Published:Updated:

“சோறுக்கும் பீருக்கும் விலைபோய்விடாதீர்கள்!”

“சோறுக்கும் பீருக்கும் விலைபோய்விடாதீர்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“சோறுக்கும் பீருக்கும் விலைபோய்விடாதீர்கள்!”

ச.ஜெ.ரவி, படங்கள்: தி.விஜய், ரமேஷ் கந்தசாமி

“சோறுக்கும் பீருக்கும் விலைபோய்விடாதீர்கள்!”

ந்தத் தேர்தலின் அதிரடிப் பேச்சாளர், நிச்சயமாக பிரேமலதாதான். தத்துவ விசாரணைகள், உலக உதாரணங்கள், விஞ்ஞான விளக்கங்கள் என எதுவுமே இல்லை. ஆனால், போட்டுத் தாக்கு தாக்கெனத் தாக்குகிறார்!

“சோறுக்கும் பீருக்கும் விலைபோய்விடாதீர்கள்!”

சென்ற வார இறுதியில் கொங்கு வட்டாரத்தில் பிரசாரத்தில் பின்னியெடுத்தவரைப் பின்தொடர்ந்தோம்...

•   ஏப்ரல் 28-ம் தேதி, திருப்பூர். காலையில் முதல் வேலையாக தமிழ், ஆங்கில நாளிதழ்களைப் புரட்டுகிறார். பத்திரிகைகளில் இருந்து பாயின்ட்களை குறித்துக்கொள்கிறார்.

•   அன்றைய தினம் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கும் திருப்பூர், கோவை மாவட்ட நிர்வாகிகளிடம் உள்ளூர் பிரச்னைகள் தொடங்கி பல விஷயங்களைத் தெரிந்து கொள்கிறார். `உள்ளூர் அமைச்சர் யாரு?’, `அவர் மேல ஏதாவது புகார் இருக்கா?’, `இந்தத் தொகுதியோட சிறப்பு என்ன?’... எனக் கேள்விகள் பறக்கின்றன.

•   நிர்வாகிகள் சந்திப்புக்கு நடுவில் ஒரு பிரேக் எடுத்துக்கொண்டு, விஜயகாந்தின் இன்றைய பயண நிரல் குறித்து விசாரிக்கிறார். உடனே போனில் அது தொடர்பாக விஜயகாந்திடம் பேசுகிறார்.

•   திருப்பூரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது உடுமலைப்பேட்டை.  பிரசார வேனில் பயணிக்கும்போது, கையில் ஐ பேட் வைத்திருக்கிறார். அதில் சமூக வலைதளங்கள் பார்ப்பது, செய்தி சேனல்களைப் பார்ப்பது... எனச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்கிறார்.

•   பிரசார பாயின்ட் வந்ததும், `அண்ணியார் வந்துவிட்டார்' என வேனில் இருந்து அறிவிப்புகள் வெளியாகின்றன. அதற்குப் பிறகுதான் மேற்கூரை வழியாக ஏறி, அனைத்துக் கோணங்களிலும் வணக்கம் வைத்துவிட்டுப் பேசத் தொடங்குகிறார். பேசும்போது கேப்டன் டி.வி மைக்கோடு பேசும் பிரேமலதா, நேரடி ஒளிபரப்பு செய்வதையும் கண்காணிக்கத் தவறுவது இல்லை.

•   பிரேமலதா வருவதற்கு முன்னரும், பேச்சை முடித்துக்கொண்டு கிளம்பும்போதும் தவறாமல், `நீ பொட்டு வெச்சத் தங்கக் குடம்... ஊருக்கு நீ மகுடம்...' பாடல் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

•   முதலில் உடுமலை தொகுதியில் இரு இடங்களில் பேசினார். மேற்கூரை வழியாக பிரேமலதா தோன்றுவதில் தொடங்கி, அவர் பேசத் தொடங்கும் வரை உற்சாக ஆரவாரம் செய்கிறார்கள் தே.மு.தி.க தொண்டர்கள். இதில் கணிசமனாவர்கள் பெண்கள். `அண்ணியாரே...’ எனப் பல திசைகளிலும் இருந்து சத்தம்போட்டு அழைக்கின்றனர். `போன தடவையைவிட இந்தத் தடவை சூப்பரா பேசறாங்கள்ல' எனக் கூட்டத்தில் இருந்த பெண்கள் பேசுவதைக் கேட்க முடிந்தது.

•   பிரேமலதா பேசத் தொடங்கும்போது மக்களை நோக்கிக் கேள்விகளை எழுப்பியபடியே பேசுகிறார். தொண்டர்களும் அதற்குச் சலிக்காமல் பதில் சொல்கிறார்கள். ஓர் இடத்தில் `உங்கள் ஊரில் ரேஷன் பொருட்கள் கரெக்ட்டா கிடைக்குதா?’ எனக் கேட்கிறார்.

சிலர் `கிடைக்கிறது’ எனச் சொல்ல... அதைக் கேட்காததுபோல... மீண்டும் அதே கேள்வியைக் கேட்டு, மக்களிடம் இருந்து `கிடைக்கவில்லை’ எனத் தேவையான பதிலைப் பெற்ற பிறகே பேச்சைத் தொடர்கிறார்.

“சோறுக்கும் பீருக்கும் விலைபோய்விடாதீர்கள்!”

•   `தி.மு.க - அ.தி.மு.க-வினர் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றும், `ஆயிரம் ரூபா கொடுத்தா வாங்காதீங்க. ஒரு லட்சம் கேளுங்க. ஏன்னா, அது உங்க பணம். உங்ககிட்ட கொள்ளையடிச்ச பணம்' என்றும் முந்தையப் பிரசாரக் கூட்டங்களில் பேசிக்கொண்டிருந்தார். ஆனால், அப்படிப் பேசியதற்காக வழக்கு பதிவுசெய்யப்படுவதால், இப்போது வேறு மாதிரி பேசுகிறார். `பணம் கொடுப்பது யாராக இருந்தாலும், எத்தனை ரூபாயாக இருந்தாலும் அவர்களை ஓட ஓட விரட்டியடியுங்கள்’ என்கிறார்.

•   பிரேமலதா தன் பிரசாரத்தில் தவிர்க்காமல் உச்சரிக்கும் சில வாக்கியங்கள். `சோறுக்கும் பீருக்கும் நூறுக்கும் அழைப்பவர்களிடம் விலை போய்விடாதீர்கள்’, ` `வெள்ளையனே வெளியேறு’ என வெள்ளையர்களை அடித்து விரட்டியது பத்தாது. `கொள்ளையர்களே வெளியேறு’ எனச் சொல்லி இந்த இரு திராவிடக் கட்சிகளையும் வெளியேற்றி ஆட்சி மாற்றத்தைத் தர வேண்டும்’, `இது தர்மத்துக்கும் அதர்மத்துக்குமான போர்’, `துளசி வாசம் மாறினாலும் மாறும். இந்த தவசி வாக்கு மாறாது’, `நமது முரசு நாளை தமிழக அரசு’, `ஐந்து முறை கலைஞருக்கு வாய்ப்பு. மூன்று முறை ஜெயலலிதாவுக்கு வாய்ப்பு கொடுத்தீங்க. கேப்டனை நம்பி ஒருமுறை வாய்ப்பு கொடுங்க' என ஹைடெசிபலில் கேட்கிறார்.

•   தன் பேச்சில் சினிமாத் தகவல்களை நிறையவே சேர்த்துக்கொள்கிறார். ` `ரமணா’ படத்தில் செய்ததுபோல ஊழலை ஒழிப்போம்’ என்பதில் தொடங்கி, பல இடங்களில் விஜயகாந்த் நடித்த படங்களை உதாரணங்களாகச் சுட்டிக்காட்டிப் பேசினார். உடுமலை, பொள்ளாச்சியில் பேசும்போது, `கேப்டனின் நிறைய படங்கள் இங்கு எடுக்கப்பட்டவைதான். அவருக்கு இந்த இடம் ரொம்பப் பிடிக்கும்' என்றும், கோவையில் பேசும்போது, `கேப்டன் படத்தில் இடம்பெற்ற வைதேகி நீர்வீழ்ச்சி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சுற்றுலாத்தலமாக்கப்படும்' என்றும் பேசினார். `அம்மிணி... அது ஏற்கெனவே டூரிஸ்ட் ஸ்பாட்டுதானுங்களே?' என உள்ளூர்வாசிகள் அவர் காதுபட கமென்ட் அடித்துக்கொண்டிருந்தனர்.

•   பொள்ளாச்சியில் பிரசாரத்தை முடித்துவிட்டு நெகமத்தில் அடுத்த கூட்டம். ஆனால், அங்கு பேசவேண்டிய நேரம் கடந்துவிட்டது. அதே இடத்தில் அ.தி.மு.க-வினர் பிரசாரத்தைத் தொடங்கியிருந்தனர். இதனால் அ.தி.மு.க-வினருக்கும், தே.மு.தி.க-வினருக்கும் இடையே சிறிதாகப் பிரச்னை ஏற்பட்டது. அப்போது வேனில் இருந்து திரையை விலக்கிப் பார்த்தவர், `நாமதான் லேட். அவங்க பண்ணிக்கட்டும். நாம கிளம்புவோம்' எனச் சொல்லி உடனே அந்த இடத்தில் இருந்து கிளம்பினார்.

•   கோவையை நெருங்கும்போது இரவு மணி 9:20. `இன்னும் இரண்டு இடங்களில் பேச வேண்டும். என்ன செய்யலாம்?’ என விசாரிக்கிறார். குறிப்பிட்ட இரண்டு இடங்களிலும் அளவாகவும் விரைவாகவும் பேசி 10 மணிக்குள் பேச்சை முடித்துக்கொண்டார்.

•   கூட்டம் முடிந்த பிறகு, வேனில் ஏறி ஹோட்டலுக்குச் சென்றார். அங்கே கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து `நெகமத்துல பிரசார நேரம் முடிஞ்சிருச்சு. அங்கே அ.தி.மு.க-காரங்க பிரசாரம் செய்றாங்கனு உங்களுக்குத் தெரியாதா? கவனமா இருக்க வேண்டாமா?’ எனக் கண்டித்தார். அடுத்து டிரைவரை அழைத்து `மணிக்கு 80 கி.மீ ஸ்பீடுக்கு மேல போகக் கூடாதுனு சொல்லியிருக்கேன்ல... ஏன் வண்டிய அப்படி அழுத்துறீங்க?' எனக் கண்டித்தார்.

அண்ணியாரிடம் செம டோஸ் வாங்கினாலும், உடன் இருப்பவர்கள் அவரை அவ்வளவு கவனமாகப் பார்த்துக்கொள்கிறார்கள். பிரேமலதாவின் கவனம் முழுக்க முழுக்க பிரசாரத்தில்தான். நோ சிரிப்பு... நோ காமெடி!