பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜெயலலிதாவின் கடைசி மூவ்... கருணாநிதியின் சீக்ரெட் கோல்!

ஜெயலலிதாவின் கடைசி மூவ்... கருணாநிதியின் சீக்ரெட் கோல்!
News
ஜெயலலிதாவின் கடைசி மூவ்... கருணாநிதியின் சீக்ரெட் கோல்!

அதிரடித் தந்திரங்கள்ப.திருமாவேலன்

தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது!

அரசியல்வாதிகள் அத்தனை பேர் கண்களிலும் பச்சையாகத் தெரிகிறது பஞ்சதந்திரம்!

அரங்கத்திலும் அந்தரங்கத் திலும், நடத்தியும் நகர்த்தியும் கொண்டிருக்கும் தந்திரங் களைத்தான் கட்சி நடவடிக்கை களாக இப்போது பார்க்கிறீர்கள். இனி வரும் நாட்களில் தில்லு முல்லு தகிடுதத்த திடுக்கிடும் திருப்பங்கள் அடிக்கடி அரங்கேறும். வெளியே சொல்ல ‘யோக்கியமானவை’ மட்டுமே இங்கே விவரிக்கப்படுகின்றன.

ஜெயலலிதா!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனியொரு சிங்கமாக, தமிழ்நாடு முழுவதும் வலம் வந்து, 39 தொகுதியில் 37 தொகுதிகளை வென்று 44 சதவிகித வாக்குகளைப் பெற்ற ஜெயலலிதா, இந்தச் சட்டமன்றத் தேர்தலில் பதுங்கிக்கொண்டி ருப்பதற்கு என்ன காரணம்?

தி.மு.க - தே.மு.தி.க - காங்கிரஸ் கூட்டணி அமையுமானால், அ.தி.மு.க தனித்து நின்று வெல்ல முடியாது என்பது எல்லோரையும் விட ஜெயலலிதாவுக்கு நன்றா கவே தெரியும். அதனால்தான் ‘234 தொகுதிகளிலும் வெல்வோம்’ என்றோ, ‘தனித்துப் போட்டி யிட்டு வெல்வோம்’ என்றோ சொல்ல முடியவில்லை.

கூட்டணி அமைப்பதாக இருந்தால், அவரது முதல் தேர்வு பா.ஜ.க-வாகத்தான் இருக்க முடியும். மத்திய அரசின் ஆதரவு, நரேந்திர மோடியின் பிரசாரம், பா.ஜ.க-வின் இந்துத்துவா ஆதரவு வாக்குவங்கி ஆகியவை, தனக்கு நிச்சயம் சாதகமாக இருக்கும் என்றும் ஜெயலலிதா நினைப்பார். அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையில் கூட்டணி அமையும்போது எல்லாம், `இதுதான் உண்மை யான, ஒரே சிந்தனை கொண்ட வர்களின் கொள்கைக் கூட்டணி’ என பா.ஜ.க தலைவர்கள் விளக்கம் சொல்வார்கள். `என்ன கொள்கை?’ என்பதை அவர்கள் இதுவரை விளக்கவில்லை. `அப்படியானால் பா.ஜ.க-வை ஜெயலலிதா உடனே சேர்த்துக் கொள்ளவேண்டியதுதானே?’ என அப்பாவி மனங்கள் யோசிக்கும். ஆனால், ஜெயலலிதா போன்றவர்கள் அதையும் தாண்டிப் போவார்கள்.

ஜெயலலிதாவின் கடைசி மூவ்... கருணாநிதியின் சீக்ரெட் கோல்!

பா.ஜ.க-வை தான் சேர்த்துக் கொண்டால், விஜயகாந்த் உடனடியாக தி.மு.க-வுக்குப் போய்விடுவார் என்பது ஜெயலலிதாவுக்கு நன்கு தெரியும். பா.ஜ.க-வால் தான் பெறும் பலத்தைவிட, விஜயகாந்தால் தி.மு.க அடையும் பலத்தைத் தடுப்பதற்காகவே, பிரதமர் மோடி, அமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோருடன் கூட்டணி பற்றி பேசாமலே தவிர்த்தார் ஜெயலலிதா. இதையும் மீறி தி.மு.க கூட்டணிக்கு விஜயகாந்த் போனால், அதன் பிறகு பா.ஜ.க-வைச் சேர்த்துக்கொள்ள ஜெயலலிதா நினைக்கலாம்.

மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளை அ.தி.மு.க கூட்டணியில் இணைக்க வேண்டும் என்று ஜெயலலிதா நினைக்கவில்லை. ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் மொத்தமாக தி.மு.க-வுக்குப் போய்விடாமல் ம.ந.கூ தடுக்கும், பிரிக்கும். அதனால் தன்னோடு சேர்ப்பதைவிட அவர்கள் தனியாக இருப்பதே நல்லது என்பது ஜெயலலிதாவின் வியூகம். தன்னை வைகோ போன்றவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்தாலும், ஜெயலலிதா கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு இதுதான் காரணம். இவர்களாவது அரசியல் ரீதியாக விமர்சிக்கிறார்கள். பா.ம.க-வின் காடுவெட்டி குரு பேசும் பேச்சை இன்றைய டி.ஜி.பி அசோக்குமாரும், முன்னாள் டி.ஜி.பி ராமானுஜமும், இன்றைய உளவுத் துறை ஐ.ஜி சத்தியமூர்த்தியும் ஜெயலலிதாவுக்குச் சொன்னார்களா எனத் தெரியவில்லை. ஜெயலலிதா இந்த நாட்டின் முதலமைச்சர் என்பதுகூட இருக்கட்டும். ஒரு பெண்ணை மனித உயிரியலைப் பாடமாகப் படித்து, பட்டம் பெற்ற இரண்டு பேர் வழிநடத்தும் கட்சியின் மேடையில் வைத்து இந்த அளவுக்குக் கொச்சைப்படுத்த முடியுமா என்ற அதிர்ச்சி ஏற்படும். அதெல்லாம் டி.ஜி.பி-க்கும் அரசு வக்கீலுக்கும் மான- அவமான மாகத் தெரியாதா... தெரியும்? ஆனால் அமைதியாக இருக்க என்ன காரணம்? இதைவிட ஆபாசமாக கருணாநிதியைத் திட்டுகிறார் காடுவெட்டி குரு என்பதுதான். ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் கருணாநிதிக்குப் போய்விடாமல் இவர்களும் கொஞ்சம் பிரித்துவிடுவார்கள், இவர்கள் கருணாநிதியுடன் சேர்ந்தால் வட தமிழ்நாட்டில் எதிர்கொள்வது சிரமம் என்ற நோக்கம்தான் இதையெல்லாம் சகித்துக்கொள்ள வைத்திருக்கிறது.

கடந்த 20-ம் தேதி தே.மு.தி.க-வைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜன், அருண்பாண்டியன், ஆர்.சுந்தர்ராஜன், அருண்சுப்பிரமணியம், செங்கம் சுரேஷ், சேந்தமங்கலம் சாந்தி, மைக்கேல் ராயப்பன், தமிழழகன்... ஆகிய எட்டு எம்.எல்.ஏ-க்களும் பதவி விலகியுள்ளார்கள். தங்கள் தொகுதிகளின் வளர்ச்சிப் பணிகளுக்காக ஜெயலலிதாவைச் சந்தித்த கதிகள்தான் தெரியுமே. தமிழகத்தின் முன்மாதிரித் தொகுதியாக இந்த எட்டு தொகுதிகளையும் ஐந்து ஆண்டுகள் முழுமையாக முடிவதற்கு முன்னாலேயே மாற்றிக்காட்டிவிட்ட பெருமிதத் தோடு (!) பதவி விலகியுள்ளார்கள். இதன் மூலம் விஜயகாந்த், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பை இழக்கிறார். ஜெயலலிதா நினைத்திருந்தால், விஜயகாந்த் பதவியை எப்போதோ பறித்திருக்கலாம். இன்னும் சிலரையும் சேர்த்து இழுத்து கட்சியை மூன்றில் ஒரு பங்காக உடைத்திருக்கலாம். ஏன் ஜெயலலிதா அப்போதே அதைச் செய்யவில்லை? அப்படிச் செய்தால், தி.மு.க அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சியாக (23 பேர்) ஆகிவிடும். ஜெயலலிதாவுக்கு நேர் எதிரே ஸ்டாலினும் துரைமுருகனும் உட்காரவைக்கப்படுவார்கள். இருவருமே சபைக்குள் வந்து செயல்படுவதைவிட, செயல்படாத விஜயகாந்த் அந்தப் பதவியில் தொடர்வதே நல்லது என்று ஜெயலலிதா இதுவரை விட்டுவைத்திருந்தார். இனி சட்டசபை கூடப்போவது இல்லை. எனவே எதிர்க்கட்சித் தலைவரும் இல்லை. அதனால்தான் அம்மாவின் ஆணைக்கிணங்க, இப்போது இந்தப் பதவி விலகல்கள்!
இந்தக் காய் நகர்த்தல்களுக்கு மத்தியில் ஜெயலலிதா கடைசியாக இரண்டு அஸ்திரங்களை வைத்துள்ளார். ஒன்று... மதுவிலக்கு, எல்லா கட்சிகளும் கேட்பதும், பொதுமக்கள் எதிர்பார்ப்பதும் அது. தன் மீதான அனைத்து விமர்சனங்களையும் தகர்த்து, தன்னை இந்த அறிவிப்பு மொத்தமாக உச்சிக்குக் கொண்டுபோய் உட்காரவைக்கும் என்று நினைக்கிறார்.

ஆட்சிக்கு எதிரான பொதுமக்களின் அதிருப்தி (anti establishment) அதிகமாக உருவாகிவிட்டதாக நினைத்தால், அடுத்து அவர் ஓர் அஸ்திரத்தை எடுப்பார். அதுதான் அனுதாப ஓட்டு அஸ்திரம். எம்.ஜி.ஆரின் உடல்நிலையைக் காட்டி, 1984-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க வெற்றியைக் குவித்ததைப் போன்ற சூழ்நிலை உருவாக்கப் படலாம். சட்டமன்றத்தில் பேசியதன் ரத்தினச் சுருக்கத்தை வாட்ஸ்அப்பில் ஜெயலலிதா பரப்ப ஆரம்பித்திருப்பது இதற்கான முன்னோட்டம் தான். ஐந்து, ஆறு இடங்களில் அவர் பேசிவிட்டு இறங்கிவிடலாம், அதைவிட அதிகமான கூட்டங்களில் அவர் பங்கேற்க மாட்டார் என்றும் சொல்லப்படுகிறது. அதைச் சமாளிக்க இந்த அஸ்திரம் அவருக்குப் பயன்படும். கருணாநிதி அமைக்கும் கூட்டணியைப் பொறுத்து, ஜெயலலிதாவின் காய் நகர்த்துதல்கள் அமையும்!

கருணாநிதி!

முன்னர் எல்லாம் பேசிப்பேசியே சாதித்த கருணாநிதி, இப்போது பேசாமலேயே சாதித்துக் கொண்டிருக்கிறார். அவர் காட்டில்தான் இன்னமும் மழை!

‘தன்னைத் தலைவராக அறிவிப்பாரா?’ என மு.க.ஸ்டாலின் எதிர்பார்த்து எதிர்பார்த்து இன்னும் மெலிந்ததுதான் மிச்சம். சரி, முதலமைச்சர் வேட்பாளராகவாவது அறிவிப்பார் என நினைத்து, அதற்கான நிர்பந்தத்தை ஏற்படுத்தி, ‘நமக்கு நாமே’ பயணம் போனார் ஸ்டாலின். 234 தொகுதிகளில் 200 தொகுதிகளைச் சுற்றிவரும் வரை கருணாநிதி கருத்தே சொல்லவில்லை. ஏனென்றால், இந்தப் பயணத்தில் கருணாநிதியின் பெயரையே ஸ்டாலினும் சொல்லவில்லை. மிகுந்த எச்சரிக்கையுடன், ‘தி.மு.க ஆட்சியில் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேறும்’ எனச் சொல்லிவந்தார் ஸ்டாலின். ஆனால், பயணத்தின் இறுதியில் சூழ்நிலையும் மாறியது. 

ஜெயலலிதாவின் கடைசி மூவ்... கருணாநிதியின் சீக்ரெட் கோல்!

அதுவரை அமைதியாக இருந்த கருணாநிதி, ‘கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முழுக்க முழுக்க ஸ்டாலின் ஆதரவாளர்கள் யோசனையில் நடந்தது. அவர்கள் பேச்சைக் கேட்டு தனித்தும் போட்டியிட்டோம். இதேபோன்று இந்தச் சட்டமன்றத் தேர்தலிலும் நடந்துகொண்டால் வெற்றிபெற முடியாது’ என நினைத்தார். எனவே, பல்வேறு கட்சிகளைக் கூட்டணிக்குள் சேர்க்க வேண்டும் என கருணாநிதி நினைத்தார். கூட்டணி சேர்க்க வேண்டாம் என ஸ்டாலின் ஆரம்பத்தில் சொன்னார். பல்வேறு கட்சிகளும் தி.மு.க கூட்டணியில் சேர்ந்தால், தன்னை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க மாட்டார்கள் என்பது ஸ்டாலினுக்குத் தெரியும். அதனால்தான் வலியவந்த வைகோவை விரட்டினார்கள். தமிழரசு மகன் திருமணத்துக்கு வந்த வைகோவுக்கு முன்வரிசையில் நாற்காலி போடாமலும், வைகோ பேசிய பிறகு தமிழிசையைப் பேசச் சொன்னதும் இதற்காகத்தான். வழக்கம்போல் வைகோ வெளியேறினார். இதேபோல்தான் திருமாவளவனும் மரியாதை தரப்படாமல் வெளியேற்றப்பட்டார்.

நிறையக் கட்சிகளை அழைத்துவந்தால், தான் முதலமைச்சர் வேட்பாளர் ஆகலாம் என்று கருணாநிதியும்... எந்தக் கட்சியும் வராமல் போனால், தான் முதலமைச்சர் வேட்பாளர் ஆகலாம் என ஸ்டாலினும் நினைத்து காய்கள் நகர்த்தினார்கள். இந்த நிலையில் எடுக்கப்பட்ட சில கருத்துக்கணிப்புகள், ‘கூட்டணி பலத்தின் மூலமாகத்தான் தி.மு.க வெற்றிபெற முடியும்’ என்பதை உணர்த்தியது. ஸ்டாலினுக்கு வேறு வழி இல்லை. கருணாநிதியையே வழிமொழியத் தயார் ஆனார்.
 
இறுதியாகச் சென்ற ‘நமக்கு நாமே’ பயணங்களில் எல்லாம், தலைவர் கலைஞரை ஆறாவது முறையாக அரியணையில் உட்காரவைப்போம்’ எனச் சொன்னதன் மூலம், ‘நாம் பாடுபடுவதும் அவருக்கே’ என்பதை ஸ்டாலின் உணர்ந்தது புரிந்துவிட்டது. சிம்பிளான ஒரு சீக்ரெட் ஒப்பந்தத்தில் அப்பாவும் மகனும் கையெழுத்துப் போட்டுக்கொண்டதுதான் காரணம்.

‘ஸ்டாலினை தலைவர் ஆக்கினால், அழகிரி கட்சியை உடைத்துவிடுவார்’ என்று பீதி கிளப்பப்பட்டது. ஏற்கெனவே வைகோ - அழகிரி சந்திப்பு நடந்துவிட்டது. ஜெயலலிதாவும் அழகிரிக்கு ஆதரவு தெரிவித்தால், தேர்தல் நேரத்தில் தி.மு.க-வுக்குப் பலத்த நெருக்கடி ஏற்படும் என்று நினைத்தார் ஸ்டாலின்.

`சரி... நான் ‘முதலமைச்சர் வேட்பாளர்’ என்பதை விட்டுத்தருகிறேன். ஆனால், அழகிரியை கட்சியில் சேர்க்கக் கூடாது’ என்று ஸ்டாலின் நிபந்தனை போடுகிறார். கருணாநிதி எதிர்பார்த்தும் இதுதானே. ஒரு மகனைப் பூச்சாண்டியாகக் காட்டியே இன்னொரு மகனைப் பயமுறுத்துவதுதான் இப்போது கோபாலபுரத்தில் நடக்கிறது. அழகிரிக்கும் ஸ்டாலினை தலைவராகவோ முதலமைச்சர் வேட்பாளராகவோ அறிவிக்காமல் இருந்தால் போதும்... சாப்பாடே வேண்டாம். கருணாநிதிக்கும் பிள்ளைகளின் ஒற்றுமையைவிட தன் நாற்காலி நிலைத்தால் போதும். சட்டசபைத் தேர்தலில் வெல்கிறாரோ இல்லையோ... குடும்பத் தேர்தலில் கருணாநிதி வென்றுவிட்டார்.

ஜெயலலிதாவின் கடைசி மூவ்... கருணாநிதியின் சீக்ரெட் கோல்!
ஜெயலலிதாவின் கடைசி மூவ்... கருணாநிதியின் சீக்ரெட் கோல்!

காங்கிரஸ் கூட்டணிக்குக் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டும் என கருணாநிதி நினைத்தார். ராகுலைப் பார்க்க ஸ்டாலினை அனுப்ப நினைத்தார். அந்த நேரத்தில் சுவாமி அடித்த ஒரு செய்தியைப் பார்த்து பதறிப்போய் காங்கிரஸ் தலைவர்களே ஓடோடிவந்து கருணாநிதியுடன் கூட்டணியைப் புதுப்பித்துக்கொண் டார்கள். நாம் பிந்தினால் பா.ஜ.க முந்திவிடும் என்ற பயம் காங்கிரஸ் கட்சிக்கு. அதனால்தான் எந்த நிபந்தனைகளும் இல்லாமல் கூட்டணிக்குத் தயார் ஆனது காங்கிரஸ். ‘ஸ்டாலினை முதலமைச்சர் வேட்பாளர் ஆக்கினால், தி.மு.க கூட்டணிக்கு விஜயகாந்தையும் நான் அழைத்து வருவேன்’ என சுவாமி சொல்லியிருந்தார். கருணாநிதிக்கு கடுப்பை ஏற்படுத்தும் கருத்து இது. ஆனாலும் அவர் அமைதியாக இருந்தார். இந்த அளவுக்கு இறங்கிவந்த சுவாமியை இன்னும் கொஞ்சம் இறக்க முடியாதா என்று நினைத்தார் கருணாநிதி. ஆனால் காங்கிரஸ் கூட்டணி உறுதியானதும் சுவாமியாலும் எதுவும் செய்ய முடிய வில்லை. ‘காங்கிரஸின் சதியில் கருணாநிதி சிக்கிக்கொண்டார்’ எனச் சொன்னார் சுவாமி. தன் அமைதியின் மூலமாக சுவாமியையே தி.மு.க-வுக்கு ஆதரவான கருத்து சொல்ல வைத்து விட்டார் கருணாநிதி.

அவர் நினைத்ததுபோலவே காங்கிரஸ் ஓடோடி வந்துவிட்டது. விஜயகாந்த் வரலாம். ஸ்டாலின் விட்டுத் தந்துவிட்டார். அழகிரி அமைதியாகி விட்டார். 92 வயதிலும் என்ன கில்லியாக இருக்கிறார் பாருங்கள் கருணாநிதி!

இவை எதுவுமே நடக்காதது மாதிரி இந்த தலைவர்கள் அறிக்கை வெளி யிடுவார்கள், சட்டசபையில் பேசு வார்கள். ஆனால் உண்மையான அரசியல் என்பது அறிக்கையில் வராது. சட்டசபையில் பேசப்படாது. ஆனால், அதுதான் நடக்கும். ‘தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடக்கும் யுத்தத்தில் தர்மம்தான் வெல்லும்’ என்று இந்தத் தலைவர்கள் சொல்வார்கள். அதர்மத் துக்கும் அதர்மத்துக்குமே நடக்கும் யுத்தத்தில் எது வெல்லும்?