Published:Updated:

ஆஸ்பத்திரியில் மதுரை ஆதீனம்... ஆர்.கே.நகர் தேர்தல் காரணமா?

ஆஸ்பத்திரியில் மதுரை ஆதீனம்... ஆர்.கே.நகர் தேர்தல் காரணமா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஆஸ்பத்திரியில் மதுரை ஆதீனம்... ஆர்.கே.நகர் தேர்தல் காரணமா?

ஆஸ்பத்திரியில் மதுரை ஆதீனம்... ஆர்.கே.நகர் தேர்தல் காரணமா?

‘சீரியஸான நிலையில் மருத்துவமனையில் மதுரை ஆதீனம் சேர்க்கப்பட்டிருக்கிறார்’ என்று பரவிய தகவல், அவரின் பக்தர்களுக்கு அதிர்ச்சியையும், சிலருக்கு வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ‘அவருக்கு உண்மையிலேயே உடல்நலம் சரியில்லையா? அல்லது, வேறு பிரச்னைகளுக்காக மருத்துவமனை போயிருக்கிறாரா?’ என்ற சந்தேகம் எழுந்தது.

ஆஸ்பத்திரியில் மதுரை ஆதீனம்... ஆர்.கே.நகர் தேர்தல் காரணமா?

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் என்றாலே பரபரப்புதான். தி.மு.க., அ.தி.மு.க என ஆட்சியில் யார் இருந்தாலும், அவர்களின் மனம் நோகாமல் நடந்துகொள்வார். இதனால் எழும் விமர்சனங்களுக்கும் சளைக்காமல் பதில் சொல்வார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வின் தலைமைக் கழகப் பேச்சாளர் அளவுக்கு இறங்கிவந்து பிரசாரம் செய்தார். ‘‘ஜெயலலிதா மறைந்த பின், எல்லோரையும்போல சசிகலாவுக்கு ஆதரவைத் தெரிவித்தார் ஆதீனம். ஆனால்,  ஓ.பி.எஸ் தனி அணி தொடங்கியவுடன், ஆதீனத்துக்குப் பிணி ஆரம்பித்துவிட்டது’’ என்கிறார்கள், அவரை நன்கு அறிந்தவர்கள்.

ஆதீனம் பற்றி மேலும் பேசிய அவர்கள், ‘‘அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆனதற்கே, ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்தான் காரணம்.

டி.டி.வி.தினகரனுக்குப் பிரசாரம் செய்யும்படி, சசிகலா தரப்பில் அவரைக் கட்டாயப்படுத்தினார்கள். அ.தி.மு.க இரண்டு அணிகளாக உள்ள சூழலில், அது தனக்குச் சரிப்படாது என்பதால், எந்தப் பதிலும் சொல்லாமல் காலம் கடத்தி வந்தார். நடராசன் தரப்பில் இருந்து தொடர்ந்து வற்புறுத்தல் வரவே, மருத்துவமனைக்குச் சென்று படுத்துக்கொண்டார்” என்கிறார்கள்.

மதுரை ஆதீனம் எதிலும் தெளிவானவர். நித்யானந்தாவை இளைய ஆதீனமாக அறிவித்து, மக்கள் எதிர்ப்பு கிளம்பியதால், பிறகு அவரை நீக்கினார். நித்யானந்தா நீதிமன்றத்துக்குச் சென்றார். இதைத் தொடர்ந்து வைஷ்ணவி, கஸ்தூரி என்ற இரண்டு இளம்பெண்களை மடத்தில் தங்கவைத்து நிர்வாகத்தைக் கவனிக்க அனுமதித்ததால், ‘பெருமை வாய்ந்த மடத்தின் புனிதத்தைச் சிதைக்கிறார்’ என்று பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தின. மடத்தை அறநிலையத் துறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வழக்குகள் தொடரப்பட்டன. 

இப்படி ஏகப்பட்ட பிரச்னைகளுக்குள் சிக்கித் தவித்தவர், ஒரு சுபயோக சுப தினத்தில் போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவைச் சந்தித்தார். அன்றுமுதல் அ.தி.மு.க-வின் பிரசாரகராக மாறினார். 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும், அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க-வுக்குத் தீவிர பிரசாரம் செய்தார். ஜெயலலிதா சிறைக்குச் சென்றபோது, கர்நாடக அரசுக்கு எதிராக, கட்சித்தொண்டன் போல போராட்டம் நடத்தினார். அப்போலோவில் ஜெயலலிதா அட்மிட் ஆனபோது, சிறப்பு பூஜைகள், யாகங்கள் செய்தார். கடைசியாக நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், பிரசாரம் செய்த ஆதீனம், ‘நானும் அம்மாவுக்கு ஒரு மகன்தான்’ என்று தன் விசுவாசத்தை அப்போது வெளிப்படுத்தினார்.

ஆஸ்பத்திரியில் மதுரை ஆதீனம்... ஆர்.கே.நகர் தேர்தல் காரணமா?

இப்படி பிரச்னையில்லாமல் போன வண்டிக்கு, ஜெயலலிதா மறைவு ஒரு பிரேக் போட்டது. இப்போது அவருக்குத் தர்மசங்கடமான நிலைமை. காரணம், எம்.நடராசன் அவரின் நெருங்கிய நண்பர். இன்னொரு பக்கம் ஓ.பி.எஸ்ஸும் இவருக்கு நல்ல நெருக்கம். அ.தி.மு.க-வில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தில், எந்த அணியின் பக்கம் சாயலாம் என அவரால் கணிக்க முடியவில்லை. இதனால், அமைதியாக இருந்து வந்தார்.

இந்த நிலையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தினகரனுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யுமாறு இவரைக் கட்டாயப்படுத்தி, அதற்கான ஏற்பாடுகளையும் செய்துவிட்டார்களாம். ‘‘இந்த இக்கட்டான சூழலிலிருந்து தப்பிக்கவே, தனக்கு உடல்நலமில்லை என்று கூறியிருக்கிறார்’’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். வெளியில் எங்கும் செல்லாமல், மடத்துக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார். இப்படி முடங்கி இருந்ததால், அவருக்கு சளித் தொந்தரவு அதிகமாகியுள்ளது. அதன் விளைவாக, மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, சீரியஸான நிலையில், மதுரை ராகவேந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு ஓரளவு குணமான நிலையில், செவ்வாய் இரவு அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவரைக் காண மருத்துவமனைக்குச் சென்றோம். ‘‘இப்போதுதான் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு வந்திருக்கிறார். சளித்தொல்லையால், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது, ரத்த அழுத்தம் குறைந்தது. இப்போது பரவாயில்லை. ஆனாலும், இந்தச் சூழ்நிலையில் அவருக்கு ஓய்வு தேவை. பார்க்கவோ, பேசவோ முடியாது’’ என்று சொன்ன அவரின் உதவியாளர்களிடம், ‘‘ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு ஆதீனத்தை தினகரன் தரப்பில் அழைத்தார்களாமே?’’ என்றோம். ‘‘அதெல்லாம் இல்லை. சந்நிதானம் இப்போ எந்த அணிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை’’ என்றனர்.

பலவீனமாக இருக்கும் ஆதீனத்தை, மருத்துவர்கள் தொடர்ந்து கவனித்து வருகிறார்கள். மக்களும்தான்!

- செ.சல்மான்  படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்