Published:Updated:

தமிழக தேர்தல் தேதி மாற்றம் இல்லை:பிரவீண் குமார்

சென்னை, மார்ச் 8,2011

தமிழக தேர்தல் தேதி மாற்றம் இல்லை:பிரவீண் குமார்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதியை மாற்ற வாய்ப்பு இல்லை என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்தார். ##~~##

தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தியுள்ளது குறித்து அவர் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில், "பல்வேறு கருத்துக்களை கேட்டறிந்தும், பல்வேறு சூழ்நிலைகளையும் ஆய்வு செய்து தான் மத்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்து உள்ளது.

மேற்கு வங்கம், அசாமில் பல்வேறு கட்டங்களில் தேர்தல் நடத்தப்படுகிறது. ஒரே கட்சி பல்வேறு மாநிலங்களில் போட்டியிடும். அதில் பிரசாரம் உள்பட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. எனவேதான் இந்தத் தேதியை நிர்ணயம் செய்து இருக்கிறார்கள்.
 
தமிழ்நாட்டில் மட்டும் ஏப்ரல் 13-ம் தேதி தேர்தல் நடக்கவில்லை. கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலத்திலும் இதே தேதியில் தான் தேர்தல் நடக்கிறது.

மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிந்த பிறகே எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரி ஓட்டு எண்ணிக்கை நடத்தவேண்டும் என்பதற்காக ஓட்டு எண்ணிக்கை தேதி மே 13 என அறிவிக்கப்பட்டுள்ளது," என்றார்.

தமிழ்நாட்டில் பள்ளி தேர்வு நடப்பதால் மாணவர்களை பாதிக்கும் என்பதால் தேர்தல் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளது குறித்து கேட்டதற்கு, "எனக்கு அது தொடர்பான கோரிக்கைகளோ, புகார்களோ வரவில்லை. பள்ளி மாணவர்களை பாதிக்காத வகையில் தேர்தல் பிரசாரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு மையங்கள் அருகே பிரசாரம் செய்ய தடை விதிக்கப்படும்," என்றார் அவர்.

தேர்தல் தேதியை மாற்ற வாய்ப்பு உள்ளதா? என்றதற்கு, "எல்லாவற்றையும் பரிசீலித்துதான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதை மாற்ற வாய்ப்பு இல்லை. இதற்கு மேல் இதில் எதுவும் சொல்ல முடியாது," என்றார் பிரவீண் குமார்.