Published:Updated:

'தேர்தல் பணியில் முதல்முறையாக வெளிமாநில போலீஸ்: வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை'

Vikatan Correspondent

சென்னை, மார்ச்.6,2011

சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முதன்முறையாக வெளிமாநில போலீஸ் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். ##~~##

இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் அவர் சனிக்கிழமை நிருபர்களிடம் கூறியது:

"தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி முதல்கட்ட மதிப்பீட்டின்படி, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக 266 கம்பெனி மத்திய போலீஸ் படை வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பியிருந்தோம். ஒரு கம்பெனியில் 100 போலீஸ்காரர்கள் இருப்பார்கள். அதன்படி, முதல்கட்டமாக 50 கம்பெனி மத்திய போலீஸ் படையினர் தமிழகம் வருகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை 5 கம்பெனி மத்திய போலீஸ் படை வருகிறது. அடுத்த 3 நாட்களுக்குள் 35 கம்பெனி போலீஸ் படை வந்துவிடும். மீதமுள்ள போலீஸ் படையினர் 13-ம் தேதிக்குள் வந்து சேர்ந்துவிடுவார்கள். அவர்கள் வந்த பிறகே அவர்களை எந்தெந்த மாவட்டங்களுக்கு அனுப்புவது என்று முடிவு செய்யப்படும்.

முதலில் பதற்றம் அதிகமான மாவட்டங்களுக்கு மத்திய போலீஸ் படை அனுப்பப்படும். தேவைப்பட்டால் கூடுதலாக துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்படுவார்கள். கடந்த 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது 196 கம்பெனி மத்திய போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தமிழகத்தில் முதல்முறையாக வெளிமாநில போலீஸ் பார்வையாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள், போலீஸ் பார்வையாளர்களாக இருப்பார்கள். ஒரு தொகுதிக்கு ஒருவர் வீதம் நியமிக்கப்படுவர். முதலில் 5 பேர் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருவார்கள். பொது பார்வையாளர்கள் தேர்தலை கண்காணிப்பாளர்கள், செலவு பார்வையாளர்கள் வேட்பாளர்களின் செலவினை கண்காணிப்பார்கள்.

அதுபோல எந்தெந்த இடங்களில் எவ்வளவு போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்? சட்டம், ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது? பண பட்டுவாடாவை தடுப்பது போன்ற பணிகளில் போலீஸ் பார்வையாளர்கள் ஈடுபடுவார்கள். தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்படும் பார்வையாளர்கள் 19-ம் தேதிக்கு பிறகு தமிழகம் வருவார்கள்.

டோல் ஃப்ரீ நம்பர் 1965

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தல் போன்ற முறைகேடுகள் நடந்தால் அதுபற்றி தகவல் கொடுப்பதற்காக 24 மணி நேரம் இயங்கும் 'கால் சென்டர்' ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்படும். பொதுமக்கள் 1965 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தகவல் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு அந்த தகவல் அனுப்பப்படும். அங்கே உள்ள பறக்கும் படையினர் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பார்கள்.

தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக பணம் கொடுப்பது மட்டுமல்ல, பணத்தை வாங்குவதும் குற்றம்தான். 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது பணம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஒருவருக்கும், 2009-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது பணம் வழங்கிய குற்றத்திற்காக 3 பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பணம் கொடுத்ததாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 9 வழக்குகள் விசாரணையில் உள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது உறுதி செய்யப்பட்டால் அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்திய தண்டனை சட்டம் 171 (இ) பிரிவின்படி, ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.

தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தில், பிரசார நேரத்தை இரவு 11 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளன. இவை அனைத்தும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்படும். கோரிக்கைகளை பரிசீலித்து தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும்.

தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 13-ந் தேதிக்கு மறுநாள்தான் சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது. சில வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு நடந்தால்கூட மறுநாளே (ஏப்ரல் 14) நடைபெறாது. இரண்டு நாட்கள் கழித்துத்தான் நடைபெறும்.

தேர்தல் நடத்தை விதிகள் மார்ச் 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துவிட்டன. இந்த விதிமுறைகளை மீறியதாக மாவட்டங்களில் இருந்து எந்தப்புகாரும் வரவில்லை. சென்னையில் மட்டும் அரசியல் கட்சியினரின் கட்-அவுட்டுகள், போஸ்டர்கள் இருப்பதாக புகார் வந்தது. அவற்றை 24 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டோம். அதன்படி அகற்றிவிட்டார்கள்," என்றார் பிரவீண் குமார்.