சமூகம்
Published:Updated:

இனஅழிப்புக்கான நீதியைப் பெறமுடியாமல்போனால், உலகில் எந்தத் தமிழனுக்கும் பாதுகாப்பு இருக்கப்போவதில்லை!

சண் மாஸ்டர்
பிரீமியம் ஸ்டோரி
News
சண் மாஸ்டர்

சண் மாஸ்டர்

2009-ம் ஆண்டு இலங்கையில் நடந்த இன அழிப்பு, யாராலும் மறந்துவிட முடியாத ரணம். மே 17, 18 தேதிகளில்தான் முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொன்றுக் குவிக்கப்பட்டனர்.

அந்தக் கொடூரம் நிகழ்ந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. மே 18-ம் தேதி நினைவுதினம் அனுசரிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், இறுதி யுத்தத்தின்போது தமிழகத்தில் தஞ்சமடைந்து, பாதிக்கப்பட்ட தமிழர்களின் நீதிக்காக தொடர்ந்து குரல்கொடுத்துவரும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

“முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இலங்கை மீதான விசாரணை எந்த நிலையில் இருக்கிறது?”

“2015-ம் ஆண்டில், ‘பன்னாட்டு நீதிபதிகள் பங்கேற்புடன் இலங்கையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்’ என ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இலங்கை அரசின் ஒப்புதலோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த காலத்தில் ரணில் - சிறிசேனா அரசு, உள்நாட்டிலேயே நீதி விசாரணை நடத்துவதாகச் சொல்லி காலத்தைக் கடத்தி உலகின் கண்களில் மண்ணைத் தூவியது.

‘படைவீரர்களில் ஒருவரைக்கூட விசாரணைக்கு உட்படுத்த மாட்டோம்’ என வாக்குறுதி கொடுத்து அதிபர் தேர்தலில் வென்றார் கோத்தபய. அதைத் தொடர்ந்து, ‘ஐ.நா-வில் இயற்றிய தீர்மானத்தை மதிக்கப்போவதில்லை’ என, ஐ.நா மனித உரிமை மன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளிப்படையாகவே அறிவித்துவிட்டது இலங்கை. முள்ளிவாய்க்கால் படுகொலையின்போது பாதுகாப்புத் துறைச் செயலராக இருந்து லட்சக்கணக்கான தமிழர்களைத் திட்டமிட்டுக் கொன்றொழித்த கோத்தபய, இந்தத் தீர்மானத்திலிருந்து வெளியேறியதில் வியப்பில்லை.

இனஅழிப்புக்கான நீதியைப் பெறமுடியாமல்போனால், உலகில் எந்தத் தமிழனுக்கும் பாதுகாப்பு இருக்கப்போவதில்லை!

போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ராணுவ உயர் அதிகாரிகள், பல்வேறு சிவில் நிர்வாகப் பொறுப்புகளில் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசில், சிவில் நிர்வாகம் அனைத்தும் ராணுவமயப் படுத்தப்பட்டுவிட்டது. எனவே, தன்னைத்தானே விசாரித்துக் கொண்டு தமிழர்களுக்கு நீதி வழங்குவார்கள் என்ற பேச்சுக்கு இனி இடமே இல்லை. `பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசு மீதான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என, ஐ.நா பாதுகாப்பு அவையிடம் ஐ.நா மனித உரிமை ஆணையம் கோர வேண்டும். இதுவே பாதிக்கப்பட்ட எமது மக்களின் இப்போதைய ஒற்றைக் கோரிக்கை.’’

‘‘ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க தமிழக மற்றும் இந்திய அரசுகள் என்ன செய்ய வேண்டும்?’’

‘‘சர்வதேச விசாரணை வேண்டும். ஈழத்தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் - இந்த இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து காத்திரமான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இது போதாது. இந்தத் தீர்மானம் இந்திய நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்காக தமிழக மக்களும் தமிழக அரசும் தமிழகத்தில் உள்ள எம்.பி-க்களும் தமிழக அரசியல் கட்சிகளும் பாடுபட வேண்டும். தமிழர்களின் நீதிக்காக, ஐ.நா மன்றத்தில் இந்திய அரசு குரல்கொடுக்க வேண்டும்.’’

‘‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முயற்சிகளை இலங்கை ராணுவம் தடுத்துவருவதாக செய்திகள் வருகின்றனவே?’’

சண் மாஸ்டர்
சண் மாஸ்டர்

“இலங்கையில் சிங்களப் பிரதேசங் களில்தான் கொரோனா பாதிப்பு அதிகம். ஆனால், தமிழர் பிரதேசங்களில் ராணுவத்தைக் குவித்து நினைவேந்தல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான முயற்சிகளில் கோத்தபய அரசு தீவிரம் காட்டிவருகிறது. மிகவும் நெருக்கடியான சூழலிலும் காணாம லாக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் தொடர்ந்து கொண்டிருப் பதைப்போல், இலங்கை அரசின் கெடுபிடிகளையும் தாண்டி எமது மக்கள் நெஞ்சுரத்துடன் நினைவேந்தல் நிகழ்வு களையும் நடத்தியே தீருவார்கள்.’’

“ஒருசில ஈழ ஆதரவாளர்களே, ‘ஈழத்தமிழர் விவகாரத்தை தற்போது தமிழகத்தில் முதன்மைப்படுத்தத் தேவையில்லை’ என்று சொல்வது குறித்து?’’

‘‘கொல்லப்பட்டவர்கள் மட்டுமல்ல... இன்றைக்கும் உடல்களில் குண்டுகளைச் சுமந்தவாறு எமது உறவுகள் தினமும் வலியால் துடித்துவருகின்றனர்.

எம் மக்களின் வலிகளை தமது வலியாக உணரும் எந்த ஒரு தமிழரும் `இனப்படு கொலையைக் கடந்து செல்வோம்’ என்று கூற மாட்டார். இன அழிப்புக்கான நீதியில் அங்கு எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களின் பாதுகாப்பும் அடங்கி யிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையில் ராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோயில் தமிழனின் பெருமை என்றால், ஆயிரமாயிரமாய் தமிழர்கள் கொல்லப்பட்டதன் சாட்சியாக அதே தஞ்சையில் இருக்கும் முள்ளிவாய்க்கால் முற்றம் தமிழினத்தின் தோல்வி.

இலங்கையில் நடந்த இன அழிப்புக் கான நீதியைப் பெற முடியாமல்போனால், ஈழத்தில் உள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகெங்கும் வாழும் எந்தத் தமிழனுக்கும் இந்தப் பூமியில் பாதுகாப்பு இருக்கப் போவதில்லை. இதைப் புரிந்துகொண்ட எந்தத் தமிழனும் முள்ளிவாய்க்கால் படுகொலையைக் கடந்து போக வேண்டும் என்று ஒருபோதும் சொல்ல மாட்டான். எனவே, முள்ளிவாக்கால் பதினோராவது நினைவு நாளிலாவது, ‘இலங்கை மீது ஒரு காத்திரமான பன்னாட்டு விசாரணையை வலியுறுத்து வதை, உலகமெங்கும் பரந்து வாழும் அனைத்து தமிழர்களும் இலக்காகக் கொள்ள வேண்டும்’ என்ற சத்தியத்தை எடுக்க வேண்டும்.”