Published:Updated:

கூட்டுறவு சங்கத் தேர்தலில் மோசடி: விஜயகாந்த் கண்டனம்!

கூட்டுறவு சங்கத் தேர்தலில் மோசடி: விஜயகாந்த் கண்டனம்!
கூட்டுறவு சங்கத் தேர்தலில் மோசடி: விஜயகாந்த் கண்டனம்!
கூட்டுறவு சங்கத் தேர்தலில் மோசடி: விஜயகாந்த் கண்டனம்!

சென்னை: கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல்கள் முறையாக நடைபெறவில்லை என்றும், தேர்தல் என்ற பெயரால் ஜனநாயக மோசடிதான் நடந்து வருகிறது என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல்கள் முறையாக நடைபெறவில்லை. தேர்தல் என்ற பெயரால் ஜனநாயக மோசடிதான் நடந்து வருகிறது. கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்கள் முறையாக சேர்க்கப்படவில்லை. ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக ஆக்கப்பட்டனர். இது போதாதென்று இப்பொழுது தேர்தல் சமயத்தில் வேட்பு மனுக்களை அதிமுக கட்சியினருக்கு மட்டுமே விநியோகிக்கிறார்கள். தேர்தல் நடைபெற்றதாக அவர்களது கட்சியை சேர்ந்தவர்களை ஓட்டுப் போட செய்து விட்டு இவர்களே வெற்றி பெற்றவர்களின் பட்டியலையும் வெளியிடுகின்றனர். அதிகாரிகள் ஆளும் கட்சியினருக்கு துணை போகின்றனர். இதை ஆங்காங்கே பொது மக்களே எதிர்த்து குரல் எழுப்பி வருகின்றனர். பல இடங்களில் சாலை மறியல்களும் நடைபெற்றுள்ளன.

##~~##
ஜனநாயகத்தில் தேர்தல் என்பது முக்கிய அங்கம் வகிக்கிறது. எல்லா உறுப்பினர்களையும் சேர்த்து யார் யார் போட்டியிட விரும்புகிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் வேட்பு மனுக்கள் கொடுத்து அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வசதி செய்து கொடுத்து தேர்தலை முறையாக நடத்த வேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமை. ஆனால் ஜெயலலிதா அரசு நல்லாட்சி நடத்துவோம் என்று சொல்லி மக்களிடம் வாக்கு பெற்று இன்று தேர்தல்களையே தங்களது கட்சியினர் மட்டுமே ஜெயிக்கும் வகையில் நடத்துவது என்ன நியாயம்? மக்களிடம் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று அந்த மக்களுக்கே துரோகம் செய்கின்றனர். ஒரு அரசு என்றால் அனைத்து தரப்பு மக்களுக்கும் நேர்மையாகவும், நாணயமாகவும், நடுநிலையோடும் இயங்க வேண்டும்.
கூட்டுறவு சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் பல நன்மைகளை செய்ய வழி உண்டு. மத்திய, மாநில அரசாங்கங்களின் மூலமும், வங்கிகளின் மூலமும் பணம் பட்டுவாடா செய்யும் வாய்ப்பையும் கூட்டுறவு சங்கங்கள் பெற்றுள்ளன. இந்த பணத்தை ஆளும் கட்சியினர் தங்களுக்கு வேண்டியவர்கள் பெயரில் போட்டு கொள்ளை அடிப்பதற்கே இத்தகைய தேர்தல் உதவும். இந்த ஊழலுக்கும், முறைகேட்டுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பிய நேரத்தில் அவர்களை பேச அனுமதிக்கவில்லை. ஆகவே, வெளிநடப்பு செய்துள்ளனர். தேமுதிக சார்பில் இந்த ஜனநாயக விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிப்பதோடு நீதிமன்றங்களாவது தலையிட்டு தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற வழி காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.