Published:Updated:

கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடு: திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் சாலை மறியல்!

விகடன் விமர்சனக்குழு

திருவாரூர்:திருவாரூர் மாவட்டத்தில் நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டம் முழுவதும் பரவலாக சாலை மறியல் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

திருவாரூர் மாவட்டத்தில் நடந்த பல்வேறு கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் ஆளும் கட்சியினர் முறைகேடு செய்ததாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியினர் கூறுகையில், ‘‘வேட்பு மனு கேட்கும் எல்லாருக்கும் வேட்பு மனுக்கள் தரப்படுவது இல்லை. ஏற்கெனவே அவர்கள் முடிவு செய்து வைத்துள்ள ஆளும் கட்சியின் பிரமுகர்களுக்கு மட்டுமே வேட்பு மனுக்கள் தரப்படுகின்றன. அப்படியே நாங்கள் அடித்துபிடித்து வேட்புமனுவை வாங்கி தாக்கல் செய்தாலும் எந்த காரணமும் இல்லாமல் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

வேட்பு மனுத் தாக்கல் செய்தவர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்களின் பெயர்களையும் வெளிப்படையாக நோட்டீஸ் போர்டில் ஒட்டவில்லை. மொத்தத்தில் ஆளும் கட்சியினரின் மிகப் பெரிய கபட நாடகம்தான் இந்த கூட்டுறவு சங்கத் தேர்தல். இதனை கண்டித்து மாவட்டம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டங்களை நடத்துகிறோம்" என்றார்கள்.

##~~##
மாவட்டம் முழுக்க சுமார் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடந்தும் போலீஸார் யாரையும் கைது செய்யவில்லை. கலைந்துப்போக சொல்கிறார்கள். அதன்படியே போராட்டக்காரர்களும் கலைந்துபோகின்றார்கள்.
செய்தி, படங்கள்:
வீ.மாணிக்கவாசகம்