Published:Updated:

யாருக்கு உங்கள் ஓட்டு?

யாருக்கு உங்கள் ஓட்டு?
பிரீமியம் ஸ்டோரி
யாருக்கு உங்கள் ஓட்டு?

வேட்பாளர் செக் லிஸ்ட்விகடன் டீம்

யாருக்கு உங்கள் ஓட்டு?

வேட்பாளர் செக் லிஸ்ட்விகடன் டீம்

Published:Updated:
யாருக்கு உங்கள் ஓட்டு?
பிரீமியம் ஸ்டோரி
யாருக்கு உங்கள் ஓட்டு?
யாருக்கு உங்கள் ஓட்டு?

ன்னும் சில தினங்களில் உங்களின் மனம் கவர்ந்த வேட்பாளருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள்... மகிழ்ச்சி; வாழ்த்துகள்! அதற்கு முன்னால் உங்களிடம் சில கேள்விகள்...

அந்த வேட்பாளரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும், ஏன் அவருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள்? நீங்கள் போடப்போகும் ஓட்டுதான் அடுத்த ஐந்து வருடங்களுக்கு உங்கள் தொகுதியின் தலையெழுத்தை நிர்ணயிக்கப்போகிறது. ஒரு நல்ல வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க, `இவருக்குத்தான்  என் ஓட்டு' என முடிவெடுக்க இங்கே சில கேள்விகளைத் தொகுத்துள்ளோம். வாக்களிக்கும் முன்னர் இந்தக் கேள்விகளை ஒருமுறை வாசியுங்கள். இது, அந்த வேட்பாளர் உங்கள் வாக்கைப் பெறுவதற்குத் தகுதி உள்ளவரா? என்பதற்கு நீங்கள் வைக்கும் டெஸ்ட். இதில் அவர் தேர்வானால் உங்கள் மனதில் இருப்பவருக்கே வாக்களிக்கலாம். இல்லையெனில், வேறு வாய்ப்பைச் சிந்திக்கலாம்.

யாருக்கு உங்கள் ஓட்டு?

1. உங்களுடைய வேட்பாளர் உங்களை நேரில் வந்து பார்த்து வாக்கு கேட்டாரா? அப்படி நேரில்கூட வராமல் தூரத்தில் இருந்து கை அசைத்துவிட்டுப் போகும் ஒருவர், எப்படி உங்களுக்கான பிரதிநிதியாக இருக்க முடியும்? `ஒரு வேட்பாளர், லட்சக்கணக்கான பேரை நேரில் சந்திப்பது சாத்தியமா?' என நினைக்கலாம். இது ஒன்றும் நாடாளுமன்றத் தேர்தல் அல்ல. சில லட்சம் மக்கள்தொகையே கொண்ட சட்டமன்றத் தேர்தல். மக்கள் நலன் பற்றிய அக்கறை அவர்  மனதில் முழுவதுமாக இல்லை என்றாலும், 50 சதவிகிதம் பேரையாவது சந்தித்துவிடுவது சாத்தியம்தான்.

2.
உங்களுடைய வேட்பாளர் இயற்கை வளங்களை சுரண்டி அதிலிருந்து வருமானம் பார்க்கக்கூடிய நபரா? ஏரி நிலங்களை ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் காரர்களுக்கு பந்திவைப்பவரா? சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபடுபவரா? தன் தொழிற்சாலையின் கழிவுநீரை ஆற்றில் கலந்துவிடுகிறவரா? இயற்கை வளங்களை மதிப்பதிலும் காப்பதிலும் அக்கறை உள்ளவரா?

3. இதுவரை அவர் கலந்துகொண்ட போராட்டங்கள் எத்தனை? உங்கள் தொகுதிப் பிரச்னைகளுக்காக இதுவரை எத்தனையோ போராட்டங்கள் நடந்திருக்கும். அது, உங்களுக்கே கூடத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், மக்களுக்காக உழைக்க முடிவெடுத்த ஒருவர், அவற்றில் கலந்துகொண்டிருக்க வேண்டும். அவர் இதுவரை போராட்டம் ஏதாவது செய்திருக்கிறாரா, போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறாரா என்பதையும் விசாரியுங்கள்.

யாருக்கு உங்கள் ஓட்டு?

4. போராட்டங்களில்தான் கலந்துகொள்ளவில்லை, போகட்டும், நம்மைப்போலவே அவருக்கும் வேலைவெட்டி அதிகமாக இருக்கலாம். ஆனால், தொடர்ச்சியாக ஊடகங்களில் உங்கள் தொகுதி குறித்து பேசுகிறவரா அல்லது கிடைக்கும் சந்தர்ப்பங்களில், `இது இது வேண்டும்' என முந்தைய எம்.எல்.ஏ-க்களிடம் பேசியவரா?

5. சாதிசார்பு உள்ளவரா அல்லது சாதிக் கட்சிகளோடு தொடர்பு உள்ளவரா, சுயசாதி பெருமிதமும் மற்ற சாதியினரைக் கீழ்த்தர மாகவும் நினைக்கும் ஒருவரால் எப்படி சகலருக்கும் சமமாக நடுநிலையாக இருக்க முடியும்? சாதி ஆணவக்கொலைகளை ஆதரிப்பவராக இருந்தால் அவரை நம்பி எப்படி நாம் நிம்மதியாக இருக்க முடியும்?

6. கந்துவட்டிக்குப் பணம் கொடுப்பவரா உங்கள் வேட்பாளர்? கொடுத்த பணத்தைத் திரும்பப் பெற மோசமான வழிகளை பின்பற்றுபவரா அல்லது மற்றவர்களுடைய கடனை வசூலிக்க மிரட்டல்களையும் ஆட்களையும் ஏவுகிற வகையா?

7. ஒவ்வொரு வேட்பாளரும் வேட்புமனு தாக்கல்செய்யும்போது கட்டாயம் தங்கள் சொத்துப்பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் தகவல்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் கிடைக்கின்றன. அவற்றைத் தெரிந்துகொண்டீர்களா? உங்கள் வேட்பாளரின் சொத்து மதிப்பு என்ன? அவர் எவ்வளவு பொய் சொல்லியிருக்கிறார்?

8. உங்கள் வேட்பாளர் மீது ஏதாவது வழக்குகள் உண்டா? அப்படி இருந்தால் என்ன குற்றத்துக்காக? வேட்புமனு தாக்கல் செய்யும்போது அந்த விவரங்களையும் ஒவ்வொரு வேட்பாளரும் சமர்ப்பிக்க வேண்டும். அதையும் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பார்க்கலாம். அவற்றையும் தேடி எடுத்துத் தெரிந்துகொள் ளுங்கள்.

9. உங்கள் வேட்பாளரை எளிதில், நேரில் சந்தித்துப் பேச முடியுமா? அவரை பொது இடங்களில் அடிக்கடி கடந்திருக்கிறீர்களா? கடைசியாக அவரை எங்கே பார்த்தீர்கள்? அவருடைய அலுவலகத்துக்கு யாரும் எளிதில் சென்று பேசுவது சாத்தியமா?

10.
உங்கள் தொகுதியில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களைப் பற்றி முழுமையான விவரங்கள் தெரியுமா? அதைத் தெரிந்துகொண்ட பின்னர்தான் இவருக்கு வாக்களிப்பது என முடிவு எடுத்தீர்களா? அப்படி இருந்தால் இவர் மற்ற வேட்பாளர்களைவிட எந்த வகையில் வேறுபட்டவர்?

11. சாதி அடிப்படையில் அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்களா? ஒரு வேட்பாளருக்கு அது மட்டுமே போதுமான தகுதியாகிவிடுமா? நீங்கள் அவருடைய சாதி என்பதால் உங்களுக்கு சிறப்புச் சலுகைகள் செய்வார் என நினைக்கிறீர்களா?

12. உங்கள் வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடும் கட்சியினர் குறித்து, அவருக்கு நிச்சயம் ஏகப்பட்ட மாற்றுக் கருத்துகள் இருக்கும். அவை பற்றி மேடைகளில் பேசும்போது நாகரிகமாக விமர்சனம் செய்யக்கூடியவரா... அல்லது தாறுமாறாக தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடியவரா? அப்படிப் பேசக் கூடியவராக இருந்தால் அவர் எப்படி நாளைக்கு சட்டமன்றத்தில் பொறுமையாக தொகுதி பிரச்னைகள் பற்றிப் பேசுவார்?

யாருக்கு உங்கள் ஓட்டு?

13. பெண்கள் குறித்து என்ன மாதிரியான கருத்தை உங்கள் வேட்பாளர் வைத்திருக்கிறார்? பெண்களை மதிப்பவரா? பெண்களின் பிரச்னைகளைக் காதுகொடுத்துக் கேட்பவரா? தான் பங்கெடுக்கும் மேடைகளில், பெண்களை இழிவாகப் பேசும் பேச்சாளர்களை அந்த இடத்திலேயே கண்டிக்கக்கூடியவரா?

14. உங்கள் பகுதியில் இருக்கும் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவரா உங்கள் வேட்பாளர் அல்லது அதற்கு துணைபோன கட்சியைச் சேர்ந்தவரா அல்லது நில ஆக்கிரமிப்பாளர்களைத் துணைக்கு வைத்திருப்பவரா? அப்படிப்பட்ட ஒருவர் நாளைக்கே எம்.எல்.ஏ ஆனதும் உங்கள் நிலத்தையே வளைத்துப்போட வாய்ப்பு இருக்கிறதுதானே?

15. காவல் நிலையம், ஆட்சியர் அலுவலகம் என அதிகார மையங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்பவரா? உஷார்.

16.  குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு, ரேஷன் கார்டு தொடர்பான பிரச்னைகளில் `உதவி' என நின்றால், முதல் வேலையாக `எவ்வளவு தருவீங்க?' எனக் கேட்கக்கூடியவரா? வேண்டாங்க, வேண்டவே வேண்டாம்.

17.   உங்களுடைய வேட்பாளர் ஒரு ஜெயில் பறவையா? இதற்கு முன்னால் சிறைக்குச் சென்று திரும்பியவரா? அப்படி எனில், என்ன காரணத்துக்காக என்பதைத் தெரிந்துகொள் ளுங்கள். `டாஸ்மாக்கை மூடு' என சிறைக்குச் சென்றால், அவரை ஆதரிக்கலாம். வெட்டு, குத்து வழக்கில் சென்றவர் என்றால் எச்சரிக்கை... எச்சரிக்கை.

18.   உங்கள் வேட்பாளர் வாக்குக்குப் பணம் கொடுப்பவரா? `நெவர். எனக்கு எல்லாம் தரவே இல்லை' என நினைக்க வேண்டாம். உங்களுக்குத் தராமல் இருக்கலாம். அக்கம்பக்கம் விசாரியுங்கள். யாருக்குமே பணம் தரவில்லை. தகுதியை மட்டுமே முன்னிறுத்தி வாக்கு கேட்கிறார் என்றால் அவரை டபுள் க்ளிக் செய்யுங்கள்.

19.   உங்கள் வேட்பாளருக்கு அவர் சாராத மதங்களைப் பற்றி என்ன மாதிரியான பார்வை இருக்கிறது? அவர் பிற மதத்தினரைச் சமமாக மதிக்கக்கூடியவரா? மாற்று மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும்படி பொது மேடைகளில் பேசியவரா? அப்படிப் பேசுவதையே முழுநேர வேலையாக வைத்திருக்கும் கட்சியையோ அமைப்பையோ சார்ந்தவரா? அப்படிச் சார்ந்து இருந்தால் அந்த அமைப்பில் அல்லது கட்சியில் அவருடைய பங்களிப்பு என்ன?

20. உங்கள் தொகுதியில் இருக்கும் அரசு அலுவலகங்களில் லஞ்சமும் ஊழலும் தலை விரித்தாடினால், அதைத் தட்டிக்கேட்டு தடுத்து நிறுத்துகிறவரா? ஊழல் செய்யும் அதிகாரிகள் மேல் புகார் கொடுத்தால், உடனே நடவடிக்கை எடுத்து தொடர்புடைய அதிகாரிக்குத் தண்டனை வாங்கித் தருவாரா அல்லது அதிகாரியோடு கூட்டுசேர்ந்து உங்களை மிரட்டி ஓடவிடுவாரா?

21. தொகுதியில் இருக்கும் ஆயிரக்கணக்கான பிரச்னைகளை எல்லாம் விட்டுவிட்டு சட்ட மன்றத்துக்குச் சென்றதும் ஸ்லீப்பிங் மோடுக்குப் போகிறவரா உங்கள் வேட்பாளர் அல்லது சட்டமன்றத்தில் பேசக் கிடைக்கும் கொஞ்சநஞ்ச வாய்ப்புகளையும் கட்சித் தலைமையின் புகழ்பாடு வதற்காக மட்டுமே செலவிடக்கூடிய தாராள உள்ளம் படைத்தவரா?

22. தொகுதி பிரச்னைகளைப் பேசி அதற்கான தீர்வுகளைக் கண்டறிந்து உடனுக்குடன் செயலாற்றக்கூடியவரா? இதற்கு முன்னால் அவர் எம்.எல்.ஏ-வாக இருந்திருந்தால் அப்போது எல்லாம் சட்டமன்றத்தில் தொகுதி பிரச்னைகளைப் பேசி தீர்வுகண்டிருக்கிறாரா?

யாருக்கு உங்கள் ஓட்டு?

23. உங்கள் வேட்பாளர், நவீன தொழில் நுட்பங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்தவரா? ட்விட்டர், ஃபேஸ்புக் மாதிரி சமூக வலைதளங்களில் இயங்குபவரா? அங்கே மக்கள் கேட்கிற கேள்விகளுக்கு ஓரளவுக்காவது பதில் சொல்பவரா?

24.  கட்சித் தலைமை, `கிணற்றில் போய் குதி' எனச் சொன்னால், கண்களை மூடிக்கொண்டு குதிக்கக்கூடிய தலையாட்டி பொம்மையா உங்கள் வேட்பாளர்? வானத்தில் பறக்கும் ஹெலிகாப்டருக்கு எல்லாம் கும்பிடுபோடுகிற நபரா அல்லது சுயமாக முடிவெடுத்துச் செயல்படும் துணிவு உள்ளவரா?

யாருக்கு உங்கள் ஓட்டு?

5.   உங்கள் வேட்பாளர், ஒரு கட்சியைச் சார்ந்து இருப்பார்தானே? அந்தக் கட்சி செய்யும் ஊழல்களை நியாயப்படுத்தக்கூடியவரா? அந்தக் கட்சி தேர்தலுக்காக நாக்கைச் சுழற்றிச் சுழற்றி சந்தர்ப்பவாதமாகப் பேசுவதற்கு ஜிங்ஜக் போடக்கூடியவரா அல்லது தன் கட்சி செய்த தவறுகளை மனதார ஒப்புக்கொண்டு, `இனி அப்படி நடக்காது' என வாக்குக் கேட்பவரா?

- இது வாக்களிக்கும் நேரம்... சிந்தியுங்கள், செயல்படுங்கள்!