Published:Updated:

`ஆர்.கே.நகர் இலக்கு 58 சதவிகிதம்!’ - அ.தி.மு.க. vs தி.மு.க. போட்டியில் விஷாலுக்கு லைம்லைட்

`ஆர்.கே.நகர் இலக்கு 58 சதவிகிதம்!’ - அ.தி.மு.க. vs தி.மு.க. போட்டியில் விஷாலுக்கு லைம்லைட்
`ஆர்.கே.நகர் இலக்கு 58 சதவிகிதம்!’ - அ.தி.மு.க. vs தி.மு.க. போட்டியில் விஷாலுக்கு லைம்லைட்

`ஆர்.கே.நகர் இலக்கு 58 சதவிகிதம்!’ - அ.தி.மு.க. vs தி.மு.க. போட்டியில் விஷாலுக்கு லைம்லைட்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றியைப் பெறுவதுகுறித்து தீவிர ஆலோசனையில் இறங்கியிருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 'சசிகலா எதிர்ப்பு வாக்குகளை மையப்படுத்தி, 58 சதவிகித வாக்குகளைப் பெறத் திட்டமிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அரசு இயந்திரத்தின் துணையோடு எளிதாக வெற்றி பெற்றுவிடலாம்' எனவும் கணக்கு போடுகிறார் முதல்வர் என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. தொப்பி சின்னத்துக்காக டெல்லி உயர்நீதிமன்றம் வரையில் சட்டப் போராட்டம் நடத்தினார் தினகரன். 'தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவு செய்யட்டும்' என நீதிபதிகள் உறுதியாக் கூறிவிட்டனர். அதேநேரம், நடிகர் விஷாலின் வருகை அரசியல் கட்சிகளிடையே கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தியது. பைக்கில் வந்து வேட்புமனுத் தாக்கல்செய்தது முதல் சேரனின் எதிர்ப்பு வரையில், நேற்று விஷாலை முன்னிறுத்தியே தகவல்கள் வெளியானது. தொகுதிக்குள் பரவிக் கிடக்கும் தெலுங்கு பேசும் மக்களின் வாக்குகளை விஷால் பிரிப்பார். இது அ.தி.மு.கவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும்' என்றெல்லாம் செய்திகள் வெளியானது. “ஆர்.கே.நகரைப் பொறுத்தவரையில், தி.மு.கவுக்கும் அண்ணா தி.மு.கவுக்கும் இடையில்தான் போட்டி. இதுவரையில் அங்கு நடந்த தேர்தல்களில் எந்தக் கட்சியாலும் தி.மு.க, அ.தி.மு.கவை இதுவரையில் அசைத்துப் பார்க்க முடியவில்லை. பா.ம.க, தே.மு.தி.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் மாநிலம் முழுவதும் சில தொகுதிகளில் இந்த இரு கட்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தினாலும், ஆர்.கே.நகரில் அவை செல்லுபடியாகவில்லை" என விவரித்த அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி. தொடர்ந்து நம்மிடம் பேசும்போது,

“அ.தி.மு.கவின் மாநில வாக்கு சராசரி அளவைவிட, ஆர்.கே.நகரில் அந்தக் கட்சிக்குப் பத்து சதவிகித வாக்குகள் கூடுதலாக உள்ளன. தி.மு.க-வின் மாநில சராசரியைவிட பல நேரங்களில் ஆர்.கே.நகரில் 5 சதவிகிதம் அளவுக்குக் கூடுதலான வாக்குகளைப் பெற்றுவந்துள்ளது. இந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க தன்னுடைய பலமான 55 சதவிகிதத்தையும் தி.மு.க தன்னுடைய பலமான 35 சதவிகி வாக்குகளைப் பெற வேண்டும். இந்த வகையில் தி.மு.க பெறக் கூடிய வாக்குகளில் சற்று மாறுபாடு ஏற்பட்டாலும், ஸ்டாலின் தலைமையை அது கேள்விக்குள்ளாக்கிவிடும். காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகள் தி.மு.கவை ஆதரிப்பது வேட்பாளர் மருது கணேஷுக்குக் கூடுதல் பலம். அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பது அ.தி.மு.கவின் பலம்.

‘58 சதவிகித வாக்குகளைப் பெற்றே ஆக வேண்டும்' என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.

தினகரன், தீபா, விஷால் ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்களாக நிற்பது அவர்களே களத்தில் நிற்பது ப்ளஸ். கடந்த 10 ஆண்டுகளாக தினகரனுக்கு அ.தி.மு.கவில் எந்த முக்கியத்துவத்தையும் ஜெயலலிதா கொடுக்கவில்லை. 8 மாதங்களாகத்தான் தொலைக்காட்சியில் வந்துகொண்டிருக்கிறார். அந்த அடிப்படையில் அவருக்குத் தனிப்பட்ட முறையில் வாக்குகள் வரலாம். இதேநிலைதான் விஷாலுக்கும். ஜெயலலிதாவின் ரத்த சம்பந்தமுள்ள உறவு என்ற அடிப்படையில் தீபாவுக்கு வாக்குகள் வரலாம். பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகள் தினகரன் பக்கம் வருவதற்கு வாய்ப்பில்லை. இந்த வாக்குகள் எல்லாம் தி.மு.க அணிக்குச் சென்று சேரும். அரசியல்ரீதியான போட்டி என்றால் அது தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையில்தான். இதில், ஆளும்கட்சி என்ற பலத்தோடு அ.தி.மு.க வெற்றி பெறவே வாய்ப்பு அதிகம்" என்கிறார்.

"ஆர்.கே.நகரில் முதல் இடத்தில் எஸ்.சி மக்களும் அடுத்ததாக, தெலுங்குமொழி பேசும் மக்கள், மூன்றாவதாக நாடார் சமுதாய மக்கள் பரவியுள்ளனர். தேர்தல் வெற்றிக்காக, சமுதாயத் தலைவர்களை அழைத்து தீவிரமாக விவாதித்துவருகிறார் எடப்பாடி பழனிசாமி. விஷால் போட்டியிடுவதால் ஏற்படக் கூடிய விளைவுகளைப் பற்றி உளவுத்துறை அதிகாரிகளிடம் பேசி வருகிறார். தினகரனின் தேர்தல் நடவடிக்கைகளையும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார். சசிகலா எதிர்ப்பு மனநிலையில் இருக்கும் சமுதாயத் தலைவர்களை அழைத்துப் பேசி வருகிறார். இந்த சந்திப்பில், ‘சசிகலாவால் உங்கள் சமூகம் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டது என்று எனக்குத் தெரியும். சசிகலா குடும்பத்துக்கு எதிராக நாங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளையும் நீங்கள் அறிவீர்கள். இந்தத் தேர்தலில் இலை வெல்லும். இதற்கு உங்கள் ஆதரவு தேவை' எனப் பேசி வருகிறார். இதுதவிர, தொகுதிக்குள் உள்ள வாக்காளர்களுக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து நிறைவேற்றவும் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். மதுசூதனனுக்குக் கட்சிக்குள் இருந்த எதிர்ப்புகளைக் களைந்துவிட்டாலும், விஷாலின் வருகையை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் அமைச்சர்கள். இரட்டை இலை கைக்கு வந்த பிறகு நடக்கும் தேர்தல் என்பதால், வாழ்வா? சாவா...போராட்டமாகப் பார்க்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி" என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

அடுத்த கட்டுரைக்கு