Published:Updated:

தேர்தல் தேதியை மாற்றக் கோரி குரேஷிக்கு ஜெ. கடிதம்

சென்னை, மார்ச் 3,2011

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை ஏப்ரல் இறுதியிலோ அல்லது மே மாதம் முதல் வாரத்துக்கோ தள்ளி வைக்கக் கோரி, தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷிக்கு, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார். ##~~##

அந்தக் கடிதத்தின் விவரம்:

"தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 13-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது, மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கான காரணங்கள்...

தமிழ்நாடு, புதுச்சேரியில் கடந்த 2-ம் தேதி பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கி நடந்து வருகிறது. 25-ம் தேதி முடிகிறது. ஏறத்தாழ 7.5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். மாணவர்களுக்கு தேர்வு நடக்கின்ற காலக்கட்டத்திலேயே தேர்தல் வருவதால், அவர்களின் படிப்பு பாதிக்கப்படும்.

அதேபோல், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வருகிற 22-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 11-ம் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வை ஏறத்தாழ 9 லட்சம் பேர் எழுதுகின்றனர். தேர்தல் காரணமாக மாணவர்கள் மட்டுமின்றி, தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். மேலும், கல்லூரித் தேர்வுகளும் ஏப்ரல் மாத இறுதி வரை நடக்கவுள்ளது.

ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு நாள் கொண்டாட்டம் வருகிறது. இது உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு முக்கிய திருநாளாகும். இந்தக் காலக்கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வருவது வழக்கம். இதனால், வாக்குப் பதிவில் மந்த நிலை ஏற்படும். இதை கள்ள ஓட்டுப் போடுபவர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் அபாயமும் உண்டு.

இவற்றைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாத துவக்கத்துக்கோ தேர்தல் தேதியை மாற்றி வைக்கும்படி, அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்," என்று ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

இதனிடையே தேர்தல் ஆணையத்துக்கு இதே கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, "வீடு வீடாக சென்று ஓட்டு கேட்பது, ஒலி பெருக்கி மூலம் பிரசாரம் செய்வது என பலவகையிலும் பிரசாரம் நடக்கும். இது தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இடையூறாக இருக்கும். இதனால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என பெற்றோர்கள் கவலைப்படுகின்றனர்," என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு