Published:Updated:

நாட்டை மாற்றுமா நோட்டா?!

நாட்டை மாற்றுமா நோட்டா?!
பிரீமியம் ஸ்டோரி
நாட்டை மாற்றுமா நோட்டா?!

பா.விஜயலட்சுமி

நாட்டை மாற்றுமா நோட்டா?!

பா.விஜயலட்சுமி

Published:Updated:
நாட்டை மாற்றுமா நோட்டா?!
பிரீமியம் ஸ்டோரி
நாட்டை மாற்றுமா நோட்டா?!
நாட்டை மாற்றுமா நோட்டா?!

மிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களேபரங்கள், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. கட்சிகள் சார்ந்த அதிரடிகளுக்கு மத்தியில், `நோட்டாவுக்கு ஓட்டு போடுங்கள்' என்ற குரலும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக, இணையத்தில் இந்தக் குரல் கூடுதலாகவே ஒலிக்கிறது.

நாட்டை மாற்றுமா நோட்டா?!

முதல் தலைமுறை வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் இந்தத் தேர்தல் களத்தில், கட்சிகள் மீதான அதிருப்தியும் அதிகமாக இருப்பதால், ‘என் ஓட்டு நோட்டாவுக்குத்தான்’ என்கிறார்கள். உண்மையில் நோட்டா குறித்து மக்களுக்கு போதுமான விழிப்புஉணர்வு இருக்கிறதா? `நோட்டாவுக்கு ஓட்டு போட்டால் நாட்டின் தலையெழுத்தையே மாற்றிவிடலாம்' என்பதைப் போல பரப்பப்படும் அதீத கருத்துக்கள் எந்த அளவுக்கு உண்மை?

`சட்டமன்றத் தேர்தலில் 35 சதவிகிதத்துக்கும் மேல் நோட்டா ஓட்டு பதிவானால், தேர்தலில் எந்தக் கட்சி வெற்றிபெற்றிருந்தாலும் அது செல்லாது. தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் மீண்டும் அரசியலில் ஈடுபட முடியாது. ஆறு மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும். பின்னர் மீண்டும் தேர்தல் நடைபெறும். அதில் புதிய அரசியல்வாதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்’ என்று ஒரு தகவல் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில், படுவேகமாக ஜிகா வைரஸ்போல பரவிவருகிறது. நோட்டா குறித்து பரப்பப்படும் எண்ணற்ற கட்டுக்கதைகளில் இதுவும் ஒன்று.

முதலில் நோட்டோ பற்றிய டேட்டாவைத் தெரிந்துகொள்வோம். `None Of The Above' என்பதுதான் நோட்டாவின் விரிவாக்கம். `என் தொகுதியில் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. அதே நேரத்தில் என் வாக்கை வேறு யாரும் கள்ள ஓட்டாகப் பதிவுசெய்துவிடக் கூடாது என்பதற்காக வாக்களிக்கிறேன்' என்பது இதன் பொருள்.

நோட்டாவுக்கு ஓட்டு போடுவதால், உங்களுடைய ஜனநாயகக் கடமையும் விட்டுப்போகாது; கட்சியினர் மீதான உங்கள் அதிருப்தியை வெளிக்காட்டிய திருப்தியும் கிடைக்கும். வேறு வகையில் சொல்வதானால், இந்த ஜனநாயக நாட்டில் ஒரு சாதாரணக் குடிமகனுக்கு, ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இருப்பதைப்போலவே, அதிகாரபூர்வமாக வேட்பாளரை நிராகரிக்கவும் தரப்பட்டிருக்கும் உரிமைதான் `நோட்டா'. இது இந்தியாவில் மட்டும் அல்ல, ஃபின்லாந்து, பிரான்ஸ், பிரேசில், பங்களாதேஷ், கொலம்பியா, ஸ்வீடன், பெல்ஜியம்... போன்ற பல நாடுகளிலும் அமலில் உள்ளது. 

இந்தியாவில் சில வருடங்களுக்கு முன்னர் வரையில் இந்த நோட்டாவுக்குப் பெயர், `49ஓ'. வாக்களிக்கும் இடத்தில் இதற்கு எனத் தனிப் படிவம் இருக்கும். அதை வாங்கிப் பூர்த்திசெய்து வாக்குப்பெட்டியில் போட வேண்டும்.

1961-ம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளில் இந்த `49ஓ’ சேர்க்கப்பட்டது.

ஆனால், இந்தப் படிவ முறை அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிவதால், வாக்களிப்பவருக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டது. இதனால் இதற்கான ஆதரவு மிகக் குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் இதை எதிர்த்து, 2004-ம் ஆண்டு பி.யு.சி.எல் என்ற பொதுநல அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ‘வாக்களிக்கும் இயந்திரத்தில் யாருக்கும் ஓட்டு போட விருப்பம் இல்லை என்பதற்கு தனி பட்டன் வழங்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தது. இந்த வழக்கில் 2013-ம் ஆண்டு, செப்டம்பர் 27-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில்தான் வாக்களிக்கும் இயந்திரத்தில் ‘நோட்டா’ பட்டன் இடம்பிடித்தது.

2013-ம் ஆண்டில் நடந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலிலேயே நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால், 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில்தான் மக்கள் அதிக அளவில் நோட்டாவுக்கு வாக்களித்தனர். தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் 1.4 சதவிகிதம் (5.82 லட்சம்) பேர் நோட்டாவுக்கு வாக்களித்தனர்.

நாட்டை மாற்றுமா நோட்டா?!

நோட்டா குறித்து எல்லோருக்குமே ஒரு கேள்வி இருக்கிறது. `ஒரு தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களைக் காட்டிலும் நோட்டா ஓட்டு அதிகமாக இருக்கிறது என்ற நிலையில் என்ன நடக்கும்?' - இதை தமிழகத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் கேட்டோம்.

“நோட்டா குறித்த தவறான தகவல்களே மக்களிடம் பரவிவருகின்றன. வெற்றிபெற்ற வேட்பாளர்களைத் தீர்மானிப்பதில் நாங்கள் நோட்டாவைக் கணக்கில் எடுத்துக்கொள்வது இல்லை. உதாரணமாக, ஒரு தொகுதியில் பதிவான 100 ஓட்டுக்களில் 50 நோட்டாவுக்கும், மீதி 40 ஓட்டுக்கள் ஒரு கட்சி வேட்பாளருக்கும், மீதி 10 ஓட்டுகள் இன்னொரு கட்சி வேட்பாளருக்கும் பதிவானால்
40 ஓட்டுக்கள் பெற்றவரே வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். அதையும் தாண்டி 100 ஓட்டுக்களுமே நோட்டாவுக்குப் பதிவானால் மட்டுமே மறுதேர்தல் குறித்து பரிசீலிக்கப்படும்'’ என்றார்.

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் ஆ.ராசா போட்டியிட்ட நீலகிரி  தொகுதியில் 46,559 பேர் நோட்டாவுக்கு வாக்களித்தனர். இதுவரை இந்தியாவில் நோட்டாவுக்குப் பதிவான அதிகபட்ச வாக்கு இதுதான். ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ஒருவரை தி.மு.க சார்பில் வேட்பாளராக நிறுத்தியதற்கு எதிரான மனப்பான்மையாக மக்களின் இந்தச் செயல் கருதப்பட்டது. 

`நம் தேர்தல் முறையிலும் வேட்பாளர் தேர்விலும் ஓர் ஒழுங்கையும் மாற்றத்தையும் கொண்டுவர, நல்ல வேட்பாளர்களை முன்னிறுத்தும்படி கட்சிகளை நிர்பந்திக்க மக்களுக்குக் கிடைத்திருக்கிற உரிமைதான் நோட்டா' என, பேட்டி ஒன்றில் குறிப்பிடுகிறார் நீதியரசர் ப.சதாசிவம். 

நோட்டா என்பது நம் உரிமை. அதை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் நம் எதிர்ப்பு உணர்வை மிகச் சரியாக வெளிப்படுத்த முடியும்.

வாக்களிக்கவே விரும்பாமல், `இந்த சிஸ்டமே இப்படித்தான் பாஸ்' எனக் குறை சொல்லிக்கொண்டு வீட்டில் இருக்காமல், நோட்டாவின் மூலமாகவும் சிஸ்டத்துக்கு எதிரான நம் நிலைப்பாட்டைப் பதிவுசெய்யலாம். கூடவே உங்களுடைய வாக்கும் தவறானவர்களால் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கலாம்.

`நோட்டாவுல போட்டாலும் அதை கன்சிடர் பண்ண மாட்டாங்களே பாஸ்...' என நீங்கள் நினைத்தால், அதற்கு ஒரு மாற்றுவழி இருக்கிறது.உங்கள் தொகுதியில் நிற்கும் அனைத்து வேட்பாளர்களின் தகவல்களையும் சேகரித்துக் கொள்ளுங்கள். தேர்தல் களத்தில் மூன்று வகை வேட்பாளர்கள் உண்டு. ஒன்று, பிரபலமான கட்சிகள், இரண்டு அறிமுகம் இல்லாத கட்சிகள், மூன்று சுயேட்சை வேட்பாளர்கள். இந்த மூன்று பிரிவினரில் உங்கள் தொகுதிக்கான சரியான தலைவர் யார் என்பதைத் தேர்ந்தெடுங்கள். ஓர் ஊழல் கட்சி சார்பிலேயே நிறுத்தப்பட்டிருந்தாலும் அந்த வேட்பாளரிடம் மக்கள் பணிசெய்யும் நல்ல குணங்கள் நிறைந்திருக்கலாம். சுயேட்சையாகப் போட்டியிடும் ஒருவர், உங்கள் தொகுதிக்காக இரவு-பகல் பாராமல் உழைக்கும் தகுதிபெற்றவராக இருக்கலாம். அவருக்கு உங்களுடைய வாக்கைப் பதிவுசெய்யுங்கள். ஏன் என்றால் உங்கள் வாக்கு என்பது உங்களுடைய அடிப்படை உரிமை!

நாட்டை மாற்றுமா நோட்டா?!

தேர்தல் காலத்தில் மட்டுமே பயன்படும் வாக்கு இயந்திரங்களை, பங்களாதேஷ், இந்தோனேஷியா போன்ற மற்ற நாடுகளின் தேர்தல்களுக்கு வாடகைக்குவிட்டு, வருவாய் ஈட்டிவருகிறது இந்தியத் தேர்தல் ஆணையம்.