Published:Updated:

வேணுமா எங்க ஓட்டு - மக்கள் கட்டளை

வேணுமா எங்க ஓட்டு - மக்கள் கட்டளை
வேணுமா எங்க ஓட்டு - மக்கள் கட்டளை

#whowantmyvoteவிகடன் டீம்

வேணுமா எங்க ஓட்டு - மக்கள் கட்டளை

க்களின் வாக்குகளைப் பெறுவதற்கு, அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுகின்றன. ஆனால், மக்கள் உண்மையிலேயே என்ன நினைக்கிறார்கள்? அந்த `வாக்காளர் தேர்தல் அறிக்கை'யில் உள்ள அம்சங்கள் என்னென்ன? `வேணுமா எங்க ஓட்டு?' என்ற தலைப்பில் மக்கள் கொடுத்த பரிந்துரைகளின் தொகுப்பு கடந்த இதழில் வெளியானது. அதன் தொடர்ச்சி இந்த இதழிலும் தொடர்கிறது. 

• ஒவ்வோர் ஊரிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி மாணவ-மாணவிகள் சென்றுவருவதற்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். இந்தப் பேருந்துகளில் மாணவர்கள் மட்டுமே பயணிக்கலாம்.

• அரசு, பிளாஸ்டிக் மறுசுழற்சி மையங்களைத் தொடங்க வேண்டும். பிளாஸ்டிக் குப்பைகளைப் பெற்று, அதை மறுசுழற்சி செய்து, தீங்கு விளைவிக்காத வேறு பயன்பாட்டுக்குத் திருப்பிவிட வேண்டும்.

• பருவநிலைக்கு ஏற்றாற்போல் என்ன மாதிரியான விவசாயம் செய்யலாம் என்பது குறித்து, அறிவியல்பூர்வமாகப் பயிற்சிகள் அளிக்க  வேண்டும்.  உதாரணத்துக்கு, இஸ்ரேலில் பின்பற்றப்படுவதுபோல் நாற்றுகள் வளர ஏரோபோனிக்ஸ், ஹைட்ரோபோனிக்ஸ் தொழில்நுட்பங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.

• அரசு அலுவலர்களுக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை அவர்கள் எந்த அளவுக்கு, அவர்களது பணியைச் சிறப்பாகச் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே நிர்ணயிக்கப்பட வேண்டும். உதாரணத்துக்கு, காவல் துறையில் பணியாற்றுபவர்களுக்கு எவ்வளவு குற்றங்களை விரைவாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள் மற்றும் எந்த அளவுக்குக் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து, அவர்களுக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வு தர வேண்டும்.

• பொதுப்பணித் துறை ஒப்பந்தங்களை, தனியாருக்கு வழங்கும் முறையை அடியோடு ரத்துசெய்ய வேண்டும். அனைத்துப் பணிகளையும் அரசே எடுத்து நடத்த வேண்டும். இதன்மூலம் ஏராளமான பொறியாளர்கள், தொழிலாளர் களுக்கு அரசு வேலை கிடைக்கும். சாலைகளும் கட்டடங்களும் தரமாகக் கட்டப்படும். பெரும் ஊழல் தடுக்கப்படும்.

வேணுமா எங்க ஓட்டு - மக்கள் கட்டளை

• அரசு நிலங்கள் அனைத்தும் மறுசீரமைக்கப்பட வேண்டும். அவை தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால், தயவுதாட்சண்யம் இல்லாமல் பறிமுதல் செய்யப்பட்டு மீட்கப்பட வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

• ஆசிரியர்கள் உள்பட அனைத்து அரசு ஊழியர்களும், தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். மேலும், `அரசுப் பள்ளியில் படித்தால் அரசு வேலையில் முன்னுரிமை' என அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

•   தமிழ்நாடு முழுக்க இருக்கும் அனைத்துத் தெருவிளக்குகளையும் சோலார் விளக்குகளாக மாற்ற வேண்டும். இதன்மூலம் பல ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும்.

•   தமிழில் உள்ள சிறந்த நூல்களை, ஒரே இடத்தில் கிடைக்கும்படி மின்னாக்கம் செய்ய வேண்டும். சிங்கப்பூரில் 50 ஆண்டுகாலத் தமிழ் இலக்கியங்களை மின்னாக்கம் செய்து, ஒரே இடத்தில் கிடைக்குமாறு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வேணுமா எங்க ஓட்டு - மக்கள் கட்டளை
வேணுமா எங்க ஓட்டு - மக்கள் கட்டளை

•   பழைய, பழுதடைந்த பேருந்துகளைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். உரிய எண்ணிக்கையில் புதிய பேருந்துகள் வாங்கப்பட வேண்டும்.

•   தொடர்ந்து நாள்கணக்கில் வேலை வாங்கப்படும் தமிழக அரசுப் போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஒரு வரைமுறையே இல்லாமல் ஓட்டுநர்களை, பல மணி நேரங்கள் தொடர்ச்சியாக வேலைவாங்குவதே பெரும்பாலான விபத்து களுக்குக் காரணம்.

•   இயற்கையைச் சீரழிக்காமல் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்லும், பாரம்பர்ய ரகங்களை உற்பத்திசெய்யும் விவசாயி களுக்கு உரிய மானியம் வழங்க வேண்டும். இயற்கை விவசாயம் செய்ய வங்கிக்கடன் வழங்க வேண்டும்.

•   கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டுவருவதைப் போல கம்பு, வரகு, சாமை போன்ற சிறுதானியங்களை அரசே கொள்முதல்செய்து நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். இயற்கை விவசாய விளைபொருட்களுக்கான சந்தையை, மாவட்டம்தோறும் அரசாங்கமே உருவாக்க வேண்டும்.

•   ஏரி, குளங்களில் வண்டல்மண் அள்ளும் உரிமை அந்தந்தப் பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும். இந்த வண்டல் மண்ணை வேளாண்மைக்குப் பயன்படுத்துவதால் மண்ணின் வளம் அதிகரிக்கும். ஏரி, குளம் போன்றவையும் தூர் வாரப்படும்.

• விதிமீறல் கட்டடங்களை அப்புறப்படுத்த வேண்டும். வனம் என்பது, விலங்குகளின் உலகம். அதன் வாழ்வியல் சங்கிலித்தொடர்பு அறுந்து போகக் கூடாது.

• வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், இயற்கை விவசாயத்துக்கு எனத் தனி பட்டப்படிப்பு ஏற்படுத்த வேண்டும். இயற்கை விவசாயம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும்.

• காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் உள்ள நச்சுக்களைச் சோதனைசெய்யும் ஆய்வகங்களை மாவட்டம்தோறும் நிறுவ வேண்டும்.

•   மாவட்டம்தோறும் அரசாங்கமே நாற்றுப் பண்ணைகளை அமைத்து, மானிய விலையில்  நாற்றுகளை, செடிகளை வழங்க வேண்டும்!

டந்த வார விகடனில் வெளியான `வேணுமா எங்க ஓட்டு?' என்ற கட்டுரை, #whowantmyvote என்ற ஹேஷ்டேக்கில் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. இதே ஹேஷ்டேக்கில் ஏராளமானோர் ட்விட் செய்யத் தொடங்கினார்கள். தேர்தலில் தங்கள் எதிர்பார்ப்பு என்ன என்பதை இளைஞர்கள் கொட்டித் தீர்த்தக் கருத்துகளில் இருந்து சில இங்கே...

வேணுமா எங்க ஓட்டு - மக்கள் கட்டளை

twitter.com/anithatalks
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அவர்களுடைய சொத்துக்கணக்கின் விவரங்களை வெளியிட வேண்டும்.

twitter.com/lords_sun
கல்விக்கூடங்களையும் கல்வி முறையையும் பணமுதலைகளையும் முதலில் சரிசெய்ய வேண்டும்.

twitter.com/Disisvki
கட்டணக் கழிவறைகளைக்கூட வைத்துவிட்டுப்போங்கள். ஆனால், அதை எல்லா ஊர்களிலும் சீரான இடைவெளியில் வைத்து முறையாகப் பராமரியுங்கள்.

twitter.com/rojatv
தனியார் பள்ளி-கல்லூரிகளை, அரசே ஏற்று நடத்த வேண்டும்.

twitter.com/Prazannaam
கைக்குழந்தைகளுடன் பிச்சை எடுப்போருக்கு, குழந்தைகள் எங்கு இருந்து கிடைக்கின்றன என்பதன் பின்னணியை ஆராய்ந்து ஒழிக்க வேண்டும்.

twitter.com/anithatalks
வளரிளம் பெண்கள் சந்தர்ப்பவசத்தால் சீரழிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும்.

twitter.com/gokila_honey
தமிழ்நாட்டை, உடனே சிங்கப்பூராக மாற்ற வேண்டாம். இலவசங்கள் கொடுத்து மக்களை குட்டிச்சுவர் ஆக்காமல் இருந்தாலே போதும்.

twitter.com/vivekhere
இன்ஜினீயரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, தரம் உயர்த்தப்பட வேண்டும்.

twitter.com/Disisvki
முறைகேடாகச் சேர்த்த சொத்துக் களை முழுவதும் அரசே கையகப்படுத்தி, அரசுத் திட்டங்களுக்கும் முதலீடுகளுக்கும் பயன்படுத்த வேண்டும்.

twitter.com/PencilThirudan
குறைந்தக் கட்டணத்தில் வீட்டுக்கு வீடு வைஃபை திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.

twitter.com/liferasigan
சரியாகச் செயல்படாத அரசாக இருந்தால், அந்த அரசைக் கலைக்கும் அதிகாரத்தை மக்களுக்கு வழங்கும் அரசு வேண்டும்.

twitter.com/PencilThirudan
இனி, விவசாயிதான் விலையைத் தீர்மானிக்கணும்.

twitter.com/antony_tweetz
இலவசத் திட்டங்களை விட்டுவிட்டு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புப் பயிற்சி திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட வேண்டும்

twitter.com/rojatv
காலி இடங்களில் அரசே ஒப்பந்த அடிப் படையில் விவசாயம் செய்ய சட்டம் வேண்டும்.

உங்களிடமும் இதேபோல கோரிக்கைகள் இருக்கின்றனவா? தயங்காமல் விகடனோடு இணைந்து குரல்கொடுங்கள். உங்கள் கோரிக்கைகளை, கீழ்க்காணும் இணையதள இணைப்புகளில் சென்று பதிவுசெய்யலாம்...  

https://www.vikatan.com/want-my-vote   https://www.facebook.com/wantmyvote/

அடுத்த கட்டுரைக்கு