Published:Updated:

“ஜெயலலிதாவின் பிரசாரச் செலவுகளை யார் செய்கிறார்கள்?”

   “ஜெயலலிதாவின் பிரசாரச் செலவுகளை யார் செய்கிறார்கள்?”
பிரீமியம் ஸ்டோரி
News
“ஜெயலலிதாவின் பிரசாரச் செலவுகளை யார் செய்கிறார்கள்?”

ஜோ.ஸ்டாலின் , படம்: சு.குமரேசன்

   “ஜெயலலிதாவின் பிரசாரச் செலவுகளை யார் செய்கிறார்கள்?”

``கடந்த ஐந்து வருடங்களாக, செயல்படாத ஒரு முதலமைச்சர் நடத்திய செயல்படாத ஆட்சியை, பொதுமக்கள் முற்றிலுமாக வெறுக்கின்றனர். அந்த வெறுப்பில் உள்ள மக்களுக்கு, எந்தக் கட்சி ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவரும் என்பது தெளிவாகத் தெரியும். தி.மு.க ஆட்சி அமைப்பது நிச்சயம்'' - பிரசாரக் களத்தில் அனலடிக்கிறார் கனிமொழி. 

``தி.மு.க - அ.தி.மு.க என்ற இரண்டு பெரிய கட்சிகள் தவிர்த்து, ‘மாற்றத்தைக் கொண்டுவருவோம்’ என்ற கோஷங்களை முன்வைத்துள்ள மக்கள் நலக் கூட்டணி-தே.மு.தி.க அணி  உள்பட பல அணிகள் களம் காண்கின்றன. தி.மு.க-வுக்கு இது வித்தியாசமான, சவாலான தேர்தல். வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?''

``2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல், தி.மு.க-வுக்கு மட்டும் அல்ல... தமிழ்நாட்டுக்கே சற்று வித்தியாசமான தேர்தல்தான். அந்தவகையில் இதை தி.மு.க-வுக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ள தேர்தலாகவே பார்க்கிறோம். காரணம், சென்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து, அவர்களுக்கு அசாத்திய பலத்தைக் கொடுத்த பல கட்சிகள் இன்று அவர்களோடு இல்லை. அந்தக் கட்சிகள் தனியாகப் பிரிந்து, வேறு வேறு அணிகளாகப் போட்டியிடுகின்றன. அதே நேரத்தில் `மாற்று' எனச் சொல்லும் கட்சிகளை மக்கள் நம்பவில்லை. கள நிலவரம் தி.மு.க - அ.தி.மு.க போட்டி என்பதாகத்தான் உள்ளது. இதில் தி.மு.க-தான் வெற்றிபெறும் என்பது நடைமுறை யதார்த்தம். ஏனென்றால், மாற்றத்தைக் கொண்டுவரும் சாத்தியம் உள்ள கட்சி தி.மு.க மட்டுமே!''

``இவ்வளவு நம்பிக்கையாக இருக்கக்கூடிய சூழலில், தி.மு.க ஏன் தே.மு.தி.க-வைக் கூட்டணியில் சேர்ப்பதற்காகத் தொடர்ந்து பேரம் பேசியது?''

``இல்லை... இல்லை (வேகமாக மறுக்கிறார்). நீங்கள் சொல்லக்கூடிய இந்தக் குற்றச்சாட்டுகளை தே.மு.தி.க-வும் மறுத்துள்ளது; தி.மு.க-வும் மறுத்துள்ளது. எங்களால் தே.மு.தி.க-வுடன் இணைந்து செயலாற்ற முடியும் என்பதால், தலைவர் தே.மு.தி.க-வுக்கு அழைப்புவிடுத்தார். அது தேர்தல் காலத்தில் இயல்பாக அமைக்கப்படும் வியூகம், அவ்வளவுதான். இதில் பேரத்துக்கோ, வேறு பேச்சுவார்த்தைகளுக்கோ எந்தத் தேவையும் இல்லை.''

   “ஜெயலலிதாவின் பிரசாரச் செலவுகளை யார் செய்கிறார்கள்?”

`` `தி.மு.க வெளியிட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலில் உங்கள் ஆதரவாளர்களுக்கு இடம் இல்லை. அதனால் உங்களுக்கு வருத்தம்' என வெளியாகும் செய்திகள் பற்றி?''

``அவை தவறான செய்திகள். அந்தப் பட்டியலில் எனக்கு எந்தவிதமான கருத்து மாறுபாடும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால், வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டதில், தனிப்பட்ட நபர்களின் விருப்பத்துக்கே இடம் இல்லை. ஒரு தொகுதியில், மக்களுடன் இணைந்து நிற்பவர் யார், யாரை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பனவற்றை வைத்துப் பரிசீலிக்கப்பட்டுதான் பட்டியல் முடிவு செய்யப்பட்டது.''

``தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி அமைந்ததில் உங்களின் பங்களிப்பு அதிகம் இருந்ததுபோல் செய்திகள் வெளியானது. 2ஜி குற்றச்சாட்டு உள்பட பல பிரச்னைகளில் அதிகம் பாதிக்கப்பட்ட இந்தக் கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்திப்பது வெற்றிவாய்ப்பைப் பாதிக்காதா?''

``நான் டெல்லியில் இருப்பதால், தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பு எனக்கு அதிகமாகக் கிடைத்தது, அவ்வளவுதான். ஆனால், அது எனக்காக உருவான கூட்டணி அல்ல. தலைவர் கலைஞரால், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி. 2ஜி விவகாரத்தைப் பொறுத்தவரை, அந்த வழக்கை தி.மு.க நேர்மையாக எதிர்கொள்கிறது. இன்று முதலமைச்சராக இருக்கக்கூடியவர் அவருடைய வழக்கை எப்படி நடத்தினார், இப்போது வரை எப்படி இழுத்தடிக்கிறார் என்பது நாடு அறிந்த உண்மை.

கலைஞர் தொலைக்காட்சிக்குப் பணம் வந்த விவகாரத்தில் என் மீது தொடரப்பட்டுள்ள வழக்கைச் சந்திக்காமல் நான் ஓடவில்லை. வழக்கைக் காலதாமதப்படுத்தி இழுத்தடிக்கும் வேலையில் இறங்கவும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், அந்த வழக்கு வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதற்கான ஒத்துழைப்புகள் அனைத்தையும் கொடுக்கிறேன். கலைஞர் தொலைக்காட்சியைத் தொடங்கி அது ஒளிபரப்பைத் தொடங்குவதற்குள், நான் அந்த நிறுவனத்தின் பொறுப்புகளில் இருந்து விலகிவிட்டேன். அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சிக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அது நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. விரைவில் நியாயம் கிடைக்கும். அதனால் அந்த விவகாரங்கள் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியின் வெற்றியை எந்த வகையிலும் பாதிக்காது.''

   “ஜெயலலிதாவின் பிரசாரச் செலவுகளை யார் செய்கிறார்கள்?”

``மு.க.அழகிரி, தி.மு.க தலைவர் கருணாநிதியை அண்மையில் சந்தித்துள்ளார். அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவாரா... அவரைக் கட்சியில் இணைத்துக் கொண்டால் உங்களுக்கு மகிழ்ச்சியா?''

`` `ஒரு மகனாக என் தந்தையைச் சந்தித்தேன்’ என்று அவரே அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவரைக் கட்சியில் சேர்ப்பது பற்றி தலைமைக் கழகம்தான் முடிவுசெய்யும். கட்சியின் முடிவுகளில் எனது தனிப்பட்ட கருத்தைச் சொல்ல முடியாது. தலைமைக் கழகம் எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான்.''

``ஜெயலலிதாவின் பிரசாரங்களுக்கு மக்கள் ஆதரவு எப்படி இருக்கிறது?''

``எல்லா ஊர் மக்களும், ஜெயலலிதா தங்களுடைய ஊருக்குப் பிரசாரத்துக்கு வந்துவிடுவாரோ என அஞ்சுகின்றனர். `103 டிகிரி, 104 டிகிரி கொளுத்தும் வெயிலில், பொதுமக்கள் வெளியில் போக வேண்டாம்' என மாவட்ட கலெக்டர்களே அறிக்கை விட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், பொதுமக்களை பல மணி நேரம் வெயிலில் நிறுத்திவைத்துத் துன்புறுத்துகிறார் ஜெயலலிதா. வெயில் தாங்காமல் சிலர் மரணம் அடைந்துள்ளனர். அங்கு பந்தோபஸ்து பணியில் இருக்கும் போலீஸ்காரர்களையே மருத்துவமனையில் சிகிச்சைக்குக் கொண்டுபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ‘ஒரு தாய்க்குத்தான் பிள்ளைகளுக்கு என்ன செய்யவேண்டும் என்பது தெரியும்’ என்று ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார். ஒரு தாய் செய்யக்கூடிய காரியமா இது? இப்படித்தான் தன் பிள்ளைகளை தாய் துன்பப்படுத்துவாரா?

மேலும், இந்தத் தேர்தல், ஒரு மாநிலத்தைத் திறமையாக நிர்வாகம்செய்யக்கூடிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல். அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் முதலமைச்சர், தாய் உள்ளத்தோடு, கருணை உள்ளத்தோடு இருக்கலாம். ஆனால், அவரது கட்சிக்காரர்கள் அவரை `அம்மா' என்று அழைப்பதாலேயே அவருக்குத் தாய் உள்ளம், கருணை உள்ளம் எல்லாம் தானாக வந்துவிடாது.

விஷன்-2023 எனச் சொல்லி `15 லட்சம் கோடிகளுக்குக் கட்டுமானங்களை உருவாக்குவோம்’ என்றார்கள். ஒரு ரூபாய்க்குக் கூட கட்டுமானம் உருவாக்கப்படவில்லை.

பல கோடி ரூபாய் செலவில் போஸ்டர் ஒட்டி உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினார்கள்.

`30 நாட்களில் தொழில் முதலீடுகளைக் கொண்டுவருவோம்' என்றார்கள். ஒரு ரூபாய்கூட கொண்டுவரப்படவில்லை. ஜெயலலிதா, சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்த திட்டங்களில் ஒன்றுகூட இதுவரை நிறைவேற்றப் படவில்லை.

   “ஜெயலலிதாவின் பிரசாரச் செலவுகளை யார் செய்கிறார்கள்?”

ஐந்து ஆண்டுகளாக மக்களைச் சந்திக்காத ஒரு முதலமைச்சர், தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களைச் சந்திக்கும் முதலமைச்சர், அந்த நேரத்திலும் மக்களைக் கஷ்டப்படுத்துகிற
ஒரு முதலமைச்சர், ஜெயலலிதா. இவருடைய பிரசாரச் செலவுகளை யார் செய்கிறார்கள்...அரசாங்கமா, கட்சியா? அந்தக் கணக்கு எதில் சேர்க்கப்படுகிறது? இவை பற்றிய எந்தத் தெளிவான விவரங்களும் இல்லை.''

``எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்தின் செயல்பாடுகள் எப்படி இருந்தன?''

``எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியவரவில்லை. அப்படிக் குறிப்பிட்டுச் சொல்லும்படி அவர் ஏதாவது செயல்பட்டாரா?''

``தி.மு.க பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தேர்தலில் போட்டியிடவில்லை. மூத்த தலைவர்கள் பலரும் போட்டியிடவில்லை. தி.மு.க தலைவர் கருணாநிதி மட்டும் இன்னும் பிடிவாதமாக முதலமைச்சர் நாற்காலிக்கு வர நினைப்பது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி யுள்ளதே? இளையவர்கள் யாரும் கட்சியில் இல்லையா?''

``தி.மு.க தொண்டர்கள் அனைவரும், தலைவர் கலைஞர் அவர்கள் மறுபடியும் முதலமைச்சராக வரவேண்டும் என விரும்புகிறார்கள். மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். மேலும், அவருக்கு `ஓய்வு' என்பது எல்லாம் தெரியாத வார்த்தை. இன்னும் மக்களுக்காகத் தெளிவாகச் சிந்திக்கக்கூடிய ஒரு தலைவர், மக்களுக்கு நன்மை செய்யும் முடிவுகளைத் தெளிவாக எடுக்கக்கூடிய ஒரு தலைவர், ஜெயலலிதாவைப் போல் அல்லாமல் மக்களை நோக்கிச் செல்கிற ஒரு தலைவராக, இந்த 94 வயது தலைவர்தான் செயல்படுகிறார். 74 ஆண்டுகளாக மக்களுக்காக உழைக்கும் அனுபவம்வாய்ந்த தலைவரிடம் இருந்து, இத்தனை அனுபவங்களோடு வரக்கூடிய ஆற்றலை மக்கள் ஏன் இழக்க வேண்டும்?''

``தலைவர்களின் வாரிசுகளாக இருப்பதே மிகப் பெரிய தகுதியா? தி.மு.க-வில் தொடர்ந்து, தற்போது வெளியான வேட்பாளர் பட்டியல் உள்பட வாரிசுகளின் ஆதிக்கமாக இருக்கிறதே?''

``வாரிசுகளுக்கு மட்டுமே தி.மு.க-வில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கோ.சி.மணி, ஆற்காடு வீராசாமியின் வாரிசுகளுக்கு எந்த வாய்ப்பும் இதுவரை கொடுக்கப்படவில்லை. அதேநேரம், தந்தையோ - தாயோ அரசியலில் முக்கியப் பொறுப்பில் இருப்பதால், அவர்களின் வாரிசுகள் சிறப்பாகப் பணியாற்றினாலும், அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட வேண்டும் என்பதும் நியாயம் அல்ல. தி.மு.க-வில் மட்டும் இந்த நிலை என்பதும் தவறான குற்றச்சாட்டு. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வில் பல வாரிசுகள் தலைமைப் பொறுப்புகளில் இருக்கின்றனர். இன்றைய மத்திய அமைச்சரவையில் இருக்கக்கூடிய பல அமைச்சர்கள் வாரிசுகள்தான். ஜெயலலிதாவுக்கு நேரடியாக பிள்ளைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவருக்கு நெருக்கமானவர்கள், அவர்களுடைய வாரிசுகள்தான் அந்தக் கட்சியின் முக்கியப் பொறுப்புகளிலும் ஆட்சியிலும் இருக்கிறார்கள். ராமதாஸ் அவர்கள், `நாங்கள் தேர்தலில் போட்டியிட மாட்டோம். எனது குடும்பத்தில் இருந்து யாரும் கட்சியில் பொறுப்புக்கு வர மாட்டார்கள்’ என்றார். இன்றைக்கு அன்புமணி அந்தக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர். எனவே, தி.மு.க-வை மட்டும் குறிவைத்து இந்தக் குற்றச்சாட்டைக் கூறுவது உள்நோக்கம் கொண்டது.''

``தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் இல்லை. இலவசத் திட்டங்கள் வழங்கியது தவறு என தி.மு.க கருதுகிறதா? மேலும், இந்தத் தேர்தல் அறிக்கை பா.ம.க-வின் அறிக்கையைப் பார்த்துக் காப்பியடிக்கப்பட்டது என ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளாரே?''

``தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை, மக்கள் எழுதிய அறிக்கை. நாங்கள் தொகுப்பாளர்கள் மட்டும்தான். பல ஊர்களுக்குப் போய், பல தரப்பினரைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டு, தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை இது. இதற்கு நாங்களே உரிமை கொண்டாட முடியாதபோது, ராமதாஸ் அவர்கள் எப்படி உரிமை கொண்டாட முடியும்?

எங்கள் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் என்பதே இடம்பெறவில்லை. அதை நான் இந்தத் தேர்தல் அறிக்கையின் சிறப்பாகக் கருதுகிறேன். ஆனால், அதற்காக கடந்த காலங்களில் கொடுத்த இலவசங்களைத் தவறு என்று சொல்ல மாட்டேன். வளர்ந்துகொண்டிருக்கும் நாடுகளில் எல்லா மக்களுக்கும் சில அடிப்படைத் தேவைகள் இருக்கின்றன. அரசாங்கம் இலவசமாக அந்தத் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் எந்தத் தவறும் இல்லை. இந்தத் தேர்தல் அறிக்கையில் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து மற்றும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்ஷூரன்ஸ் ஆகிய இரண்டையும் முக்கியமானதாக நான் பார்க்கிறேன்.''