
சட்டம் சாதிக்குமா... சறுக்குமா?
அடுத்த இடைத்தேர்தல் திருவிழாவை ஆர்.கே. நகர் தொகுதி சந்திக்க இருக்கிறது. தேர்தல் வரலாற்றில் ‘திருமங்கலம் ஃபார்முலா’ என்ற அத்தியாயம் எழுதப்பட்டது தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில்தான். வாக்காளர்களை எப்படியெல்லாம் விலை கொடுத்து வாங்கலாம் என்பதற்கு திருமங்கலத்தில் புதிய இலக்கணம் எழுதப்பட்டது.
காதுகுத்து விழாக்கள் நடத்தி பணம் கொடுப்பது, மளிகைக்கடைகளில் பணம் கொடுப்பது, வெளியூர் சென்ற வாக்காளர்களை அழைத்து வந்து, திரும்ப அனுப்பி வைப்பதற்கு பணம் தருவது என்று விதவிதமாக யோசித்து ஓட்டுகளை விலைக்கு வாங்கினார்கள். திருமங்கலம் இடைத்தேர்தலைத் தொடர்ந்து தமிழகத்தில் நடந்த அத்தனை இடைத் தேர்தல்களிலும் இந்த வாக்காளர் வியாபாரம் புதுப்புது வடிவம் எடுத்தது. தேர்தல் அதிகாரி களுக்குத் தண்ணி காட்டிவிட்டு வாக்காளர்களை விலைகொடுத்து வாங்குவது ஆளும்கட்சியின் சாதனைகளில் ஒன்றாக இருக்கிறது. இதனாலேயே, இடைத்தேர்தல் நடக்கும் தொகுதி ஆளும்கட்சிக்குச் சொந்தமாகிவிடுகிறது.

வாக்காளர்களைப் பணத்தாலும், பரிசுப் பொருள்களாலும் திக்குமுக்காடச் செய்யும் இந்த நடைமுறை, ஜனநாயகத்தின் வேரை அசைப்பதாக இருக்கிறது. ‘ஓட்டுக்குப் பணம் கொடுப்பவர் களையும், வாங்குபவர்களையும் கடுமையாகத் தண்டிப்போம்’ என்று ஒவ்வோர் இடைத் தேர்தலிலும் தேர்தல் ஆணையம் ஒரு சடங்கு போல அறிவிக்கிறது. ஆனால், சிறிய மீன்களே சிக்குகின்றன; திமிங்கலங்கள் எப்போதும் தப்பிவிடுகின்றன.
இந்தநிலையில், ‘தேர்தல்களில் ஓட்டுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருள்களைக் கொடுப் பதையும் வாங்குவதையும் கைது செய்யக்கூடிய குற்றமாக (Cognizable Offence) அறிவிக்கவும்... இந்தக் குற்றத்துக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக் கவும் சட்டத்திருத்தம் செய்யவேண்டும், என்றும் மத்திய அரசுக்குத் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது. இது எவ்வளவு தூரத்துக்கு சாத்தியம்?
நிரூபிப்பது சிரமம்
இதுபற்றி முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமியிடம் கேட்டோம். “தேர்தலின்போது ஓட்டுகளை விலைபேசும் நடை முறையைத் தடுக்க, சிறைத் தண்டனை அளிக்கும் சட்டத்திருத்தம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், மூன்று ஆண்டுகள் போதாது. தண்டனைக் காலத்தை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். ஓட்டுக்குப் பணம் பெற்றவர்கள், பணம் கொடுத்தவர்கள் என இரண்டு தரப்பினரின் ஓட்டு உரிமையையும் பறிக்க வேண்டும். இதுதொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்படும்போது, ‘பணம் கொடுத்தவர்களும், பணம் வாங்கியவர்களும் உண்மையைச் சொல்வார்களா’ என்ற மிகப்பெரிய கேள்வி இருக்கிறது. புகார்களை விசாரித்து நிரூபிப்பதும் சிரமமாக இருக்கிறது.
இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில்தான் ஓட்டுக்காகப் பணம் கொடுப்பது, வாங்குவது அதிகமாக நடக்கிறது. 50 வீடுகளுக்கு ஒருவரை நியமித்து, அரசியல் கட்சிகள் சார்பில் பணம் கொடுக்கின்றனர். பணம் கொடுப்பதற்காகவே ஒரு தொகுதிக்கு நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை அரசியல் கட்சிகளில் நியமிக்கின்றனர். ஆனால், தேர்தல் கண்காணிப்பில் ஒரு தொகுதிக்கு நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை நியமிப்பது சிரமமான காரியமாக இருக்கிறது. ‘தேர்தலில் ஐந்து கோடி ரூபாய் செலவழித்து வெற்றி பெற்றால், 50 கோடி ரூபாய் சம்பாதிக்கலாம்’ என்று அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள். மற்ற தொழில்களைப் போலவே அரசியலையும் அவர்கள் ஒரு தொழிலாகத்தான் பார்க்கின்றனர்.

ஓட்டுக்குப் பணம் கொடுப்பதாக ஊடகங்களில் வரும் செய்திகளை வைத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாது. கொடுத்ததை நிரூபிக்கச் சாட்சி வேண்டும் என்றெல்லாம் சட்ட நடைமுறைகள் இருக்கின்றன. ஓட்டுக்குப் பணம் வாங்கக்கூடாது என்று வாக்காளர்கள் முடிவு செய்ய வேண்டும். ஆனால், வாக்காளர்களுக்கு பணம் எனும் போதையை அரசியல்வாதிகள் பழக்கி வைத்திருக்கிறார்கள். நம்முடைய வரிப்பணத்தில் கொள்ளையடித்ததைத்தான் நமக்குத் தருகிறார்கள் என்பதை மக்கள் உணர வேண்டும்” என்றார் அவர்.
மனநிலை மாற்றம் தேவை
தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றியவர் நரேஷ்குப்தா, அவரது காலத்தில்தான் ‘திருமங்கலம்’ இடைத்தேர்தல் நடைபெற்றது. அவரிடம் இந்தச் சட்டம் குறித்துப் பேசினோம். “ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை என்பது ஏற்கெனவே இருக்கிறது. இப்போது கொண்டுவரப்படவுள்ள சட்டம் தேவையான ஒன்றுதான். ஆனால், சட்டத்தின் காரணமாக ஓரளவுக்குத்தான் அச்சம் இருக்கும். செல்வாக்கு மிக்க அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள்தான் அதிகம் செலவு செய்கின்றனர். பணம் கொடுத்தால்தான் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
பணம் வாங்குபவர்களும், பணம் கொடுப்பவர்களும் ‘நாங்கள்தான் வாங்கினோம்’, ‘நாங்கள்தான் கொடுத்தோம்’ என்று சொல்ல மாட்டார்கள். எனவே, இந்த வழக்குகளை நிரூபிப்பதும் கடினமாக இருக்கிறது. ஓட்டுக்குப் பணமும், பரிசுப் பொருள்களும் கொடுப்பதைத் தடுக்க 24 மணி நேரமும் அதிகாரிகள் கண்காணிக்க முடியாத நிலை இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று கண்காணிக்க முடியாது. வேட்பாளர்கள் பணம் கொடுத்தாலும், சுயமாகச் சிந்தித்து சுதந்திரமாக ஓட்டுப்போடும் மனநிலைக்கு வாக்காளர்கள் வர வேண்டும். அப்படி ஒரு நிலை வந்தால் அரசியல் கட்சிகளால் பணம் கொடுக்க முடியாது. எப்போது வேட்பாளர் சார்பில் பணம் தரப்படும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் அதிகரித்திருக்கிறது. ‘எங்களுக்குப் பணம் கொடுங்கள்’ என்று அரசியல்வாதிகளிடம் மக்கள் கேட்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, முக்கியமாக இதில் வாக்காளர்கள் மனநிலையில்தான் மாற்றம் தேவை” என்றார்.
கிராமங்களில் அதிகம்
சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகத்திடம் பேசினோம். “தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுகிறவர்களைத் தண்டிக்க, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் இருக்கிறது. ஆனால், கண்காணிப்பதற்குத்தான் போதுமான அதிகாரிகள் இருப்பதில்லை. இருக்கும் சட்டங்களையே முறையாக அமல்படுத்துவதில்லை. அமல்படுத்தும் முறைதான் பலவீனமாக இருக்கிறது. மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்குத்தான் கூடுதல் பொறுப்பு இருக்கிறது. அவர் டெல்லியில் கேட்டு நடவடிக்கை எடுப்பதற்குத் தாமதம் ஆகிறது.

கிராமங்களில்தான் அதிக அளவு தேர்தல் முறைகேடுகள் நடை பெறுகின்றன. தேர்தல் வந்துவிட்டால், எப்போது பணம் சப்ளை ஆகும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. லட்டுக்குள் கம்மல், மூக்குத்தி வைத்துக் கொடுக்கிறார்கள். சீர் செய்து, வளைகாப்பு நடத்திக் கொடுக்கின்றனர். மொபைல் ரீசார்ஜ் செய்து கொடுக்கின்றனர். வாக்காளர்களின் கடனை அடைக்கின்றனர். மது பாட்டில் வாங்கிக்கொள்வதற்குச் சீட்டு எழுதிக் கொடுக்கிறார்கள். பல்வேறு விநோதமான முறைகளில் வாக்குகளை வாங்குகின்றனர். அரசியல் சட்டத்தை இயற்றிய அம்பேத்கர் போன்றவர்கள் இப்படி ஒரு நிலை வரும் என்று நினைத்திருக்க மாட்டார்கள். எனவேதான் ஓட்டுக்குப் பணம் தருதல் போன்ற குற்றங்களைத் தடுக்க அப்போதே வலுவான சட்டம் இயற்றப்படவில்லை என்று கருதுகிறேன்.
இடைத்தேர்தலில் வெற்றிப் பெறுவதை கெளரவப் பிரச்னையாக ஆளும்கட்சியினர் கருதுகின்றனர். எனவேதான் அதிகமாகச் செலவு செய்கின்றனர். ‘எப்படி இருந்தாலும் அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கப் போகிறார்கள். எனவேதான் அவர்களிடம் பணம் வாங்குகிறோம்’ என்றும் வாக்காளர்கள் கூறுகின்றனர். தேர்தலை ஒரு முதலீடாகத்தான் அரசியல்வாதிகள் பார்க்கின்றனர். இப்போது, ஜனநாயகம் தரம் தாழ்ந்து போயிருக்கிறது. ஜனநாயகம், ஓட்டு உரிமை ஆகியவை குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தவில்லை என்பதால்தான் இதுபோன்ற தவறுகள் ஏற்படு கின்றன. ஆனால், இப்போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்கு எதிராக இளைஞர்கள் மத்தியில் விழிப்பு உணர்வு ஏற்பட்டிருக்கிறது” என்றார் அவர்.
அரசே செலவழிக்க வேண்டும்
முன்னாள் தேர்தல் ஆணையர்
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். “தேர்தல்களுக்கு அரசியல் கட்சிகளே பணம் செலவழிப்பதால்தான் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுகின்றன. அதற்குப் பதில் மத்திய, மாநில அரசின் நிதியில் தேர்தலை நடத்த வேண்டும். அதாவது தேர்தல் தொடர்பான எல்லா செலவுகளையும் அரசே செய்யும். கட்சிகளோ, வேட்பாளர்களோ தங்கள் சொந்தப் பணத்தைப் பயன்படுத்தக் கூடாது. அரசியல் கட்சிகள் பணம், பரிசுப் பொருள்கள் கொடுப்பதையும், சட்டப்படி நிரூபிப்பது கடினமாக இருக்கிறது. பணம் கொடுத்ததாகப் பிடிபடுபவர்களிடம் விசாரணை நடத்தினால், ‘நான் கொடுக்கவில்லை’ என்றுதான் சொல்கிறார்கள். வாங்குபவர்களும் நான் பணம் வாங்க வில்லை என்றுதான் சொல்கிறார்கள். இதற்கெல்லாம் மாற்று வழி அரசே தனது செலவில் தேர்தலை நடத்துவதுதான். இதுதொடர்பாக மத்திய அரசும் இப்போது பேசி வருகிறது. சில நாடுகளில் இது நடைமுறையிலும் இருக்கிறது’’ என்றார் அவர்.
சட்டங்கள் எத்தனை வந்தாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில்தான் இங்கே பிரச்னைகள் எப்போதும் உள்ளன. எனவே, ‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்ற வரிகள் இந்த விஷயத்துக்கும் பொருந்தும்.
- கே.பாலசுப்பிரமணி
ஓவியம்: ஹாசிப்கான்