிட்டி பிரிவிற்கு ஏற்றவாறு ஸ்காலர்ஷிப் பெற விண்ணப்பிக்கும்போது அங்கு நீங்கள் வருமானச் சான்றிதழைக் கொடுக்க வேண்டி வரும். எனவே போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் என்று சொல்லப்படும் ஸ்காலர்ஷிப்புக்குத் தகுதி உடையவர்கள் மட்டும் அதற்கான வருமான உச்சவரம்பு என்ன என்பதைத் தெரிந்துகொண்டு இந்த வருமானச் சான்றிதழைப் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மற்றவர்களுக்கு இது தேவையில்லை.
இந்த அனைத்துச் சான்றிதழ்களும் தாசில்தாரிடம் விண்ணப்பித்துப் பெற வேண்டியவை என்பதால் நீண்ட காலமாகவே நம் மாணவர்கள் பெற்றோர்களுடன் இணைந்து தாசில்தார் அலுவலகத்திற்கு நடையாய் நடக்கிற அவலம் இருந்து வந்தது. சமீப ஆண்டுகளில் இவற்றை நீங்கள் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கும் வசதியைத் தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. இன்று அவை நடைமுறையில் உள்ளன. தமிழ்நாடு அரசின் இணைய முகவரியான https://www.tnesevai.tn.gov.in மூலம் நீங்கள் இந்த அனைத்துச் சான்றிதழ்களையும் ஆன்லைனிலேயே விண்ணப்பித்துப் பெற முடியும். தவிர e-சேவை மையங்கள் மூலமாக நீங்கள் விண்ணப்பிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை CSC (Common Service Centre) எனப்படும் பொதுச் சேவை மையங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளன. இவற்றை நீங்கள் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். விண்ணப்பிக்கும்போது எவையெல்லாம் தேவை என்பதை மட்டும் முடிவு செய்துகொண்டு அந்த ஆவணங்களோடு நீங்கள் இ-சேவை மையங்களைத் தொடர்புகொண்டு விண்ணப்பித்தால் அலைச்சல் இல்லாமல் தேவையான சான்றிதழ்களைப் பெறமுடியும்.

முன்னாள் ராணுவத்தினர் சான்றிதழ் (Ex-Servicemen Certificate): அனைத்துத் தொழிற்கல்விப் பாடங்களுக்கான மாணவர் சேர்க்கையிலுமே முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு என இடம் ஒதுக்கப்படுகிறது. பெரும்பாலும் இது 1% இடம் என்று இருந்தாலும் ஒரு சில படிப்புகளில் குறிப்பிட்ட அளவு இடங்கள் என்று எண்ணிக்கையே குறிப்பிட்டு விடுகிறார்கள். இதற்கான சர்ட்டிபிகேட் ஒவ்வொரு படிப்புக்கான அட்மிஷன் விண்ணப்பத்திலேயே ஒரு மாதிரி வடிவம் கொடுத்திருக்கிறார்கள், அதன்படிதான் சர்ட்டிபிகேட் வாங்க வேண்டும். ‘Certificate of Dependancy on Ex-Servicemen’ என்பது அதன் பெயர். இதை ‘Officer of the Department of Ex-Servicemen Welfare Board of Tamilnadu’ என்பவரிடம் இருந்து மட்டுமே வாங்க முடியும். அப்படி வாங்கும்போது அந்த ஆபீஸர் Assistant Director பதவிக்குக் குறையாமல் இருக்க வேண்டும். நீங்கள் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரோ அந்த மாவட்டத்தில் இதை வாங்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ் (Certificate for Persons with Benchmark Disabilities): அனைத்துத் தொழிற்கல்வி அட்மிஷனிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு என 1% இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை ஐந்து வகைகளாக இங்கு பிரிக்கிறார்கள். பார்வைக் குறைபாடு, காது கேளாமை, மனநலம் குன்றியவர்கள், உடலின் பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்பட்டிருப்பது மற்றும் மேற்குறிப்பிட்ட நான்கு வகைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வகையான பாதிப்புகள் இருந்தாலும் அவை பொருந்தும். என்ன சர்ட்டிபிகேட் வாங்க வேண்டும் என்பதற்கான மாதிரிப் படிவம் விண்ணப்பத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கும். இந்த சர்ட்டிபிகேட்டை நீங்கள் சார்ந்திருக்கும் மாவட்டத்தின் ‘District Medical Board’ உங்களுக்கு வழங்கும்.
இவை தவிர, மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் Transfer Certificate எனப்படும் மாற்றுச் சான்றிதழ் ஆகியவை அனைவருக்குமே அவசியம். இவை நீங்கள் படித்த பள்ளியில் பெற வேண்டியவை.
- படிப்பு தொடரும்...
*****

யாருக்கு எவ்வளவு?
காலேஜ் அட்மிஷனைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் கீழ்க்கண்டவாறு 69% இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. இதில் ஒரு சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். SCA பிரிவில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் அளவுக்கு விண்ணப்பங்கள் வரவில்லை என்றால் அந்த இடங்கள் SC பிரிவுக்கு மாற்றப்படுவது உண்டு. தவிர OC என்பது Forward Caste-ஐக் குறிக்கும் என்று பலர் நினைப்பதுண்டு, ஆனால் அது உண்மையல்ல. Open Category என்பதுதான் அதன் அர்த்தம். மிக அதிக மதிப்பெண்கள் வைத்திருக்கும் அனைத்து கம்யூனிட்டி பிரிவினரும் இந்த OC கேட்டகிரியில் போட்டி போடுவார்கள். உதாரணமாக, மிக அதிக மதிப்பெண் வைத்திருக்கும் ஒரு MBC மாணவர் கவுன்சிலிங்கில் சீட் எடுக்கும்போது OC கேட்டகிரியில் இடம் இருந்தால் அதிலிருந்து ஒன்று குறையும், MBC கேட்டகிரியில் குறையாது. ஒட்டுமொத்தமாக OC கேட்டகிரி ஜீரோ இடங்கள் என்று வந்தபிறகுதான் அந்தந்த கம்யூனிட்டி கேட்டகிரியில் இடம் குறையும்.
கம்யூனிட்டி பிரிவு இட ஒதுக்கீடு
OC - 31%
BC -26.5%
BCM - 3.5%
MBC - 20%
SC - 15%
SCA - 3%
ST 1%

என்னென்ன ஸ்காலர்ஷிப்?
ஸ்காலர்ஷிப் கேட்டு விண்ணப்பிக்கும்போது பெரும்பாலும் வருமானச் சான்றிதழ் தேவைப்படும் என்று சொல்லியிருந்தேன். எங்கெல்லாம் வருமானச் சான்றிதழ் கேட்பார்கள்? முதலில் தமிழ்நாடு அரசு வழங்குகிற BC, MBC, SC, ST பிரிவினருக்கான போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் பெரும் பகுதியினருக்குப் பொருந்தக்கூடியது. அடுத்து, பொறியியல் மாணவர்களுக்கு AICTE வழங்குகிற AICTE Tution Fee Waiver Scheme வருமானச் சான்றிதழ் அடிப்படையில் நடக்கிறது. அது தவிர, AICTE Pragati எனப்படுகிற பெண்களுக்கான ஸ்காலர்ஷிப் பொறியியல் பட்டம் மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவிகளுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இந்த எல்லாவற்றுக்கும் வருமானச் சான்றிதழ் அவசியம்.