Published:Updated:

ஆர்.கே.நகர் வேட்பாளர்கள் எப்படி? - ஓர் அலசல்!

ஆர்.கே.நகர் வேட்பாளர்கள் எப்படி? - ஓர் அலசல்!
ஆர்.கே.நகர் வேட்பாளர்கள் எப்படி? - ஓர் அலசல்!

றைந்த முதல்வர் ஜெயலலிதாவை இரண்டு முறை வெற்றிபெறச் செய்து, அரியாசனத்தில் அமரவைத்த தொகுதி, ஆர்.கே நகர். அவரது மறைவால் அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். தொடர்ந்து,  அதற்கான வேலைகளில் அனைத்துக் கட்சியினரும் களத்தில் இறங்கித் தீவிரமாகச் செயல்பட்டுவந்த வேளையில், தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பாக வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரையடுத்து அந்தத் தேர்தலை ரத்துசெய்தது தேர்தல் ஆணையம். 

இந்த நிலையில், டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி மீண்டும் சூடுபிடித்துள்ளது. இதனால், இந்த முறையும் பலமுனைப் போட்டி நிலவுகிறது. பா.ம.க., த.மா.கா போன்ற கட்சிகள் இதில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துவிட்டன. கடந்த முறை, முதன்முதலில் வேட்பாளரை அறிவித்து போட்டியிட்ட தே.மு.தி.க., இந்த முறை போட்டியிடவில்லை என அறிவித்ததுடன், தம் ஆதரவு யாருக்கும் இல்லை எனவும் தெரிவித்துவிட்டது. அதேவேளையில், முதல்முறையாக நடிகர் விஷாலும் ஆர்.கே.நகர் தொகுதிக் களத்துக்குள் சுயேச்சை வேட்பாளராய்க் களமிறங்கியிருக்கிறார். பிற கட்சியினரும் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்திருக்கின்றனர்.

அந்தத் தொகுதியில் தற்போது களம் காண இருக்கும் வேட்பாளர்கள் பற்றிய  ஒரு சிறுதொகுப்பு இதோ...

டி.டி.வி.தினகரன்:

சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகனான இவர், எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, கட்சியில் முக்கியப் புள்ளியாகத் திகழ்ந்தவர். பின்பு, 1990-ல் சசிகலாவின் கணவர்  நடராஜனுக்கும், தினகரனுக்கும் இடையே இருந்த நட்பை அறிந்த ஜெயலலிதா, தினகரனை விலக்கிவைத்திருந்தார். ஆனால், சீக்கிரமே சசிகலாவின்மூலம் ஜெயலலிதாவின் குட் புக்கில் மீண்டும் இடம்பிடித்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். தனக்கு எதிராகச் செயல்பட்டதால், சசிகலா உட்பட அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் 2011-ம் ஆண்டு ஜெ. கட்சியிலிருந்து நீக்கினார். அதில், தினகரனும் ஒருவர். இவர், கடந்த முறை அ.தி.மு.க. அம்மா அணி (அ.தி.மு.க. இரண்டாகப் பிரிந்ததால்) சார்பில் வேட்பாளராக நின்றவர். இந்த முறை அ.தி.மு.க., ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தரப்பிடம் இருப்பதால் அந்தக் கட்சியையும், அதன் சின்னத்தையும் பயன்படுத்த இவருக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

மருதுகணேஷ் (தி.மு.க.):

இவர், ஆர்.கே நகர் தி.மு.க. பகுதி பொறுப்பாளர். இவருடைய தாயார் பார்வதி நாராயணசாமி, இதே பகுதியில் தி.மு.க கவுன்சிலராகப் பழைய 8-வது வட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டவர்; தந்தை நாராயணசாமியும் தீவிர தி.மு.க செயற்பாட்டாளர். இதனால், உள்ளூர் தி.மு.க-வினர் மத்தியில் நன்கு அறிமுகமானவர்; மண்ணின் மைந்தர். வழக்கறிஞர்; பத்திரிகையாளர். தி.மு.க சார்பில் ஆர்.கே.நகரில் நடைபெற்ற போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அனைத்திலும் முன்னின்று நடத்தியவர். கடந்த முறையும் தி.மு.க. சார்பில் இவரே வேட்பாளராகவே நிறுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கே.பத்மராஜன் (சுயேச்சை):

'தேர்தல் மன்னன்' என்று அழைக்கப்படும் இவர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 27 ஆண்டுகளாகச் சட்டசபை, உள்ளாட்சி, இடைத்தேர்தல் என அனைத்துத் தேர்தல்களிலும்  போட்டியிட்டுவருகிறார். வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடுவதை லட்சியமாகக்கொண்டிருக்கும் பத்மராஜன், இந்தத் தேர்தலிலும் போட்டியிட வேட்புமனுத் தாக்கல்செய்துள்ளார். லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இவர் இடம்பிடித்துள்ளார். 

இ.மதுசூதனன்:

இவர், 1991-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இதே தொகுதியில் நின்று எம்.எல்.ஏ-வாக வாகைசூடியவர். அத்துடன், முன்னாள் அமைச்சரும்கூட. ஊழல் வழக்கு ஒன்றில் கைதுசெய்யப்பட்டவர். அ.தி.மு.க-வின் தீவிர விசுவாசி. இந்தத் தொகுதியில் கூப்பிட்ட குரலுக்கு வரக்கூடியவர் என்ற நல்லபெயரும் இவருக்கு இருக்கிறது. அ.தி.மு.க. பிரிந்திருந்தபோது ஓ.பி.எஸ் அணியில் அங்கம் வகித்திருந்தார். அந்த அணி சார்பிலேயே  வேட்பாளராகவும் நின்றார். இப்போது அ.தி.மு.க. ஒன்றிணைந்து (ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ்.) இவரை வேட்பாளராக நிறுத்தியிருப்பதுடன், இரட்டை இலைச் சின்னத்திலேயே போட்டியிடவும் இருக்கிறார். 

ஜெ.தீபா (எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை):

இவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள். ஜெ. உடல்நலமின்றி அப்போலோவில் சிகிச்சை பெற்றுவந்தபோது... தீபா, அவரைப் பார்க்கச் சென்றபோது... சசிகலா தரப்பால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதுமுதல், தமிழக மக்கள் மனங்களில் குடியேறினார். இதனால், அவர் வீட்டுமுன் தினமும் ஆயிரக்கணக்கான அம்மாவின் அடிமட்டத் தொண்டர்கள் கூடி, அரசியலுக்கு வரச்சொல்லிக் கோரிக்கைவைத்தனர். அதன் விளைவாக, ஜெ. பிறந்தநாளின்போது இவர், 'எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை' என்ற கட்சியை ஆரம்பித்தார். கடந்த முறையும் இந்தத் தொகுதியில் வேட்பாளராக இருந்தவர்.

நடிகர் விஷால்:

நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கும் இவர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் பணியாற்றிவருகிறார். இந்த இரண்டு சங்கத்திலும் நடைபெற்ற தேர்தலில் இவர் அமோக வெற்றிபெற்றார். நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்கும், திருட்டு வி.சி.டி-க்களை ஒழிப்பதற்கும் தீவிரமாகப் போராடிவருகிறார். தற்போது கந்துவட்டிக் கொடுமைக்கு எதிராகவும் குரல்கொடுத்து வருகிறார். மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் செய்துவருகிறார். இந்த நிலையில், முதல்முறையாக ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகக் களத்தில் குதித்துள்ளார்.  

கரு.நாகராஜன்:

தற்போது பி.ஜே.பி-யின் மாநிலச் செயலராக இருக்கும் இவர், இதற்குமுன்பு ச.ம.க-வில் இருந்தவர். 2016-ம் ஆண்டு பி.ஜே.பி-யில் இணைந்த அவர், அதே ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சென்னை - மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றுப்போனார். கடந்தமுறை ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக இருந்த இசையமைப்பாளர் கங்கை அமரன், இந்த முறை மறுக்கவே கரு.நாகராஜனுக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.

இவர்களைத் தவிர இன்னும் சில சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். மேலும், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைகோட்டுதயமும் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்.