Election bannerElection banner
Published:Updated:

ஆர்.கே.நகர் ஃபார்முலாவை விஞ்சிய பாரதியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தேர்தல்!

ஆர்.கே.நகர் ஃபார்முலாவை விஞ்சிய பாரதியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தேர்தல்!
ஆர்.கே.நகர் ஃபார்முலாவை விஞ்சிய பாரதியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தேர்தல்!

ஆர்.கே.நகர் ஃபார்முலாவை விஞ்சிய பாரதியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தேர்தல்!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், நடைபெற்ற ஆசிரியர் சங்கத் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆசிரியர் சங்கத்துக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு உள்ள பிரச்னைகள் மற்றும் ஊழல்களை வெளிகொண்டுவருவதற்காக இந்தச் சங்கம் செயல்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. இதனிடையே, பல்கலைக்கழகம் தேர்தலை ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்தத் தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தம் 9 பொறுப்புகளுக்கு இந்தத் தேர்தல் நடந்தது. இதில், 8 இடங்களில் துணைவேந்தர் ஆதரவுடன் நின்றவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்தத் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பல்கலையின் மூத்த பேராசிரியர்கள் சிலரிடம் பேசினோம், “பாரதியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தில் (BHUTA) மொத்தம் 173 உறுப்பினர்கள் இருந்தனர். அதில் எங்களுக்கு 90 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. நாங்கள் வெற்றி பெற்றுவிட்டால், நிர்வாகம் செய்யும் ஊழலை வெளிகொண்டுவருவோம் என்று கூறிதான் துணைவேந்தர் தேர்தலை திடீரென்று ஒத்திவைத்தார்.

மேலும், தனக்கு ஆதரவாக செயல்படக்கூடிய 65 பேரை புதிய உறுப்பினர்களாக சேர்க்க முயற்சி செய்தார். பைலாப்படி, ஜெனரல்பாடி மீட்டிங் வைத்துத்தான் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க முடியும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஜெனரல்பாடி மீட்டிங்கிலும், அவர்களை உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ளலாம், ஆனால், அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது என்றுதான் தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. ஜெனரால்பாடிதான் எங்களுக்கு உச்சவரம்பு. அதையும் மீறி, அந்த 65 பேரும் வாக்களித்துள்ளனர். முக்கியமாக, அதில் இரண்டு பேர் வேட்பளர்களாகவே நிறுத்தப்பட்டனர்.

இதுதவிர பல்வேறு மிரட்டல்கள் மற்றும் பார்ட்டிகளை அரங்கேற்றித்தான், அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல, பைலாப்படி ஏற்கெனவே நாமினேட் செய்தவர்தான் ஒத்திவைக்கப்பட்ட தேர்தலிலும் போட்டியிடவேண்டும். ஆனால், புதிய உறுப்பினர்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளனர். இதையெல்லாம், எதிர்த்து கேள்வி கேட்டால், ஒன் மேன் கமிட்டியின் பரிந்துரைப்படி நடத்தியதாக கூறுகிறார்கள். அந்த கமிட்டியே துணைவேந்தரால் நியமிக்கப்பட்டதுதான். அப்படியிருக்கையில், அந்தக் கமிட்டி அவருக்கு எதிராக எப்படி செயல்படும்?

இந்நிலையில், தேர்தல் நடக்கக் கூடாது என்பதற்காக ஒரு நபரே 2 முதல் மூன்று பொறுப்புகளுக்கு போட்டியிட்டோம். நியாயப்படி பார்த்தால் இந்த தேர்தல் செல்லாது. அனைத்தும் முறைகேடாக நடக்கும், இந்தத் தேர்தலை நிறுத்துவதற்காக நாங்கள் செய்த முயற்சி எதுவும் பலனளிக்கவில்லை” என்றனர்.

இததொடர்பாக விளக்கம் கேட்க துணைவேந்தர் கணபதியை தொடர்புகொண்டோம். ஆனால், அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. சமீபத்தில் நடந்த, பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் தேர்தலிலும் லட்சங்கள் இறைக்கப்பட்டதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு