Published:Updated:

மரியாதை மனிதர்கள் மார்க் என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மரியாதை மனிதர்கள் மார்க் என்ன?
மரியாதை மனிதர்கள் மார்க் என்ன?

விகடன் டீம்படங்கள்: ஜெ.வேங்கடராஜ், ப.சரவணகுமார், ஈ.ஜெ.நந்தகுமார், பா.காளிமுத்து, வீ.சதீஷ்குமார், க.சதீஷ்குமார், தி.குமரகுருபரன், மீ.நிவேதன், ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முதலமைச்சர் வேட்பாளர், பலமுனைப் போட்டி, யாருக்கு எத்தனை ஸீட், யாருக்கு எந்தத் தொகுதி என சூடேறிக்கொண்டே இருக்கிறது தமிழகத் தேர்தல் களம். வழக்கமாக தேர்தல் நேரத்தில் ஏதேனும் ஓர் அலை வீசும். அது ஆளும் கட்சி எதிர்ப்பு அலையாக இருக்கலாம் அல்லது ராஜீவ் காந்தி மரணம் போன்ற அனுதாப அலையாக இருக்கலாம். இந்தத் தேர்தலில் அப்படிப்பட்ட வெளிப்படையான எந்த அலையையும் காண முடிய வில்லை. கூடுதலாக புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் கூடியிருக்கிறது. மக்கள் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பதை தேர்தல் முடிவு சொல்லட்டும். அதற்கு முன்னர் தமிழகத்தின் மரியாதைக்குரிய மனிதர்கள், நமது அரசியல் தலைவர்களை எப்படி மதிப்பிடு கின்றனர்? தலைவர்களின் செயல் பாடுகளுக்கு அவர்கள் தரும் மதிப்பெண் என்ன?

இந்தத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாக முன்னிறுத்தப் படுபவர்களில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் மட்டுமே முதலமைச்சர்களாக இருந்தவர்கள். இவர்கள் இருவரது நிர்வாகச் செயல்பாட்டையும் பல்வேறு காரணிகளாகப் பிரித்துக் கொண்டோம். அரசியல், சமூகம், மனித உரிமை, கல்வி... எனப் பல்வேறு தளங்களில் இயங்கும் 10 பேரிடம் இது பற்றி கருத்துக் கேட்டோம். அவர்கள் தந்த மதிப்பெண்களைக் கூட்டி சராசரியைப் பார்த்தால், கருணாநிதி 49.9 மதிப்பெண்களையும், ஜெயலலலிதா 40.2 மதிப் பெண்களையும் பெறுகிறார்கள்.

மரியாதை மனிதர்கள் மார்க் என்ன?

“கருணாநிதி, சமூக நலனுக்காகச் செயல்பட்டவர் என்பது அவரது கடந்தகால வரலாறு. இப்போது தன் மக்களின் நலன்களுக்காக மட்டுமே செயல்படுகிறார். இருந்தாலும் திராவிட இயக்கக் கொள்கைகள் மிச்சம் மீதி இருப்பது அவரிடம் மட்டும்தான்.

அ.தி.மு.க-வை `திராவிடக் கட்சி' எனச் சொல்லவே முடியாது. ஜனநாயகத்தின் வழியாகவும் ஒரு சர்வாதிகாரியை உருவாக்க முடியும் என்பதற்கு ஜெயலலிதா ஓர் உதாரணம்” என்கிறார் பேராசிரியர் சரஸ்வதி.

மரியாதை மனிதர்கள் மார்க் என்ன?

“கருணாநிதி, ஜெயலலிதாவின் சாதனைகள் மற்றும் சொதப்பல் களை எடைபோடுவதற்கு இதை ஒரு நல்வாய்ப்பாக எடுத்துக் கொள்கிறேன். ‘கூட்டணி என்பது கூட்டணித் தந்திரம்’ என லெனின் சொல்வார். அசுரபலம்கொண்ட எதிரியை, சிறியவர்கள் சேர்ந்து எதிர்ப்பது என்பதுதான் அதன் அர்த்தம். ஆனால், மக்கள் நலக் கூட்டணியில் சமூகத்துக்காக தொடர்ந்து களத்தில் நின்று குரல் கொடுத்தவர்கள், தங்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை தலைவராக ஏற்றுக்கொண்டிருப்பது தான் முரண். இதுதான் `சரியான திசையை நோக்கி இந்தத் தேர்தல் நகரவில்லையோ' எனச் சிந்திக்க வைக்கிறது” என்கிறார் எழுத்தாளர் பிரபஞ்சன்.

``கொள்கையில் இருவருக்குமே பெரிய பிடிப்பு இல்லை. அதுபோல கறைபடியாத் தன்மையும் கிடையாது. இருவருமே ஊழலில் திளைத்தவர்கள் தான். அதனால் மற்ற விஷயங்களை வைத்துதான் மார்க் போட முடியும். முன்னர் சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாடு விஷயத்தில் ஜெயலலிதா வேறுவிதமாக இருந்தார். இப்போது கட்சிக்காரர்கள், தொண்டர்கள் என ஆளாளுக்கு கையில் எடுத்து மோசமாகிவிட்டது. திட்டங்களை நிறைவேற்றுவதில் கலைஞர் ஓரளவுக்கு சொன்னதைச் செய்வார். வெள்ளப் பாதிப்புகள் எல்லா மாவட்டங்களிலும் இல்லை என்பதால், இந்தத் தேர்தலில் அதிகாரத் துஷ்பிர யோகமும் டாஸ்மாக்கும் முக்கியப் பிரச்னைகளாக இருக்கும்” என்பது பேராசிரியர் கல்விமணியின் கணிப்பு.

``இன்றைக்கு ஆள்பவர்களைவிட கருணாநிதி ராஜதந்திரம் மிக்கவர். அந்தத் தந்திரத்தை, அவர் ஊழல்செய்யப் பயன்படுத்தினார். இப்போது இருப்பவர்கள், வெளிப்படையாக அல்லது தவறுகளை மறைக்கத் தெரியாமல் மோசமான ஆட்சி நடத்துகிறார்கள். தனித்துப் பார்க்கும்போது நிறையத் திறமைகள், தகுதிகள் உள்ள நல்ல தலைவர் வைகோ. ஆனால், தேர்தல் வரும்போது துரதிர்ஷ்டவசமாக அவருக்கு என்ன நேர்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. விஜயகாந்த் பற்றி சொல்ல வேண்டுமானால், கொஞ்சம் அநாகரிகமான வார்த்தையைத்தான் நான் பயன்படுத்த வேண்டும். அவர் ஒரு அரசியல் ஜோக்கர்” என்கிறார் சமூகச் செயற்பாட்டாளர் ஹென்றி டிபேன்.

‘`காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது மாநில உரிமை சார்ந்து ஒலித்த ஜெயலலிதாவின் குரல், பாரதிய ஜனதா ஆட்சியில் ஒலிக்கவே இல்லை. எனவே, அவரை பாரதிய ஜனதா கட்சி சார்பான அரசியல் வாதியாகவே பார்க்கவேண்டியுள்ளது. சாதிய மதவாதம் பெருகிவரும் சூழலில் அதற்கு எதிரான கொள்கையுள்ள ஆட்சியாளர்கள்தான் நமக்குத் தேவை” என்கிறார் சமூகச் செயற் பாட்டாளர் ஓவியா.

மரியாதை மனிதர்கள் மார்க் என்ன?

“இந்தப் பட்டியலில் தோழர் நல்லகண்ணுவும் இருந்திருந்தால் சிறப்பாக இருக்கும். பொதுவாக இன்று உள்ள தலைவர்களுக்கு நீடித்த வளர்ச்சி பற்றிய பார்வை மிகக் குறைவு. மிகச் சிறந்த தலைவர்கள் வெற்றிபெற்று வருவதற்கு நம் மாநிலத்தில் இன்னும் பல காலம் பிடிக்கலாம்” இது, சூழலியல் செயற்பாட்டாளர் பாமயனின் கருத்து.

மரியாதை மனிதர்கள் மார்க் என்ன?

‘`இயற்கை வளங்கள் மட்டுமே நாம் எதிர்காலச் சந்ததிக்கு விட்டுச்செல்லும் சொத்து. அதைச் சூறையாடிய முறைகேடுகள் இரண்டு ஆட்சிகளிலுமே உண்டு. தங்களை முதலமைச்சர் வேட்பாளர்களாக முன்னிறுத்திக்கொள்ளும் தலைவர்கள்கூட, கனிமவளக் கொள்ளை குறித்து கண்டன அறிக்கைகளோடு நிறுத்திக் கொள்கிறார்கள்’’ என்பது எழுத்தாளர் நக்கீரனின் கவலை.

``என்னால் திருமாவளவனுக்குத்தான் அதிக மதிப்பெண் கொடுக்க முடியும். ஏனென்றால், ஒடுக்கப்பட்ட சக்திகளை ஒன்றுதிரட்டி  வெற்றிகரமான கட்சியாக்கியதில் அவரது உழைப்பு அபாரமானது. ஆனால், அவரது அவ்வப்போதைய அரசியல் நிலைப்பாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை” என்கிறார் பத்திரிகையாளர் புனித பாண்டியன்.

மரியாதை மனிதர்கள் மார்க் என்ன?

``நல்ல தத்துவங்களையும் வாழ்வியல் முறைகளையும் உலகத்தினர் சிந்திக்கும் முன்னரே முன்கூட்டியே வழங்கியதுதான் தமிழர் சிந்தனை மரபு. நிலத்தைப் பேணிப் பாதுகாப்பது, இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற வற்றில் எல்லா இனத்தையும்விட அதிக அனுபவம் தமிழருக்கு உண்டு. அப்படிப்பட்ட ஓர் இனத்தின் அரசியல் சீரழிந்துகிடப்பது வேதனை. எதையும்விட இப்போதைய உடனடித் தேவை அரசியல் மாற்றுதான்” என்கிறார் மருத்துவர் கு.சிவராமன்.

`` `மக்களை போதையில் ஆழ்த்தக்கூடிய எதையும் அரசாங்கம் விற்பனை செய்யக் கூடாது' என்கிறது அரசியல் சாசனம். ஆனால், டாஸ்மாக்கை போட்டிபோட்டு வளர்த்தெடுத்து வளர்ச்சிக் குறியீட்டை நிர்ணயித்ததில் இரண்டு அரசாங்கங்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு. அதேபோலவே `தாய்மொழி வழியில்தான் கல்வி புகட்ட வேண்டும்' என்கிறது அரசியல் சாசனம். ஆனால், அப்படியா நடக்கிறது இங்கே?” என்று கேட்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

கருணாநிதி, ஜெயலலிதா என்ற தனி நபர்களைவிட அவர்கள் அரசைக் கையாண்ட விதத்தை வைத்தே பெரும்பாலானோர் மதிப்பெண்கள் போட விரும்பினர். இருவருமே ஊழலில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதே அனைவரது குரல். வாக்குறுதி களை நிறைவேற்றுவதிலும், நெருக்கடி கால செயல்பாடுகளிலும் கருணாநிதியின் ஆட்சி சிறப்பாகச்் செயல்பட்டதாக பெரும்பாலானோர் சொன்னார்கள். காவிரி, முல்லைப்பெரியாறு பிரச்னைகளில் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள், அவர் மீதான நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. ஆனால், தொலைநோக்குத் திட்டங்கள் எவையும் இந்த ஆட்சியில் செயல்படுத்தாதது அந்த நம்பிக்கையைக் குறைத்ததையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.

கருணாநிதி தலைமையிலான 2006-2011 அரசை `நன்று' என சிலர் சொல்லியிருக்கிறார்கள். ஒருவர்கூட `மிக மோசம்' எனச் சொல்லவில்லை. ஆனால், ஜெயலலிதாவின் 2011-2016 ஆட்சியை ஒருவர்கூட `நன்று' எனச் சொல்லவில்லை. மூவர், `மிக மோசம்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவின் இமேஜ் கடந்த ஆட்சியில் மோசமாகச் சரிந்திருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

மரியாதை மனிதர்கள் மார்க் என்ன?
மரியாதை மனிதர்கள் மார்க் என்ன?

இரண்டு தலைவர்கள் மீதான நம்பிக்கை மக்களுக்கும் குறைந்திருப்பதால்தான் மக்கள் நலக் கூட்டணி, அன்புமணி, சீமான், போன்றோர் அந்த இடத்தைக் குறிவைத்து களம் இறங்கியிருக்கிறார்கள். இதில் வைகோ, தொல்.திருமாவளவன் மீது `நல்ல தலைவர்கள்' என்ற பிம்பம் இருந்தாலும், அவர்கள் முன்னிறுத்தும் விஜயகாந்த் அவர்களது கடந்தகால செயல்பாடுகளுக்கு முற்றிலும் வேறான ஒருவராக இருக்கிறார். தேர்தல் அரசியலில் வெற்றி வாய்ப்பு உள்ளவரே முதலமைச்சர் வேட்பாளர் என்பது யதார்த்தம். ஆனால், அது அவர்களது அஸ்திவாரத்தையே ஆட்டுகிறது என்பதுதான் பெரும்பாலானோரின் கவலை.

ஸ்டாலினுக்கு, ஒரு நிர்வாகியாக நல்ல பெயர் இருக்கிறது. ஆனால், அவர் தந்தையின் கட்டுப்பாட்டில்தான் இன்னும் இருக்கிறார். அவர் தனித்துச் செயல்பட நினைக்கும்போது, கருணாநிதி அளவுக்குச் சமாளிப்பாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

மரியாதை மனிதர்கள் மார்க் என்ன?

சீமான், உணர்ச்சிமிக்கவராக இருக்கிறார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் ஆக நினைப்பவருக்கு இந்தக் குணம் எந்தவிதத்திலும் உதவாது என நினைக்கிறார்கள். மத்திய அமைச்சராகவும், நேர்மறைப் பிரசார உத்திகளாலும் அன்புமணிக்கு நல்ல பெயர் இருக்கிறது. ஆனால், இப்போதும் சாதி அரசியலைக் கைவிடாத டாக்டர் ராமதாஸின் நடவடிக்கைகள் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக எண்ணுகிறார்கள்.

இந்தத் தேர்தலைத் தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக டாஸ்மாக் இருக்கும் என்கிறார்கள். மந்தகதியிலான அரசு நிர்வாகமும், ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகமும் அதற்கு அடுத்த இடத்தில் இருக்கின்றன. ஒருசில மாவட்டங்களில் மட்டுமே வெள்ளப் பாதிப்புகள் இருந்தன என்பதால், அது நான்காம் இடத்தில் இருக்கிறது.

மரியாதை மனிதர்கள் மார்க் என்ன?

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கருணாநிதி மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனாலும் வலுவான அ.தி.மு.க வாக்கு வங்கியை வெல்ல அவர்கள் நிறைய உழைக்கவேண்டியிருக்கும். மற்ற முதலமைச்சர் வேட்பாளர்களுக்கு இதுவே முதல் முறை என்பதால், அவர்கள் வாக்குறுதிகளையும் மக்கள் காது கொடுத்துக் கேட்பார்கள். எனவே, முந்தைய கால ஆட்சிகளின் பிரச்னை களை கையில் எடுத்துக்கொண்டு, அதற்கான தீர்வுகளை யோசித்து, இந்தத் தேர்தலைச் சந்திப்பதே சரியான திட்டமாக இருக்கும். அதை எந்தக் கட்சி சரியாகச் செய்கிறது என்பதையும், மக்கள் யாரை நம்பினார்கள் என்பதையும் காண மே மாதம் 19-ம் தேதி வரை காத்திருப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு