Published:Updated:

“கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஓய்வு எடுக்கலாம்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஓய்வு எடுக்கலாம்!”
“கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஓய்வு எடுக்கலாம்!”

கார்க்கிபவா, நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: கே.கார்த்திகேயன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தேர்தல் ரேஸுக்குத் தயாராகிவிட்டார் பா.ம.க-வின் `முதலமைச்சர் வேட்பாளர்' அன்புமணி ராமதாஸ். “பேட்டி தரும்போது கூடவே இருங்க. ஏதாவது பாயின்ட் விட்டுட்டா எடுத்துக்குடுங்க” என மனைவி சௌமியாவை அழைக்கிறார். கேள்வியைத் தொடங்கும் முன்பே, ஜெயலலிதா அரசு மீதான கடும் விமர்சனத்தில் இருந்து அவரே ஆரம்பிக்கிறார்.

“இந்த ஆட்சிக்கு ஜீரோ மார்க்கூடப் போட முடியாது. மைனஸ்லதான் போடணும். வீட்டைவிட்டு வெளியே வர முடியாத ஒரு முதலமைச்சர், அப்படியே அவங்க தலைமைச் செயலகத்துக்கு வந்தா... அது திருவிழா, ரோடு முழுக்க பேனர், பத்து அடிக்கு ஒரு போலீஸ், வருஷக்கணக்கா திட்டங்களைக் கிடப்பில் போட்டு, ஒரே நாளில் எல்லாவற்றையும் காணொளிக் காட்சி மூலமா  திறந்துவைக்கிறாங்க. 2011-ம் ஆண்டு வரைக்கும் தமிழக அரசின் நிர்வாகக் கடன் 1.5 லட்சம் கோடி ரூபாய். இப்போ, அது 2.10 லட்சம் கோடி ரூபாயா உயர்ந்திருக்கு. இங்க என்ன நிர்வாகம் நடக்குது? ஒவ்வொரு தமிழனோட தலையிலும் 60 ஆயிரம் ரூபாய் கடன் இருக்கு. வேளாண் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி எல்லாம் மைனஸ்ல இருக்கு. பொருளாதார வளர்ச்சியில, பீகார் மாநிலமே நமக்கு முன்னாடி இருக்கு. சுதந்திர இந்தியாவிலேயே அதிக ஊழல் நடந்த ஒரு மாநில அரசுனா, அது இப்ப நடக்கிற ஜெயலலிதா அரசுதான்.''

“கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஓய்வு எடுக்கலாம்!”

``ஆனால், ஜெயலலிதா அரசு செயல்படுத்தும் பல்வேறு இலவச மற்றும் நலத் திட்டங்களின் மூலம், அவருக்கு மக்களிடம் பெரிய அதிருப்தி இல்லை என்றும், நற்பெயர் நீடிக்கிறது என்றும்தானே பொதுவாகச் சொல்லப்படுகிறது?''

``சின்னக் கணக்கு ஒண்ணு சொல்றேன். தமிழ்நாட்டில் மொத்தம் 5 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள் இருக்காங்க. இதில் பொது வாக்காளர்கள் மூன்று கோடிப் பேர். இதில் 18-30 வயதுக்கு உட்பட்டவர்கள் இரண்டு கோடிப் பேர். இவங்கதான் 2016-ம் ஆண்டு தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கப்போறாங்க. இவங்க படிச்சவங்க, தொழில்நுட்பம் தெரிஞ்சவங்க. இவங்க அத்தனை பேரும் இந்த அரசு இலவசம்கிற பேர்ல செய்யும் ஏமாற்று வேலைகளைப் பார்த்துக் கொந்தளிச்சுப்போயிருக்காங்க. அதனால அதிருப்தி இல்லைனு சொல்றது பொய்ப் பிரசாரம்.'' 

``கூட்டணிகள் கரை ஒதுங்க ஆரம்பித்துள்ளன. இதில் பா.ம.க-வுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?”

“101 சதவிகிதம் எங்கள் பக்கம் வெற்றி வாய்ப்பு இருக்கு. சும்மா சொல்லலை. மாற்றத்தை எதிர்பார்க்கும் இரண்டு கோடி புது வாக்காளர்களை மனதில் வெச்சுத்தான் இதைச் சொல்றேன். நிச்சயம் நாங்க ஜெயிப்போம்.”

“இது உங்கள் நம்பிக்கை. ஆனால், வன்னியர் சமூகத்தைத் தாண்டி பா.ம.க-வால் வாக்குகளைப் பெற முடியும் என இன்னமும் நினைக்கிறீர்களா?''

“என்னை முதலமைச்சர் வேட்பாளரா அறிவிச்சப்பவே,  இதைத்தான் பலரும் முன்வெச்சாங்க. அது மட்டும் இல்லாம, பா.ம.க., தலித் விரோதக் கட்சினும் சொல்றாங்க. ஆனால், தலித் மக்களுக்கு அதிகமா நல்லது செய்ததே நாங்கதான். ஒரு கட்சியின் நிறுவனர், தாழ்த்தப்பட்டவர் ஒருவரின் பிணத்தை தன் தோளில் சுமந்துகொண்டு போய் அடக்கம் செஞ்சது வேற எந்தக் கட்சியிலயாவது நடந்திருக்கா? அதைச் செஞ்சது எங்க அய்யாதான். மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு எங்களுக்குக் கிடைச்ச முதல் வாய்ப்பை, தலித் எழில்மலைக்குத்தான் தந்தோம். இப்பவும் வட மாவட்டங்கள் 15 வருஷங்களா அமைதியா இருக்கக் காரணம் எங்க அய்யாதான்.”

“ஆனால், வட மாவட்டங்களைப் பெரும் பதற்றத்துக்கு உள்ளாக்கிய தருமபுரி-நத்தம் காலனி எரிப்பு முதல், சமீபத்தில் நடந்த விழுப்புரம் சேஷசமுத்திரம் தேர் எரிப்பு வரை... இந்தக் கலவரங்களுக்குக் காரணம் பா.ம.க என்றுதானே பேசப்படுகிறது?”

“நத்தம் காலனி குறித்து எத்தனையோ தடவை பேசியாச்சு. சேஷசமுத்திரம் பிரச்னை எல்லாம் கலவரமே கிடையாது. அது லோக்கல் பிரச்னை. அடிப்படையில் ஒரு விஷயத்தை நீங்க புரிஞ்சுக்கணும். மனுஷன் இருக்கிற வரை சாதி இருக்கும். சாதியையோ, மதத்தையோ நம்மால் அழிக்க முடியாது. பேர்லயே சாதி இருக்கே... பிரணாப் முகர்ஜினா முகர்ஜி சாதிப் பெயர். மேனன், யெச்சூரி, நாயர்னு பலரோட பெயருக்குப் பின்னாலயும் சாதி இருக்கு. அதனால, சாதியை ஒழிக்கிறது சாத்தியம் இல்லை. ஆனால், சாதி விஷயத்துல தமிழ்நாடு கொஞ்சம் பரவாயில்லைனு தான் சொல்லணும்.”

“தி.மு.க - அ.தி.மு.க உடன் கூட்டணி வைத்து...” - கேள்வியை முடிக்கும் முன்னரே குறுக்கிடுகிறார்.

``தவறுதான். அந்தத் தவறைச் செஞ்சதுக்காக ஏற்கெனவே மன்னிப்பு கேட்டோம். இப்பவும் மன்னிப்பு கேட்டுக்கிறேன். 20 வருஷங்களுக்கு முன்னாடி 1996-ல தனியா போட்டியிட்டு நாலு
எம்.எல்.ஏ ஸீட் ஜெயிச்சோம். அப்போ அ.தி.மு.க ரெண்டு ஸீட்டுதான் ஜெயிச்சாங்க. அதற்குப் பிறகு தொடர்ந்து நாங்க தனியா போட்டியிட்டிருந்தா, இந்நேரத்துக்கு ஆளும் கட்சியா வந்திருப்போம். நாங்க செய்த மிகப் பெரிய தவறு, கூட்டணி அமைச்சதுதான். இனிமேல் திராவிடக் கட்சிகள்கூட கூட்டணி சேர மாட்டோம்னு நாலு வருஷங்களுக்கு முன்னாடியே  முடிவு எடுத்துட்டோம். இந்த முடிவை எடுத்த பிறகுதான், எங்க மேல ‘சாதி கட்சி, தலித் விரோதக் கட்சி'னு முத்திரை குத்தப்படுது. அதற்கு முன்னாடி நாங்க கூட்டணியில் இருந்தப்போ, சாதி கட்சினு அவங்களுக்குத் தெரியலையா?''
``இது என்ன மன்னிப்பு கேட்கும் சீஸனா... தி.மு.க-வின் கடந்தகாலத் தவறுகளுக்காக ஸ்டாலின் மன்னிப்பு கேட்கிறார்.  நீங்களும் கேட்கிறீர்கள்?''

“ஸ்டாலின் கேட்கும் மன்னிப்பு வேறு... ‘2ஜி-யில் தவறு பண்ணிட்டோம். கடந்த ஆட்சியில் தவறு செஞ்சுட்டோம். மன்னிச்சுடுங்க’னு சொல்றார். ஆனா நாங்க, `இவங்ககூட சேர்ந்ததே தவறு, மன்னிச்சுடுங்க'னு சொல்றோம். ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு.”

“கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஓய்வு எடுக்கலாம்!”

“ஆனால், உங்கள் கட்சி வாக்கு வங்கியை மட்டும் நம்பி, கூட்டணியே இல்லாமல் ஆட்சி அமைத்துவிட முடியுமா?”

“கூட்டணியே கிடையாதுனு நாங்க சொல்லலையே. தி.மு.க., அ.தி.மு.க தவிர யார் வேண்டும் என்றாலும் எங்ககூட வரலாம்னு தானே சொல்றோம். பா.ஜ.க உள்ளிட்ட யாரும் எங்கள் தலைமையை ஏற்றுவந்தால் மகிழ்ச்சி தான்; வரவில்லை என்றாலும் மகிழ்ச்சிதான். கூட்டணி இல்லைங்கிற கவலை எங்களுக்குக் கிடையாது. இன்றைய அரசியல் சூழலில் நாங்கள் மிகவும் பலம் வாய்ந்த கட்சியாகவே இருக்கிறோம்.” 

“ஒருவேளை தொங்கு சட்டமன்றம் அமைந்தால், அப்போது உங்களிடம் குறிப்பிடத் தகுந்த எண்ணிக்கையில் எம்.எல்.ஏ-க்கள் இருந்தால், யாருக்கு ஆதரவு தருவீர்கள்?''

“அந்த வாய்ப்புக்கே இடம் இல்லை. நாங்கள் நிச்சயம், 140 தொகுதிகள் ஜெயிப்போம்.''

“அ.தி.மு.க - பா.ம.க-வைத் தவிர மற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் விஜயகாந்துக்காகக் காத்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“ `விஜயகாந்துக்கு டிமாண்ட் இருக்கு. உங்களுக்கு டிமாண்ட் இல்லையே'னு என்கிட்டகூட கேட்டாங்க. `நாங்க டிமாண்ட் பண்ண மாட்டோம்'னு (பணம் எண்ணுவது போல் சைகை செய்கிறார்) சொன்னேன். நாங்கள் மற்றவர்களுக்குக் கொடுக்கும் இடத்தில் இருக்கிறோம்; விஜயகாந்த் மற்றவர்களிடம் கேட்கும் இடத்தில் இருக்கிறார். அவரால் ஒரு நன்மையும் நடக்காது என்பது மட்டும் உண்மை.''
 
“மக்கள் நலக் கூட்டணி, புதிய நம்பிக்கையோடு பார்க்கப்படுவதைக் கவனித்தீர்களா?''

“அவங்களுக்குள்ளேயே நிறையக் குழப்பங்கள். ரெண்டு மாசங்களுக்கு முன்னாடி அஞ்சு பேர் இருந்தாங்க. இப்போ நாலு பேர். தேர்தல் நெருங்கும்போது மூணு பேரா இருப்பாங்க. தேர்தல் நேரத்தில் ரெண்டு பேர் ஆகிடுவாங்க. அவங்களுக்கு மீடியா அதிக முக்கியத்துவம் தருது. ஆனா, மக்கள் தர்ற மாதிரி தெரியலை!”

``தமிழக அரசியலில் உங்களுக்குப் புரியாத புதிர்னு ஏதேனும் இருக்கிறதா?''

`` தமிழக அரசியலில், இதுவரை சினிமா துறையைச் சேர்ந்தவங்க மட்டும்தான் தொடர்ந்து ஆட்சி செஞ்சிருக்காங்க. ஒரு டாக்டரோ, இன்ஜினீயரோ ஆட்சிக்கு வர முடியலை. அது ஏன் என்கிறதுதான் புரியலை!'' 

புல்லட் கேள்வி-பதில்

 ``உங்களுக்கு நீங்கள் போடும் மார்க் எவ்வளவு?''

``45.''

 ``கடவுளிடம் கேட்கும் வரம்?''

``என் கல்லூரி நாட்களை மீண்டும் கேட்பேன்.''

 ``யாரைப் பார்த்தால் பயம்?''

``யாரைப் பார்த்தும் பயம் இல்லை.''

 ``அடிக்கடி வரும் கனவு?''

``ஏன்னே தெரியலைங்க. எக்ஸாம் ஹாலில் பரீட்சை எழுதுற மாதிரியே கனவு வருது.''

 ``உங்களது ரோல்மாடல்?''

``எங்க அப்பா மருத்துவர் அய்யா.''

 ``நிரந்தர எதிரி?''

``யாரும் கிடையாது.''

 ``கடைசியாகப் படித்த புத்தகம்?''

``திராவிட இயக்க வரலாறு. ரெண்டு பாகங்களும் படிச்சுட்டேன்.''

 ``கடைசியாகப் பார்த்தப் படம்?''

`` `தனி ஒருவன்'. ஜெயம் ரவியை அழைச்சுப் பாராட்டினேன்.''

 ``கருணாநிதியிடம் சொல்ல விரும்புவது?''

``உழைத்தது போதும்... ஓய்வு எடுங்கள்.''

 ``ஜெயலலிதாவிடம்?''

``நீங்களும் ஓய்வு எடுக்கவேண்டிய நேரம் வந்துருச்சு.''

“கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஓய்வு எடுக்கலாம்!”

அன்புமணியின் மூத்த மகள் சம்யுக்தா, தன் இடது கையில் `அன்பு' என தன் அப்பாவின் பெயரை ஆங்கிலத்தில் பச்சை குத்தியிருக்கிறார். அதைத் தலைகீழாகத் திருப்பிப் பார்த்தால் `அப்பா' எனத் தெரிகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு