Published:Updated:

மதுவிலக்கு தந்திரங்கள்...

ஜெயலலிதா - படிப்படி, விஜயகாந்த் - குளறுபடி, கருணாநிதி - ஒரே அடி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மதுவிலக்கு தந்திரங்கள்...

நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: சு.குமரேசன், ஜெ.வேங்கடராஜ், மீ.நிவேதன்

டைசியாக சென்னையே மழை வெள்ளத்தில் மிதந்தபோது ஜெயலலிதா தரிசனம் தந்தது... கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மக்கள் மத்தியில் காட்சிதருகிறார் என்றால் சும்மாவா..? தீவுத்திடலை, திருவிழாத்திடலாக மாற்றிவைத்திருந்தனர் ரத்தத்தின் ரத்தங்கள்!

மதுவிலக்கு தந்திரங்கள்...

கடந்த இரண்டு மாதங்களாகவே மற்றக் கட்சிகள் எல்லாம் தேர்தல் சர்க்கஸில் சாகசங்கள் பண்ணிக்கொண்டிருந்தன. ஆனால், அ.தி.மு.க மட்டும்தான் சைலன்ட் மோடில் இருந்தது. திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஜெயலலிதா. `நான் கோச்சுட்டுப் போறேன்' என விரைப்பாக பா.ஜ.க-வுக்குக் கிளம்பிய சரத்குமாரைப் பிடித்து இழுத்துவந்து, `இந்தா பிடி... ஒரு ஸீட்’ எனக் கொடுத்து, பக்கத்தில் வைத்துக்கொண்டார். பூங்கொத்து கொடுக்கப்போன கருணாஸுக்கு ஒரு ஸீட்டைக் கொடுத்து ஷாக்கிங் கொடுத்தார்.

7 தொகுதிகளை மட்டும் கூட்டணிக்கு கிள்ளிக்கொடுத்துவிட்டு, `227 தொகுதிகளில் அ.தி.மு.க போட்டியிடும்’ என மிரட்டினார். வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகும்... ஆட்களை மாற்றி ரம்மி ஆடினார்.

மதுவிலக்கு தந்திரங்கள்...

இப்படி ஒரு ஜாலி சிச்சுவேஷனில்தான் கடந்த 9-ம் தேதி சென்னையில் உள்ள தீவுத்திடலில் தொடங்கியது ஜெயலலிதாவின் அனல் பிரசாரம். இனி ஸ்பாட்டில் இருந்து ஹைலைட்ஸ்...

• ஒரு வாரத்துக்கு முன்னரே தீவுத்திடலை டெட்டால் போட்டுச் சுத்தம்செய்துவிட்டனர்.  ஜெயலலிதா வருகிற பாதைக்கு ஸ்பெஷலாக ரோடுகூட போட்டிருந்தனர்!

• 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மக்களை அள்ளிவந்திருந்தனர். வந்து இறங்கும்போதே தண்ணீர், பிஸ்கட் பாக்கெட்டுகள் என வகை வகையான நொறுக்குத்தீனிகளும் வழங்கப்பட்டன. `பிரியாணி கெடயாதா?’ என பெண்கள் விசாரித்துக்கொண்டிருந்தனர். 
 

• ஜெயலலிதா பார்வையில்படும்படி பெண்கள்தான் இருக்க வேண்டும் என 30 வரிசைகளுக்குப் பெண்களை மட்டுமே அனுமதித்தனர்.

• பெண்கள் பச்சை நிற சேலை, சுடிதாரில் வந்திருந்தனர். தீவுத்திடலில் மேடையிலும் பேனர்களிலும் உடைகளிலும் என பச்சை வண்ணமயமாக இருந்தது. 

மதுவிலக்கு தந்திரங்கள்...

• வருகிறவர்களை `நீங்க அங்க போங்க... நீங்க இங்க வாங்க'னு மக்களை முறையாக அமரவைத்து ஒழுங்குபடுத்தியது கட்சிக்காரர்கள் அல்ல; சின்சியரான காவல் துறையினர். பெண்கள் பகுதியில் சில ஆண் தொண்டர்கள் தாவ முயற்சிக்க, போலீஸ் தலையிட்டு அவர்களை விரட்டியடித்தது.

• மேடையை 15 முறைக்கும் அதிகமாகக் கூட்டிப் பெருக்கி, மாப் போட்டு... என சுத்தப்படுத்திக்கொண்டே இருந்தனர். `இதுக்கு மேல துடைச்சா, மேடையில ஓட்டை விழுந்துடும். விடுங்கய்யா' - கீழே இருந்து கமென்ட்டுகள் பறந்தன.

• மேடையின் இரண்டு பக்கங்களிலும் மொத்தமாக 10-க்கும் மேற்பட்ட ஏசிகள் மற்றும் ஏர்கூலர்கள் பொருத்தப்பட்டிருந்தன. அநேகமாக ஒரே ஒருவர் பேசுகிற மேடைக்கு இத்தனை ஏசிகள் மாட்டப்பட்டது வரலாற்றில் இதுதான் முதன்முறையாக இருக்கும்.

• 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில்கூட நின்றுகொண்டு பேசிய ஜெ., முதன்முறையாக உட்கார்ந்து பேசினார். அதற்காக தேக்கு மரத்தில் செய்த குஷன் வைத்த நாற்காலி... மைக் வைக்க ஒரு டேபிள் போடப்பட்டிருந்தது. அதற்கு அருகில் ஒரு சின்ன டேபிள். அதில் அவர் குடிக்க தண்ணீர் பாட்டில் இருந்தது. ஆனால், அது `அம்மா குடிநீர்' அல்ல.

மதுவிலக்கு தந்திரங்கள்...

•   இசை நிகழ்ச்சியில் தேவா தலைமையில் `நாளை நமதே...' என எம்.ஜி.ஆர் பாடலை ஹை டெசிபலில் பாட ஆரம்பிக்க, வெயிலில் வெயிட்டிங்கில் கடுப்போடு இருந்த தொண்டர் கூட்டம் கொஞ்சம் கூலானது! ஆங்காங்கே சோலோவாகவும் குரூப் டான்ஸும் போடத் தொடங்கினார்கள். குறிப்பாக, போதையில் இருந்தவர்களுடைய ஆட்டம் அதிரிபுதிரி.

• கூட்டத்தில் சுண்டல், வேர்க்கடலை,  பாக்கெட் சர்பத் தொடங்கி சினிமா பட டிவிடி வரை சகலமும் விற்கப்பட்டன!

•   ராஜ்யசபா எம்.பி-யும் வழக்குரைஞருமான நவநீதகிருஷ்ணன் லேட் என்ட்ரி. இதனால் வி.ஐ.பி-க்களுக்கான 3-வது கேட்டில் அவரை அனுமதிக்கவில்லை. பொதுமக்களுக்கான 6-வது நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்து, போலீஸுக்கு வணக்கம்வைத்து வி.ஐ.பி வரிசைகளுக்குத் தாவினார் நவநீதகிருஷ்ணன்.

• மேடைக்குக் கீழே அமைச்சர் வளர்மதி மைக் பிடித்து, `அம்மா வந்துவிடுவார். எல்லாரும் உங்களது இருக்கையில் அமருங்கள்' எனச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால், யாரும் அதைக் கேட்டதாகவே தெரியவில்லை. அம்மாவுக்கு மட்டுமே கட்டுப்பட்ட கூட்டமாச்சே!

மதுவிலக்கு தந்திரங்கள்...

•   கூட்டத்துக்கு வந்திருந்த அத்தனை பேரும் தேடியது சென்றமாத ஆக்‌ஷன் ஹீரோ ஓ.பி.எஸ்-ஸைத்தான். ஆனால், ஜெ-வுக்கு மட்டும் தெரிகிற மாதிரி முன்வரிசையிலும் மற்றவர்கள் கண்களுக்குச் சிக்காத  வகையில் உட்காரவைக்கப் பட்டிருந்தார் பன்னீர். ஜெ-வைக் கண்டதும் அவர் முகத்தில் அதே ஐந்தாண்டு கால பவ்யம்; அதே அடக்கம்!
 

•   வேட்பாளர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு எதிரில் சசிகலா, அவருடைய அண்ணன் மகள் பிரதிபா, டாக்டர் சிவகுமார், விவேக், எடப்பாடி பழனிச்சாமி,  வைத்திலிங்கம், மதுசூதனன் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

• ஜெயலலிதா `என் அன்பிற்கு இனிய வாக்காளப் பெருமக்களே...’ எனப் பேசத் தொடங்கி, இந்த ஐந்து ஆண்டுகளில் செய்த சாதனைகளை எல்லாம் விளக்கி, பட்டியல் போட்டார். பேச ஆரம்பிக்கும்போது உற்சாகமாகக் கைதட்டிக்கொண்டிருந்த தொண்டர்கள் ஜெயலலிதா வரிசையாக அஞ்சாயிரம்... பத்தாயிரம்... பதினைஞ்சாயிரம் என கோடி கோடியாக நம்பர் கேம் ஆட... கொட்டாவிவிட ஆரம்பித்தனர்.

•   தூங்க ஆரம்பித்த தொண்டர்களை எழுப்ப, கருணாநிதியைத்தான் திட்டவேண்டியிருந்தது. மதுவிலக்கு பற்றிப் பேச ஆரம்பித்தவர்.

• `திரு.கருணாநிதிதான் தமிழகத்தில் மதுவைக் கொண்டுவந்தவர்' எனச் சொல்லித் திட்டி, `நான் சொன்னால் செய்வேன்... தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவேன்' என்றார். மதுவிலக்கு விஷயத்தைச் சொன்னதும் கூட்டத்திடம் இருந்து பெரிய ரெஸ்பான்ஸை எதிர்பார்த்து ஒரு பாஸ்விட்டார். ஆனால், கூட்டம் சைலன்ட் மோடிலேயே இருந்தது.

மதுவிலக்கு தந்திரங்கள்...

• அதிரடியாகப் பேசப்போகிறார் என ஆர்வத்தோடு வந்த தொண்டர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்தது ஜெயலலிதாவின் பேச்சு. பன்ச் டயலாக்குகள் பறக்க பேசக்கூடியவர்... இந்த முறை, `மக்களால் நான்... மக்களுக்காகவே நான்' என்பதைத் தாண்டி பன்ச்களே இல்லாமல் பேசி முடித்தார். 43 நிமிடங்களும் பேப்பர்களைப் பார்த்து படித்துக்கொண்டே இருந்தார்

• பேச்சு, போர் அடிக்க ஆரம்பிக்க, ஜெயலலிதா பேசிக்கொண்டிருக்கும்போதே பின்னால் இருந்த தொண்டர்கள், கூட்டத்தை விட்டுக் கலையத் தொடங்கினார்கள். ஆனால், காவல் துறையினர் அவர்களை வெளியே விடாமல் தடுத்து, பேச்சு முடியும் வரை கூட்டத்தின் உள்ளேயே அமரவைத்தனர்.

மதுவிலக்கு தந்திரங்கள்...

•   மேடைகளில் வெறும் `கருணாநிதி’ என்றே பேசிவந்த ஜெயலலிதா, ஏனோ உலக மேடைகளில் முதன்முறையாக `திரு.கருணாநிதி’ என்றே ஒவ்வொரு முறையும் பேசினார்.

•   ஜெயலலிதா பேசி முடித்ததும் பிறக் கட்சிகளில் இருந்து அ.தி.மு.க-வில் இணைந்தவர் களுக்கு  அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் சிலர், அச்சத்தோடு ஜெயலலிதா விடம் இருந்து தூர நின்று கைகளை மட்டும் எட்டிப்பிடிப்பதுபோல அட்டையை வாங்க. `பக்கத்துல வாங்க' என்பதுபோல பாசமாகக் கூப்பிட்டுக் கொடுத்தார் ஜெயலலிதா.

மதுவிலக்கு தந்திரங்கள்...

நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: சொ.பாலசுப்ரமணியன்

`எங்கிட்ட காசே இல்ல' என, தன் பொறியியல் கல்லூரியின் 75 ஏக்கர் மைதானத்திலேயே நின்றுகொண்டு சொல்வதெல்லாம் கேப்டனால்தான் முடியும். தமிழகத் தேர்தல் பிரசாரத்தில் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் உள்ளிட்ட தலைவர்கள் பற்றி எல்லாம் பேசுவது வைகோவுக்குத்தான் சாத்தியம். மாமண்டூரில் நடந்த `கலக்கப்போவது யாரு தேர்தல் ரவுண்டு' எபிசோடில்தான் இவை எல்லாம் நடந்தன.

மதுவிலக்கு தந்திரங்கள்...

கேப்டன் கூட்டணி தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் 10-ம் தேதி நடைபெற்றது.  கூட்டணி தொடங்கிய நாள்முதலே ட்ரெண்டிங்கில் இருக்கும் குபீர் கூட்டணியின் மாநாட்டை மிஸ்பண்ண முடியுமா?

• மாநாட்டில் சுமார் இரண்டு லட்சம் பேர் அமர சேர்கள் போடப்பட்டதாகச் சொன்னார்கள். ஆனால், மாநாடு முடிந்தபோது நூற்றுக்கணக்கான சேர்களை தொண்டர்கள் உடைத்து நொறுக்கி யிருந்தனர். கேப்டன் பேச்சைக் கேட்டு உணர்ச்சி பொங்கியிருக்கலாம்.

• பலரும் கூட்டத்துக்கு வரும் முன்னரே ஃபுல்லாக சுதி சேர்த்துக்கொண்டு வந்திருந்தனர். அவர்களால் பார்க்கிங்கில் செம தள்ளுமுள்ளு. கட்சியில இவர் முக்கியமானவருய்யா... `எங்க காரை மேடைலயே விடுறேன் பாக்குறியா?’ என ஒரே சவுண்டு!

• மாநாடு நடப்பதற்கு ஒருநாள் முன்னர்தான் ஜி.கே.வாசன் கூட்டணியில் ஐக்கியமானதால், மாநாட்டுத் திடலிலும் மேடையிலும் அவர் படம் மிஸ்ஸிங். இதைக் கண்டு கொதித்த த.மா.கா தொண்டர்கள், ஜி.கே.வாசன் படம் ஒன்றைக் கொண்டுவந்து மேடையில் இருந்த பேனரின் நடுவே அவசரமாக ஒட்டி, தலைவரின் மானம் காத்தனர். 

• மாநாட்டு மேடை, ஒரு திருமண விழா மேடைபோலவே இருந்தது. ‘ஓஹோ... இவர்தான் தே.மு.தி.க நிர்வாகியா? இவர் யாரு... த.மா.கா-வா?’ என மேடையில் விசாரித்துக் கொண்டு, ஒவ்வொருவரும் தங்களுக்குத் தாங்களே இன்ட்ரோ கொடுத்துக் கொண்டிருந்தனர்.

• மேடையில் 234 சேர்கள் போடப்பட்டிருந்தன. ‘இது 234 தொகுதிகளிலும் வெல்வோம்’ என்பதன் குறியீடு என மேடையில் உள்ளவர் கூறினார். வைகோ குடுத்த ஐடியாவா இருக்குமோ?

• ‘வைகோவைப் போல சீறு, எளிமை நம்ம ஜி.ஆரு, முத்து முத்தா கருத்துச் சொல்லும் முத்தரசரு... சீறும் திருமாவைப் பாரு... உண்மை புரட்சிக்கலைஞர் யாரு? ஜி.கே.வாசனும் இறுதியாக வந்து சேர்ந்தாரு’ என, கலைநிகழ்ச்சியில் பாடினர். மற்ற கட்சியனர் ஆடிக்கொண்டிருக்க கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள், பாவமாகப் பார்த்துக்கொண்டு வெயிலில் வாடியபடி அமர்ந்திருந்தனர்.

• இன்னிசைப் பாடல் நிகழ்ச்சியில் தொடங்கி விஜயகாந்த் பேசி முடியும் வரை தொல்.திருமாவளவன் பெயரைச் சொன்னாலே ஹை-டெசிபலில் சத்தம் வந்தது. விஜயகாந்த், வைகோவின் பெயர் சொல்லும்போது இவ்வளவு அப்ளாஸ் இல்லை.

• மேடையில் தொண்டர்கள் அத்துமீறி ஏற, எல்லோரையும் திட்டி கீழே இறக்கிவிட்டார் வைகோ. ‘இங்க ஒரு பய வரக் கூடாது. எல்லாரும் தூரத்துல நிக்கணும்’ என உத்தரவு போட்டுக்கொண்டிருந்தார்.
 

• முத்தரசன் பேசத் தொடங்கினார். மைக் செட் சரியாக வேலைசெய்யவில்லை. உடனே இன்னொரு பக்கம் உள்ள மைக்குக்கு மாறியவர் `மைக்தான் தெளிவாக இல்லை. மக்கள் தெளிவாக இருக்காங்க’ என்றார். கூட்டத்தில் அந்த பன்சுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். அதற்குப் பிறகு அவர் பேசியதற்கு எல்லாம் மயான அமைதி!

• தொல்.திருமாவளவன் பேசிக்கொண்டு இருக்கும்போதே விஜயகாந்த் வரும் சலசலப்பு நிலவியது. ஆனால், விஜயகாந்த் வரவில்லை. ஜி.ராமகிருஷ்ணன் பேசும்போதுதான் விஜயகாந்த் என்ட்ரி ஆனார். சரியாக மாலை 7:43 மணிக்கு பிரேமலதாவுடன் மேடைக்கு வந்தார் விஜயகாந்த்.

• விஜயகாந்த் வந்ததும் சத்தம் போட்டுக் கொண்டிருந்த தொண்டர்களிடம் விரலைக் காட்டி ` ‘உஷ்’ அமைதியாக இருக்கணும்.' என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார். தொண்டர்கள் அமைதியாக இருக்கும்போதும் அதையே சொல்லிக்கொண்டிருந்தார்.

• விஜயகாந்த் தொடங்கி ஜி.கே.வாசன் வரை ஆறு தலைவர்களுக்கும் மேடையில் ஏலக்காய் மாலைகள் அணிவிக்கப்பட்டன. ஏலக்காய் போலவே ஆறு தலைவர்களும் வெற்றிபெற்று வாசம்வீசுவார்கள் என அதற்கும் விளக்கம் கொடுத்தார்கள்.

•   வைகோ 40 நிமிடங்களுக்கும் மேல் பேசினார். தேர்தலுக்குத் தொடர்பு இல்லாமல் அவர் என்னென்னவோ பேச, தொண்டர்கள் பலரும் வெளியே கிளம்ப ஆரம்பித்தனர். கூட்டம் கலைவதைப் பார்த்து சுதிஷைக் கூப்பிட்ட விஜயகாந்த், தனது வாட்சைக் காண்பித்து ஏதோ பேசினார். இதைக் கவனித்த வைகோ  ‘இன்னமும் 5 நிமிடம் இருக்கு. அதுக்குள்ள முடிச்சுக்கிறேன்’ என விரைந்து பேசி முடித்தார்.
 

•   விஜயகாந்த் பேசி முடிக்கும்வரை, நகத்தைக் கடித்தபடி டென்ஷனோடு அமர்ந்திருந்தார் பிரேமலதா. தமிழக பிரச்னைகள் பற்றி விஜயகாந்த் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

• `தி.மு.க-வுக்கு எதிரி அ.தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு எதிரி தி.மு.க., இந்த ரெண்டு பேருக்குமே எதிரி நான்தான். ஸ்டாலினுக்கு எதிரி அவரேதான். நல்லாட்சி அமையவே இந்தக் கூட்டணி' என்றபோதுதான் கூட்டத்தில் இருந்து கொஞ்சம் ரெஸ்பான்ஸ் வந்தது. 

• பேசும்போது தன் வாட்ச்சையே திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டிருந்தார்.  `நேரமாச்சு... ஏன்னா ஒவ்வொரு வாட்ச் ஒவ்வொரு மாதிரி ஓடும். அதுனால தொண்டர்கள் சீக்கிரம் போகணும். 10 மணிக்குக் கடையை மூடிடுவாங்க நல்லபடியாகப் போங்க. நன்றி... வணக்கம்” என்றார். `கேப்டனுக்கு நம் மேல எவ்ளோ அக்கறை?! அந்த அன்பு உள்ளம்தான்யா கேப்டன்' எனத் தொண்டர்கள் சிலிர்ப்பாகப் பேசிக் கொண்டே கிளம்பினர்.

மதுவிலக்கு தந்திரங்கள்...

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி, படங்கள்: சு.குமரேசன்

வேட்பாளர்களை அறிவிப்பதில் அ.தி.மு.க முந்திக்கொண்டது என்றால், தேர்தல் அறிக்கை வெளியிடுவதில் தி.மு.க முந்திக்கொண்டது. இதற்காக சில மாதங்களுக்கு முன்னரே முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் ஒரு குழு அமைத்து, தேர்தல் அறிக்கை தயாரித்து வந்தது தி.மு.க. இதில் முக்கியமாக தி.மு.க-வின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட `நமக்கு நாமே’ பயணத்தின்போது தரப்பட்ட பல்லாயிரக் கணக்கான கோரிக்கை மனுக்கள், இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் தரப்பட்டு, தொகுக்கப்பட்டன.அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் அறிக்கை வெளியீடு என்றதுமே உடன்பிறப்புகள் மட்டும் அல்லாது எதிர்க்கட்சிகளும் அலெர்ட் ஆகின.

மதுவிலக்கு தந்திரங்கள்...

• ஞாயிற்றுக்கிழமை மாலை நேர மெரினா பீச் போல ஜே... ஜே... என இருந்தது அண்ணா அறிவாலயம். ‘தேங்காய்... மாங்காய்... பட்டாணி... சுண்டல்’ என அண்ணா அறிவாலய வளாகத்தில் மினி கடைகள் முளைத்திருந்தன.

• முதலமைச்சர் வேட்பாளர் போல தி.மு.க தலைவர் மு.கருணாநிதி தேர்தல் அறிக்கையை வாசிக்கத் தயாரானதும் அண்ணா அறிவாலயத்தில் விசில் சத்தம்.

• மாநிலச் சுயாட்சியில் தொடங்கி 66 சிறு சிறு தலைப்புகளில் துறைரீதியாகப் பிரித்து, 130 பக்கங்களில்  தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது.

• கருணாநிதிக்கு அன்று உடம்புக்கு முடிய வில்லை. பேசச் சிரமப்பட்டார். தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கியமான அம்சங்களை மட்டும் படித்தார். அப்போது அவர் சிரமப் பட்டதைப் பார்த்தவர்கள், உணர்ச்சிகரமாக ஒரு தவிப்பில் இருந்ததை காண முடிந்தது. குறிப்பாக, கனிமொழி.

• தேர்தல் அறிக்கையை, புத்தகமாகப் போட்டிருந்தார்கள். அந்தப் புத்தகத்தைப் படிக்காமல் அதில் இருந்த முக்கிய அறிவிப்புகளை மட்டும் தனியாக பேப்பரில் எழுதி வைத்திருந்ததைத் தான் கருணாநிதி படித்தார். முதல் அறிவிப்பே மதுவிலக்கு பற்றியதுதான். ‘மதுவிலக்கு’ என்றதுமே  கூட்டம் ஆர்ப்பரித்தது.

மதுவிலக்கு தந்திரங்கள்...

• ‘மீண்டும் மேலவை கொண்டுவரப்படும்’ என கருணாநிதி சொன்னபோது, மேடையில் இருந்த டி.ஆர்.பாலு கீழே உட்கார்ந்திருந்த நரைமுடிக்காரர்களைப் பார்த்து ‘உங்களுக்குத்தான்’ எனச் சொல்லிச் சிரித்ததோடு ‘நீங்க எல்லாம் எம்.எல்.சி ஆகப்போறீங்க’ எனக் கிண்டலடித்தார்.

• ஒவ்வொரு பக்கமாக கருணாநிதி படித்து முடிக்கும்போது அடுத்த பக்கத்தை ஸ்டாலின்தான் புரட்டவேண்டியிருந்தது. அறிவிப்புகளை கருணாநிதி படித்த பிறகு, தேர்தல் அறிக்கைப் பற்றி கொஞ்சம் பேசினார். தேர்தல் அறிக்கை புத்தகத்தில் கடைசி பாராவில் குறிப்பிட்டிருந்த வாக்கியத்தை ஸ்டாலின் அடிக்குறிப்பிட்டு கருணாநிதியிடம் நீட்டி, அதைப் படிக்கச் சொன்னார். கருணாநிதி அதைப் படித்ததும் கைதட்டல்கள். அவர் படித்த வாக்கியம் இதுதான்... ‘சொல்வதைத்தான் செய்வோம்...செய்வதைத்தான் சொல்வோம்!’

• வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்புக்கு, மாஸ் ரெஸ்பான்ஸ். (உபயம் பா.ம.க.) கடந்த தி.மு.க ஆட்சியில் அறிவித்ததைப் போல சிறு, குறு விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்பபடும்’ என்ற அறிவிப்புக்கும் தொண்டர்கள் மத்தியில் வரவேற்பு.

மதுவிலக்கு தந்திரங்கள்...

• தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் என்ன இடம்பெறுகிறது என்பதை மோப்பம்பிடிக்க ஆளும் கட்சியின் உளவுத்துறை முயன்றது. தேர்தல் அறிக்கை விவரத்தை முன்கூட்டியே யாரும் தெரிந்துகொள்ள முடியாத அளவுக்கு ஏகத்துக்கும் உஷாராக இருந்தது தி.மு.க. அரசின் பட்ஜெட் அறிக்கை தயாரிப்பதுபோல தயாரிக்கப்பட்டது தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை. பிரின்ட் செய்யும் இடத்தில் ஆட்களை இரவு-பகலாக நியமித்து, பிரின்ட் எடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு சொந்தமான அச்சகத்தில்தான் தேர்தல் அறிக்கை தயாரானது.

மதுவிலக்கு தந்திரங்கள்...

• முதலமைச்சரே ஊழல்செய்தாலும் யாருடைய அனுமதியையும் கேட்காமல் விசாரித்து நடவடிக்கை எடுக்க முடியும் என நிரூபித்த, `லோக் ஆயுக்தா’ சட்டத்தை தமிழகத்தில் கொண்டு வருவோம் என்றும், குறிப்பிட்ட காலகட்டத்தில் அரசின் சேவை கிடைக்காமல் காலதாமதமானால் எதனால் தாமதம், எந்த அதிகாரியால் தாமதமோ அவர் மேல் நடவடிக்கை எடுப்பதோடு, புகார் கொடுத்தவருக்கு இழப்பீடாக வழங்கும் சேவை பெறும் உரிமைச் சட்டத்தையும் தேர்தல் அறிக்கையாக அறிவித்தார் கருணாநிதி.

* `கச்சத்தீவை மீட்போம்' என கருணாநிதி சொன்னபோது `நீங்களே கொடுத்துட்டு... அதை நீங்களே மீட்பீங்களா...’ என பத்திரிகையாளர்கள் மத்தியில் கமென்ட்டுகள் விழுந்தன!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு