Published:Updated:

வி.ஐ.பி. தொகுதிகள்... வின்னர் யார்?

வி.ஐ.பி. தொகுதிகள்... வின்னர் யார்?
பிரீமியம் ஸ்டோரி
News
வி.ஐ.பி. தொகுதிகள்... வின்னர் யார்?

சண்.சரவணக்குமார், க.பூபாலன், எம்.புண்ணியமூர்த்திபடங்கள்: எம்.விஜயகுமார், வீ.சக்தி அருணகிரி, எஸ்.தேவராஜன்

வி.ஐ.பி. தொகுதிகள்... வின்னர் யார்?

றுதிக்கட்ட பரபரப்பை எட்டியிருக்கும் தமிழகத் தேர்தல் களத்தில், சில வி.ஐ.பி தொகுதிகளின் நிஜ நிலவரம் என்ன?

வி.ஐ.பி. தொகுதிகள்... வின்னர் யார்?

பென்னாகரம்

வி.ஐ.பி. தொகுதிகள்... வின்னர் யார்?

கர்நாடகாவுக்கு மிக அருகில் இருக்கிறது பென்னாகரம் தொகுதி. இதுவரை 14 சட்டமன்றத் தேர்தல்களையும், ஓர் இடைத்தேர்தலையும் சந்தித்திருக்கிறது. முதல் தேர்தலில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி சார்பில் கந்தசாமி வெற்றி பெற்றார். தி.மு.க நான்கு முறையும், காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ம.க ஆகிய கட்சிகள் தலா இரண்டு முறையும், ஜனதா கட்சி, காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

50 சதவிகிதத்துக்குமேல் வன்னியர்களைக் கொண்ட தொகுதி என்பதாலேயே தனது ‘மாற்றம்... முன்னேற்றம்’ மந்திரத்தை மறந்துவிட்டு ‘பழைய பன்னீர்செல்வமாகவே’ பென்னாகரத்தில் களம் இறங்கியிருக்கிறார் அன்புமணி.

“அன்புமணி ஒரு முதலமைச்சர் வேட்பாளர். அவருக்கு ஓட்டு போடாம யாருக்கு ஓட்டு போடுவோம்? சாதிக்காகவாவது போட்டுதானே ஆகணும்?’’ என்று ஒரு பிரிவினர் சொல்ல, ‘`என்னங்க பெரிய சாதி? யார் நல்லது செய்வாங்களோ அவங்களுக்குதாங்க எங்க ஓட்டு’’ என்கிறார்கள் இன்னொரு பிரிவினர்.

பென்னாகரத்தில் மளிகைக்கடை வைத் திருக்கும் 25 வயது இளைஞரிடம் பேச்சு கொடுத்தோம். “இங்க மாம்பழம்தான்ஜி மாஸா இருக்கு. பசங்க எல்லாரும் சப்போர்ட் பண்றாங்க. ஆனா, எனக்கு சாதிவெறி எல்லாம் கிடையாதுஜி. இந்தக் கடை 30 வருஷமா இருக்கு. காலனிக் காரங்களும் ஆதரிச்சதுனாலதான் ஓட்ட முடியுது. அப்புறம் எப்படி அவங்களைப் பிரிச்சுப் பார்க்க முடியும்?’’ என்றார்.

வி.ஐ.பி. தொகுதிகள்... வின்னர் யார்?

தலித்துகள் அதிகம் வாழும் பகுதியான போடூர் காலனிக்குச் சென்று, ‘இந்த முறை யாருக்கு உங்க ஓட்டு?’ என்றதும் மக்கள் நம்மைச் சூழ்ந்துகொள்கிறார்கள். ‘`என்னாத்தங்க சொல்றது? அன்புமணி வந்தா நாங்க அவ்ளோதாங்க. ஒரு நாள் ராத்திரிகூட நிம்மதியா தூங்க முடியாது’’ என்று முத்துசாமி ஆரம்பிக்க, பெண்கள், இளைஞர்கள் எனச் சூழ்ந்துகொள்கிறது கூட்டம். ‘`வன்னியருங்கதான் இங்கே அதிகம். இவ்வளவு நாள் தாயா புள்ளையாத்தான் பழகிகிட்டு இருந்தோம். திவ்யா-இளவரசன் சம்பவத்துக்குப் பிறகு, அவங்க பண்ற அட்டூழியம் தாங்கலங்க. கால்ல செருப்பு போட்டுக்கிட்டு போனா, ‘சத்தம் வராம நடந்து போகணும்’னு சொல்றாங்க. தண்ணி தூக்கப் போனா, எங்க கை அவங்க பாத்திரத்துல படக் கூடாதுனு சொல்றாங்க. பல வருஷங்களுக்கு முன்னாடி இருந்த நிலைமை இப்ப திரும்பவும் வந்திருச்சுங்க. எல்லாத்துக்கும் காரணம், பா.ம.க-தான். அவங்க மட்டும் வந்தா எங்க நிலைமை இன்னும் மோசமாயிடும்’’ என்று சொல்லும்போதே அத்தனை முகங்களிலும் அவ்வளவு அச்சம்.

பென்னாகரத்தைச் சேர்ந்த முனிராஜ் தெளிவாகப் பேச ஆரம்பிக்கிறார்.  “நாடாளு மன்றத் தேர்தல்ல அன்புமணிக்கு அதிக வாக்கு கிடைக்க ஒரே காரணம் திவ்யா-இளவரசன் சம்பவம்தான். அந்தச் சம்பவத்துக்காக அ.தி.மு.க., தி.மு.க-வுல இருந்த வன்னியருங்க எல்லாம் அன்புமணிக்கு ஆதரவு தெரிவிச்சாங்க. ஆனால், இந்தத் தேர்தல்ல அந்த நிலைமையை எதிர்பார்க்க முடியாது. போன இடைத்தேர்தல்ல தி.மு.க ஓட்டுக்கு 1,000 ரூபாயும், பா.ம.க அவங்க ஆளுங்களா பார்த்து ஓட்டுக்கு 500 ரூபாயும் கொடுத்தாங்க. அ.தி.மு.க 200, 300 கொடுத்துச்சு. இந்தத் தேர்தல்ல சும்மாவிடுவாங்களா? ஆக மொத்தத்துல, இந்தத் தேர்தல்ல பென்னாகரத்துல பணமும் சாதியும் சேர்ந்து விளையாடப்போவுது’’ என்றார். அவர் சொல்வது உண்மை என்பதை பல இடங்களில் காண முடிந்தது. வன்னியர் வாசனையும் மாம்பழ வாசனையும் தூக்கலாக அடிக்கிறது.

பென்னாகரம் தொகுதியில் எந்தவிதமான தொழிற்சாலைகளும் இல்லை. ஓசூர், பெங்களூர் என பிழைப்புத்தேடி வெளியூர்களுக்கு ஓட வேண்டிய நிலையில்தான் மக்கள் இருக்கிறார்கள். படிப்பறிவும் குறைவாகத்தான் இருக்கிறது. காவிரி ஆறு பக்கத்திலேயே ஓடியும் பென்னாகரம் தரிசாக இருக்கிறது என்ற மக்களின் புலம்பலுக்கு எந்த அரசியல் கட்சியும் இதுவரை தீர்வு தேடவில்லை.

தி.மு.வு-க்காக இன்பசேகரன், அ.தி.மு.க-வுக்காக கே.பி.முனுசாமி, மக்கள் நலக் கூட்ட ணியின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நஞ்சப்பன் என அனைவரும் தினம்தோறும் தீவிர பிரசாரம் செய்கிறார்கள். பா.ம.க வலுவாக இருக்கும் பகுதிகளில் தனது கணவருக்காக அலைந்து திரிந்து வாக்குச் சேகரித்துக் கொண்டிருக்கிறார் செளமியா அன்புமணி. இப்போதைய நிலையில், மாம்பழமும் உதய சூரியனும் போட்டியில் முன்னே செல்ல... பின்தங்கியிருக்கிறது இலை.

வி.ஐ.பி. தொகுதிகள்... வின்னர் யார்?

போடிநாயக்கனூர்

எங்கும் அதிருப்தி... எல்லோர் மனதிலும் விரக்தி. `அவரை நம்பி ஓட்டு போட்டோம். ஒண்ணுமே பண்ணலை' என்ற ஆதங்கத்தை தொகுதி முழுவதும் கேட்க முடிகிறது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் தொகுதி இது. தி.மு.க சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ லட்சுமணன், மக்கள் நலக் கூட்டணி சார்பாக தே.மு.தி.க வேட்பாளர் வீரபத்திரன் ஆகியோர் போட்டிபோடுகின்றனர். களநிலவரப் படி அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும்தான் போட்டி.

1967-ம் ஆண்டு, போடிநாயக்கனூர் சட்ட மன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது. இதுவரை நடந்த 11 தேர்தல்களில் போடியை யாரும் தொடர்ச்சியாக தக்கவைத்துக்கொண்டது இல்லை. 1989-ம் ஆண்டு ஜெயலலிதா போடியில் போட்டியிட்டு வெற்றிபெற்றாலும், அடுத்த முறை இந்தத் தொகுதியில் நிற்கவில்லை. சாதாரண எளிய விவசாய மக்கள் நிறைந்த தொகுதியில் பிரச்னைகளுக்குப் பஞ்சமே இல்லை.

வி.ஐ.பி. தொகுதிகள்... வின்னர் யார்?

இப்போது போடி மக்களை உலுக்கி எடுக்கும் பிரச்னையாக இருப்பது நியூட்ரினோ திட்டம். இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து எதிர்த்துவரும் பொட்டிப்புரம் கிராம மக்களிடம் பேசினோம்.  “மத்திய அரசின் திட்டமாக இருந்தாலும் அதற்கான இடத்தை ஒதுக்கியது மாநில அரசுதான் என்பதால், இந்தத் தொகுதிக்கு உட்பட்ட அமைச்சருக்கு இது தெரியாமல் இருக்காது. நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மக்கள் கொதித்து எழுந்து போராட்டம் நடத்தியபோது கண்டுகொள்ளாமல் இருந்தவர், இதுவரை ஒருமுறைகூட நியூட்ரினோ திட்டம் அமைந் திருக்கும் கிராமத்துக்கோ, அங்கு போராட்டத்தில் ஈடுபடும் மக்களைச் சந்திக்கவோ வரவில்லை. நியூட்ரினோ திட்டம் என்றால் என்ன, இதனால் எங்களுக்கு என்னவிதமான பாதிப்பு ஏற்படும் என எதுவும் எங்களுக்குச் சொல்லப்படவில்லை. அணுக்கழிவைக் கொட்டப்போகிறார்கள், அது, இது என என்னென்னவோ சொல்கிறார்கள். எங்கள் பயத்தைப் போக்கவும் உண்மையை விளக்கிச் சொல்லவும் நாங்கள் ஓட்டு போட்டுத் தேர்ந்தெடுத்தவர் எதையும் செய்யவில்லை. நியூட்ரினோ திட்டத்தில் எங்கள் பக்கம் யார் நிற்கிறார்களோ, அவர்களுக்கே எங்கள் ஓட்டு'' என்கிறார்கள். இந்தப் பகுதியைச் சுற்றியிருக்கும் பல கிராம மக்களின் கருத்து இதுதான்.

கொட்டக்குடி ஆற்றின் விவசாயத்தைப் பயன்படுத்தி விவசாயம்செய்யும் போடி மீனாட்சிபுரம் விவசாயிகள், “இந்தப் பகுதி விவசாய நிலங்களின் நீர் ஆதாரமாக இருந்துவரும் பதினெட்டாம் கால்வாயில், சுத்த கங்க ஓடையில் இருந்து கொட்டக்குடி வரை நீர் கொண்டுவருவதாக கடந்த 2014-ம் ஆண்டு அறிவித்த பன்னீர்செல்வம், இதற்காக 51.3 கோடி ரூபாய்  நிதியும் ஒதுக்குவதாக அறிவித்தார். ஆனால், இன்றுவரை திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. திட்டத்துக் கான அளவீடு மற்றும் சர்வே பணிகள் மட்டும் நடந்துள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் திடீரென வந்து பூமி பூஜை போட்டார் ஓ.பி.எஸ். இதை நம்பி ஓட்டு போட்டால் மறுபடியும் அடுத்த தேர்தல் சமயத்தில் அடிக்கல் நாட்ட வருவார். அஸ்திவாரம் தோண்ட இன்னொரு தேர்தல் ஆகும்'' எனக் கடுப்பாகப் பேசுகின்றனர்.

தங்கள் தொகுதியில் இருந்து சென்ற ஒருவர், பொதுப்பணித் துறை அமைச்சர்,  முதலமைச்சர் என செல்வாக்குமிக்கப் பதவிகளை அலங்கரித் தாலும், அதன் மூலம் தொகுதிக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை என்பதுதான் மக்களின் ஆதங்கமாக இருக்கிறது.

போடி பகுதியில் மாம்பழம் மற்றும் இளவம்பஞ்சு சாகுபடி அதிகம் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு பருவம் தவறிய மழை, சரியான விலை போகாதது என மா விவசாயிகள் நொந்தனர். வருடம் 15 ஆயிரம் டன்களுக்குமேல் விளையும் மாம்பழங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க மாம்பழக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை, மாம்பழங்களைப் பழுக்கவைக்கும் கூடம், பாதுகாக்கும் குளிர்பதனக் கிடங்கு ஆகியவை அமைத்துத் தரப்படும் எனக் கடந்த தேர்தலில் வாக்குறுதி அளித்தார் பன்னீர்செல்வம். இவற்றில் ஒன்றுகூட நிறைவேற்றித் தரப்பட வில்லை. 

வி.ஐ.பி. தொகுதிகள்... வின்னர் யார்?

“அ.தி.மு.க-வின் தலைமை, கடந்த ஒரு மாத மாக ஓ.பி.எஸ் மீது எடுத்துவரும் நடவடிக்கைகள், அவர் மற்றும் அவரைச் சார்ந்த நபர்கள் வாங்கிக் குவித்திருக்கும் சொத்துக்கள் பற்றி பொதுமக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். அதுவே அவரை வீழ்த்தும்” என்கிறார் தி.மு.க வேட்பாளரான லட்சுமணன்.

எனினும் அறிமுகமான, செல்வாக்கு மிகுந்த வேட்பாளர் என்ற வகையில் ஓ.பி.எஸ் இங்கு பலம் மிகுந்த வேட்பாளர்தான். இப்போதைய நிலையில் அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் ரேஸில் ஒன்றை ஒன்று முந்துகின்றன.

வி.ஐ.பி. தொகுதிகள்... வின்னர் யார்?

காட்டுமன்னார்கோவில்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடும் தொகுதி. மக்கள் நலக் கூட்டணியின் சார்பாக பல்வேறு ஊர்களில் பிரசாரம் செய்துவந்த திருமா, இப்போதுதான் முதன்முதலாக இந்தத் தொகுதிக்கு வேட்பாளராக வந்திருக்கிறார். போகும் இடம் எல்லாம் மக்கள் அவருக்கு பிரமாண்ட வரவேற்புக் கொடுக் கிறார்கள். ஆனால், இந்த வரவேற்பு வெற்றியாக மாறுமா? ஏனெனில், காங்கிரஸ் சார்பில் இங்கு போட்டியிடும் தொழிலதிபர் மணிரத்தினம், திருமாவளவனுக்கு மிகக் கடுமையான போட்டியைத் தருவார்.  இன்னொரு பக்கம் அ.தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ முருகுமாறனும் களத்தில் இருக்கிறார். 

இது தனித் தொகுதி என்பதால், வேட்பாளர்கள் அனைவருமே தலித்கள்தான். எனவே, தலித் வாக்குகள் எல்லாம் திருமாவளவனுக்குச் சென்றுவிடும் எனப் பொத்தாம்பொதுவாகச் சொல்ல முடியாது. ஆனால், செல்வாக்குமிக்க ஒரு தலித் தலைவர் என்ற வகையில் சாதி வாக்குகளை திருமாவளவன் பெரும் அளவில் அறுவடைசெய்ய வாய்ப்பு இருக்கிறது.

வி.ஐ.பி. தொகுதிகள்... வின்னர் யார்?

``திருமாவளவனைப் பற்றி எங்களுக்குத் தெரியாது. எங்க ஊர் கோயிலுக்கு மணிரத்தினம் தான் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். அதனால, ஊர்ல கூட்டம் போட்டு அவருக்குத்தான் ஓட்டு போடணும்னு சொல்லியிருக்காங்க. ஊர் கட்டுப்பாட்டை மீற முடியுமா?'' என்பது இடையூர் பகுதியில் கேட்ட குரல்.

``மணிரத்தினம் குணத்துல நல்லவர்தான். ஏழைபாழைங்க படிப்புக்கு, கோயிலுக்குனு நிறையப் பணத்தை வாரி கொடுக்கிறார். ஆனால், போன நாடாளுமன்றத் தேர்தல்ல அவர் பண்ணது துரோகங்க'' என்பது ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் ஒலித்த குரல்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் ஸீட் கேட்ட மணிரத்தினம், அங்கு கிடைக்கவில்லை என்றதும் பா.ம.க-வில் சேர்ந்து சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டார். (தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு மறுபடியும் காங்கிரஸ் கட்சிக்கே வந்துவிட்டார்). இதைத்தான் அவர்கள், `துரோகம்' எனக் குறிப்பிடுகின்றனர்.

கடலூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் இருக்கும் காட்டுமன்னார்கோவில் தொகுதி 1962-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதுவரை 12 தேர்தல்களைச் சந்தித்த தொகுதி. தி.மு.க-வின் அசைக்க முடியாத கோட்டைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் இங்கு வெற்றிபெற்றார். மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2,10,688 பேர். இதில் 60 சதவிகிதம் பேர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கிழக்கே நலம்புத்தூர், வடக்கே நெடுஞ்சேரி, மேற்கே ஸ்ரீமுஷ்ணம் நகராட்சியில் பாதி, தெற்கே கொள்ளிடக்கரை, காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை நகராட்சிகளை உள்ளடக்கிய தொகுதியில் முழுக்க முழுக்க ஏழை எளிய மக்களே வசிக்கின்றனர். 

வி.ஐ.பி. தொகுதிகள்... வின்னர் யார்?

இவர்களின் வேலைவாய்ப்புக்குக் குறிப்பிட்டு சொல்லும்படியான அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகள் இங்கு இல்லை. இதனால் இந்தத் தொகுதியைச் சேர்ந்த மக்கள் கோவை, திருப்பூர், கேரளா போன்ற பகுதிகளுக்கு கூலி வேலைகளுக்குச் செல்கின்றனர். தொகுதியின் கல்வியறிவு 70 சதவிகிதம் என்றாலும், அந்தக் கல்வி என்பது பள்ளிப்படிப்புடன் முடிந்து விடுகிறது. அதனால்தான் பெரும்பகுதி மக்கள் கூலிகளாக இருக்கிறார்கள்.

எடையூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி விநாயகமூர்த்தி கொஞ்சம் கோபமாகப் பேசினார். ``அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் பத்து ஆண்டுகள் பொருளாதார ரீதியாகப் பின்னோக்கித் தள்ளப்படுவார்கள். இங்கு இருந்து தேர்ந்தெடுத்து அனுப்பப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும், சட்டமன்றத்தில் அவர்களுக்குக் கொடுக்கப்படும் நேரத்தில்கூட விவசாயிகளைப் பற்றி பேசியது இல்லை. ஒரே ஒருமுறை ரவிக்குமார்தான் எங்களுக்காகப் பேசினார். அது நிறை வேறாமலேயேபோனது. வெள்ளத் தடுப்புப் பணிக்கு பரவனாறு, செங்கால் ஓடை, வெள்ளியங் கால் ஓடைகளைத் தூர்வார பொதுப்பணித் துறையும், முன்னால் மாவட்ட ஆட்சித்தலைவர் ககன்தீப்சிங் பேடியும் நபார்டு வங்கி மூலம் பல கோடி ரூபாய் ஒப்புதல் வாங்கியிருக்கிறார்கள். அதை, அடுத்து ஆட்சிக்கு வருபவர்களாவது செயல்படுத்த முயற்சிக்க  வேண்டும்'' என்றார்.

``சிதம்பரம் தாலுக்காவும் சீர்காழி தாலுக்காவும் பயன்பெரும் வகையில் கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டவேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை. வீராணம் ஏரியை, சென்னைக்கு குடிநீர் கொண்டுபோகும் ஏரியாகத்தான் பார்க்கிறார்கள்; இந்தப் பகுதி விவசாயிகளின் நீர் ஆதாரமாகப் பார்க்கவில்லை'' என்கிறார் பக்கத்தில் இருந்த இன்னொரு முண்டாசு விவசாயி. இது முழு உண்மை. சென்னைக்கு இங்கு இருந்துதான் குடிநீர் செல்கிறது என்றாலும்கூட, இந்தப் பகுதியின் பல கிராமங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆயங்குடி, மோவூர், செட்டித்தாங்கல் போன்ற உள்கிராமங்களில் குடித்தண்ணீருக்காக அடிக்கடி சாலைமறியல் நடக்கிறது. இதைத் தடுக்க போலீஸ் தடியடிகூட நடக்கிறது. இந்தப் பிரச்னையைத் தீர்த்துவைக்க சிட்டிங் எம்.எல்.ஏ முருகுமாறன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்ற ஆதங்கமும் கேட்கிறது.

விவசாயம்தான் மக்களின் பிரதான தொழில். அதுவும் சம்பா ஒரு போகம்தான். வீராணம் ஏரியின் நீர் அளவு குறைந்துவிட்டால், அந்த ஒரு போக சாகுபடிக்கும் சிக்கல் வந்துவிடும்.

``நாங்க திருமாவளவன் மீது வெறி கொண்டவர்கள் தான். இல்லைனு சொல்லல. இருந்தாலும் சொல்கிறோம்... வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது இந்தப் பக்கமே அவர் வரலை. ஏதோ கூட்டணிக் கட்சி, அப்படி, இப்படினு கடலூர் பக்கமேதான் சுத்திக்கிட்டு இருந்தார். இருந்தாலும் அவரை விட்டுக்கொடுக்க முடியாது. அவருக்குத் தான் எங்க ஓட்டு'' என்கிறார்கள் திருநாரையூர் கிராமத்தினர்.

இப்போதைய நிலையில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் சாதி ஓட்டுக்கள் மூலமும் தனது பிரபலம் மூலமும் முந்திச் செல்கிறார் திருமாவளவன்.