Published:Updated:

கறிவேப்பிலைக்காகக் காத்திருக்கும் ஜெ.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கறிவேப்பிலைக்காகக் காத்திருக்கும் ஜெ.
கறிவேப்பிலைக்காகக் காத்திருக்கும் ஜெ.

கூடா நட்புக்கு குலோப்ஜாமூன்!ப.திருமாவேலன், ஓவியங்கள்: ஹாசிப்கான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஜெயலலிதாவும் கருணாநிதியும் அதிகமாகவே பதுங்கினார்கள். பாய்வதற்கு அல்ல; பயத்தால்தான்!

தமிழ்நாட்டின் தனிப்பெரும் கட்சிகளாக மார்தட்டிக்கொள்ளும் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் (ஆட்சியை தொடர்ந்து மாறி மாறி தக்கவைத்துக்கொள்ளும் அந்த இரண்டு கட்சிகளும்) தனியாக நிற்கப் பயந்து, சின்னச் சின்னக் கட்சிகளின் வரவுக்காகக்கூட காத்திருந்தன. இந்த அவலம்தான் தேர்தலே முடியாமல் தெரியவரும் ரிசல்ட்!

நாடாளுமன்றத் தேர்தலில், `எவர் தயவும் வேண்டாம்' என 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 42 சதவிகித வாக்குகளையும் 37 இடங்களையும் வென்ற ஜெயலலிதா, ஜெயம் உறுதி என நினைத்திருந்தால் டாக்டர் சேதுராமனும் ஜான் பாண்டியனும் நடிகர் கருணாஸும் அவருக்கு முக்கியமாக தெரியவேண்டிய அவசியமே இல்லை. ‘கறிவேப்பிலையைப் போல் பயன்படுத்திக்கொண்டு, தூக்கிவீசிவிட்டார் ஜெயலலிதா’ என ‘சரக்’ பாய்ச்சிய சரத்குமாரும் கூட்டணிக் கூட்டுக்கு அவசிய மான கறிவேப்பிலையாக மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளார்.

கறிவேப்பிலைக்காகக் காத்திருக்கும் ஜெ.

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்துவிட்டு, பிரசாரம் கிளம்புவதுதான் ஜெயலலிதா ஸ்டைல். ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு ஏப்ரல் 3-ம் தேதி வரை கார்ட னுக்குள் அவர் முடங்கிக் கிடந்தார். விஜயகாந்த் என்ன முடிவு எடுப்பாரோ என்ற பயம் முதலில் இருந்தது. தி.மு.க-வுடன் விஜயகாந்த் தொடர்ச்சியாக நடத்திவந்த பேச்சுவார்த்தை அவர்களுக்கு சக்சஸ் கொடுத்தால், தனக்குச் சரிவு என ஜெயலலிதா கணக்கு போட்டார். தே.மு.தி.க பற்றி கருணாநிதி இரண்டு முறை வெளிப்படையாகக் காட்டிய சமிக்ஞைகள், ஜெயலலிதாவை யோசிக்கவும் பின்வாங்கவும் வைத்தன. தி.மு.க - காங்கிரஸ் - தே.மு.தி.க என்பது வெற்றிபெறும் கூட்டணியாக அமைந்துவிடும் என பயந்தார் ஜெயலலிதா. அதனால் அமைதியாக இருந்தார்.

அவர் பயந்தது மாதிரி நடந்து விடவில்லை. விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணிக்குச் சென்று ஜெயலலிதாவுக்கு நன்மை(!) செய்துவிட்டார். அந்தக் கூட்டணி, ஓட்டுக்களை உடைக்குமே தவிர, வெற்றியை உடைக்காது என்பது எல்லோரையும்விட ஜெயலலிதா வுக்கு நன்கு தெரியும். அதனால் தான், ‘ஜெயலலிதா ஓய்வெடுக் கிறார்’ எனச் சொன்னவர் மீது எல்லாம் வழக்கு போட்ட ஜெயலலிதா, தனக்கு என்ன மாதிரியான அறுவைசிகிச்சை நடந்தது என்பதை விவரித்த பிரேமலதாவை எதுவும் செய்யவில்லை.

கறிவேப்பிலைக்காகக் காத்திருக்கும் ஜெ.

‘கேப்டன் விஜயகாந்த் அணிக்கு’ விஜயகாந்த் போன பிறகாவது, ஜெயலலிதா துள்ளி எழுந்திருக்க வேண்டும்; வேட்பாளர் பட்டி யலை வெளியிட்டு, பிரசாரத்தைத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனாலும் யோசித்தார். தி.மு.க- வுடன் த.மா.கா சேர்ந்துவிடக் கூடாது என்பது அடுத்த பயம். தி.மு.க - காங்கிரஸ் - த.மா.கா என்ற கூட்டணியும் அவருக்கு அச்சத்தைத் தருவதாக அமைந்தது. த.மா.கா-வுடன் பேச்சு வார்த்தையைத் தொடங்கினார் ஜெயலலிதா.

32 தொகுதிகளில் பேரம் தொடங்கியது. த.மா.கா-வை தனது அணிக்குக் கொண்டுவர வேண்டும். அவர்கள் தி.மு.க-வுடன் சேர்ந்துவிடக் கூடாது என்றுதான் ஜெயலலிதா நினைத்தாரே தவிர, ஜி.கே.வாசன் கேட்பதை எல்லாம் கொடுக்க விரும்பவில்லை. ‘இவ்வளவுதான் ஸீட். இதற்கு மேல் இல்லை’ என்றும், ‘இதுதான் தொகுதி. இதில் மாற்றம் இல்லை’ என்றும் கறார்காட்டக்கூடிய ஜெயலலிதா, த.மா.கா-வுடன் மட்டும் எண்ணிக்கை பேரம் நடத்தவும் தயார் ஆனார். தொகுதிகளை விட்டுத்தரவும் முன்வந்தார். அதாவது த.மா.கா-வை விட்டுவிடக் கூடாது என்ற தவிப்புதான் அதற்குக் காரணம்.

ஆனால், ஜி.கே.வாசன் தனது பிடியில் உறுதியாக இருந்தார்.

23 தொகுதிக்குக் குறையக் கூடாது என்றார் அவர். 23 என்பது, பெரிய எண்ணிக்கை என்பதால் தனது பேச்சுவார்த்தையை முறித்துவிட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டார் ஜெயலலிதா. ஆனாலும், அவர் ஜி.கே.வாசனுக்காக 10 நாட்கள் காத்திருந்தார். இத்தனை நாட்கள் ஜெயலலிதா காத்திருந்ததிலேயே தெரிந்தது அவரது பயம்!

ஜெயலலிதாவுக்காவது இந்த இரண்டு பயங்கள்தான். கருணாநிதிக்கு எல்லாமே பயம்! முதலில் ம.தி.மு.க வரும் என நினைத்தார். பேரன் அருள்நிதி திருமணத்தில் வைகோவுக்கு விருந்துவைத்தார். கூட்டணிக்கு அவர் வரவில்லை. பா.ம.க வரும் என நினைத்தார். கண் வலியோடு ராமதாஸ் பேரன் - பேத்தி திருமணத்தை நடத்திவைக்க மாமல்லபுரம் போனார். அவர்களும் வரவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கூட்டணிக்குள் சேர்க்க சீதாராம் யெச்சூரி வீடு வரை தனது தூதுவரை அனுப்பிவிட்டுக் காத்திருந்தார். கம்யூனிஸ்ட்களும் கைகொடுக்கவில்லை.

கறிவேப்பிலைக்காகக் காத்திருக்கும் ஜெ.

எழும்பூர் வழியாகப் போகும் பஸ்ஸில் போய்விட்ட காதலிக்காக கோபாலபுரம் பஸ் ஸ்டாப்பில் கருணாநிதி நோக நோகக் காத்திருந்ததுதான் உச்சம். பேரன்மார் ஊட்டிய பொய் ஜாங்கிரியை உண்மை என நம்பி, பழம் - பால் உதாரணங்களோடு பழம்பெரும் தலைவர் சொல்லிய சொல் இறுதியில் பலன்பெறா தலைவராக அவரை ஆக்கிவிட்டது. ‘விஜயகாந்த் வந்தால் ஜெயித்துவிடுவோம்’ என தி.மு.க நிர்வாகிகளுக்கு ஆசை வார்த்தை காட்டப்பட... அவர் வராமல்போன நிலையில், ‘விஜயகாந்த் வராததால் தோற்றுவிடுவோமோ?’ என்ற சந்தேகத்தை உருவாக்கிவிட்டது. யார் வருகிறார்களோ இல்லையோ 150 தொகுதிகள் நமக்கு, 84 தொகுதிகள் மற்றவர்களுக்கு என எடுத்து வைத்துவிட்டு தி.மு.க அன்றே வேலையைத் தொடங்கி இருந்தால் தொண்டனுக்கு உற்சாகமாகவாவது இருந்திருக்கும். அதைச் செய்யாததன் விளைவு மொத்தத் தொண்டர்களையும் சோர்வாக்கிவிட்டது.

இறுதியில் இருந்தது காங்கிரஸ். ‘கூடா நட்பு’ எனக் கொச்சைப்படுத்தப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு, கோபாலபுரத்தில் குலோப்ஜாமூன் தரப்பட்டது. அவர்களும் கருணாநிதி பலவீனமாக இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டவர்களாக, 80 தொகுதிகளில் தொடங்கி 50-ல் நின்று... ஏப்ரல் 4-ம் தேதி விமானத்தில் வந்து 41 தொகுதிகளைப் பெற்றுவிட்டார்கள். தமிழகத்தில் 40 ஆண்டுகளாகத் தள்ளிவைக்கப்பட்ட கட்சி... அதில் இருந்து ஜி.கே.வாசன் பாதிப் பேரை அழைத்துச் சென்றுவிட்ட பின்னரும்... 41 ஸீட் வரை வாங்க முடிகிறது என்றால், அவர்களையும் விட்டுவிடக் கூடாது என்ற தவிப்புதான் காரணம்.

இதோடு சேர்த்து த.மா.கா-வையும் வைத்துக்கொள்ளலாம் என்ற நப்பாசையும் தி.மு.க-வுக்கு இருந்தது. இரண்டு தரப்புக்கும் தூதுவர்கள் போனார்கள். ‘த.மா.கா இருந்தால் உங்களுக்குப் பிரச்னை இல்லைதானே?’ என காங்கிரஸிடமும், ‘காங்கிரஸ் இருந்தால் உங்களுக்குப் பிரச்னை இல்லைதானே?’ என த.மா.கா-விடமும் பேசப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு 35, த.மா.கா-வுக்கு 25 என்றும் ஒரு கணக்கு போடப்பட்டது. ஆனால், த.மா.கா-வுடன் கூட்டணி அமைப்பதில் ராகுல் உடன்படவில்லை என்பதால், ‘த.மா.கா-வுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை’ என ஸ்டாலின் வெளிப்படையாகவே சொல்ல வேண்டியதாயிற்று. இப்படி அறிவிப்பதன் மூலமாக காங்கிரஸின் கோபத்தைத் தணிக்க தி.மு.க விரும்பியது.

அ.தி.மு.க வாசல் அடைக்கப்பட்ட நிலையில் வாசன் முடிவை தி.மு.க மீண்டும் எதிர்பார்க்கலாம்.

கருணாநிதிக்கு கூட்டணி பயத்தைவிட, ஸ்டாலின் காய்ச்சலே அதிகம். ‘ஆறாவது முறை முதலமைச்சர்’ என்பதே அவரது ஒரே இலக்கு. இதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, ஸ்டாலின் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்தான் பாசத் தந்தைக்குப் பதற்றம். கோபாலபுரம் வீட்டுக்கு ஸ்டாலின் ஐந்து நிமிடங்கள் தாமதமாக வந்தாலும் கருணாநிதிக்கு லேசாகக் காய்ச்சல் வந்துவிடுகிறது. குலாம்நபி ஆசாத் வரப்போகிறார் என்ற தகவல் வந்ததும் ஸ்டாலின் வராததால், துரைமுருகனும் எ.வ.வேலுவும் பதறி அடித்துக்கொண்டு ஸ்டாலினை அழைத்துவர ஓடுகிறார்கள். இப்படி ஜெயலலிதாவின் அரசியல் நகர்வுகளை மோப்பம் பிடிப்பதைவிட ஸ்டாலின் அசைவுகளை கவனிப்பதே கருணாநிதியின் தினக் கணக்காக மாறிப்போனது.

கறிவேப்பிலைக்காகக் காத்திருக்கும் ஜெ.

அழகிரி மதுரையில் இருந்து கிளம்பிவிட்டார் என்றதுமே கோபாலபுரத்துக்கும் - சி.ஐ.டி காலனிக்கும் அண்ணா அறிவால யத்துக்கும் பந்தயக் குதிரைபோல பாயும் கருணாநிதி - கடந்த வாரத்தில் அவருக்காக வீட்டில் காத்திருந்ததும் இந்தப் பயத்தால் தான். ‘மகனே இல்லை’ என்ற பெரிய வார்த்தைகளால் ஒதுக்கி, ஓரங்கட்டப்பட்ட அழகிரியை, கருணாநிதி சந்தித்தன் பின்னணி... விஜயகாந்தைக் கடத்திக்கொண்டு போன வைகோ, அழகிரியையும் அள்ளிக்கொண்டு போய்விடக் கூடும் என்பதால்தான்.

‘நான் எதுக்குப்பா கஷ்டப்படுறேன்... உங்களுக்காகத்தானே’ என கல்கண்டு வார்த்தைகளை அழகிரி முகத்தில் தடவியதன் பின்னணியும் பயம்தான். ஸ்டாலினுக்கு விட்டுத் தந்துவிட மாட்டேன் என அழகிரிக்குக் காட்டுவதும், `அழகிரியை கோபாலபுரத்துக் குள்தான் சேர்த்துக்கொண்டேனே தவிர, தி.மு.க-வுக்குள் அல்ல’ என்று ஸ்டாலினுக்குக் காட்டுவதும்தான் கருணாநிதியின் முழு வேலை. இதை அவர்கள் நம்புகிறார்கள் என கருணாநிதி நம்புவதில்தான் சுழல்கிறது அவரது வாழ்க்கை.

என்னதான் சர்வபலம் கொண்ட வராக தன்னை நினைத்துக் கொண்டாலும் ஜெயலலிதாவுக்கு இந்தியக் குடியரசுக் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, மனிதநேய ஜனநாயகக் கட்சி, தமிழ் மாநில முஸ்லிம் லீக், முக்குலத்தோர் புலிப் படை ஆகிய கட்சிகள் தேவைப் படுகின்றன. கருணாநிதிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் படை, விவசாயத் தொழிலாளர் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி போன்றவை தேவைப்படுகின்றன.

‘யாமிருக்க பயமேன்’ எனச் சொல்லும்போதே ஜெயலலிதா, கருணாநிதி முகங்களில் தெரிகிறது பயம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு