Election bannerElection banner
Published:Updated:

வெளியானது குஜராத் தேர்தல் தேதி! கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

வெளியானது குஜராத் தேர்தல் தேதி! கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?
வெளியானது குஜராத் தேர்தல் தேதி! கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

வெளியானது குஜராத் தேர்தல் தேதி! கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் தேதி ஒருவழியாக அறிவிக்கப்பட்டு விட்டது. டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக அம்மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தன் சொந்த மாநிலத்திற்குச் சென்று, சவுராஷ்டிரா பகுதியையும், குஜராத்தின் தென் பகுதியையும் இணைக்கும் வகையிலான படகுசேவை மற்றும் வதோதரா மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்த பின்னர், குஜராத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இமாச்சலப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்தன்றே, குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலையும் அறிவித்திருக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடும் விமர்சனம் செய்த நிலையில், தற்போது டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் தேதியை வெளியிட்டுள்ளார்.

மொத்தம் 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி, குஜராத் மாநிலத்தில் முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 9-ம் தேதியன்றும், இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 14-ம் தேதியன்றும் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்தார்.

முதல்கட்டத் தேர்தலுக்கான அறிவிக்கை நவம்பர் 14-ம் தேதி வெளியாகும். வேட்பு மனுக்களை நவம்பர் 21-ம் தேதிவரை தாக்கல் செய்யலாம். அடுத்தநாள் நவம்பர் 22-ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். முதல்கட்டத் தேர்தலில் மனுக்களை திரும்பப்பெற நவம்பர் 24-ம் தேதி கடைசிநாளாகும். முதல்கட்டத் தேர்தல் டிசம்பர் 9-ம் தேதி நடைபெறும்.

இரண்டாம் கட்ட தேர்தலுக்கான அறிவிக்கை நவம்பர் 20ம் தேதி வெளியிடப்படும். வேட்புமனுக்களை தாக்கல் நவம்பர் 27-ம் தேதி வரை தாக்கல் செய்யலாம். மனுக்கள் பரிசீலனை நவம்பர் 28-ம் தேதி நடைபெறும். மனுக்களை நவம்பர் 30-ம் தேதிக்குள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 14-ம் தேதி நடைபெறும்.

இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு ஒரே கட்டமாக நவம்பர் 9-ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் பதிவாகும் வாக்குகளும், குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக பதிவாகும் வாக்குகளும் டிசம்பர் 18-ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

"குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் தேதியை அறிவிப்பதில் இவ்வளவு தாமதம் ஏன்?" என்று செய்தியாளர்கள் கேட்டபோது, எதிர்பாராத, கனமழை காரணமாக தேர்தல் தேதி அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தலைமைத் தேர்தல் ஆணையர் பதிலளித்தார். மோடியின் குஜராத் பயணத் திட்டம் ஏற்கெனவே முடிவாகி விட்டதாலேயே, அம்மாநில சட்டசபைத் தேர்தலை இமாச்சலப் பிரதேச சட்டசபைத் தேர்தலுடன் அறிவிக்காமல், தனியாக அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு நலத்திட்டங்களோ, சலுகை அறிவிப்புகளோ வெளியிடக்கூடாது என்பது விதிமுறையில் அடங்கும். அனைத்து அரசு அதிகாரிகளும் பாரபட்சமற்ற முறையில் நடந்து கொள்ள வேண்டும். 

தேர்தல் கண்காணிப்பு மையங்களுக்கு புகார் அளிக்கவும், கட்டுப்பாட்டு அறைகளில் புகார்களைத் தெரிவிக்கவும் 24 மணி நேரமும் செயல்படும் உதவி தொலைபேசி எண்கள் வெளியிடப்படும் என்று ஏ.கே. ஜோதி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, குஜராத் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தலில், பி.ஜே.பி-யே மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்று தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு ஒருநாள் முன்னதாக, இந்தக் கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய முதல்வர் விஜய் ரூபானியே புகழ்பெற்ற முதல்வர் வேட்பாளர் என்று அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

2007 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் பி.ஜே.பி-க்கு கிடைத்ததைப் போன்று இந்த தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்றதும், ஆனந்திபென் படேல் முதல்வராகப் பொறுப்பேற்றார். எனினும் அவரின் செயல்பாடுகளில் திருப்தி இல்லாதநிலையில், 2016-ம் ஆண்டு, விஜய் ரூபானி முதல்வரானார். எனினும் நகர்ப்புற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

வரவிருக்கும் தேர்தலில் பி.ஜே.பி-க்கு 48 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என்றும், அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சிக்கு 38 சதவிகித வாக்குகளே கிடைக்கும் என்றும் அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி பி.ஜே.பி-க்கு 115-125 இடங்கள் வரை கிடைக்கும் என்னறும், காங்கிரஸ் கட்சி 57 முதல் 65 இடங்கள் வரை வெற்றிபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இமாச்சலப்பிரதேச மாநிலத்திலும் பி.ஜே.பி-யே வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 68 இடங்களைக் கொண்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் தற்போது வீர்பத்ர சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி இருந்து வருகிறது. 

எனினும், குஜராத் மாநிலத்தில் இந்த முறை வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற தீவிரத்துடன், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, அம்மாநிலத்தில் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதுடன், 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, நடைபெறும் முக்கியமான சட்டசபைத் தேர்தலாகவே இமாச்சலப்பிரதேசம் மற்றும் குஜராத் மாநில தேர்தல்கள் பார்க்கப்படுகின்றன. காங்கிரஸ், பி.ஜே.பி. ஆகிய இரு கட்சிகளுக்குமே குஜராத் சட்டசபைத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 

அண்மைக்காலமாக, ஜி.எஸ்.டி. பாதிப்பு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டு ஓராண்டு ஆன நிலையிலும், பொருளாதாரத்தில் பெரிய முன்னேற்றம் இல்லாதது போன்றவற்றால் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் உருவாகி வரும் நிலையில், குஜராத் தேர்தலை முன்னிலைப்படுத்தி, வெற்றிபெற்றே தீர வேண்டும் என்ற பிரத்யேக உத்தியுடன் அக்கட்சியும், மத்திய அரசின் மீதான அதிருப்தியை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளவேண்டும் என்ற உத்வேகத்தில் காங்கிரஸ் கட்சியும் இப்போதே பிரசாரக் களத்தில் குதித்து விட்டன. 

கருத்துக்கணிப்புகள் எதுவானாலும், அதனை பொய்யாக்கி, எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்த முன்னுதாரணங்கள் பல்வேறு மாநிலங்களிலும் நடந்துள்ளன. நாடாளுமன்றத் தேர்தலிலும் கருத்துக்கணிப்புகள் பொய்யாகிப் போன நிகழ்வுகளும் இந்தியாவில் உண்டு. ஏன், கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில்கூட, அனைத்துத் தரப்பிலும் ஹிலாரி கிளிண்டனே வெற்றிபெறுவார் என்று தகவல்கள் வெளியான நிலையில், நூலிழை வித்தியாசத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அதிபரானதை அறிந்தோம். எனவே, எதுவானாலும் குஜராத் மாநில மக்களின் வாக்குகளில்தான், அம்மாநிலத்தின் எதிர்காலம் அமைந்துள்ளது....!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு