Published:Updated:

வேணுமா எங்க ஓட்டு - மக்கள் கட்டளை

வேணுமா எங்க ஓட்டு - மக்கள் கட்டளை
News
வேணுமா எங்க ஓட்டு - மக்கள் கட்டளை

#whowantmyvoteவிகடன் டீம்

வேணுமா எங்க ஓட்டு - மக்கள் கட்டளை

தையுமே கேட்காமல் துட்டை வாங்கிக்கொண்டு ஓட்டு போட்ட காலம் அல்ல இது; அரசியலின் ஒவ்வொரு இன்ச்சையும் உன்னிப்பாகக் கவனிக்கிற வாட்ஸ்அப் காலம். `எங்கள் ஓட்டுகள் விற்பனைக்கு அல்ல' என சமூக வலைதளங்களில் கேட்கின்றன லட்சம் குரல்கள். `ஓட்டுக்கு நோட்டுதான் வேண்டாம்; வேறு என்ன வேண்டும்?' - கேட்டுப் பெற்றோம் கோரிக்கைகளை. கல்வி, விவசாயம், நிர்வாகம் என துறைவாரியாக இன்றைய இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கம். அந்த மக்கள் கட்டளைகளில் இருந்து...

•   அரசுப் பள்ளிகள், ‘அருகாமைப் பள்ளிகள்’ என்ற கொள்கையின்படி மாற்றி அமைக்கப்பட வேண்டும். புதிதாகத் தனியார் பள்ளிகள் அமைக்க அனுமதி கேட்கும்போது, அந்தப் பகுதியில் ஏற்கெனவே அரசுப் பள்ளி இருக்கும்பட்சத்தில், அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட வேண்டும். மேல்நிலை வகுப்புகள் வரை அருகாமைப் பள்ளி முறை செயல்படுத்தப்பட்டால், இலவச பஸ்பாஸ், இலவச சைக்கிள் போன்ற திட்டங்களுக்கான அவசியமே இருக்காது. கல்வியின் தரமும் உயரும். 

•   மாணவர்களின் புத்தகப் பை சுமையைக் குறைக்கும் விதமாக பாடப் புத்தகங்கள் மின்புத்தகங்களாக வழங்கப்பட வேண்டும். மாணவர்கள் பள்ளிக்காலம் முழுவதற்கும் பயன்படுத்தும்விதமாக, இ-ரீடர்களையோ அல்லது டேப்களையோ வழங்கிவிட்டு, பருவம்தோறும் அந்தப் பருவத்துக்கு உரிய புத்தகங்களை மட்டும் அவற்றில் வழங்கினால் போதும். பாடப் புத்தகங்களை அச்சிடும் செலவு இதன் மூலம் வெகுவாகக் குறைந்துவிடும்.

வேணுமா எங்க ஓட்டு - மக்கள் கட்டளை

•   ஒரே ஆசிரியரே தொடக்கப் பள்ளிகளில் அனைத்துப் பாடங்களையும் நடத்தும் முறையைக் கைவிட்டு, ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். தொடக்கப் பள்ளியில் இருந்தே கணினி, அறிவியல் பாடமாக இணைக்கப்பட வேண்டும்.

•   இப்போதைய மதிப்பெண் முறை கல்வியை மாற்றி, பாடம் சாராத திறமைகளான ஓவியம், இசை, நடனம் எனப் பலவிதக் கலைகளையும் ஆராய்ந்து, அதற்கும் மதிப்பெண் வழங்கும்படி பாடத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

•   ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ் போல கல்வித் துறைக்கு ஐ.இ.எஸ் (INDIAN EDUCATIONAL SERVICE) அமைக்கப்பட வேண்டும் என கோத்தாரிக் கல்விக் குழு (1964) பரிந்துரைத்ததை அமல்படுத்த வேண்டும்.

•   மத்திய பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் போன்ற கல்வி நிறுவனங்களில் சேர்வது இப்போதும் தமிழக மாணவர்களுக்குப் பெரும்கனவு. இதற்கான பயிற்சி மையங்களை அரசே மாவட்டம்தோறும் இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ ஏற்படுத்த வேண்டும்.

வேணுமா எங்க ஓட்டு - மக்கள் கட்டளை

•   ஒடுக்கப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கான ஒரே புகலிடமாக அரசு கல்லூரிகள் மட்டுமே இருக்கின்றன. இதனால் கலைக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் புதிதாகத் தொடங்கப்பட வேண்டும். ஏற்கெனவே உள்ள அரசு கலைக் கல்லூரிகள் தரம் உயர்த்தப்பட வேண்டும்.

•   கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும். அதற்காக அதிக நிதி ஒதுக்க வேண்டும்.

•   தமிழகத்தில் நூற்றுக்கணக்கான தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அதில் பாதிக்கும் மேலான கல்லூரிகள், போதுமான உள்கட்டமைப்பு வசதி இல்லாமல் மோசமான நிலையில் உள்ளன. அவற்றுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை எந்தப் பாரபட்சமும் இல்லாமல் ரத்துசெய்ய வேண்டும். 

• அரசுப் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் கற்பிக்கும் திறமையை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு அவ்வப்போது சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். கற்பிக்கும் முறை, அவர்களின் மேம்பாடு, மாணவர்களிடம் பழகும் முறை... இவற்றைக் கவனத்தில்கொண்டு, அவர்களுக்கான பதவி உயர்வில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

• தனியார் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் தேர்வில் கறாரான புதிய வரையறைகள் உருவாக்கப்பட வேண்டும். 

•   பெயரளவுக்கான உதவி மையங்களாக இல்லாமல் உண்மையிலேயே உதவிசெய்யக்கூடிய வரவேற்பறைகளை,  எல்லா அரசு அலுவலகங்களிலும் உருவாக்க வேண்டும். கொடுக்கப்பட்ட மனுவின் தற்போதைய நிலை, அதன் முன்னேற்றம்... தேக்கமாக இருந்தால் அதற்கு உரிய விளக்கம் என, அந்த மனு பற்றிய அத்தனை தகவல்களையும் எவ்வித அலைக்கழிப்பும் இல்லாமல் உடனுக்குடன் மனுதாரருக்குத் தெரிவிக்க வேண்டும்.

•   சிறு நகரங்களில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் அதிகாலை நேரங்களில் பெரும்பாலும் செவிலியர்கள் இருப்பார்களே தவிர, மருத்துவர்களைக் காண முடியாது. இது மருத்துவமனைக்கு மட்டும் அல்ல, எல்லா அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும். அங்கும் இதைத் தடுக்க தனியார் அலுவலகங்களில் உள்ளதுபோல, எலெக்ட்ரானிக் வருகைப் பதிவேடு முறையை அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
 

•   தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஏதாவது தகவல்கள் கோரும்போது, சம்பந்தப்பட்ட துறைத் தகவல் தரவில்லை என மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யும்போது, அங்கே மனுதாரர் குற்றவாளிபோல் நடத்தப்படுகிறார். அரசுக்கு வேண்டப்பட்டவர்கள் தகவல் ஆணையர்களாக இருப்பதே இதற்குக் காரணம். நேர்மையானவர்கள், அரசு நடைமுறை அறிந்தவர்கள், மக்களின் தேவையைப் புரிந்தவர்கள் ஆணையர்களாக நியமிக்கப்பட வேண்டும்.

•   `அரசு அலுவலகங்கள் இன்டர்நெட்டால் இணைக்கப்பட்டுள்ளன. கிராம நிர்வாக அலுவலர்களுக்குக்கூட பிரின்ட்டிங் மெஷினுடன் கூடிய லேப்டாப் கொடுத்துள்ளோம்’ என்று சொல்வார்கள். ஆனால், நடைமுறையில் இந்த நவீனம் இருப்பது இல்லை. இதைக் களைந்து, `இ-கவர்னன்ஸ்' முறையை தமிழ்நாடு முழுக்க செயல்படுத்த வேண்டும்.

•   சாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள், வட்டாட்சியர் அலுவலகங்களில் தரப்பட்டன. பின்னர் மாணவர்கள் பயன்பெற வசதியாக அந்தந்தக் கல்வி நிலையங்களிலேயே பெறலாம் என்றார்கள். பிறகு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் பெறலாம் என்றார்கள். இப்போது புதிதாக அமைத்துள்ள அரசு தகவல் மையங்களில் பெறலாம் என்கிறார்கள். இதை மாற்றி இந்த விஷயங்களை எளிதில் ஒரே இடத்திலோ ஆன்லைனிலோ பெறும் வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.

•   பல்வேறு துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள்போல தீண்டாமையும் பரிணாம வளர்ச்சி அடைந்துகொண்டே இருக்கிறது. தலித்துகளின் நலனுக்காக அரசமைப்புச் சட்டம் தனித் தொகுதிகளை உருவாக்கினால், சாதி ஆதிக்கத்தைக் காட்டுவதற்காகவே ஒவ்வொரு சாதிக்கும் அந்தப் பகுதி சாதிகளின் பெரும்பான்மையைக் காட்ட, அனைத்துத் தொகுதிகளையும் தனித் தொகுதிகளாக  நம் அரசியல் கட்சிகள் உருவாக்கிவைத்து இருக்கின்றன. எந்தெந்த வழிகளில் முடியுமோ அத்தனை வழிகளிலும் சாதியைக் காப்பாற்றிக்கொண்டே இருக்கிறோம். பெரும்பான்மை மக்களின் மனதில் இருந்து சாதி ஒழியும் வரை, தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவிகித இடஒதுக்கீட்டு முறை பாதுகாக்கப்பட வேண்டும். தனியார் துறையில் இடஒதுக்கீட்டை விரிவுபடுத்துவதற்கான சட்டத் திருத்தம் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

•   `வலது கையில் மஞ்சள் கயிறு கட்டி இருக்கும் மாணவர்கள் இந்தச் சாதி, பச்சைக் கயிறு கட்டி இருந்தால் அந்தச் சாதி' என்று நவீன சாதி வகைப்பட்டியல் பள்ளிகளிலேயே உருவாகிவிடுகிறது. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். கல்வி வளாகங்களில் சாதி வேறுபாட்டை வளர்க்கும் அமைப்புகள் நுழையத் தடை விதிக்க வேண்டும்.

வேணுமா எங்க ஓட்டு - மக்கள் கட்டளை

•   கன்னியாகுமரிகூட சென்னைக்கு மிக அருகில் வந்துவிட்டது. ரியல் எஸ்டேட்கள் வீட்டுமனைகள் என்று விவசாய நிலங்களை தரிசு நிலங்களாக மாற்றிவைத்துள்ளனர். தமிழகத்தின் சாகுபடி பரப்பளவு மேலும் குறையாமல் பாதுகாத்திட, விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாகவும், விவசாயம் அல்லாத பணிகளுக்கு மாற்றப்படுவதையும் தடுத்திட தேவையான சட்டம் கொண்டுவரப்பட்டு முறையாக நடைமுறைப்படுத்தவேண்டும்.

•   பெரும்பாலான அரசு பொது மருத்துவமனைகளில் முழுமையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மாவட்ட அரசு பொது மருத்துவமனை வரை மருத்துவக் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படுவதுடன், முழு உடல் பரிசோதனைக்கான பன்னோக்கு நோய் காண் மையங்கள் அமைக்கப்பட வேண்டும். அனைவருக்கும் இலவச சுகாதார வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும்.

•   ஒவ்வோர் ஊராட்சியிலும் சிறு கிராமம், பெரு கிராமம், நடுத்தரம் என்ற பாகுபாடு இன்றி கிராமம் தவறாமல் ஊருக்கு ஒதுக்குப்புறமாகவோ ஊர் தொடங்கும் இடத்திலோ பொதுக் கழிப்பிடம் இருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், பெரும்பாலும் அவை பயன்பாட்டில் இருப்பது இல்லை. காரணம், அவை சுகாதாரம் இல்லாமல் இருப்பது, பொதுக்கழிப்பிடங்களுக்கு செல்ல மக்கள் கூச்சப்படுவது... எனப் பல காரணங்கள். இவற்றைக் களைய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், பொதுக் கழிப்பிடங்களைவிட, ஒவ்வொரு வீட்டிலும் கழிவறைகள் இருப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பதுதான் முக்கியம். 
 

•   கிராமங்களில் இப்படி கழிப்பிடங்கள் பயனற்றுக் கிடக்கின்றன என்றால், சென்னை போன்ற பெருநகரங்களிலோ இலவச பொதுக் கழிப்பிடங்களே இல்லை என்பதுதான் வேதனைக்குரிய முரண். அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக இருக்கும் கழிப்பிடங்கள்கூட அந்தப் பகுதி லோக்கல் கவுன்சிலரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்கிறார்கள். பல கழிப்பிடங்களை வீடு இல்லாதோர் தங்கும் இடமாகப் பயன்படுத்திவருகின்றனர். அதனால்  போதுமான அளவுக்கு இலவசக் கழிவறைகளை ஏற்படுத்தி, அவற்றை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும்.

•   அரசுப் பேருந்துகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என்று மக்கள் அதிகம் கூடும் இடங்களில், படிக்கட்டுகளில் ஏறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் படும் சிரமத்தை நாம் ஒவ்வொருவரும் அறிவோம். அவர்களுக்கு உரிய வசதிகளை முறையாக, வளர்ந்த நாடுகளில் உள்ளதைப்போல நவீனமாகச் செய்துதர வேண்டும். முதற்படியாக  அரசு அலுவலகங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற முக்கிய இடங்களில், மக்கள் சந்திப்பு அதிகமுள்ள இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சறுக்குப் பாதை அமைத்துத் தர வேண்டும். மாற்றுத்திறனாளிகள் சுகாதாரமாகவும் சுலபமாகவும் பயன்படுத்த உதவும் கழிவறைகளை அமைத்துத் தர வேண்டும்.

வேணுமா எங்க ஓட்டு - மக்கள் கட்டளை

•   மாற்றுத்திறனாளிப் பெண்கள், மாதவிடாய் சமயங்களில் சாதாரண சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்த முடியாது. அவர்களுக்கு எனப் பிரத்யேகமாக வடிவமைக்கவேண்டியிருக்கும். பெண் மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளாடை மற்றும் சானிட்டரி நாப்கின்களை, அரசு தயாரித்து வழங்க வேண்டும்.

•   உயர்கல்வியைப் பொறுத்தவரை சில துறைகளில் மட்டுமே மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலை மாற்றம் பெற அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு எனத் தனியான கல்வித் திட்டம் வகுக்கப்பட வேண்டும். உதாரணமாக கணினி அறிவியல் பாடப்பிரிவில் மாற்றுத்திறனாளிகள் சேர்த்துக்கொள்ளப்படுவது இல்லை. மாற்றுத்திறனாளிகளால் கணினி தொடர்பான எல்லா வேலைகளையும் செய்ய முடியும். நிரல்மொழி எனப்படும் புரோகிராமிங்கும் செய்ய முடியும். இத்தகைய மென்பொருட்களைப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் இவற்றில் பயிற்சியையும் அளிக்கும்விதமாக கல்வித் திட்டத்தை மாற்றி அமைக்கவேண்டும்.

உங்களிடமும் இதேபோல கோரிக்கைகள் இருக்கின்றனவா? தயங்காமல் விகடனோடு இணைந்து குரல்கொடுங்கள். உங்கள் கோரிக்கைகளை, கீழ்க்காணும் இணையதள இணைப்புகளில் சென்று பதிவுசெய்யலாம்...   https://www.vikatan.com/want-my-votehttps://www.facebook.com/wantmyvote/