Published:Updated:

மாப்பிள்ளை விஜயகாந்த்... மாமியார் பிரேமலதா! - பின்னணி பேரங்கள்

மாப்பிள்ளை விஜயகாந்த்... மாமியார் பிரேமலதா!  - பின்னணி பேரங்கள்
மாப்பிள்ளை விஜயகாந்த்... மாமியார் பிரேமலதா! - பின்னணி பேரங்கள்

“அ.தி.மு.க-வால் அசிங்கப்பட்டது போதும்!” - “தி.மு.க-தான் இறங்கி வரலை!”ப.திருமாவேலன், படங்கள்: சு.குமரேசன், சொ.பாலசுப்ரமணியன் ஓவியம்: ஜி.ராமமூர்த்தி

``இந்த விஜயகாந்த், இந்தத் தடவை தனியாகத்தான் நிற்பான்'' - நிறுத்தி நிதானமாக விஜயகாந்த் சொல்வதற்குள் குழப்பமும் கோக்குமாக்கும் நிறையவே நடந்து முடிந்துவிட்டன. ``காஞ்சிபுரம் வாருங்கள்... யாரோடு கூட்டணி என்பதைச் சொல்லப்போகிறேன்'' என்று அழைத்த விஜயகாந்த், கட்சிக்காரர்கள் காதுக்குள் கட்டெறும்பை விட்டு அனுப்பி வைத்தார். `தனியாகத்தான் நிற்பேன்' என்று அறிவித்த மகளிர் தின பொதுக்கூட்டத்துக்கு, அவர் வருவதாகவே இல்லை... வந்தார்; சொல்வதாகவே இல்லை... சொன்னார்.

அவர் சொன்னாரா... சொல்லவைக்கப் பட்டாரா என்பது, பிரேமலதாவுக்குத்தான் தெரியும். விஜயகாந்த் என்ற `மாப்பிள்ளை' யைக் காட்டி, பிரேமலதா என்ற `மாமியார்' கேட்கும் வரதட்சணைப் பேரங்கள் செல்லுபடி ஆகாமல் போனதால்தான், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பாவமன்னிப்பு கேட்பதைப்போல விஜயகாந்த் பேசவேண்டியதாக இருந்தது.

``நாங்கள் இதுவரை யாரோடும் பேரங்கள் நடத்தியதே இல்லை'' என விஜயகாந்தும் பிரேமலதாவும் பிரகடனம் செய்துள்ளார்கள். இதை, அவர்கள் சொல்லக் கூடாது; ஜெயலலிதாவும், சோவும், முரளிதர் ராவும், பிரகாஷ் ஜவடேக்கரும் சொல்ல வேண்டும். ஒரு சட்டமன்றத் தேர்தலையும், ஒரு நாடாளுமன்றத் தேர்தலையும் தே.மு.தி.க-வுடன் சேர்ந்து சந்தித்தவர்கள் இவர்கள். `தேவாவே சொன்னான்' என்பதை, சினிமாவில் ரசிக்கலாம்; தேர்தலில் சிரிக்கலாம்.

மாப்பிள்ளை விஜயகாந்த்... மாமியார் பிரேமலதா!  - பின்னணி பேரங்கள்

ஒரே நேரத்தில், மூன்று கூட்டணிகளோடு விஜயகாந்த் பேரப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். இந்த மூன்று கூட்டணிகளுமே தன்னை மதிக்கவில்லை என்ற கோபம் விஜயகாந்துக்கு இருந்தது. தி.மு.க-வுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, ``தே.மு.தி.க-வை கூட்டணிக்குள் சேர்ப்பதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சியை ஏன் சேர்த்தீர்கள்?'' என்று விஜயகாந்த் கேட்டுள்ளார். பா.ஜ.க-வுடன் பேசும்போது, ``நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு என்னை பா.ஜ.க மதிக்கவே இல்லை. சென்னைக்கு வரும் மோடி, ஜெயலலிதாவைச் சந்திக்கிறார். சென்னைக்கு வரும் அருண் ஜெட்லி, ஜெயலலிதாவைச் சந்திக்கிறார். உங்கள் கூட்டணியில் இருக்கும் என்னை ஏன் அவர்கள் சந்திக்க வரவில்லை? எனக்கு உள்ள மரியாதை இவ்வளவுதானா?'' எனக் கேட்டுள்ளார். ``தி.மு.க., அ.தி.மு.க அல்லாத கூட்டணி அமைப்பது என முடிவு எடுத்தால், முதலில் என்னிடம் வந்து பேசியிருக்க வேண்டாமா? நீங்களாக ஒரு கூட்டணி அமைத்துவிட்டு கொள்கைத் திட்டத்தை வெளியிட்டுவிட்டு என்னிடம் வந்து பேசுகிறீர்களே?'' என்பது, மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் மீது அவர் வைத்த விமர்சனம். இப்படி எல்லாமே தன்னைச் சுற்றி வர வேண்டும் என நினைத்திருந்தார் விஜயகாந்த். ஆனால், இந்த மூன்று கூட்டணிக் கட்சிகளும் விஜயகாந்தை சேர்த்துக்கொள்ளத் துடித்தனவே தவிர, அவரை மட்டுமே நம்பி இல்லை என்பதை அவருக்குத் தெளிவுபடுத்தி விட்டன. விஜயகாந்துக்கு விழுந்த முதல் அடி இது.

இரண்டாவது அடி... அவரது `முதலமைச்சர் வேட்பாளர்' கனவு!

தி.மு.க கூட்டணியில் `முதலமைச்சர்' பதவியை கருணாநிதிக்கு பெருந்தன்மையோடு விட்டுக்கொடுத்த விஜயகாந்த், `துணை முதலமைச்சர்' பதவி கேட்டார். இதை தி.மு.க ஏற்கவில்லை. கருணாநிதிக்கு `முதலமைச்சர்' நாற்காலியைப் பெருந் தன்மையோடு விட்டுக்கொடுத்துவிட்டு `துணை முதலமைச்சர்' பதவிக்காகக் காத்திருக்கும் ஸ்டாலின், அதையும் விஜயகாந்த்துக்குத் தாரைவார்க்க பைத்தியமா பிடித்திருக்கிறது. முதற்கட்டப் பேச்சுவார்த்தையிலேயே முடக்கப்பட்டது இந்தக் கனவு.

மாப்பிள்ளை விஜயகாந்த்... மாமியார் பிரேமலதா!  - பின்னணி பேரங்கள்

பா.ஜ.க கூட்டணிக்காகப் பேச்சுவார்த்தை நடத்திய முரளிதர் ராவ், பிரகாஷ் ஜவடேக்கர் ஆகிய இரண்டு பேரிடமும், ``என்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவியுங்கள். மற்ற விஷயங்களைப் பேசலாம்'' என்றுதான் விஜயகாந்த் சொன்னார். இது பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தர்ராஜன், மோகன்ராஜுலு ஆகியோரும் அறிந்த ரகசியம்தான். இந்தக் கோரிக்கை, பா.ஜ.க-வின் அகில இந்தியத் தலைவர் அமித் ஷாவிடம் போனது. ``விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தால், 100 ஸீட்டுக்களாவது பிடிப்பீர்களா?'' என அவர் கேட்டார். அதற்கு தே.மு.தி.க-வில் இருந்து எந்தப் பதிலும் இல்லை. ``கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 14 தொகுதிகளை வாங்கி, ஓர் இடத்தில்கூட ஜெயிக்காத ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக எப்படி அறிவிக்க முடியும்? மூன்று எம்.பி-க்களாவது ஜெயித்திருந்தால் விஜயகாந்த் கேட்காமலேயே அறிவிக்கத் தயாராக இருந்திருப்போம்'' என்றது பா.ஜ.க தரப்பு.

அடுத்து மக்கள் நலக் கூட்டணி. மதுரையில் இருந்து வரும் விமானத்தில் தற்செயலாக வைகோவும் விஜயகாந்தும் சந்தித்துக் கொண்டார்கள். தான் அமைத்துள்ள கூட்டணி பற்றி வைகோ சொல்லிக்கொண்டிருந்தாரே தவிர, விஜயகாந்த் எதுவும் பேசவில்லை. அதன் பிறகு வைகோ, தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் விஜயகாந்தை போய்ப் பார்த்தார்கள். நான்கு பேரும் மாறி மாறிப் பேசிய பிறகும், விஜயகாந்த் வாயில் இருந்து வந்த வார்த்தை, ``நான் இப்ப எந்த முடிவும் எடுக்கலை'' என்பதுதான்.

மாப்பிள்ளை விஜயகாந்த்... மாமியார் பிரேமலதா!  - பின்னணி பேரங்கள்

மூன்று வாரங்களுக்கு முன்னர், வைகோவிடம் தனது தூதுவராக ஒருவரை அனுப்பி வைத்துள்ளார் விஜயகாந்த். ``கேப்டனை நீங்கள் முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தால், உடனடியாக வந்து உங்கள் கூட்டணியில் சேரத் தயாராக இருப்பதாக சொல்லச் சொன்னார்'' என்று அந்த மனிதர் சொல்லியிருக்கிறார். ``நானாக தனிப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது. மற்ற தலைவர்களிடம் பேசுகிறேன்'' என வைகோ சொல்லி அனுப்பியிருக் கிறார். ``கூடுதலான இடங்களை ஒதுக்குவோம். முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பது சரியாக இருக்காது'' என மற்ற தலைவர்கள் சொல்லியிருக் கிறார்கள். 120 தொகுதிகளை விஜயகாந்துக்குத் தருவது என முடிவு எடுக்கப்பட்டது.

திருச்சியில் கூடிய ம.தி.மு.க பொதுக்குழுவில் பேசிய வைகோ, ``நான் சில முடிவுகளை எடுக்கவேண்டி இருக்கிறது. கட்சியின் நன்மைக்காக இதைச் செய்கிறேன். தொண்டர்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம்'' எனச் சொன்னதற்கு இதுதான் காரணம். `விஜயகாந்தும் ஜி.கே.வாசனும் இந்தக் கூட்டணிக்கு வர வேண்டும்’ என, இந்த நான்கு தலைவர்களும் நினைத்தார்கள்.

`120 தொகுதிகள் தரத் தயார்’ என்ற தகவலை விஜயகாந்துக்குச் சொல்லிவிடவே இவர்களுக்கு ஒரு வாரம் பிடித்தது. விஜயகாந்த் இணைப்புக்கு வரவே இல்லை. இப்படித்தான் மூன்று கூட்டணிகளுக்கும் தொடர்பு எல்லைக்கு அப்பால் விஜயகாந்த் போனார்.

``கேப்டனை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கும் கட்சியோடுதான் கூட்டணி'' என்று இப்போது சொல்லும் பிரேமலதா, இரண்டு மாதங்களுக்கு முன்னர் சொல்லியிருந்தால் கட்சிக்காரர்களும் பொதுமக்களும் மண்டையை உடைத்துக்கொண்டிருக்கவேண்டியது இல்லை. அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துவிட்டு, ``அன்புமணியை ஏற்றுக் கொள்பவர்கள் வரலாம்'' என்று தனது பாதையைத் தொடங்கியது பா.ம.க. வென்றாலும் தோற்றாலும் பரவாயில்லை என அப்பாவும் மகனும் நினைக்கிறார்கள் அங்கு; முடிந்தவரை லாபம் பார்க்கலாம் என, கணவனும் மனைவியும் துடிக்கிறார்கள் இங்கு.

இதில் பரிதாபத்துக்கு உரியவர்கள் தே.மு.தி.க நிர்வாகிகளும் மாவட்டச் செயலாளர்களும் தொண்டர்களும்தான். வேட்பாளர் நேர்காணலுக்காக வந்தவர்களிடம் இந்த மூன்று கூட்டணிகளுக்கு ஆதரவாகவும் விஜயகாந்த் பேசினார்; எதிராகவும் பேசியிருக்கிறார். `தனித்துப் போட்டியிடலாம் கேப்டன்' என்றால், ``தனியா நின்னா ஜெயிக்க முடியுமாப்பா?'' என்று கிண்டல் அடிப்பது, ``மக்கள் நலக் கூட்டணியில் சேரலாம் கேப்டன்'' என்றால், ``அவங்களுக்கு எங்கே ஓட்டு இருக்கு?'' என்பது, ``ஜெயலலிதாவை வீழ்த்தணும்னா தி.மு.க-வோடு சேர்ந்தாதான் சரியா இருக்கும்'' என்பது, ``அ.தி.மு.க-வால் அசிங்கப்பட்டது போதும். பா.ஜ.க-வுக்கு நம்மைப் பற்றித் தெரியும். நமக்கும் பா.ஜ.க-வைப் பற்றித் தெரியும். சரியா வரும்'' என்பது... இப்படி ஆளாளுக்கு எதிர்ப் பாட்டு பாடியிருக்கிறார்.

மாப்பிள்ளை விஜயகாந்த்... மாமியார் பிரேமலதா!  - பின்னணி பேரங்கள்

``நான் எந்த நிபந்தனையுமே போடலை. உள்ளாட்சித் தேர்தல்ல 30 சதவிகித இடம் நம்ம ஆட்களுக்கு வரணும். அது ஒண்ணுதான் தி.மு.க-விடம் நான் வைக்கும் கோரிக்கை. போன தடவை ஜெயலலிதாகிட்ட ஏமாந்துட்டேன். அதே மாதிரி கலைஞரிடம் ஏமாற மாட்டேன். 30 பேர் எம்.எல்.ஏ ஆனாங்க. அதுல 10 பேர் துரோகம் பண்ணிட்டுப் போயிட்டாங்க. எனக்காக ஆள் சேர்க்கிறது ஊர்ல இருக்கிற நிர்வாகிகள்தான். அந்த நிர்வாகிகள் பதவிக்கு வரணும். அதுதான் என்னோட ஒரே ஆசை'' என்று தென்மாவட்ட நிர்வாகி ஒருவரிடம் சொன்ன விஜயகாந்த், மாவட்டச் செயலாளர்களிடம், ``நான் ரெடியா இருக்கேன். தி.மு.க-தான் இறங்கி வரலை. இதை உங்களுக்கு தெரிஞ்ச தி.மு.க நிர்வாகிகளிடம் சொல்லி அவங்க தலைமைக்கு சொல்லச் சொல்லுங்க'' என்றும் சொல்லியிருக்கிறார். இதை எல்லாம் கேட்டுக் கேட்டு கிறுக்குப்பிடித்து அலைகிறார்கள் நிர்வாகிகள்.

தி.மு.க., அ.தி.மு.க-வை வீழ்த்தப் புறப்பட்ட விஜயகாந்த், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சித் தலைவர் ஆனதும், இந்தச் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுடன் இறுதிக் கட்டம் வரை பேச்சுவார்த்தை நடத்தியதும் அவரது அரசியல் நம்பகத்தன்மையை அடியோடு குறைத்துவிட்டது. எதிர்க்கட்சி தலைவர் என்ற பொறுப்பை வைத்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் மக்களுக்காக வாதாடவும் இல்லை; மக்கள் மன்றத்தில் போராடவும் இல்லை. அப்புறம் எதற்காக கட்சி?

அடுத்த கட்டுரைக்கு